ஃப்யூஜி-சான்

குளிர்ந்த ஜனவரி இரவுக் காற்றில்
நெடிய புற்கள் வளைந்தாடுகின்றன
நீருக்குள் ஓசை எழுப்பித்
தாவுகிறது ஒரு தவளை
எதையும் கவனிக்கும் நிலையில்
இல்லை  ஃப்யூஜி-சான்.

குட்டி இளவரசன்

கொஞ்ச வருபவர்களையெல்லாம் திட்டுகிறான்
பிரிய பொம்மைகளை வீசியெறிகிறான்
அதட்டுபவர்களையும் அப்படியே
இந்தக் குழந்தைக்கு ஏன் இவ்வளவு குரோதம்
என யாருக்கும் கேட்கத் தோன்றவில்லை
குழந்தைதானே என்கிறார்கள்
உரிமம் தருகிறார்கள்
ஒரு கையால் கும்மாங்குத்து குத்தினாலும்
இன்னொரு கையால் நம்மை கெட்டியாகப்
பிடித்துக்கொண்டுதானே இருக்கிறது என்கிறார்கள்
குழந்தைக்குக் கொஞ்சல்களும் கைதட்டல்களும்
தேவைப்படும் வரை தொடரும் நமக்கு தர்ம அடிகள்.

ரகசியம்

சிறகு அறியும் பறத்தல் ரகசியம்
காற்று அறியும் சிறகின் ரகசியம்
பறத்தல் அறியும் காற்றின் ரகசியம்
ரகசியம் அறியும் பறத்தலின் சிறகு
காற்றின் பறத்தல் அறியும் சிறகு

சொற்கம்

எப்போதாவதிற்கென
எடுத்துப் பார்க்க
உன் உடலிளைத்த
பழைய புகைப்படம் ஒன்று
பசித்தால் புசிக்க
நிலவில் தோய்த்த
தாரகைத் துண்டுகள்
கடலை தியானிக்காத
பொழுதுகளில் படித்தாழ
தேவதைக் கதைகள்
அந்திக்குச் சுவை கூட்ட
ஒரு மொந்தை அனிச்ச மது
ஆளில்லாத ஒரு தீவில்
என் தனித் தங்கலுக்குப்
போதுமிவை மட்டுமெனக்கு.