ஓர் உரையாடல்

எனக்கும் ஒரு நண்பருக்கும் இடையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு மின்னஞ்சலில் நிகழ்ந்த ஒரு நேர்காணல் வகை உரையாடல் இது. நண்பர் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. கேள்விகள் நானே எழுதிக்கொண்டவையும் அல்ல. நானாக இருந்தால் வேறு மாதிரி கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பேன்.

கே: அநாமதேயம் எந்த அளவுக்குச் செல்லுபடியாகும் அல்லது முடியும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? எ.கா.: பேயோனுக்கு விருது, பேயோனை ஆத்மார்த்தமாக சந்திக்க நினைக்கும் வாசகர் சாவுப் படுக்கையில் இருக்கிறார், அல்லது ஒரு பேரழகி முத்தம் தர நினைக்கிறாள் – இவை போன்ற சூழ்நிலைகளில்.

பேக்கிரவுண்டை மைண்ட் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன். பேயோனை ஒரு ஃபிக்‍ஷனல் கேரக்டர் என்றுதான் ஆரம்பத்திலிருந்து சொல்லிவந்திருக்கிறேன். பேயோன் ட்விட்டர் கணக்கையே ஒரு லைவ், இன்டராக்டிவ் நாவலாகப் பார்க்க விரும்புகிறேன். நடுவில் பேயோன் ட்விட்டர் கணக்கை மூடும்போது ஒரு “நிகழ்நேர புனை”வுக்குப் பங்களித்தமைக்கு நன்றி என்றுதான் எல்லோரையும் விளித்து ஒரு ட்வீட் போட்டேன். ட்விட்டர் கணக்கை மூடும் முடிவை சில நண்பர்களின் விருப்பப்படி ரத்துசெய்தேன் என்பது வேறு விஷயம். நிகழ்நேரப் புனைவு என்கிறபோது ட்வீட்களின் வாயிலாக, ஒன்றோடொன்று உடனடித் தொடர்ச்சி இல்லாத இரண்டிரண்டு வரித் துண்டுகளாகத்தான் ‘எழுதி’யாக வேண்டும். இதை எந்தத் திட்டமிடலும் இல்லாமல், ஒழுங்கின்றி, hap hazardஆகத்தான் செய்கிறேன். இதைத் திட்டமிட்டு செய்வது சாத்தியம் என்றும் தோன்றவில்லை. இதில் rant எல்லாம்கூடக் கதாபாத்திரத்தின் பார்வையாக, புனைவாக ஆகிறது. விட்டுக்கொடுக்காமல் மிகப் பிடிவாதமாக இருந்தால்தான் இந்தப் புனைவைத் தொடர்ந்து *நடத்த* முடியும். எனக்கு இதில் ஆர்வம் இருப்பதே எழுத்தை role-playingஆகவும் ஆக்க இந்தப் புனைவு இடம் தருவதுதான். தமிழில் கல்கி, அகிலனும் ஆங்கிலத்தில் சுமாராக பழைய ஐரோப்பிய இலக்கியக் காதல் கதைகள் கொஞ்சமும் படித்துவிட்டு ரோல் ப்ளேயிங், லைவ் ஃபிக்‍ஷன் என்று பெரிய வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவதில் எனக்குத் தயக்கம், சுயசந்தேகம் எல்லாம் இருக்கிறது. ஆனால் அவற்றை வேறு வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை.

ரோல் ப்ளேயிங் என்பதால் ‘நான்’ கதாபாத்திரம் ஆகிறேன் (இந்த இரட்டைத்தன்மையை ‘திசை காட்டிப் பறவை’யின் முன்னுரையில் தமாஷாக எழுதியிருப்பேன்). ட்விட்டர் டிரெக்ட் மெசேஜிங்கிலும் மின்னஞ்சலிலும்தான் நான் பேயோன் அல்ல. அதுவும் சிலருக்கு மட்டுமே நான் பேயோனாக இல்லாமல் interact செய்கிறேன். ரோல் ப்ளேயிங்கை மெயின்டெயின் செய்ய நான் கற்பனைப் பாத்திரம் என்று சொல்லிக்கொள்ளும் பிடிவாதம் தேவை. பேயோன் கற்பனைப் பாத்திரம் என்றால் அவருடன் உரையாடுபவர்களும் கற்பனைப் பாத்திரங்கள்தானே? :-) பேயோனுடன் பேசுபவர்கள் அவர் கற்பனை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதற்கு நான் அவர்களுக்குக் கோடிகாட்டி உதவுவதில்லை. உங்களை சந்திக்கலாமா என்று ஒருவர் கேட்கும்போது நியாயமாக நான் அவருக்குப் பொய்யான ஒரு முகவரியைத் தந்து ஆறு மணிக்குப் பார்க்கலாம் என்று சொல்ல வேண்டும். ஆனால் நிஜமென்று நம்புபவர்கள்தான் அதிகம். எனவே சந்திப்போம் என்று சொல்வது வேலைக்கு ஆகாது. பேரழகியின் முத்தம் என்று வரும்போது அநாமதேயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதா முத்தத்திற்கா என்று யோசிக்க வேண்டும். முன்னதைத் தேர்ந்தால் எனக்கு செருப்படி கிடைக்கும் என்பதால் பின்னதே எனக்கு சேஃப்டி. :-)

ட்விட்டர் கட்டமைக்கும் அநாமதேயத்தின் “சுயம்” போல, அவரோடு ட்விட்டரில் உரையாடுபவர்களின் சுயங்களும் கட்டமைக்கப்படுகின்றன, அல்லவா?

என்னுடன் உரையாடுபவர்களின் சுயம் குறித்துப் பெரிதாக என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. இவன் காமெடியான ஆள், இவனிடம் நாமும் ஜோக்கடிப்போம் அல்லது இவன் வாயைக் கிண்டுவோம் என்ற நோக்கத்தில்தான் பேசுகிறார்கள். என்னுடைய நகைச்சுவையில் சில சமயம் என் ‘அலைநீளத்திற்கு’ப் பொருந்துகிற ஆட்களுக்கு மட்டும் புரியும் referenceகள் இருக்கும். சில சமயம் நகைச்சுவையே அப்படித்தான் இருக்கும். ட்விட்டர் மீம்களை வேடிக்கையாகப் போலி செய்வதும் கிண்டல் செய்வதும் உண்டு. ஆனால் நீங்கள் அநாமதேயமாக இருந்தால், சைலண்டாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வழியில் உங்கள் மீது கவனம் விழுந்தால் ஆள் யார் என்று கேட்பதோடு மட்டுமில்லாமல் தேடவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்… முழுமையான அநாமதேயம் முன்கூட்டியே திட்டமிட்டால்தான் சாத்தியமாகும். அந்த மாதிரித் திட்டமிடல்கூட நாம் எழுதிப் பதிப்பிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மெல்ல மெல்லத் தேய்ந்துவிடும்.

பெண் பெயரில், பெண்ணாக எழுதியிருக்கிறேன். ரொம்பக் கஷ்டமான வேலை. என்னுடைய ஊகங்களையும் அரைகுறைப் புரிதலையும் வைத்து ஓட்ட வேண்டியிருந்தது. :-) இதில் சில எக்ஸ்பிரஷன்கள், முக்கியமாக நிறுத்தக்குறிகள், s-ஐ z ஆக்குவது போன்ற “girly” நடத்தைகள் எல்லாம் இணைய அரட்டை வேடந்தரித்தலில்கூட உதவின. ‘திசை காட்டிப் பறவை’ நெடுங்கதையில் ஒரு அத்தியாயத்தை பெண் கோணத்தில், ஸ்பெல்லிங்கில் எழுதியிருப்பேன். என் புத்தகத்திற்கு இரண்டு முறை பிளக் செய்தாயிற்று. :-)

நான் எந்த விதிமுறையும் வைத்துக்கொள்வதில்லை, கற்பனைப் பாத்திரம் என்பதைத் தவிர வேறு எதையும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. அநாமதேயம் பரிசோதனைகளைச் செய்ய தைரியம் கொடுக்கிறது… ஒரு wannabe அல்லது self-delusional எழுத்தாளர் என்ற பாத்திரமாக பேயோனை ஒரு mock துப்பறியும் கதையில் சேர்த்தபோது கதை சில அத்தியாயங்களுக்கு மேல் நகரவில்லை. எனவே இந்தக் கதாபாத்திரத்தையே ட்விட்டரில் ஒரு நிஜ ஆள் போலாக்கிப் பேசவைத்து கேரக்டரை டெவலப் செய்யத் தோன்றியது. அதற்குக் கிடைத்த கவனத்தைப் பார்த்து என்னுடைய விநோதப் படைப்புகளை பேயோன் எழுதியதாக பேக்கேஜிங் செய்தால் இன்னும் கொஞ்சம் பேர் படிப்பார்கள் என்ற மூளையலை தோன்றி அப்படியே செய்தேன். தனி வலைத்தளம் உருவாக்கினேன். ஒரு கற்பனைப் பாத்திரம் எழுதிய நிஜப் புத்தகமாக பேயோன் 1000ஐ கொண்டுவர ஆசைப்பட்டு ஆழி பதிப்பாளரை அணுகினேன். கற்பனைப் பாத்திரம் எழுதிய புத்தகம் கற்பனையாகத்தானே இருக்க முடியும்? விளையாட்டாக அதை ‘மீறி’ப் பார்க்க இதைச் செய்தேன்.

பேயோன் என்ற over-the-top, கல்யாணப் பரிசு படத்தில் வரும் ‘எழுத்தாளர் பைரவன்’ போன்ற கேரக்டருக்கு என் படைப்புகள் கச்சிதமாகப் பொருந்தின. இவன் ஏன் இப்படி எழுதுகிறான் என்று யாரும் கேட்கவில்லை. கொஞ்சம் அ-ஜனரஞ்சகமான ஜனரஞ்சக நகைச்சுவையைப் புரிந்துகொள்ள பேயோன் என்ற கான்டெக்ஸ்டைக் கொடுக்கப் பார்த்தேன், பலனளித்தது. திடீரென்று பேயோன் என்ற புனைபெயரை விட்டு வேறு புனைபெயரிலோ என் சொந்தப் பெயரிலோ எழுதினால் அவை எடுபடாது. எனவே அந்த அடையாளமும் அதிலிருந்து படைப்புகளும் கூட்டாகத்தான் இயங்க முடியும். பேயோன் இப்படித்தான் எழுதுவார் என்ற கான்டெக்ஸ்டைக் கொடுத்தபின் பரிசோதனைகளைச் செய்ய எனக்குத் தயக்கம் ஏற்படவில்லை. எனக்கு வடிவம் பற்றித் தெரியாது என்பதால் அப்படித்தான் எழுத ‘முடியுமும்’கூட. :-)

ட்விட்டரில் பேயோனாக ரொம்ப ஆக்டிவாக, எப்போதும் ட்வீட்டிங் மோடிலேயே சிந்தித்துக்கொண்டிருந்ததால் பேச்சிலும் அது பிரதிபலிக்கத் தொடங்கியது. என்னை அறியாமல் சுவாரஸ்யமாகப் பேச முயற்சி செய்தேன். இப்போது அதை கூடுமான வரை தவிர்க்கிறேன். என்னுடைய self-centric குணமும் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளும் பேயோனுக்காக மிகைப்படுத்த உதவின. “மனதிற்குள் எப்போதும் யாருக்காவது பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்” மாதிரியான ட்வீட்கள் இதன் விளைவுதான். :-) எழுதுவதுதான் தொழில் என்பதால் என்னுடைய எழுத்துக்கும் பேயோன் எழுத்துக்கும் வித்தியாசம் காட்ட வேண்டியிருந்தது. இது அடையாள அம்பல பயம் சார்ந்த ஒரு முடிவும்தான். :-) இணைய வாசகர்கள் அதிகமாக இருக்கும் ஒரு இடத்தில் பணிபுரிய நேர்ந்தபோது என்னுடைய இயல்பான கிறுக்குத்தனங்களையும் பேச்சையும் மொத்தமாக ஸ்விட்ச் ஆஃப் செய்ய ரொம்பவே சிரமப்பட்டேன். யோசித்து யோசித்துத்தான் பேச வேண்டியிருந்தது. தெரிந்த சில விஷயங்களைத் தெரியாததாகக் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. அதே சமயத்தில் அந்த விஷயங்கள் எனக்குத் தெரியும் என்ற அறிவில் என் மேலாளர்கள் அவை தொடர்பான பொறுப்புகளைக் கொடுத்தார்கள். என்னுடைய அசோசியேஷன்கள் எல்லோருக்கும் தெரியும் என்பதால் கவனம் தேவைப்பட்டது. Paranoid-ஆகத்தான் இருந்தேன், இருக்கிறேன். இதனால் சிலரைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது. ஏதோ பேசப்போய் பேயோன் பற்றிப் பேச்சு வந்தால் என்னால் poker face பாவிக்க முடியாமல் மாட்டிக்கொள்வேனோ என்கிற பயம்தான்.

யாரெல்லாம் என் எழுத்தை வைத்து என் அடையாளத்தை எளிதில் ஊகிப்பார்கள் என்று நினைத்தேனோ அவர்களில் இருவர்தான் ஊகித்திருக்கிறார்கள். மற்றவர்கள் அதை சாத்தியமாக நினைக்கவில்லை என்பது அண்டர்ஸ்டேட்டட் தெளிவு. நான் பொதுவாகக் கொஞ்சம் அசோஷியலான ஆள் என்பதால் சிலரைத் தவிர்ப்பது பெரிய வேலையாக இல்லை. ஆனால் அதை நான் விரும்பவில்லை. இது freedom of movement பிரச்சினை. :-) இந்தப் பிரச்சினை கவனமாகத் திட்டமிட்ட அநாமதேயத்திலும் வரும். அதாவது எனக்கு. :-)

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar