திசை காட்டிப் பறவை

நெடுங்கதை

*

அத்தியாயம் 1 – குமாரின் கதை

முன்னொரு காலத்தில் சென்னையில் சேல்ஸ் பிரிவில் குமார் என்பவன் வேலை பார்த்துவந்தான். குமார் தன் பெயருக்கேற்பத் தங்கமானவனாக இருந்தான்.

இந்தக் கதை ஆரம்பித்தபோது குமாருக்கு 31 வயது. நடுவில் இரண்டாண்டுகள் நான் கதாசிரியத்தை நிறுத்தியிருந்தேன். கடன் தொல்லை. தங்கைகள் திருமணம். அப்பா, அம்மா பிக்கல் பிடுங்கல். கதை எழுதும் ஆர்வமே போய்விட்டது. முதல் தங்கையை ஒரு முன்வழுக்கைக்காரனுக்குக் கட்டிக் கொடுத்ததில் மனப்பாரம் தீர்ந்தது. அந்த நிம்மதி தந்த சந்தோஷத்தில் மீண்டும் எழுத நான் ஆரம்பித்தேன்.

இதற்கிடையில் எனக்கே தெரியாமல் குமாருக்கு 33 வயதாகிவிட்டிருந்தது. குமார் நாலு பேர் மதிக்கும்படியான சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தாலும் அவன் பார்வையில்லாத தனது தங்கைக்குத் திருமணம் செய்துவைக்கவும் தன் விதவைத் தாயை மேற்கொண்டு படிக்கவைக்கவும் அந்தச் சம்பளம் போதவில்லை.

இந்த சமயத்தில்தான் தெய்வாதீனமாக அவனுக்குத் தன்னுடைய அப்பாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவனது அப்பாவுக்குக் குமாரின் தங்கமான குணம் பிடித்துப்போனது. அப்போது முதலாம் உலகப் போர் நடந்து முடிந்திருந்தது. ஹிட்லர் மெல்ல மெல்லப் பெரிய ஆளாகிக்கொண்டிருந்தான். கிழக்கு ஐரோப்பா முழுவதும் கம்யூனிசம் பரவிக்கொண்டிருந்தது. ஹிட்லர் தனது கட்சிக்காரர்களுடன் கொலோனில் பேரணி போகும் அதே நேரம் நான் அண்ணா சாலையில் தற்செயலாக சந்தித்த என் அலுவலக சகா சுப்பிரமணியத்திடம் ஒரு மரியாதைக்காக “சட்டை புதுசா?” என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

1920 வாக்கில் இந்தியா-பாகிஸ்தான் ஒரே நாடாக இருந்தது. அதனால் லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் அப்போது இந்தியாவில்தான் இருந்தார்கள். குமாரின் அப்பாவும் அவர்களில் ஒருவர். நல்ல செல்வந்தர், ஆனால் பாகிஸ்தானியர். அவருக்குப் பிடித்த ஒரே இந்து என்றால் அது குமார்தான்.

அத்தியாயம் 2 – அப்பாவின் நண்பர்

வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. பேப்பரையும் பேனாவையும் கீழே வைத்துவிட்டு கதவைத் திறக்கப் போனேன். வாசலில் நிழலாடியது. ஏறிட்டுப் பார்த்தால் வந்தவர் அப்பாவின் நண்பர்.

“அப்பா இருக்காரா?” என்றார் அப்பாவின் நண்பர்.

“இருக்கிறார், உள்ளே வாருங்கள்” என்று அவருக்கு ஒரு நாற்காலியையும் ஃபேனையும் போட்டுவிட்டுப் பக்கத்து அறைக்குப் போனேன்.

“அப்பா, உங்களைப் பார்க்க உங்கள் நண்பர் ஒருவர் வந்திருக்கிறார்” என்று அப்பாவிடம் சொன்னேன்.

“யாரு?” என்றார் அப்பா. அப்பாவுக்குப் பல நண்பர்கள்.

“அப்பாவின் நண்பர்” என்றேன்.

அப்பா கூடத்திற்கு வந்து அப்பாவின் நண்பருக்கு வணக்கம் சொன்னார். நான் என் அறை வாசலில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தேன். அப்போது என் அறையில் யாராவது இருந்திருந்தால் அவர்களுக்கு வாசலில் நிழலாடியிருக்கும். திரும்பிப் பார்த்தேன். இவை ஒன்றுமே நடக்காதது போல உள்ளே நான் மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தேன்.

அப்பாவின் நண்பர் ரொம்ப சத்தமாகப் பேசக்கூடியவர். அவர்களது சம்பாஷணை கதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாதே என்று என் அறைக் கதவை சாத்தினேன்.

“ஏண்டா கதவை மூடுறே?” என்றார் அப்பாவின் நண்பர்.

“நான் உள்ளே கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். கதை எழுதும்போது எனக்கு முழுமையான நிசப்தம் தேவை” என்றேன்.

வெள்ளையர்கள் இந்தியாவுக்குக் கொண்டுவந்த பண்டங்களையும் நெவ்ஸ்கி தெருவில் கிழவன் பெல்யூக்கின் விற்றுவந்த பொருட்களையும் ஒப்பிட்டுக் காரசாரமாக அவர்கள் நடத்திக்கொண்டிருந்த உரையாடல் உள்ளே கதை எழுதிக்கொண்டிருக்கும் என் கவனத்தைக் கலைத்துவிடக் கூடாதே என்ற எனது ஆதங்கம் அவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை.

நடுவில் நான் வெளியே வந்து என்னிடம் பேனா இரவல் வாங்கிக்கொண்டு போனேன். என்னிடம் எனக்குப் பிடிக்காத விஷயம் இதுதான். தீவிர எழுத்தாளனாக இருந்துகொண்டு எப்போதும் ஒரு பேனாவைக் கையில் வைத்திருக்காவிட்டால் அப்புறம் என்ன எழுத்தாளன்? இதை விளக்கினால் எனக்குப் புரியப்போவதில்லை.

அத்தியாயம் 3 – குமாரின் அப்பா

குமாரின் இரண்டாவது தங்கைக்கு வந்த வரன்கள் எல்லாம் வந்த வேகத்தில் திரும்பிப் போனது. ஏனென்றால் அவனது அப்பா பாகிஸ்தானியர் என்பதால் யாரும் குமாரின் தங்கையை ஏற்றுக்கொள்ள விரும்பாததே காரணம். குமாரின் அப்பா இந்துவாக இருந்திருந்தால் அவர்கள் அவரது தேசிய அடையாளத்தை மன்னித்திருக்கக்கூடும்.

நானோ இயற்கையிலேயே இரக்க குணதாரி. குமாரினுடைய தங்கையினது திருமணம் அவனது அப்பாவினால் தடைபட்டிடுவது கண்டு என் மனம் வேதனையுற்றது.

நான் உடனடியாக இந்தச் சூழ்நிலையை மாற்றவில்லை என்றால் குமாரோ அல்லது அவனது அல்லக்கைகளோ என்னைத் தவறாக நினைத்துக்கொள்ள வாய்ப்பிருந்தது. தாமதமில்லாமல் குமாரின் அப்பாவை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திருமணம் ஆக வேண்டிய ஒரு பெண்ணின் அப்பா பாகிஸ்தானியராக இருப்பது பிரச்சினை என்றால் அவர் பாகிஸ்தானியராக இல்லாதிருப்பதே நல்லது.

வெள்ளைக்காரப் பிரபு ஒருவர் கொடுத்த விருந்து ஒன்றில் குமாருக்கு அவரது அப்பாவை யாரோ அறிமுகப்படுத்திவைத்தார்கள். குமாரின் அப்பா பிரசித்தி பெற்ற வைத்தியர் வாங் ஃபெய் ஹுங். சீனாவைச் சேர்ந்த மாஸ்டர் வாங் பாரம்பரிய மருத்துவத்திலும் குங்ஃபூவிலும் தேர்ந்தவர். அவருக்குக் குமாரின் தங்கமான குணம் பிடித்துப்போனது. குமாரின் அப்பா சீனாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் வாங் ஃபெய் ஹுங்

.

அத்தியாயம் 4 – 1860, ரஷ்யா

அதிகாலை, மாஸ்கோ. புதைபனி வெளுத்த நெக்ரசோவ் சாலையில் த்ரோய்க்கா ஒன்று மெல்ல அசைந்து வந்தது. இவான் வசீலியெவிச்சின் புகையிலைக் கடை முன்பு நின்றது. தடித்த மேற்கோட்டு அணிந்த ஒரு சீமான் தனது கோட்டுப் பையிலிருந்து சில நாணயங்களை எடுத்தார். வண்டிக்காரனிடம் ஒரு கோப்பெக்கு கொடுத்தார்.

“ஐயா…” என்று இழுத்தான் வண்டிக்காரன்.

“நெவ்ஸ்கியிலிருந்து நெக்ரசோவுக்கு வர ஒரு கோப்பெக்கிற்கு மேல் ஆகாது” என்றார் அந்தச் சீமான்.

“நீங்கள் சொல்வது சரிதான் ஐயா, ஆனால் மீண்டும் அவ்வளவு தொலைவு காலியாகப் போக வேண்டும்” என்றான் வண்டிக்காரன்.

“என்னவோ அது என்னுடைய பிரச்சினை போல!” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்தச் சீமான். குதிரையை சாட்டையால் அடித்துக் கிளப்பினான் வண்டிக்காரன். அந்தச் சீமான் நமது குமார்தான்.

இவான் வசீலியெவிச் அன்றும் அதிகாலையிலேயே கடையைத் திறந்திருந்தார்.

“வாருங்கள் குமார் வாங்-ஃபெய்-ஹுங்கொவிச், இப்போதெல்லாம் உங்களைப் பார்க்க முடிவதில்லையே?” என்றார் இவான் வசீலியெவிச்.

குமார் எப்போதாவதுதான் பண வசதி படைத்த ரஷ்ய சீமானாக வருகிறான். எனவே அவனுக்கு இந்த முறை மரியாதை கொடுங்கள். குமாரை அவன் என்று சொல்லாமல் அவர் என்று அழைப்போம். தயவுசெய்து ஒத்துழையுங்கள்.

“தொழில் நிமித்தமாக பீட்டர்ஸ்பர்க் சென்றிருந்தேன். அங்கிருந்து வோல்கோகிராடுக்குப் போய்விட்டு வருகிறேன். வீட்டில் அனைவரும் நலமா?” என்று விசாரித்தார் குமார்.

“வீடு நன்றாகத்தான் இருக்கிறது. நாட்டைப் பற்றிக் கேளுங்கள்” என்றார் இவான் வசீலியெவிச்.

“போல்ஷெவிக்குகளைப் பற்றித்தானே சொல்கிறீர்கள்?” என்ற குமார், இவான் வசீலியெவிச்சிடம் கையை நீட்டினார்.

“ஐயய்யோ, அவர்களைப் பற்றிச் சொல்லி மாளாது குமார் வாங்-ஃபெய்-ஹுங்கோவிச்” என்றபடி நீட்டப்பட்ட கையில் ஒருசிறு புகையிலைப் பொட்டலத்தை வைத்தார் இவான் வசீலியெவிச்.

“அப்பா, உங்களுக்கு வென்னீர் தயாராகிவிட்டது” என்ற 17 ஆண்டுகள் நிரம்பிய இனிய குரல் ஒன்றைக் கேட்டுத் திரும்பினார் குமார். அது காத்தரினா வசீலியெவ்னாவின் குரல்தான்.

“என்ன கத்யா, என்னிடம் பாராமுகம் காட்டுகிறாய்? காத்தரினா குமாரோவா என்று பெயர் வாங்கும் ஆசையில்லையா?” என்றார் குமார்.

“போங்கள் குமார் வாங்-ஃபெய்-ஹுங்கோவிச், உங்களுக்கு எப்போதும் விளையாட்டுதான்” என்று சிணுங்கினாள் கத்யா.

“விளையாடத்தான் எனக்கு அனுமதி கிடைப்பதில்லையே கத்யா!” என்றார் குமார். ஆயிரம் கோப்பெக்குகளைத் தரையில் வீசியது போல் சிரித்துக்கொண்டு ஓடிப்போனாள் கத்யா.

இவான் வசீலியெவிச்சின் முகம் சுருங்கியிருந்தது. “குமார் வாங்-ஃபெய்-ஹுங்கோவிச், நான் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். கத்யாவிடம் நீங்கள் பேசும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. சின்னப் பெண் அவள்” என்றார் இவான் வசீலியெவிச்.

குமார் செருமி நகைத்தார். “பயப்படாதீர்கள் இவான் வசீலியெவிச், ரஷ்யாவில் அப்படியெல்லாம் விபரீதமாக ஒன்றும் நடந்துவிடாது” என்றார் அவர். “நான் ஒரு இதற்காகத்தான் அவளிடம் அப்படிப் பேசுகிறேன். கத்யாவுக்கு நிஜமான ஆபத்து போல்ஷெவிக்குகளால் நேராத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.”

அதிர்ந்துபோனார் இவான் வசீலியெவிச். “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் குமார் வாங்-ஃபெய்-ஹுங்கோவிச்?”

“ஆமாம் இவான் வசீலியெவிச், நேற்று மீர் பூங்காவில் கத்யாவை அந்த முரடன் பாவலின் தம்பியுடன் பார்த்தேன்” என்றார் குமார்.

“மித்யாவுடனா?” அதிர்ச்சியில் எழுந்து நின்றேவிட்டார் இவான் வசீலியெவிச்.

ஆம், கத்யா போல்ஷெவிக் தலைவர்களில் ஒருவனான பாவல் பெத்ரோவிச்சின் தம்பி திமித்ரியுடன் சுற்றுவதை குமார் இவான் வசீலியெவிச்சிடம் தெரிவித்தார். பின்னாளில் இவரைப் போன்ற பல ஏழை எளியோர் கொடுமைக்கார ஜார் மன்னராட்சியை எதிர்த்துப் போராடவும் வழிவகுத்தார் குமார். 1917ல் ஏற்பட்ட அக்டோபர் புரட்சி, ரஷ்யாவுக்குக் குமார் போட்ட பிச்சை.

அத்தியாயம் 5 – இரவின் மடியில் குமார்

மொட்டை மாடியில் நின்று வானத்தைப் பார்க்கிறேன். எண்ணிலடங்காத நட்சத்திரங்கள். ஆகாய விருட்சத்தில் பூத்த விண்மலர்கள். விமானங்கள் தாழப் பறக்கும் தேனீக்கள். சுதந்திரம் கிடைத்து 52 வருடங்கள் ஆகிவிட்டதை இன்று வரை என்னால் நம்ப முடியவில்லை. சுதந்திரம் இந்த நட்சத்திரங்களைப் போல உண்மையானதுதானா? அல்லது இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்துப் பின்னோக்கிப் பார்த்தால்தான் அது கண்ணில் படுமா?

யாருக்குத் தெரியும்? தனியொரு மனிதனைத் தனியே தவிக்க விடாத இரக்கமற்ற மனிதாபிமான சமூகம் இது. இதில் சுதந்திரத்தை எங்கே எதிர்பார்க்க முடியும்? நிச்சயமாக நான் வாழும் தெருவில் முடியாது. மனிதத்தன்மையால் இதயம் மரத்துப்போன மாக்கள் இவர்கள். பேசாதீர்கள்! உங்கள் குரலுக்கு இடமில்லை என் செவியில்!

அக சிந்தனையில் சிக்கி வானை ஒரு கணம் மறந்த என் வெட்கத்தைக் கண்டு வியக்கிறது நிலா! மேகத் துயில் விலகிக் கண் விழித்துவிட்டாள் நிலாப் பெண். அவளைப் பொறுத்த வரை அலுப்பில்லாமல் அவளை ரசிக்கும் நானும் ஒன்றுதான், இன்று செய்தித் தாள் ஒன்றில் ஒரு பத்தி பேட்டியளித்த அறநிலையத் துறை ஆணையாளரும் ஒன்றுதான்.

இரவு தினமும் வருகிறது மெனக்கெட்டு, சாப்பாட்டு நேரத்தில் பார்க்க வரும் நண்பனைப் போல.

அத்தியாயம் 6 – கண்ணாடி

குமாருக்குக் கிட்டப்பார்வை உண்டு. குமாரானவன் கண்ணாடி போட்டிருக்கிறான். கண்ணாடி போடாதபோது கடவுளே எதிரில் வந்தாலும் அவனுக்கு அடையாளம் தெரியாது. வேதனை பொங்கக் கூறுகிறான் குமார்…

“ஏறக்குறைய 12 வருடங்களுக்கு முன் சிறு விபத்து ஒன்றில் என் கண்ணாடியை இழந்தேன். கண்ணாடி இல்லாமல் உலகத்தைப் பார்க்கும் அனுபவம் எனக்குக் கிடைத்தது.

தார்ச் சாலையில் கீழே கிடக்கும் சியாமள வர்ணத்து அரூப வஸ்துவானது எருமைச் சாணமா, அழுக்குத் துணியா – யாரறிவார்? எதிர்ப்படும் ஒவ்வொரு பெண்ணையும் உற்றுப் பார்க்கிறேன் – அவள் அழகாய் இருக்கிறாளா? நானறியேன். என் கண்ணாடியைக் கேட்டால் அது சொல்லக்கூடும்.

தட்டுத் தடுமாறி நடக்கையில் சிறு புதைகல்லில் என்னைத் தடுக்கிவிடும் என் காலுக்குக் கண்ணாடி இல்லை. அந்தக் கல்லுக்கு நான் எத்தனையாவது காலோ…”

குமாரின் காலுக்கு அது எத்தனையாவது கல்லோ…

அத்தியாயம் 7 – குமாருக்கு ஹலோ சொல்லுங்க!

பெட்டிக்கடையுந்தேனீர்க்கடையுமாயிருக்கின்ற அவ்வர்த்தக மையத்தை நோக்கிப் பொன்னிற டையும் சற்று முன்வந்த தொப்பையுமாகச் சென்று கோல்டுபிளேக்கு கிங்க்சும் புகைத்தபின் சுவைக்க ஆல்சும் வாங்கிய குமாரின் இடுப்பில் இருந்த

செல்வி

அழகா யிருக்கின்றாள்
மினுக்கும் தோற்றத்தினைக்
கொண்டவளா யிருக்கின்றாள்
கிண்கிணிக் குரலால் அவனை
அழைத்தின் புறுகின்றாள்
அவாவுடன் தொட்டிடின்
ஒளிபெறுபவளா யிருக்கின்றாள்
பன்முறை தீண்டி அழைத்திட
பல குரல் வித்தகங்காட்டுகின்றாள்
காலாவதிக் காலங்கேட்டால்
மிச்சத்தொகை சொல்லி மயக்குகின்றாள்
ஈன்றோரால் பேணப்படாததால்
இடுப்பினைவிட் டிறங்க மறுக்கின்றாள்.
அண்டைச் செல்லாள் துயிலெழும்ப
மேனி சிலிர்க்கின்றான் குமார்
தன்னவளின் நினைப்பினிலே.

அத்தியாயம் 8 – நிழல்

இந்த நாவலைப் படித்துவிட்டுப் பல வாசகர்கள் மின்னஞ்சலிலும் தொ.பேசியிலும் கடிதங்களிலும் என்னிடம் இரண்டு கேள்வி கேட்டார்கள். 1) குமாருக்கு நிழல் உண்டா? 2) குமாருக்கு நிழல் உண்டா? முதல் கேள்வி இரண்டாவது கேள்வியின் நிழல்தான். (கேட்டவர்கள் பார்வைரீதியாக சவால் விடப்பட்டவர்கள் என்பது எனது யூகம். ஏனெனில் பிரெய்லியில்தான் நிழல் வரும், அச்சில் வராது.)

குமார் ஒரு கருத்தாக்கம் (concept). எனவே குமாருக்கு நிழல் உண்டா என்ற கேள்விக்கு இந்த அமர்வின் இறுதியிலோ அல்லது வேறொரு குமார்சாரா நாவலிலோ பதில் சொல்கிறேன். இப்போதைக்கு ஒரு மறைமுக பதிலை மட்டும் தருகிறேன்.

குமார்-ன் நிழல் குமார்-ன் நிழலை விடப் பெரியது.

நிழலோடு
(ஒரு உப அத்தியாயம்)

நாம் நம் நிழலாகப் பிறந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் குமாரை அவ்வப்போது வாட்டும். தன் நிழலானது எச்சில், கழிவுகள், சாக்கடை திரவப் போக்குகள், அசுத்தக் குட்டைகள், குப்பை, சேறு, தூசு, மண் மீதெல்லாம் தேய்ந்து, புரண்டு, இடித்து, உரசியும் சுத்தமாக இருப்பதைக் குமார் பொறாமையோடு பார்ப்பதுண்டு. உண்மையில் அந்த ஏக்கம், பொறாமைப் பார்வை அனைத்துமே மேற்கண்ட கிடைமட்டப் பட்டியலில் தினந்தினம் பாதிக்கப்படும் குமாரின் காலுக்கு உரியவைதான். ஆனால் குமாரின் கால் குமாரில் ஒரு பகுதிதானே. அதற்கென்று தனி நிழலா இருக்கிறது?

குமாருக்கு ஏட்டளவிலாவது நிழல் உண்டு என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஏட்டு நிழலை ஏற்காதவர்களுக்கு ஒரு கேள்வி – நான் ஏட்டில் இல்லை, அதற்கு வெளியில்தான் இருக்கிறேன்; எனக்கு நிழல் உண்டா? எனக்கு நிழல் உண்டா என்று கேட்பதற்கு முன் நான் யார் என்று யோசிப்பது அவசியம். நான் யார்? “யார்” என்பது “நான்”-இன் நிழலேயாம்.

அத்தியாயம் 9 – காலமும் கதாபாத்திரமும்

எல்லா நல்லவர்களிடமும் கட்டாயமாக ஒரு கெட்ட குணம் இருந்தே தீரும். குமாரிடம் பிடிவாதம் ஒரு பெருந்தொல்லையாக இருந்தது.

கதை ஆரம்பிக்கும்போது அவனுக்கு 33 வயது. இடையில் பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் இப்போதும் அவன் வயது அதிகரிக்காமல் 33ஆகவே இருக்கிறது. நானும் அவனிடம் பல தடவை சொல்லிப் பார்த்துவிட்டேன். சமூக விரோதி ஆகிவிடாதே என்று தார்மீகமாக பயமுறுத்தியும் பார்த்திருக்கிறேன். காலம் கூட பதில் சொல்ல முடியாது போலிருக்கிறது. காரணம், அவன் காலத்திற்கு ஒத்துழைக்க மறுக்கிறான்.

ஒரு கற்பனைப் பாத்திரத்திற்கு ஏன் வயது ஏறிக்கொண்டே போக வேண்டும் என்பது அவன் வாதம். ஆனால் அவன் நிஜ வாழ்க்கையில் மட்டும் என்ன கிழித்துவிட்டான்? அப்போதும் 33தான், இப்போதும் 33தான். நிஜ வாழ்க்கைக் குமார் மூலமாக அவனைத் திருத்தலாம் என்று எண்ணி அவனைத் தொடர்பு கொண்டேன். அவன் வீடும் இவன் வீடும் பக்கத்துப் பக்கத்தில் இருக்கிறது. அவன் வீட்டு எண் 46 என்றால் இவன் வீட்டு எண் 46, அவ்வளவு பக்கம்.

ஒரு எட்டு போய் குமாருக்கு அறிவுரை சொல்லிவிட்டு வாயேன் என்று அவனிடம் சொன்னேன். அவனும் இந்தா போகிறேன் என்றுவிட்டு கையில் ஒரு பிள்ளையார் கோவிலை வைத்துக்கொண்டு விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருக்கிறான்.

அவனுக்கு வயது ஏறினால்தானே மற்ற கதாபாத்திரங்களுக்கும் வயது ஏறும்? இப்படிச் சற்றும் பொறுப்பில்லாமல் திரிகிறான் குமார். நிஜ வாழ்க்கையில் அவன் தானுண்டு தன் வயதுண்டு என இருந்தாலும் கதையில் வரும் குமாருக்கு அறிவுரை சொல்லும் தகுதி அவனுக்கு இல்லாமல் போய்விட்டது.

அத்தியாயம் 10 – ஓவியமும் பேசுதடி

மாபெரும் கலா ரசிகன் குமார். இங்கே மட்டும் என்ன வாழ்கிறதாம்? நானும் கலா ரசிகன்தான். அவனும் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே, யார் வேண்டாம் என்றார்கள்.

குமாரைக் கலா ரசிகனாக ஆக்குவதில் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. கலையை உருவாக்குவதில் போட்டி இருக்கலாம், ஆனால் ரசிப்பதில் இருக்க முடியாது. குறைந்தது இந்த அத்தியாயத்தில் அது முடியாது. தவிரவும், நாங்கள் இருவேறு உலகங்களில் சஞ்சரிக்கிறோம். இவ்விரு உலகங்களை இணைக்கும் புள்ளியை நான் சதா அழித்துக்கொண்டிருக்கிறேன்.

இச்சிந்தனையோட்டத்தின் விளைவாக, குமார் கலையை ரசிப்பதோடு நிற்கவில்லை. அதைத் தனக்கேயுரிய பாணியில் தோற்றுவிக்கவும் செய்தான்.

ஓவியர் குமாரின் மேலான கோட்டோவியம் ஒன்று இங்கு(‘த்’) தரப்படுகிறது.

மூக்கு என்பதை மனித முகத்தில் அது பொதுவாகத் தளம் கொண்டு இயங்கும் இடத்திலேயே பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு அதை இடமாற்றி (transfer) வேறு பார்வைக்கோணத்தால் அணுகத் தூண்டுகிறார் ஓவியர் குமார். இப்படைப்பில் மூக்கு இருக்குமிடம் இரு தொடைகளுக்கு இடையே. எனவே இங்கு மூக்கானது ஆண் குறியாகவும் தொழிற்படுகிறது. ஓவியத்தின் மையப் பகுதியில் இருப்பதால் இம்மூக்கை இந்த ஓவியத்தின் மூக்காகவும் கொள்ளலாம். கலை வரலாற்றில் மூக்குள்ள ஒரே ஓவியம் இதுதான் எனவும் துணிந்து சொல்லலாம்.

அத்தியாயம் 11 – பாலிய காலத்துப் படிமங்கள்

இன்று காலை பால் வாங்கப் போனபோது என் பாலிய கால ஆசிரியர் ஒருவரைப் பார்த்தேன். ஓவிய ஆசிரியர்தான். காரட், பாகற்காய், தக்காளி, கத்தரிக்காய் எல்லாம் அழகழகாக வரைவார் –

காரட் பார்த்திருக்கிறீர்களா? பாலியத்தில் நான் படித்த படக்கதைகளில் முயல்கள் காரட்டை லூசு மாதிரி தின்றுகொண்டிருக்கும். கண்ணுக்கு நல்லதுதான், இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக இப்படியா?! ஒரு படக்கதையைக் குறைந்தது அரை லட்சம் பிரதிகள் அச்சடித்திருப்பார்கள். அத்தனைப் பிரதிகளிலும் காரட் சாப்பிட்டால் வயிறு என்னத்துக்கு ஆகும்? அதனால்தான் கடைசியில் ஆமை ஜெயித்துவிட்டது.

பாகற்காயோ அபரிமிதக் கசப்பு. டினோசாரின் முதுகு போன்ற அதன் மேனியினுடைய முரட்டுத்தனமே அதனுடைய ருசிக்குக் கட்டியம் கூறுகிறது. என் தாயார் அதில் கறி செய்யும்போதெல்லாம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார். இப்போது வேறு மாதிரி செய்திருக்கிறேன், கசக்காது என்பார். தின்று பார்த்தால் கசப்பு மாறாமல் முகஞ்சுளிக்க வைக்கும். சீ கசப்பு என்றால், அதன் சுவையே கசப்புதான், கசப்பும் ஒரு சுவைதானே என்பார். இது எப்படி இருக்கு?

அடுத்து என்ன? காரட். இல்லை, அதை முதலிலேயே சொல்லிவிட்டேன். இப்போது தக்காளி. இப்பழமானது புற்றுநோயைத் தடுக்கும் என்று கேள்வி. உண்மையில் தடுக்குமா என்பதுதான் கேள்வி. தடுக்கும் என்பது பதில்.

கத்தரிக்காயைப் பற்றிப் பேச நான் பணிபுரியும் நிறுவனம் அனுமதிக்காது. ஆகவே வாசகர்களே, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

அத்தியாயம் 12 – இது எழுதும் கை ஸ்வாமி!

இந்தப் பத்தியின் ஆறாம் சொல்லில் தோன்றும் குமார், தானேதான் இந்த நாவலை எழுதிக்கொண்டிருப்பதான மயக்கத்தில் அடிக்கடி ஆழ்கிறான். ஹ! இந்தச் சப்பட்டைத் தாளில் பேனா உமிழ்ந்த மைக்கோட்டுப் புழுக்களாக ஊர்ந்துகொண்டிருப்பவனுக்கே இவ்வளவு என்றால் வருங்கால நோபல் பரிசுக்காரனான எனக்கு எவ்வளவு இருக்கும்.

ஆசிரியருடன் கதாபாத்திரங்கள் ஊடாடுவதெல்லாம் கதைப் புத்தகங்களுக்கு நன்றாயிருக்கும் ஸ்வாமி, ஆனால் யதார்த்த நிலை அதுவா? இந்தப் புத்தகத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். அவன் வாழ்க்கையில் எது நடந்தாலும் அது வெள்ளைத் தாள்களின் மேல் மைக்கோடுகளின் நெளிசல்களாகத்தான் இருக்கின்றன. தாள் முழுக்கக் கிடைமட்டமாக சுளித்து சுளித்துப் பல மைக்கோடுகள். என்னவென்றால் குமார் காதலிக்கிறானாம். வேறொரு பக்கத்திலும் இதே மாதிரி ஜிலேபிக் கோடுகள். அப்போது என்னவாம்? அவன் ரஷ்ய சீமானாக வருகிறானாம். அரை மீட்டர் தூரத்திலிருந்து பார்த்தால் எல்லா கருமமும் ஒரே மாதிரித்தான் தெரிகிறது.

நான் தப்பாக ஒன்றும் சொல்லவில்லை ஸ்வாமி; என்ன இருந்தாலும் குமார் என் கதாபாத்திரம்தானே, அவனை நான் விட்டுக்கொடுத்துப் பேசுவதாவது? எழுத்தாளர்கள் கதாபாத்திரங்களுடன் அதிகம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று விமர்சகர்கள் குதிக்கிறார்கள் (பாட்டுக்கொரு புலவன் போன பிறகு இவர்கள் வைத்ததுதான் சட்டம்). அதை அனுசரித்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் இப்படி. கிறுக்குகிற கைதானே ஐயா எழுதும்?

அத்தியாயம் 13 – அன்னியன் பிரவேசம்

இந்த நாவலை எழுதுவது குமார் அல்ல என்று சொன்னது யாருக்கோ பிடிக்கவில்லை போலிருக்கிறது. யாரோ என் அலுவலகத்திற்கு ஃபோன் செய்து என் மேலதிகாரியிடம் பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

நல்ல வேளையாக ரிசப்ஷனிஸ்ட் என் வாசகி. அவள் சட்டென்று சுதாரித்துக்கொண்டு நீங்கள் யார் என்று கேட்டிருக்கிறாள். ஃபோன் செய்தவன் குமார் என்று சொல்லியிருக்கிறான். மேலதிகாரி வெளியூர் போயிருப்பதான பொய்யைச் சொல்லிவிட்டு என்னைக் காப்பாற்றிவிட்டாள் ரிசப்ஷனிஸ்ட். வாழ்க அவள்.

அவள் கொடுத்த தகவலின்படி அது எனது குமார் அல்ல. 10 பாயிண்ட் சைஸ் எழுத்துருக் குரலில் அவன் பேசியிருக்கிறான். நான் எழுதுகிற பத்திரிகையில் பயன்படுத்தப்படுவதோ 8.5. இவன் வேறு ஏதோ கதையைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும். அவன் பெயரும் குமாராக இருந்ததால் போன அத்தியாயத்தைப் படித்துவிட்டுத் தப்பெண்ணம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

வீட்டிற்குப் போய் முதல் வேலையாக மேஜை மேல் இருந்த பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தேன். ஒரு பத்திரிகைக் கதையில் குமார் என்றொரு கதாபாத்திரம் தென்பட்டான். கையில் மங்கையர் மலரை வைத்துக்கொண்டிருந்தவாறு புத்தகத்தில் இருந்த அவனிடம் இவ்வாறு கூறினேன்:

“தம்பி, நீ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். நான் எழுதியது வேறொரு குமார் பற்றி. நடந்தது போகட்டும். இனியாவது என் வழியில் குறுக்கிடாமல் இரு.”

நான் சற்றும் எதிர்பாராத வகையில் குமார் தடாலென்று என் காலடியில் விழுந்தான். “ஐயா, என்னை மன்னித்துவிடுஙகள்!” என நா தழுதழுத்தான். “என் ஆசிரியர் என்னை புழுவைவிட கேவலமாக நடத்துகிறார். நான் உங்கள் குமார் போல நடித்தால் நீங்கள் ஏமார்ந்து போய் எனக்கு சுவராசியமான சம்பவங்களும் இடங்களும் தருவீர்கள் என ஆசைப்பட்டேன். நான் பணிபுரியும் கதையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து இருந்து அலுத்துவிட்டது” என்றான் வேற்றுக் குமார்.

அவன் பேச்சைக் கேட்கக் கேட்க எனது கழிவிரக்கமும் அதிகரித்துக்கொண்டே வந்தது. அவனும் என் கதாபாத்திரமாக இருந்தால் இருவரையும் இணைத்து ஒரு கதாபாத்திரமாக்கிவிடலாம். ஆனால் இவன் இன்னொருவனுடைய ஆள். எழுத்துலக தார்மீக நெறிகளை மதியாமல் இருவரையும் இணைத்துவிட்டால் நாளைக்குப் பிரச்சினை ஏற்படும். இன்றைக்கே ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. நான் இதைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.

அத்தியாயம் 14 – இந்துஸ்தான் லீவர்

இந்தாம்மா ரிசப்ஷனிஸ்ட் – ஆமாம், உன்னைத்தான். உன்னைத் தொலைபேசியில் அழைத்தால் பிடிக்க முடியாது. நீ எப்படியும் இந்த நாவலைப் படிப்பாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் இந்தக் குறுக்குவழி.

அந்த இந்துஸ்தான் லீவர் பையனிடம் என்ன இல்லை? அவனை ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய்? உன் அப்பா எனக்கு ஃபோன் செய்து அழாத குறையாகப் புலம்பித் தீர்த்துவிட்டார். இந்துஸ்தான் லீவரில் வேலை பார்க்கிறான், கை நிறைய சம்பளம், நல்ல உயரம், ஒரு கெட்ட பழக்கம் இல்லை. வரதட்சிணையே வேண்டாம், அதற்கு பதிலாக ஒண்ணேகால் லட்சம் ரொக்கமாய்த் தந்துவிடுங்கள் என்கிறான். இவனை விட்டால் வேறு நல்ல வரன் அவ்வளவு சுலபமாய்க் கிடைப்பானா?

யோசித்துப் பார். நான் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டும்.

அத்தியாயம் 15 – ரிசப்ஷனிஸ்ட் எழுதிய கடிதம்

என் அன்புள்ள தங்களுக்கு,

தங்கள் ‘ரிசப்ஷனிஸ்ட்’ எழுதிக்கொள்வது…..

இப்பவும் நான் இல்லாதபோது நீங்கள் என் handbag -கை குடைவது எனக்கு தெரியும். அதனால்தான் இந்தக் கடிதத்தை இங்கே வைக்கின்றேன். நிற்க…..

உங்களை போல் ஒரு ஆனானப்பட்ட எழுத்தாளரிடம் ஏன் இவ்வளவு ஓளிவுமறைவுகள்?? என்னைப் பற்றி உங்கள் மனதில் இருப்பதை என்னிடம் open -னாக சொல்லிவிடலாமே?? உங்களை என் தந்தைக்கு நிகராக மதிக்கின்றேன். நீங்களே என் வாழ்க்கைதுனையாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். ஆனால்…. கைநிறைய  சம்பாதிக்கும் வரன் என்ற பெயரில் சம்மந்தமில்லாத மூன்றாவது மனுஷனை என்னிடமே சிபாரிசு செய்து என் மனசை காயப்படுத்திவிட்டீர்கள்.

கதாபாத்திரங்களின் மனசுக்குள் ஆழமாக பார்த்து எழுதும் இலக்கியகாரராகிய நீங்கள்…. என்னை மட்டும் புரிந்துகொள்ளாதது ஏன்???

நீங்கள் கேட்ட கேள்வியைத்தான் நானும் கேட்கின்றேன்…… உங்களுக்கு என்னை பிடிக்கவில்லையா??? என்னிடம் என்ன இல்லை??? என்னை பிடிக்காத நபர் என்றால் என் handbag -கை ஏன் திருட்டுத்தனமாக குடைய வேண்டும்? என்னுடைய handbag -கில் நீங்கள் எதை தேடினீர்கள்? Hairpin -னா? கைக்குட்டையா? “compact” டப்பாவா? sticker பொட்டா? எதுவும் காணாமல் போகவில்லையே??

At any cost இனி நீங்கள் அடுத்த அத்தியாயத்தை எழுதலாம்….

இவள் என்றென்றைக்குமாய் உங்களுடைய….

♥ கோதை ♥

அத்தியாயம் 16 – கலியாண காலம்

ஜுரத்தின் அறிகுறிகளான தேக உஷ்ணாதிக்கம், தலைவலி, வெப்பமும் குளிரும் மாறி மாறி வருதல்-யாவும் ஜுரவிஷங்கள் நரம்புகளையும் தசை நார்களையும் தாக்குவதால்தான். நீங்கள் சோர்வடைவதோடு, உங்கள் ஜீர்ண சக்தியும் பலஹீனமடைகிறது. ஆனால் தேகத்தை சீர்படுத்த போஷணம் வேண்டுமே! ஹார்லிக்ஸே அதற்குத் தகுந்ததென டாக்டர்கள் அறிந்திருக்கிறார்கள். அது லகுவான ஆகாரம். எளிதில் ஜீர்ணமாகும். உடம்பிற்கு வலுவூட்டி சீக்கிரம் தேற்றுகிறது. முக்கிய ஆஸ்பத்திரிகளிலும் அதை ஜுரநோய்களுக்கு பத்திய உணவாக ஆதரித்து வருகின்றனர்.

* * *

பாகீரதி அத்தை ஊரிலிருந்து வந்தால் வீடு கல்யாண சத்திரம் மாதிரி களைகட்டிவிடும். அதுவும் முகுந்தன் மாமா ‘பாகீ, பாகீ’ என்று காலையில் கத்த ஆரம்பித்தால் இருட்டும் வரை அங்கே வேறு சப்தம் கேட்காது.

குமாரின் அம்மா அதைக் காண்பித்து அகமுடையானிடம் புலம்புவாள். “உங்கள் அத்திம்பேரைப் பாருங்கள், பெண்டாட்டியை எவ்வளவு பிரியமாகக் கூப்பிடுகிறார். நீங்களும் இருக்கிறீர்களே, ஏய், ஏய் என்று வேலைக்காரி மாதிரி” என்பாள்.

உடனே குமாரின் அப்பா ழர்த்தி, “உன்னை ராதை என்று கூப்பிடாமல் ரா, ரா என்றா கூப்பிடுவார்கள், தெலுங்குக்காராள் போல” என்று க்வதர்க்கம் பேசி அவள் வாயை அடக்கிவிடுவார்.

குமார் காலேஜ் முடிந்து பிரம்மராக்ஷஸ் துரத்துவது மாதிரி ஓடி வந்தான். எல்லாம் கோதையைப் பார்க்கிற ஆவல்தான்! கோதை மேல் அவனுக்கு ஒரு தனி பிரேமை. குமார் அவளைப் பார்த்து ஏறத்தாழ ஒரு வருஷம் ஆகியிருக்கும். தன்னை அவள் மறந்திருப்பாளோ என்ற ஸந்தேகம் அவன் மனதில் கிலேசத்தை உண்டுபண்ணியது வாஸ்தவந்தான். அதனாலென்ன, அவள் இன்னும் இருபது நாள் இருக்கப்போகிறாள், அவளுக்கு நம்மை ஞாபகப்படுத்தி விட அந்த அவகாஸம் யதேஷ்டம் என்று எண்ணிக்கொண்டான் குமார்.

வீட்டிற்குள் நுழைகிறபோதே ஜன்னலண்டை கோதையின் நீலோத்பல வதனம் தெரிகிறதா என்று ஓரக்கண்ணால் பார்த்தான் குமார். பாட்டிதான் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு இவனைப் பார்த்து “வாடாப்பா” என்றாள். கோதை அடுக்களையில் இருப்பாள் போலும் என்று குமார் தன்னை ஸமாதானப்படுத்திக்கொண்டான்.

முகுந்தன் மாமா குமாரைப் பார்த்ததுதான் தாமதம், “பாகீ, உன் மருமான் வந்திருக்கிறான் பார்” என்று பின்னால் திரும்பிச் சத்தமிட்டார். பாகீரதி அத்தை வாயெல்லாம் பல்லாக “வாடா, பள்ளிக்கூடம் முடிந்துவிட்டதா?” என்றாள்.

குமாருக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. “அத்தே, நான் காலேஜ் ரெண்டாம் வருஷம் படிக்கிறேன்” என்றான் அவன்.

“இந்தக் காலத்துப் பிள்ளைகள் விசுக்கென்று வளர்ந்துவிடுகிறதுகள்” என்றாள் பாகீரதி அத்தை.

“பாகீ, கோதைக்குட்டிக்கு என்ன வயஸாகிறது இப்போது?” என்றார் ழர்த்தி.

“மாசி வந்தால் பதினாறாகிறது. சின்னப் பெண்தானே” என்றாள் அத்தை.

“நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய். கலியாணம் பண்ணி வைத்திருந்தால் அவளுக்கு என் வயஸில் ஒரு வாரிஸு இருக்கும்! ஹஹஹ!” என்று வீடே கிடுகிடுக்கும்படி சிரித்தார் முகுந்தன் மாமா.

கோதை இவனைப் பார்த்துப் பழிப்பு காட்டிவிட்டுத் தோட்டத்திற்கு ஓடிப்போனாள். குமாரின் மனஸும் கூடவே போனது.

“கொஞ்சம் கேலி பேஸாமல் இருங்களேன்” என்று கோபித்த அத்தை, “குமாருக்குப் பதிநேழு இருக்குமா?” எனக் கேட்டாள்.

“பாகீ, உன் மனதிலிருப்பது எனக்குப் புரிகிறது. பயல் முதலில் கல்லூரியை முடிக்கட்டும். பிறகு என் ஆபீஸிலேயே அவனுக்கு ஒரு வேலை போட்டுத் தரலாமென்றிருக்கிறேன்” என்றார் ழர்த்தி.

“எதற்கும் கோதையை ஒரு வார்த்தை கேட்டுவிடலாமே?” என்றாள் குமாரின் அம்மா.

“அதற்கு அவசியமே இல்லை. நாம் செய்யாவிட்டால் அவர்களே செய்துகொண்டுவிடுவார்கள். அதுவும் இந்துஸ்தான் லீவரில் உத்தியோகப் பார்க்கிற அகமுடையான் என்றால் எந்தப் பெண்ணுக்குக் கசக்கும்?” என்றார் ழர்த்தி.

அதை ஆமோதிப்பது போல முகுந்தன் மாமாவும் “ஏவ்!!!” என்று பெரிதாக ஏப்பம் விட்டார்.

அத்தியாயம் 17 – முனைவீடு

முனைவீட்டில் திருட்டுப்போனதைக் கேட்டுக் கொதிப்படைந்தான் குமார். பொதுவாக அவனுக்கு இம்மாதிரி நிகழ்வுகளில் ஈடுபாடில்லை. சொந்தத் தெருக் குற்ற வெறுப்பில் தெருவிலிறங்கி நடக்கத் தொடங்கினான். எரிச்சல் மீதூறி வேகுவேகென்று நடக்க, காபி கடை அருகில் ஊர்ந்து வந்துகொண்டிருந்த ஜீப்பில் இன்ஸ்பெக்டர் எதிர்ப்பட்டார். அவரை செமத்தியாகக் கட்டி ஏறிவிட்டான் குமார். தெரு முடியும் தறுவாயில்தான்

குமாரின் வீடு இருந்தது. இருந்தாலும் முனையிலிருந்தது முனைவீடுதான். ஒரு வீட்டில் தப்பித்தது முனைவீடு பட்டம். மூன்று அறைகள், ஒரு கழிப்பறை,

ஒரு குளியலறை, ஒரு சமையலறை, ஒரு பெரிய ஆண், ஒரு சிறிய ஆண், ஒரு பெரிய பெண், இருசிறு பெண்கள், கொல்லையில் ஒருசிறு தோட்டம், அதில் ஒரு கிணறு,

அவ்வப்போது ஒரு பூனைக்குட்டி முதலானவை முனைவீட்டில் உண்டு. எல்லோரும் கடற்கரைக்குச் சென்று பட்டம் விட்டு பலூன் சுட்டு சுண்டல் தின்று நீர்முனையில் நின்றுகொண்டிருக்கையில் வீட்டில் திருடுபோனது. மூத்த பெண் கலியாணத்தில் டபேதார் தம்பிப் பையன்

அன்பளிப்பாய்த் தந்த குண்டான், அடுத்த மாத போனஸில் குடும்பத் தலைவர் நாகராஜன் வாங்க உத்தேசித்திருந்த றேடியோ, ஒரு செட் ஜிமிக்கி மட்டும் இருந்த நகைப்பெட்டி, புதிய ஸ்னோ டப்பாக்கள் இரண்டு, தொலைக்காட்சிப் பெட்டிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த பஞ்சலோக ஸரஸ்வதி சிலை, பெட்டியோடு புதிய மைப்பேனா, ஆறு பட்டுப்புடைவைகள், இரண்டு பட்டுவேட்டிகள், மூன்று பட்டு அங்கவஸ்திரங்கள் முதலியவை முனைவீட்டில் திருட்டுப்

போனதைக் கேட்டுக் கொதிப்படைந்தான் குமார். பொதுவாக அவனுக்கு இம்மாதிரி நிகழ்வுகளில் ஈடுபாடில்லை.

அத்தியாயம் 18 – கணேசு என்னும் கருதுகோள்

குமாருக்கு கணேசு கணேசு என்று ஒரு நண்பன் இல்லை. இருந்திருந்தால் குமார் அவனை கணேசு கணேசு என்றே அழைத்திருப்பான். கணேசு என்று ஒரு நண்பன் இல்லாததை குமார் ஒரு சுமையாகக் கருதவில்லை. என்றாலும் சில நடைமுறைப் பிரச்சினைகள் எழவே செய்தன.

கணேசுவின் தங்கை வசந்தலட்சுமியை ஒரு வருடமாகவே காதலித்தான் குமார். வசந்தலட்சுமியிடம் காதல் கடிதம் கொடுக்க நண்பன் என்ற முறையில் கணேசுதான் பொருத்தமான தூதுவன். ஆனால் கணேசு இல்லை. காதலிக்கத் தொடங்கிய முதல் ஆண்டிலேயே வசந்தலட்சுமிக்குப் பல காதல் கடிதங்கள் எழுதிப் பார்த்துவிட்டான் குமார். ஆனால் கொடுக்க ஆளில்லாததால் குமார் எழுதுவதும் கிழித்துப் போடுவதுமாக இருந்தான்.

பிறகுதான் வசந்தலட்சுமிக்கு சாந்தலட்சுமி என்று ஒரு தங்கை இருப்பது தெரியவந்தது. அதாவது கணேசுவின் இளைய தங்கை. இரண்டு தங்கைகளுமே பெயருக்கேற்ப அமைந்திருந்தார்கள். ஒன்று வசந்தம் என்றால் இன்னொன்று சாந்தம். வசந்தலட்சுமி முகத்தின் எடுப்பான அம்சங்களையெல்லாம் மழுப்பிவிட்டால் சாந்தலட்சுமி கிடைத்துவிடுவாள். மற்றபடி பெரிய வித்தியாசம் இல்லை.

ஒரு மகளை ஊரிலேயும் இன்னொன்றை வெளியூர் ஹாஸ்டலிலும் படிக்கவைத்தது ஏன் என்று குமாருக்குப் புரியவில்லை. இருந்தாலும் கணேசு இல்லாத பிரச்சினை தீர்ந்தது.

சாந்தலட்சுமி பூங்கதிருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்திருந்ததை கவனித்தான் குமார். அவளைப் பூங்கதிர் மூலமாக நட்பாக்கிக்கொள்ள அவன் திட்டமிட்டான். அசெம்பிளியில் அவனுக்குப் பக்கத்து வரிசையில் சாந்தலட்சுமி நின்றபோது அவளைப் பார்த்து முறுவலித்தான். அவளுடைய அக்காளுக்குத் தானே பொருத்தமான கணவன் என்று எப்படியெல்லாம் அவளை நம்பவைப்பது?

வழக்கம் போல் பாடபுத்தகங்கள் கைகொடுத்தன. தனது பழைய பாடபுத்தகங்களைத் தேடி எடுத்துப் பூங்கதிர் மூலம் கொடுத்து அனுப்பினான். பூங்கதிருக்கு அறிவுதான் போதாதா, இல்லை வேண்டுமென்றே செய்தாளா தெரியவில்லை, புத்தகங்களைக் கொடுத்தது குமார்தான் என்று சாந்தாவிடம் அவள் சொல்லவேயில்லை. புத்தகங்களைக் கொடுத்த பின் மறுநாள் எதேச்சையாக சாந்தாவின் பக்கம் போவது போல் போனான் குமார். அவள் நகர்ந்து வழி விட்டதோடு சரி. ஒரு வார்த்தை பேசவில்லை. பூங்கதிரிடம் ஒரு முறை கெஞ்சி நினைவுபடுத்திய பிறகுதான் தகவல் போய்ச் சேர்ந்தது.

அதற்குப் பின் சாந்தலட்சுமியுடன் பழகுவதில் குமாருக்குப் பிரச்சினை இருக்கவில்லை. சாந்தலட்சுமி கலகலப்பாகப் பழகினாள். ரத்தக் காயம் ஏற்படுமளவு அடித்துப் பேசி சிரிக்கும் தூரத்திற்குப் பழக்கம் வந்த பின் குமாருக்கு இரண்டு மனமாயிற்று. வசந்தம் கிடைக்கவில்லை என்றால் சாந்தத்தை முயற்சிக்கலாமா என்று யோசிக்கத் தொடங்கினான். மனதிற்குள் இருவரையும் தீவிரமாக ஒப்பிட்டுப் பார்த்த பின், இருவரில் யார் கிடைத்தாலும் நன்மையே என்ற முடிவுக்கு வந்தான். சாந்தலட்சுமிதான் தன்னை விட ஒரு வயது சிறியவள் என்பதால் அவளை அடையலாம் என்று தீர்மானித்தான் குமார்.

குமாரிடம் திடீரென ஒரு மாற்றம் ஏற்பட்டது. சாந்தலட்சுமி பேசும்போது மேலும் உன்னிப்பாகக் கேட்டுத் தீவிரமாகத் தலையசைக்கத் தொடங்கினான். சாப்பிட்டாயா தூங்கினாயா என்று வாஞ்சையுடன் கேட்கத் தொடங்கினான். கணேசுவுக்கு பதிலாக சாந்தலட்சுமியை அமர்த்தப் போய் இப்போது சாந்தலட்சுமிக்காகவே கணேசு தேவைப்படும் நிலை வந்துவிட்டது குமாருக்கு.

கணேசு இருந்தால் இவ்வளவு சிக்கல் இருந்திருக்காது. கணேசுவின், கணேசுவே, கணேசுவுடன், கணேசுவிடம், கணேசுவை, கணேசுவினை, கணேசுவினுடைய, கணேசுவால், கணேசுவுக்கு…

அத்தியாயம் 19 – முன்கதை

சேல்ஸ் பிரிவில் வேலைபார்த்த 31 வயது குமார் தங்கமானவன். சொந்தப் பிரச்சினைகளால் இரண்டு ஆண்டுகள் என்னால் எழுத முடியாமல் போய்த் திரும்ப எழுதத் தொடங்கியதும் குமாருக்கு 33 வயதாகிப் பணப் பிரச்சினை. அதைத் தீர்க்கும் வகையாக அப்போது குமாருக்கு அறிமுகமானவர்தான் பணக்கார பாகிஸ்தானியரான அவனது அப்பா.

அப்பா குமாருக்கு இருப்பது போல் எனக்கும் உண்டு. எனவே இதற்கிடையில் என் அப்பாவைப் பார்க்க அப்பாவின் நண்பர் வந்தார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது என்னிடமிருந்து நானே பேனா இரவல் வாங்குகிற இழிநிலை. கிடக்கட்டும். பேனாவை வாங்கப்பட்டபின் என்ன எழுதப்பட்டது?

குமாரின் இரண்டாவது தங்கைக்கு அப்பா பாகிஸ்தானியராகிவிட்ட காரணத்தால் திருமணம் அசாத்தியமாகிக்கொண்டிருந்த நிலையில் அப்பாவை சீனராக மாற்றிக் குமாருக்கு மீளறிமுகம் செய்துவைத்தேன். பிறகு குமார் ரஷ்யாவில் ஒரு புகையிலைக் கடைக்காரரின் மகளைக் கெடுக்கப் பார்த்து முடியாமல் திருந்தி அக்டோபர் புரட்சியை விளைவித்தார். இந்நிலையில் நானோ குமாரோ மொட்டை மாடியில் சிந்தனையில் ஆழ்கிறோம். குமாருக்குக் கண்ணாடி உடைந்தால் பிரச்சினை. செல்போன் வைத்திருக்கிறான்.

குமாருக்கு நிழலுண்டா என்று இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுந்தாலும் முன்கதைச் சுருக்கத்தில் தத்துவங்களுக்கு இடமில்லை. இதற்கிடையில் குமார் தனது வயதான 33இலிருந்து பிரிய மறுக்கிறான். எனக்கு மற்றும் குமாருக்கு உள்ள கலா ரசனையின் பலனாகப் பின்னவன் ஒரு மேலான ஓவியம் தீட்டுகிறான்.

இடையில் ஒரு நாள் என் பாலிய கால ஓவிய ஆசிரியர் சாலையில் எதிர்ப்பட, காரட் நிறைய தின்றால் உடலுக்கு ஆகாது, பாகற்காய் உடலுக்கு ஆனாலும் அபரிமிதக் கசப்பு. இந்த நாவலைத் தானே எழுதுவதாகக் குமார் குடிக்கும் மனப்பாலில் ஒரு சொட்டு புளித்த மோரை ஊற்றி உறைகுத்திவிடுகிறேன்.

குமார் என்ற வேறொருவன் எனது குமாரை ஆள்மாறாட்டம் செய்யப் பார்க்கிறான். ரிசப்ஷனிஸ்ட்டின் உதவியால் அவனை அடையாளம் கண்டுபிடிக்கிறேன். நல்ல வரனைத் தட்டிக்கழிக்க வேண்டாம் என்று ரிசப்ஷனிஸ்ட்டிற்கு அறிவுரை அளிக்கப்போனால் அவள் என்னைத்தான் காதலிப்பதாக ஒரு கடிதம் எழுதித் தன் கைப்பையிலேயே வைத்துக்கொள்கிறாள்.

இதென்ன வில்லங்கம் என்று அடுத்த அத்தியாயத்தில் அவளது தாய் தந்தை மூலம் அவள் அந்த வரனையே திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறேன். குமார் இருக்கும் தெருவின் முனைவீட்டில் திருடுபோகிறது. குமாருக்கு கணேசு என்றொரு நண்பன் இல்லை. இந்த இன்மை நிலை அவனது காதலில் குறுக்கிடுகிறது.

தங்கமான 31 வயது குமாரின் அப்பா பாகிஸ்தானியர். எனக்கு வீட்டில் பிரச்சினை. அப்பாவைப் பார்க்க நண்பர் வர, பேனா கடன் வாங்கிக்கொள்கிறேன் என்னிடமே. குமாரின் அப்பா சீனர். குமார் ரஷ்ய சீமானாக ரஷ்யப் பெண்ணைக் கவர முயன்று தோற்றுத் திருந்தி அக்டோபர் புரட்சி செய்கிறான். மொட்டை மாடியில் சிந்தனை. கண்ணாடி உடைந்தால் குமாருக்குப் பிரச்சினை. குமார் செல்போன் வைத்திருக்கிறான். குமாருக்கு இப்போதும் 33 வயது. படம் வரைகிறான். எனது ஓவிய ஆசிரியரால் மனத் தோட்டத்தில் காய்கறிகள். இந்த நாவலை எழுதுவது குமார் அல்ல. குமாராக வேடமிடும் ஒருவனை ரிசப்ஷனிஸ்ட் கண்டுபிடிக்க, நான் அவனை நிராகரிக்கிறேன். திருமணம் செய்துகொள்ள மறுக்கும் ரிசப்ஷனிஸ்ட் என்னைக் காதலிப்பதால் அவள் வேறொரு ஆளை மணம் புரிய ஏற்பாடு செய்கிறேன். குமாரின் தெருவில் திருடுபோகிறது. குமாருக்கு நண்பன் இல்லாததால் அந்த நண்பனின் தங்கையை அடைய வழியில்லை.

குமாரின் அப்பா பாகிஸ்தானியர், பின்னர் சீனர். குமார் ரஷ்யாக்காரன், புரட்சிப் பித்தன், சிந்தனையாளன், கிட்டப்பார்வையாளன், செல்போன்தாரி, மார்க்கண்டேயன், ஓவியன், கனவு காணி, குற்றத் துவேஷி, காதலன். நான் எழுத்தாளன்.

முற்றும்

* பிற்சேர்க்கை *

கைவிடப்பட்ட கடைசி அத்தியாயம்

சேல்ஸ் பிரிவில் வேலைபார்த்த தங்கமான 31 வயது குமார் இருக்க சொந்தப் பிரச்சினைகளால் இரண்டு ஆண்டுகள் என்னால் எழுத முடியாமல் போய்த் திரும்ப எழுதத் தொடங்கியதும் குமாருக்கு 33 வயதாகிப் பணப் பிரச்சினை ஏற்பட்டபோது தெய்வாதீனமாக அதைத் தீர்க்கும் வண்ணம் குமாருக்கு பணக்காரப் பாகிஸ்தானியரான அவனது அப்பா அறிமுகமாக, அப்பா குமாருக்கு இருப்பது போல் எனக்கும் உண்டு என்பதால் இதற்கிடையில் என் அப்பாவைப் பார்க்க அப்பாவின் நண்பர் வந்து இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது என்னிடமிருந்து நானே பேனா இரவல் வாங்குகிற இழிநிலை ஏற்படுகையில் பேனா வாங்கப்பட்டபின் என்ன எழுதப்பட்டது என்றால் குமாரின் அப்பா பாகிஸ்தானியராக இருந்த காரணத்தால் அவனது இரண்டாவது தங்கைக்குத் திருமணம் அசாத்தியமாகிக்கொண்டிருந்த நிலையில் நான் அந்த அப்பாவைச் சீனராக மாற்றிக் குமாருக்கு மீளறிமுகம் செய்துவைத்ததும் குமார் ரஷ்யாவில் ஒரு புகையிலைக் கடைக்காரரின் மகளைக் கெடுக்கப் பார்த்து முடியாமல் திருந்தி அக்டோபர் புரட்சியை விளைவித்து நானோ குமாரோ மொட்டை மாடியில் சிந்தனையில் ஆழ்ந்து கிடக்க, குமாருக்குக் கண்ணாடி உடைந்தால் பிரச்சினை ஏற்படும் என்பதும் கிடக்க, குமாருக்கு நிழலுண்டா என்ற தத்துவக் கேள்விக்கு முன்கதைச் சுருக்கத்தில் இடமில்லாமல் செல்போன் வைத்திருக்கும் குமார், சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக 33க்கு மேல் வயதாக மறுத்து மூக்குள்ள ஒரே கலைப் படைப்பான ஒரு ஓவியத்தைத் தோற்றுவித்து தொடர்பான நிகழ்வாக நான் ஒருநாள் காலையில் எனது பாலிய கால ஓவிய ஆசிரியரைப் பார்த்தபோது நினைவுத் தோட்டத்தில் காரட், பாகற்காய், கத்தரிக்காய் விளைய இந்த நாவலைத் தானே எழுதுவதான பிரமையில் மூழ்கும் குமாரை ஆள்மாறாட்டம் செய்ய வேறு குமார் ஒருவன் முயல்வதை என்னைக் காதலிக்கும் ரிசப்ஷனிஸ்ட்டின் துணையுடன் முறியடித்து அவள் காதலை நிராகரிக்கும் நான் அவள் காப்பாற்றிய குமாரிடமே அவளைச் சேர்த்த பின் குமார் அவன் தெரு முனையிலுள்ள வீட்டில் ஏற்படும் திருட்டைக் கண்டு கொதித்தாலும் அடுத்த அத்தியாயத்திலேயே சாந்தலட்சுமியைக் காதலிக்கும்போது உதவ அவள் அண்ணன் கணேசு இல்லாமல் வருந்துகிறானா, அதோடு முடிந்தது கதை.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar