பேட்டி

சென்ற வாரம் ‘த சன்டே இந்தியன்’ வார இதழ் என்னை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு இந்தக் கேள்விகளை அளித்தது. பத்திரிகையிலும் வெளிவராத ஒரு கேள்வி தவிர என் பதில்களின் சுருக்கப்படாத வடிவத்தை இங்கு தருகிறேன்.

நீங்கள் எந்தப் பின்னணியில் உங்கள் வலைப்பூவைத் தொடங்கினீர்கள்?

பேயோன் நான் எழுதத் தொடங்கிய ஒரு நகைச்சுவைப் புனைவில் வரும் கதாபாத்திரம். இந்தப் பாத்திரத்தைப் பற்றி ஒரு தெளிவான சித்திரத்தை அமைத்துக்கொள்ள அந்தப் பெயரில் ட்விட்டர் கணக்கு தொடங்கினேன். விரைவிலேயே அதற்கு ட்விட்டர் போதாமல் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் தேவைப்பட்டன. தமிழில் முழுநீள நகைச்சுவை/நான்சென்ஸ் எழுத்து இல்லாததால் என் எழுத்துக்கு ஒரு context தேவைப்பட்டது. பேயோன் அடையாளம் அந்த கான்டெக்ஸ்ட்டை, அப்படி எழுத ஒரு சாக்கைக் கொடுத்தது. ஒரு வலைத்தளமும் இருந்தால் பேயோன் அடையாளம் முழுமையாகும் என வலைத்தளத்தைத் தொடங்கினேன். ஆண்டிற்கு மூன்று பக்கம் எழுதிக்கொண்டிருந்த நான் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதும் வலைத்தளம் தொடங்கிய நோக்கம். வலைப்பூ என்பதைவிட வலைத்தளம் என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இதில் அக்கப்போர், காலத் தொடர்ச்சி ஆகியவை இல்லை. அச்சில் பதிப்பிக்கும் படைப்புகளை மட்டுமே வெளியிடுகிறேன்.

வெகுஜனப் பத்திரிக்கைகளில் உங்களை எழுதச் சொன்னால் எழுதுவீர்களா?

எழுதலாம், ஆனால் இன்ன விஷயத்தைப் பற்றி/இன்ன காலத்திற்குள்/இன்ன அளவில் அனுப்ப வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் எனக்கு எழுத வராது. ஒரு வார இதழுக்காக அவசரமாக எழுதியவை சரியாக வரவில்லை. ஒரு செய்திப் பத்திரிகையில் வந்த கட்டுரை மட்டும் அபூர்வமாக சரியாக அமைந்துவிட்டது. உண்மையில் எனது பாணி நகைச்சுவை எல்லோருக்குமானதல்ல. எனவே நான் எழுதுவது சிறுபத்திரிகை, வெகுஜனப் பத்திரிகை இரண்டிற்கும் பொருந்தாது என்று நினைக்கிறேன். வெகுஜனப் பத்திரிகைகள் கேட்கவும் மாட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்கும் இந்த விஷயம் தெரியும். ஒரு எழுத்தைக்கூட மாற்றாமல் நான் விரும்பியபடி எழுதும் சுதந்திரம் இணையத்தில்தான் கிடைக்கிறது. கொலை மிரட்டல் வாசகர் கடிதங்களைவிட இது நல்ல ஏற்பாடாகத் தோன்றுகிறது. :-)

நீங்கள் அனானியாக உங்கள் அடையாளத்தை வைத்திருப்பதற்கு காரணம் என்ன?

என் இயல்பு பாதி காரணம். இன்னொரு பாதி, சில அடையாளங்களையும் முத்திரை குத்தல்களையும் தவிர்க்க. எந்தக் குறுகிய அடையாளமும் இல்லாதிருப்பதன் சாயலாவது அநாமதேயத்தில் கொஞ்சம் கிடைக்கிறது. இந்த அநாமதேயம் பேயோன் என்ற கற்பனை அடையாளத்திற்கும் பயன்படுகிறது. :-) இணையத்தில் நான் பார்க்கும் பலரை இணையத்திற்கு வெளியே தவிர்க்கவே விரும்புவேன்.

உங்களை எழுதத் தூண்டவைக்கும் விஷயங்கள் எவை?

அச்சிலும் இணையத்திலும் காணக்கிடைக்கும் மோசமான உரைநடையும் மோசமான கவிதைகளும். அத்துடன் பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரி நாட்கள் வரை படித்த வெகுஜன பத்திரிகை எழுத்து, ருஷ்ய இலக்கியம், மோசமான மற்றும் நல்ல வெகுஜன நாவல்கள், காமிக்ஸ், பின்னாளில் சிறுபத்திரிகைகளில் படித்த மோசமான எழுத்து ஆகியவை. நல்ல எழுத்தும் எழுதத் தூண்டுகிறது. நான் எழுதிய ‘திசை காட்டிப் பறவை’ இடாலோ கால்வினோவின் If on a winter’s night a traveller படித்த வினை.

உங்களது அடையாளத்தைத் தெரிந்துகொண்டவர்கள் யாராவது உங்களுக்கு நெருக்கமான வட்டத்தில் இருக்கிறார்களா?

ஆமாம். அநாமதேயம் மிகக் கவனமாகத் திட்டமிட்டு நடத்தப்பட வேண்டியது. நான் ‘எழுத்தாள’னாக, அதுவும் அநாமதேயமாக ஆவேன் என்பதை முன்னோக்காததால் நெருக்கமான வட்டத்திற்கு வெளியேயும் சிலர் இருக்கிறார்கள்.

உங்கள் பெயர் காரணம் என்ன? எத்தனை ஆண்டுகளாக வலைப்பூ எழுதுகிறீர்கள்?

Ghost writing என்ற பொருளோடு ஒரு பெயர் வைக்க விரும்பினேன். பேயோன் வலைப்பதிவை 2009இல் தொடங்கினேன். 2000 வாக்கில் டைனமிக் எழுத்துரு காலத்தில் பிடித்த கதை, கவிதைகளை காப்பி-பேஸ்ட் செய்துவைக்க சில ஆங்கில வலைப்பதிவுகள் வைத்திருந்தேன். ஜியோசிட்டீஸை யாஹூவும் பிளாகரை கூகுளும் வாங்குவதற்கு முன்பே அவற்றின் வலைப்பக்கங்களில் தமிழ் கதை, கவிதைகளை போட்டிருக்கிறேன். சுமாராக 2000இலிருந்து என்று சொல்லலாம்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar