Disclaimer

பொறுப்பாகாமை அறிவிப்பு வடிவம் 1.6, 08/11/2012 தேதியிட்டது

ரைட்டர்பேயோன்.காம் (இனிமேற்கொண்டு “வலைத்தளம்”) வெளிச்சாத்தாகவோ உட்சாத்தாகவோ எந்தப் பிரதிநிதித்துவங்களோ உத்தரவாதங்களோ வாக்குறுதிகளோ இன்றி “உள்ளது உள்ளபடியே” தரப்படுகிறது. வலைத்தளமானது வலைத்தள பந்தமாகவோ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் மற்றும்/அல்லது தகவல் பிழைகள் மற்றும் உள்ளடக்கம் சார்ந்தோ எந்த பிரதிநிதித்துவங்களும் செய்யவோ உத்தரவாதங்கள் அல்லது வாக்குறுதிகள் அளிக்கவோ இல்லை.

இதற்கு முன்பாக இந்த ஆவணத்தில் இடம்பெற்ற பத்தியில் கண்டுள்ள பொதுமைக்குப் பங்கம் விளைவிக்காதபடிக்கு, வலைத்தளம் கீழ்க்கண்டவாறு உத்தரவாதம் அளிக்கவில்லை:

 • இந்த வலைத்தளம் தரமான படைப்புகளை மட்டுமே வெளியிடும் அல்லது தரமான படைப்புகளை அவ்வப்போதாவது வெளியிடும்; அல்லது
 • இந்த வலைத்தளத்தில் உள்ள தகவல் மற்றும்/அல்லது தரவு உண்மையானது, வாசிப்பின்பம் தரக்கூடியது, உணர்வுகளைப் புண்படுத்தாதது, ஏமாற்றமளிக்காதது, அதிர்ச்சியளிக்காதது, ஏமாற்றாதது.

வலைத்தளத்தில் கண்டுள்ள எதுவும் எந்த விதமான பரிந்துரைகளையுமோ அறிவுரைகளையுமோ முறையே வழங்கவில்லை அல்லது கொடுக்கவில்லை. வலைத்தள முகாந்திரமாய் உங்களுக்கு எந்த கலை-இலக்கிய அறிவுரை ஏதாவதும் தேவைப்பட்டால் அவ்வத்துறைகளின் வல்லுநர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

வலைத்தளம் வாசிப்பிற்கு இலவசமாக அளிக்கப்படும் தன்மையின் காரணமாக அதனது உள்ளடக்கம், பயன்பாடு, உள்ளடக்கத்தைத் திருடித் தன் பெயரில் இணையத்திலோ அச்சிலோ பதிப்பித்தல் அல்லது தொலைபேசி உரையாடல்களில் உரிமை கொண்டாடுதல் அல்லது வலைத்தளம் தொடர்பான எதன் விளைவாகவும் ஏற்படக்கூடிய மற்றும்/அல்லது ஏற்பட வேண்டிய அல்லது ஏற்படக்கூடாத கீழ்க்காணும் உருப்படிகளுக்குப் பொறுப்பேற்காது:

 • மறைமுக, சிறப்பான அல்லது நேரடிவிளைவான இழப்புகள்;
 • தொழில் சார்ந்த இழப்புகள், வருவாய், வருமானம், லாபங்கள் அல்லது எதிர்பார்க்கப்பட்ட சேமிப்புகளின் இழப்பு, ஒப்பந்தங்கள் அல்லது தொழில் உறவுகளின் இழப்பு, நற்பெயர் அல்லது நல்லெண்ணத்தின் இழப்பு;
 • தலைசுற்றல், குமட்டல், வாந்தி, தலைவலி, உறக்கமின்மை, அதீத உறக்கம், வயிற்றெரிச்சல், வயிற்றுப்போக்கு, புரையேற்றம், பொதுவான உடல் பலவீனம் ஆகியவை உள்ளிட்ட, ஆனால் இவற்றோடு நின்றுவிடாத, உடல் ரீதியான விளைவுகள்; அல்லது
 • குழப்பம், மன பேதலிப்பு, மனச்சோர்வு, ஆத்திரம், இயலாமை, வேதனை, கவலை, வருத்தம், விரக்தி, கிலி, தற்கொலை எண்ணம், துர்சொப்பனம் உள்ளிட்ட, ஆனால் இவற்றோடு நின்றுவிடாத, மன ரீதியான விளைவுகள்.

வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், வலைத்தளத்தின் கீழ்க்காணும் தன்மைகளை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்:

 • வலைத்தளத்தில் உள்ள புனைவுகள் மற்றும் கட்டுரைகள் அனைத்தும் புனைவே;
 • வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் கட்டுரைகளே;
 • படைப்புகளின் ஆசிரியர் (“பேயோன்”) ஒரு கற்பனைப் பாத்திரமே; ஆசிரியரின் படைப்புகளானவை வலைத்தளம் மட்டுமின்றி வலைத்தளத்தின் ‘சுட்டிகள்’ பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வலைத்தளங்களில் மற்றும் காலாந்தரிகளில் பதிப்பிக்கப்படுவனவற்றையும் உள்ளடக்கியவை;
 • படைப்புகளில் ஆசிரியருடையனவாக மற்றும்/அல்லது மற்றபடி விவரிக்கப்படும் சம்பவங்கள், சிந்தனைகள், உணர்வுகள் அனைத்தும் புனைவே; மற்றும்
 • படைப்புகளால் குறிப்பிடப்படும் நபர்கள் யாரும் உயிரோடு இல்லையே; படைப்புகளால் குறிப்பிடப்படாத நபர்கள் கற்பனையே.

வலைத்தளம் கீழ்க்காணும் ரகத்தினருக்குப் பொருந்தாததாகப் பரிந்துரைக்கப்படுகிறது:

 • குழந்தைகள், பதின்பருவத்தினர், சில பெண்கள், தாயுள்ளம் கொண்டோர், மெல்லிய இதயத்தினர், வாசிப்பறிவு கம்மியானோர்;
 • இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் கொண்டவர்கள்;
 • மரணபீதி உள்ளவர்கள், நீண்ட வார்த்தைகள் மீது அச்சம் கொண்டவர்கள்;
 • பத்து வரிகளுக்கு மேல் படிக்கப் பொறுமை இல்லாதவர்கள்; மற்றும்
 • இலக்கிய தேடல்வாதிகள், உள்ளடக்க நாட்டக்காரர்கள், சமூக செய்திப் பிரியர்கள்

வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த வலைத்தளத்தின் பொறுப்பாகாமை அறிவிப்பில் புறக்கோடிடப்பட்டுள்ள பொறுப்பாகாமை விதிவிலக்குகள் மற்றும் வரம்புகளை நியாயமானவை என நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். அவை நியாயமானவை என நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் நீங்கள் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்தக் கூடாது.

24/10/2012 அன்று தயாரித்தவர்: பேயோன்

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar