#மகளிர்தினம்

ட்விட்டரிலிருந்து

சம்சாரி என்கிற முறையில் பெண்களுக்குத் தர என்னிடம் என்ன இருக்கிறது, காதலைத் தவிர? மகளிர் தின வாழ்த்துக்கள் மகளிர்களே!

*

இந்த மகளிர்த் தினத்தில், தாய்க்குல மேம்பாட்டுக்காகப் போராடிய எண்ணற்ற இனம்புரியாத பெண்களை நினைவுகூர்கிறேன்.

*

ஆண்களே, இன்று *நீங்கள்* வீட்டுவேலை செய்யுங்கள், சீரியல் பாருங்கள், குழந்தை வளருங்கள், மனைவியை வேலைக்கு அனுப்பி வீட்டில் நிம்மதியாக இருங்கள்.

*

மகளிர் தினம் என்றால் மட்டும் ஆண்களுக்கென்ன விசேச மரியாதையா கிடைத்துவிடப்போகிறது? இன்றைக்கும் அதே மண்டகப்படிதான். #மார்ச்8

*

அடிப்படையில் நம்முடையது ஆண் மையம் சார்ந்த பண்பாடு. மகளிர் தினம் கொண்டாடுவதெல்லாம் பண்பாட்டை மறக்கவைக்கும் ஏற்பாடுகள்.

*

இன்று சிலர் ஹோலி கொண்டாடுவது போல இங்கு மகளிர் தினம் என ஒன்று கொண்டாடுகிறார்கள். இரண்டுமே நமது பண்பாட்டிற்கு சம்பந்தம் இல்லாத இரண்டு.

*

பெண்களை எல்லாத் திறன்களோடும் படைத்த இறைவன், அவர்களைப் பழக்கிவைக்கும் திறனை ஆண்களுக்கு அளிக்கவில்லை என்பதே பெண்ணியத்தின் மையக் கருத்து.

*

பெண்கள் இல்லாத ஓர் உலகை என்னால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை. விமர்சகர்கள் எப்போதும் சொல்வார்கள், எனக்குக் கற்பனைத் திறன் குறைவு என்று.

*

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். அவள் லேசுப்பட்டவளில்லை.

*

என்று ஒரு பெண் நள்ளிரவு தெருவில் நடமாட முடிகிறதோ, அன்றுதான் நிஜ மகளிர் தினம். ஆனால் அது என்றைக்கு என யாராவது கவனித்துக்கொண்டிருக்க வேண்டும்.

*

நீதிபதிகளே, பெண்களுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுக்கும்போது ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ பாடாதீர்கள். ‘எவன்டி உன்னை பெத்தான்’ கூட பரவாயில்லை.

*

சிமோன் த பொவாரின் The Second Sex-க்கு இணையாகப் பேசப்படத் தக்கது லீலா சுப்பிரமணியனின் ‘பெண்ணாகப் பிறந்துவிட்டோம்’.

*

மனைவிகளுக்குப் பொருளாதார சுதந்திரம் மிக அவசியமாகும். இந்த அடிப்படை உரிமையானது அவர்களைக் கழற்றி விடுவதை எளிமைப்படுத்தித் தருகிறது.

*

சும்மாதானே இருக்கிறோம் என மகளிர் தினத்தில் உள்ளூர் மாதர் சங்கத்தில் உரையாற்றினேன். பெண்களுக்கு ஒரே சிரிப்பு, “standing ovulation”…

*

பெண்களுக்கென்று ஒரு தனி வெளி இல்லை. அதனால்தான் திரையரங்கில் ஆண்களாகிய நாமும் முன்னூறு நகை விளம்பரங்களைப் பார்க்க வேண்டியுள்ளது.

*

நான் ஆட்டோவில் செல்லும்போதுதான் டூவீலர் பெண்கள் என்னைத் திரும்பிப் பார்க்கிறார்கள்; என்னவோ ஆட்டோவில் போகிறவனெல்லாம் அழகுப் பதுமை மாதிரி.

*

அகலிகை கதைக்காக ஒரு தகவல் தேவை. திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் ஒரே கோத்திரம் என்பதால் தாலியிலிருந்தே ராக்கி வந்தது என நிறுவலாமா?

*

ஆங்கிலத்தில் பேசினால் பெண் வாசகர்களை அசத்தலாம் என்பது என் அனுபவம். “எப்டி இவ்ளோ வெள்ளையா இருக்கீங்க? ஃபயர் ஆக்சிடென்ட்டா?”

*

எப்போதும் என் மனைவி பரிந்துரைக்கும் ஆடைகளையே அணிகிறேன். காரணம், இவரைக் கவர்ந்தால் மற்ற பெண்களையும் கவர வாய்ப்பு அதிகம்.

*

பத்திரிகைகளுக்கு நான் அளிக்கும் பேட்டிகள் என் மனைவி என்னைப் புரிந்துகொள்ள ஓரளவு உதவுகின்றன.

*

பெண்கள் வேலைக்குப்போவது பற்றிப் புலம்பியவர்கள் ஓய்ந்துவிட்டனர். இன்று அவர்களது பேரன்கள் பெண்கள் லெக்கிங்ஸ் அணிவது பற்றிப் புலம்புகிறார்கள்.

*

போதுமென்ற மணமே பெண் செய்யும் மருந்து.

*

ஆண்-பெண் இடையே நட்பு சாத்தியமே. ஆனால் எப்போதெல்லாம் உடலுறவு கொள்ள வேண்டாம் என்பதில் அவர்களுக்குள் கருத்தொற்றுமை தேவைப்படும்.

*

ஆண்களுக்குப் பெண்கள் எந்த விதத்திலும் இளைத்தவர்கள் அல்லர். குறிப்பாகத் திருமணமாகாத ஆண்களைவிடத் திருமணமான பெண்கள்.

*

பிரபஞ்சத்தின் விஷய அறிவு முழுதும் ஆண்கள் கைக்குப் போய்விட்டால்கூட வீட்டில் ஸ்பூன் எங்கே இருக்கிறது என பெண்களுக்குத்தான் தெரிந்திருக்கும்.

*

ஓர் ஆணிடம் என்ன குணங்களை எதிர்பார்க்கிறாய் என ஒரு பெண்ணிடம் கேட்டுப்பாருங்கள். வேண்டுமென்றே நம்மிடம் இல்லாததாகப் பார்த்துச் சொல்வார்கள்.

*

ஆண்களை அறிவையும் குணத்தையும் வைத்துத் தேர்ந்தெடுக்கும் பெண்களே, அழகையும் கொஞ்சம் பாருங்களேன். நடுரோட்டில் வயிற்றெரிச்சலாக இருக்கிறது.

*

ஒரே சமயத்தில் இரு பெண்களைக் காதலிப்பதில் என்ன தவறு? அதுவும் இருவரில் ஒருவர்கூட நம் மனைவி அல்ல என்கிறபோது?

*

“அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும்” என்ற பழமொழி, எல்லாப் பெண்களும் அழகானவர்கள் என்ற தவறான புரிதலில் பிறந்தது.

*

மற்ற ஆண்களோடு பேசும்போது அடிக்கடி புடவைத் தலைப்பை சரிசெய்யும் பெரிய பெண்கள், என்னோடு பேசும்போது தாலியை வெளியே எடுத்து விட்டுக்கொள்வதோடு சரி.

*

நல்ல இசைக்கும் நல்ல மனைவிக்கும் தலையாட்டாதவன் மனிதனே அல்ல

*

ஆடவர் 2 வகை: தடி ஆண்பிள்ளைகள், முரட்டு ஆண்பிள்ளைகள். தடி ஆண்பிள்ளைகள் ஆண்கள் எனவும் முரட்டு ஆண்பிள்ளைகள் பெண்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள்

*

பெண்கள் அழகாக இருப்பது அவர்களுடைய பிறப்புரிமை. இந்த உரிமையை அவர்களே – தன்னையறியாமலே கூட – மீறும்போது மனம் பதறுகிறது. ஏன், கோபமே வருகிறது.

*

சில பெண்கள் ஐந்தரை அடிக்கு மேல் உயரமாக இருக்கிறார்கள். எதற்கு என்றுதான் தெரியவில்லை.

*

பெண்கள் ஒரு novelty, அவ்வளவே.

*

பலர் ஃபேஸ்புக் புரபைல் படங்களில் மனைவியுடன் இழைந்துகொண்டு தோற்றமளிப்பதன் ரகசியம் என்ன? இந்த ஆண்கள் நிஜமாகவே சந்தோசமாகவா இருக்கிறார்கள்?

*

காலையிலிருந்து 14-இட்லி, வெங்காய வடை, காபி என வரிசையாக தந்து ஜமாய்க்கிறார் மனைவி. வாழ்க்கையை கொண்டாட பெண்களுக்கு கற்றுத்தர வேண்டுமா என்ன?!

*

ஆண்களே, பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஆதிக்க அனுதாபம் அவர்களுக்குத் தேவையில்லை. பாவம் அவர்களை விட்டுவிடுங்கள்.

*

இன்றும் பெண்கள் பொருளாதார சுதந்திரம் என நடமாடும் கூண்டுக்கிளிகளாக ஓடாய் தேய்வது கஷ்டமாக உள்ளது. சொந்த வீட்டு அடுப்படியே அவ்வளவு கசக்கிறதா?

*

நம் மனைவிகள் நம்மை ஏன் சகித்துக்கொள்கிறார்கள்? நம்மைப் பிற கணவர்களோடு ஒப்பிடுவதால். நான் ஏன் நம் மனைவிகளை சகித்துக்கொள்கிறோம்? வேறு வழி?

*

மனித உரிமை மீறலாக இல்லாத வரைதான் பெண்ணுரிமைக்கெல்லாம் மரியாதை. காபி போடும்போதாவது கொஞ்ச நேரம் கொடியை மாப்பிங் ஸ்டிக் அருகே சாய்த்துவை.

*

காபி கொடுக்கத் தாமதிப்பதுதான் பெண்ணுரிமை என்றால் அப்படியொரு பெண்ணுரிமை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் வேலைக்கு ஆகாது.

*

“ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணுக்குத்தான் புரியும்.” – குளோரியா ஸ்டீனம்

*

வாரிசு சமையலறையில் எதையோ எடுக்கப் போய் காபி டிகாஷனை கொட்டிவிட்டான். ‘சமையலறையில் ஆண்பிள்ளைக்கு என்னடா வேலை?’ என காட்டமாக திட்டிவிட்டேன்.

*

ஒப்புக்கொள்கிறேன், நான் ஒரு குளோசெட் பெண்ணியவாதி.

*

குறும்படைப்புகள்

ஆண்மையம்

இந்த ஆண்-மையச் சமூகம் பெண்ணை எப்படிப் பார்க்கிறது என்பது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஆனால் ரொம்ப அதிகரித்தால் நம்மைப் போன்ற நல்லவர்களும் மாட்டிக்கொள்வோம் என எச்சரிக்கிறேன்.

*

க்யூட் ஓவர்லோடு

உலகெங்கும் எண்ணற்றோர் பட்டினியாலும் இன்ன பல காரணங்களாலும் சாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவன் தங்கள் செகண்ட்  ஸ்டாண்டர்டு குழந்தை வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவுவார் என்று எதிர்பார்க்கும் இளம் தாய்மார்கள் படு க்யூட்!

*

ஆண்களின் பிரச்சினைகள் பெண்களுக்குப் புரியாது. பெண்களின் இடத்தில் இருந்தால் ஆண்களுக்கும் புரியாது. அதாவது பெண்களுக்கு மொத்தம் 2 தடவை புரியாது.

*

வைக்க வேண்டிய இடம்

‘பெண்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்’ என்கிற கருத்தாக்கம் ஆண்கள் மத்தியில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஒரு சமயத்தில், குறிப்பாக எந்தப் பெண்களை, எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்ற கேள்வி எழவே, ‘கிழவியைத் தூக்கி மணையில் வை’ என்ற சொலவடை பிறந்தது.

*

மனைவியும் மனைவி சார்ந்த விசயங்களும்

தமிழில் “வீடு” என்ற ஆகுபெயர் மனைவியையும் மனைவி சார்ந்த விசயங்களையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள்:

வீட்டில் சண்டை.

வீட்டில் பிரச்சினை.

வீட்டில் வேண்டாம் என்கிறார்கள்.

வீட்டில் கேட்டுச் சொல்கிறேன்.

வீட்டில் இன்றைக்கு சமைக்கவில்லை.

வீட்டில் நம்மைப் பற்றித் தெரிந்துவிட்டது.

வீட்டில் நம் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வீட்டில் நம் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

வீட்டில் ஒரு விவாகரத்து, அதனால் வர முடியவில்லை.

வீடு நரகம் போல் இருக்கிறது.

சீக்கிரம் வீடு மாற்ற வேண்டும்.

வீட்டை விட்டு எங்காவது ஓடிவிடலாம் போல் இருக்கிறது.

என் வீடு வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டது.

*

இந்தியாவுக்கு சுதந்திரம்

இல்லத்தரசி தமது குடும்பப் பெரியவர்களின் வரலாறு பற்றி ஒருதலையாக என்னிடம் பெருங்கதையாடிக்கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் “1947ல இந்தியாவுக்கு சுதந்தரம் கெடச்சிது” என்றார். நான் “ஓஹோ” என்றேன். தெரிந்தாற்போல் காட்டிக்கொண்டால் எப்படித் தெரியும், யார் சொன்னார்கள், தன்னிடம் ஏன் அப்போதே சொல்லவில்லை, தேசம் விடுதலை அடைந்த செய்தியை உங்கள் குடும்பத்திற்குள் கமுக்கமாக வைத்துக்கொண்டு ஆதாயம் அடையப் பார்க்கிறீர்களா என்று தொடங்கி இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கியதே நான்கு பேருக்கு முன்பு அவரை அவமானப்படுத்தத்தான் என்ற குற்றச்சாட்டிலும் ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற எச்சரிக்கையிலும் முடியும். இதில் என்ன வேதனை என்றால், ரயிலையும் மின்சாரத்தையும் கொண்டுவந்ததால் வெள்ளைக்காரன் தப்பித்துவிடுவான். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பாவத்திற்காக நான்தான் பேச்சு வாங்க வேண்டியிருக்கும்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar