வண்ணத்துப்பூச்சியும் விசித்திர ஓவியனும்

in புனைவு

(குழந்தைகளுக்கான மீபுனைவு)

மனித வாழ்க்கை போல் நீண்டு நெடிந்து சுழித்தோடும் ஒரு ஆற்றின் கரையில் அமைந்திருந்தது ஒரு வனம். அந்த வனத்தில் ஜம்பு என்றொரு வண்ணத்துப்பூச்சி இருந்தது.

பொதுப்புத்தியில் பதிந்துள்ள வண்ணத்துப்பூச்சிகளைப் போல் வண்ண-வடிவ விசித்திரங்களை கொண்டதல்ல நமது ஜம்பு. அது பிறவியிலேயே வெண்ணிறம் கொண்டதாக இருந்தது. மற்ற வண்ணத்துப்பூச்சிகள் வண்ணமயமாக இருந்ததைப் பார்த்து ஜம்புவுக்கு அசூயையும் விசனமும் ஏற்பட்டது.

தான் உலகில் தொட்டதில் எல்லாம் படைப்பூக்கம் துலங்கச் செய்த இயற்கைக்கு தன்னை படைக்கும்போது மட்டும் ஏன் பாரபட்சம் என வருந்தியது ஜம்பு. நியாயம்தானே?

வெறும் வெள்ளை நிறத்தால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஜம்பு ஆளானது. மலர் விட்டு மலர் தாவி மகரந்தம் உறிஞ்சும்போது ஜம்புவின் கண்ணீரால் தேனும் உப்பு கரித்தது.

நான் ஒரு வண்ணத்துப்பூச்சியா அல்லது ஒரு குட்டிப் பறவையா? ஜம்புவுக்குக் குழப்பமாக இருந்தது.

ஜம்புவுக்கு ஒரே ஒரு நண்பன் இருந்தான். வனத்தின் நடுவில் இருந்த ஒரு பெரிய மலையில் அமைந்திருந்த ஒரு சுனைக்கு அருகே ஒரு இளநீல மரம் வளர்ந்துகொண்டிருந்தது. அதுதான் ஜம்புவின் தோழன்.

வண்ணம் சார்ந்த வருத்தத்தை தனதாக்கிக்கொள்ளும் போதெல்லாம் அந்த இலைநீள மரத்தின் அடிவாரத்தில் ஓய்வெடுப்பதை ஜம்பு வழக்கமாகக் கொண்டிருந்தது.

நண்பனின் வேதனையைக் காண சகிக்காத மரம், விசித்திர ஓவியனை பற்றிக் கூறியது.

‘ஜம்பு, ஜம்பு, உனக்கு விசித்திர ஓவியன் உதவி செய்வான், தெரியுமா?’ என்றது இளநீல மரம்.

‘விசித்திர ஓவியனா? அட, யாரது? ஓவியன் என்றால் படம் வரைபவனா? எங்கிருக்கிறான்? எப்படி உதவுவான்?’ என்று கேள்விகளை அடுக்கியது ஜம்பு.

கேள்விகளால் திக்குமுக்காடிய இளநீல மரம் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு விசித்திர ஓவியனின் மாந்திரீக ஜாலத்தை விதந்தோதியது. அவன் இருக்கும் இடத்தை ஜம்புவுக்கு சொன்னது.

விசித்திர ஓவியன் தனக்கு வண்ணம் அளிப்பான் என்ற ஆவலில் ஜம்பு என்கிற வண்ணத்துப்பூச்சி பறந்தது, பறந்தது, பறந்துகொண்டே போனது. கடந்த காலத்தின் சுமை தந்த அழுத்தத்தில் பிறந்த வேதனையும் எதிர்கால நிவாரணத்தின் சாத்தியப்பாடு சார்ந்த நம்பிக்கையும் அது பொய்க்குமோ என்கிற பயமும் அதன் பாடலில் வெளிப்பட்டு எல்லா திசைகளிலும் எதிரொலித்தன.

வேகமாகப் பறக்க ஜம்பு என்ன பருந்தா? அது பல நாட்கள் செலவிட்டு வனத்தின் மறுபக்கம்  விசித்திர ஓவியன் வாழ்ந்த மர வீட்டை அடைந்தது.

மர வீட்டின் வாசலில் வீட்டைவிடப் பெரிதான ஒரு பாறை இருந்தது. அந்த பாறையின் மேல் ஒரு மனிதன் கையில் ஒரு கொத்து நெற்கதிர்களை பிடித்திருந்தான். அம்மனிதன் அந்தக் கொத்தை அப்படியும் இப்படியும் ஆட்டியவாறு இருந்தான்.

அவன் தலையில் ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு வண்ணத்தில் இருந்தது. கண்கள் இரண்டும் வெவ்வேறு வண்ணங்களில் இருந்தன. அதே போலக் காதுகளும்.

அவனை பார்த்ததும் அவன்தான் விசித்திர ஓவியன் என ஜம்புவுக்குப் புலப்பட்டது.

‘விசித்திர ஓவியனே, விசித்திர ஓவியனே, எனக்கு வண்ணம் தருவாயா?’ என்று ஜம்பு கேட்டது.

பேச வாயைத் திறந்த விசித்திர ஓவியன், சட்டென நிறுத்தி ஜம்புவின் பெயரைக் கேட்டான். ஜம்பு தன்னை வனத்தில் எல்லோரும் அழைக்கும் பெயரான ‘ஜம்பு’ என்ற பெயரைச் சொன்னது.

‘ஜம்பு, ஜம்பு, நான் உனக்கு வண்ணம் தருகிறேன், நீ எனக்கு ஒரு பாடல் பாடுவாயா?’ என்று விசித்திர ஓவியன் கேட்டான். அவன் பற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் இருந்தது.

ஜம்புவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்து ஒரு நீண்ட பாடலைப் பாடியது. ஜம்பு பாடப் பாட விசித்திர ஓவியன் நெற்கதிர் கொத்தைத் தூரிகையாகக் கட்டத் துவங்கினான்.

ஜம்பு பாடப் பாட மழை மேகங்கள் திரண்டன, பரஸ்பரம் மோதின, பெருமழை பெய்தது. ஜம்பு பாடலை நிறுத்தியது. மேகங்கள் விலகி கதிரவன் வெளிப்பட்டான். ஏழு வண்ணங்களுடன் வானவில்லும் மெல்ல வெளிவந்தது.

நெற்கதிர் தூரிகையை வானவில்லின் வண்ணங்களில் தோய்த்து வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளுக்கு வண்ணம் கொடுத்தான் விசித்திர ஓவியன்.

வண்ணமே இல்லாமல் வாழ்க்கையில் பலவித இன்னல்களுக்கு உள்ளான வண்ணத்துப்பூச்சி, விசித்திர ஓவியனுக்கு நன்றி சொல்லிவிட்டு தனது வீட்டிற்கு பறந்தது, பறந்தது, பாடிக்கொண்டே பறந்தது. ஆனால் இம்முறை அதன் பாடலில் விகசித்தது புது வாழ்க்கை அளித்த நம்பிக்கையின் புத்துணர்வு.

முற்றும்

Tags: , ,

8 Responses

 1. கதை மிகுந்த மகிழ்ச்சியூட்டுகிறது.

 2. வாழ்த்துக்கள்.

 3. குழந்தைக்கு சொல்ல ஒரு கதை. மனதிற்கு நெருக்கமான எழுத்துக்கள். ஒரு வேளை குழந்தை மனது காரணமோ?!

 4. மணிNo Gravatar says:

  நன்றாக இருந்தது இந்த கதை..

 5. குழந்தைகளுக்கான கதைகள் எல்லாமே குழந்தைகளுக்காக மட்டும் எழுதப்படுவதில்லை. குழந்தைகளுக்கான எனது கதைகள் ஜார்ஜ் ஆர்வெல்லின் அனிமல் ஃபார்முடன் ஒப்பிடத்தக்கவை.

 6. மகிழ்வூட்டும் கதை.

 7. ChithranNo Gravatar says:

  தங்களைக் குழந்தைகளாக உணரத் தலைப்படுகிறவர்களுக்காகவே எழுதப்பட்ட, அழகான, பெரியவர்களுக்கான கதை என்று இதை சொல்லலாமா? இந்த சப்ஜெக்டை வைத்து அழகான ஒரு அனிமேஷன் படம் எடுக்கலாம் போலிருக்கிறதே.

 8. பேயோன்No Gravatar says:

  சித்ரன்: நல்ல யோசனைதான். ஆனால் அனிமேஷனாக எடுத்தால் நடிக சார்கள் யாரும் அதில் வர மாட்டார்களே…. குறிப்பு: இந்த கதை 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் படிப்பதற்காக எழுதியது.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar