டைரிக் குறிப்பாக ஒரு நூல் மதிப்புரை

in கட்டுரை

– பேயோன்

கற்கால தமிழ் அந்தாதி

தமிழில் வரிவடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சில நூற்றாண்டுகளாவது ஆகியும் தமிழில் இருமொழிப் படைப்புகள் ஏறத்தாழ இல்லை என்றே கூறிவிடலாம். ஒரு வகையில் 19ஆம் நூற்றாண்டு கிரந்தச் சுவடிகளை இருமொழி படைப்புகளாக கருதலாம். ஆனால் அவை நேரடியாக தமிழில் எழுதப்படாததான காரணத்தை கூறி இக்கருதுகோளை ஏற்க மறுப்பவர்களும் உண்டு. இந்த வெற்றிடத்தை நிரப்ப வந்திருக்கிறது க்ரியாவின் சமகாலத் தமிழ் அகராதி (க்ரியாவின் மொழியில் “தற்காலத் தமிழ் அகராதி”).

பெருமளவு மேலை இலக்கியக் கூறான அகராதி வகை இலக்கியம் அந்தாதி வகையைவிட அமைப்புரீதியான சிக்கலை கொண்டது. க்ரியாவின் இந்நூல் நான்லீனியராக இருக்கிறது. இவ்வகை வடிவ ஒழுங்கீனம் படைப்பாளிக்கு சுதந்திரத்தை அளிக்கும் அதே சமயத்தில் அடிப்படையான சில மரபார்ந்த உத்திகளை அவன் கையாள விடாமல் அந்த சுதந்திரமே அவனை முடக்கும் அபாயமும் ஏற்படுவதுண்டு. இந்தப் பிரச்சனையிலிருந்து தற்காலத் தமிழ் அகராதியும் தப்பிக்கவில்லை என்று எனக்கு தோன்றுகிறது.

அமைப்பிலா அமைப்பை உத்தியாக பயன்படுத்தி எழுதுவதன் பிரதான நோக்கங்களில் ஒன்று கோர்வையான வர்ணனையை தவிர்த்து ஊகிப்பு தன்மையை இல்லாமல் ஆக்குவது. ஆனால் தற்காலத் தமிழ் அகராதியில் பல சமயங்களில் அடுத்து வருவதை ஊகிக்க முடிகிறது. அல்பாயுசுக்கு பிறகு அல்போன்ஸோ (பக். 65) வருவது ஒருபுறமிருக்க, சீக்காய்1-ஐ (பக். 591) அடுத்து சீக்காய்2 வருவதை ஒரு சறுக்கலாகவே பார்க்கிறேன்.

இந்நூலின் பெரும்பகுதி வார்த்தைகளால் அமைந்திருப்பதால் வார்த்தைகள் ஆற்றும் பங்கையும் குறிப்பிட வேண்டும். கடந்த இருமாத காலத்தில் தமிழ் எழுத்து வெளிக்குள் ஸ்கலிதமாகத் துவங்கியுள்ள பின்கலாச்சார கதையாடலின் துவந்த மொழி இந்நூலில் ஒரு ஊர்த்துவ வேகம் கொண்டு பரவலான கிடைநிலைப்பாடு எடுத்துவருவதை காண்கிறேன்.

எடுத்துக்காட்டாக, பொதுப்புத்திக்கு உகந்த பழந்தமிழ் வார்த்தையான “அல்குல்” என்ற வார்த்தை (பக். 65). தமிழ் இலக்கண விதிப்படி “அற்குல்” என எழுதப்பட வேண்டிய இவ்வார்த்தை “அல்குல்” என்றே எழுதப்பட்டிருப்பது – அதுவும் ஒரு அகராதி வகை நூலில் – ஆசிரியரின் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது. இந்த வார்த்தையின் சுற்றுப்புறத்தில் உள்ள வார்த்தைகள் எவை? “அல்” (ஒரு கூற்றை அல்லது நிலையை மறுத்தல், பக். 64), “அல்பம்” (பக். 65), “அல்லல்” (பக். 65), “அல்லல்படு” (பக். 65). எழுத்துப்பட அமைப்பு (டைப்போகிரபி) உத்தியில் எழுதப்பட்டுள்ள இப்பகுதி சற்றே பிற்போக்கான ஒரு செய்தியை தன்னுள் கொண்டிருப்பதாக எண்ணச் செய்தாலும் அது ஆசிரியரின் கூற்றா கதாபாத்திரத்தின் கூற்றா என்று தெளிவாக தெரியாதிருப்பது ஆசிரியரின் உத்திக்கு அல்லது உள்நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

இந்நூலில் ஆபாச வார்த்தைகள் அதிர்ச்சி மதிப்புக்காக பயன்படுத்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. எ.கா., இலந்தை(ப்பழம்) (பக். 156), ஒளி (பக். 297), ஒன்றுபடு (பக். 300), சிட்டுக்குருவி (பக். 573), லேகியம் (பக். 1188) போன்றவை. அதிர்ச்சி மதிப்பு பின்நவீனத்துவத்தின் கூறுகளிலேயே மிகவும் உபயோகமானது, போணி சார்ந்தது என்கிற போதிலும் இவ்வார்த்தைகள் நூலின் எஞ்சிய பகுதிகளுடன் ஒட்டாமல் மணல் திட்டுகளாக துருத்திக்கொண்டு நிற்கின்றன.

பாலியல் சொல்லாடல் ஒரு முனையில் உள்ளதென்றால் இன்னொரு முனையில் இருப்பது வன்மொழிபு. இதில் க்ரியாவின் சாமர்த்தியம் வன்முறை தெறிக்கும் வார்த்தைகளில் ஒருவித பொருள் தெளிவின்மையை (ambiguity) ஏற்றி அவற்றின் தாக்கத்தை நீர்த்துப் போக செய்வது. எடுத்துக்காட்டாக, “இழுத்துக்கொண்டு போ” (பக். 160) மற்றும் “இழுத்துப் பறி” (அதே பக்.) என்கிற வார்த்தைகள்:- முறையே எதை மற்றும் யாரை? “குல்லாப்போடு” (பக். 467) போன்ற நேரடி போதனைகள் அல்லது அறைகூவல்களும் இல்லாதில்லை. இருப்பினும் முந்தைய 466 பக்கங்களில் இந்த வன்முறையை நாம் பல முறை எதிர்கொண்டுவிடுவதால் 466ம் பக்கத்திற்கு பிந்தைய இத்தகைய வார்த்தைகள் அதிர்ச்சி மதிப்பு கூட்டத் தவறுகின்றன.

கதையின் முதல் வரியில் அறிமுகமாகும் அ-வைச் சுற்றியே அனைத்தும் பின்னப்பட்டுள்ளது. ஒரு தனிப்பேச்சாக (monologue) துவங்கி மெல்ல மெல்ல பரிணமித்து மேலும் பரவலான ஒரு கதைப்பரப்பாக விரியும் இந்த நாவலை bildungsroman வகை புனைவாக பார்க்கிறேன். பிரெஞ்சை சேர்ந்த ஸ்டெந்தாலின் ‘சிவப்பும் கருப்பும்’ (The Red and the Black), அதே இதுவைச் சேர்ந்த குஸ்தாவ் பிளாபெர்ட்டின் ‘மேடம் பவாரி’ (Madame Bovary), ஆங்கிலத்தை சேர்ந்த மார்க் டுவைனின் ‘டாம் சாயர்’ (Tom Sawyer) ஆகியவை பில்டங்ஸ்ரோமன் வகை புனைவுக்கு எடுத்துக்காட்டுகள். முதல் சில பக்கங்களை பெருமளவு ஆக்கிரமிக்கும் அ-வின் ஆக்கிரமிப்பு நம் இடது கையில் பக்கங்கள் சேரச் சேர குறைவடைந்து பிற கதைமாந்தர்களும் உறவுகளும் ஊடாட்டங்களும் இடங்களும் என பெரிதாகி புனைவின் வெளி விசாலிக்கிறது.

க்ரியாவின் படைப்பு பல சமகால பின்நவீன படைப்புகளை நினைவுகூற வைக்கும் அதே வேளையில் அவ்வாறு நினைவுகூறிய பின்னும் தனது தனித்துவ மொழிதலின் பலத்தால் வாசக வெளியின் முற்றத்தில் இருகால் பதித்து குந்துகிறது. இங்கு க்ரியாவின் வட்டார மொழி புலமையை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தமிழக வட்டார மொழிகள் மட்டுமல்லாது இலங்கை வட்டார மொழியிலும் நம்முடன் பேசுகிறார்கள் கதை மாந்தர்கள். 1328 பக்கங்கள் புரளும் இந்நூலில் இதன் விலையான 495 ரூபாய் அளவிற்கு கதை இருப்பதாக கூறிவிட முடியாது. இருந்தாலும் முடிக்கும்போது ஒரு காத்திரமான படைப்பை படித்த திருப்தி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அடுத்த பதிப்பிற்கு ‘தற்கால’ தமிழ் அகராதியை க்ரியா மேலும் மெருகேற்றி எழுதுவார் என வாழ்த்துக்களுடன் எதிர்பார்க்கிறேன்.

Tags: , , , ,

11 Responses

 1. இதற்குமுன் இவ்வளவு எதற்காகச் சிரித்தேன் என்றே மறந்து போய்விட்டது!

  பேயோன் ராக்ஸ்!

 2. EswarNo Gravatar says:

  //கடந்த இரண்டு மாதங்களில் தமிழ் எழுத்து வெளிக்குள் ஸ்கலிதமாகத் துவங்கியுள்ள பின்கலாச்சார கதையாடலின் துவந்த மொழி இந்நூலில் ஒரு ஊர்த்துவ வேகம் கொண்டு பரவலான கிடைநிலைப்பாடு எடுத்துவருவதை காண்கிறேன்.//

  யோவ் அழுதுறுவேன்.

 3. ஆயில்யன்No Gravatar says:

  க்ரியாவின் படைப்பு பல சமகால பின்நவீன படைப்புகளை நினைவுகூற வைக்கும் அதே வேளையில் அவ்வாறு நினைவுகூறிய பின்னும் தனது தனித்துவ மொழிதலின் பலத்தால் வாசக வெளியின் முற்றத்தில் இருகால் பதித்து குந்துகிறது. இங்கு க்ரியாவின் வட்டார மொழி புலமையை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

  :)))))))))

  //பேயோன் ராக்ஸ்!//

  அதே! அதேதான் !!

 4. க்ளிஞ்சிடுச்சுங்க :)

 5. குருவே வணக்கம்.
  நீங்கள் மதிப்புரை எழுதுவீர்கள் என்று தெரியாமல் நான் இந்த புத்தகத்தை சில மாதங்களுக்கு முன் ஒரு புத்தகக் கண்காட்சியில் வாங்கிவிட்டேன்.
  அன்று செலவு செய்த 500 ரூபாயை உங்களுக்கு காணிக்கையாக கொடுத்திருக்கலாம்!

 6. செந்தில்No Gravatar says:

  யப்பா சாமீஈஈய்!!! :-)

 7. இதை மதிப்புரை என்று விஜய் மேலே குறிப்பிட்டுள்ளார். எனக்கு மறுப்புரை போலத் தோன்றுகிறது. உங்கள் மறுப்பு புத்தகத்தலைப்பிலிருந்தே ஆரம்பிக்கிறது.
  //க்ரியாவின் சமகாலத் தமிழ் அகராதி (க்ரியாவின் மொழியில் “தற்காலத் தமிழ் அகராதி”)//

  உரையைப் படித்தபின் புத்தகம் கதையா அகராதியா என்ற சந்தேகம் வருகிறது. அதைவிட பல சந்தேகங்கள் கீழ்கண்ட வரிகளை படிக்கும்போது வருகின்றது. //கடந்த இரண்டு மாதங்களில் தமிழ் எழுத்து வெளிக்குள் ஸ்கலிதமாகத் துவங்கியுள்ள பின்கலாச்சார கதையாடலின் …//
  இது புத்தக எஃப்கட்டா? உங்க ஸ்டைலா? எதுவாக இருந்தாலும் புரியவில்லை.

 8. @விஜய் – ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது? என் பேனாவிற்கு மை ஊற்றவே ஐநூறு ரூபாய் ஆகிறது. இத்தனைக்கும் காசோலைகளில் கையெழுத்து போடத்தான் பேனாவை பயன்படுத்துகிறேன்.

  @செல்வக்குமார் – நீங்கள் இதற்கு முன் பனுவல் எதையும் வாசித்ததில்லையா? இல்லை என்றால் உங்களுக்கு புரியாததில் வியப்பில்லை.

 9. காயத்ரி சித்தார்த்No Gravatar says:

  :))))))))))

 10. இப்பொழுதுதான் இதைப் படித்தேன். உஃப்ஃப்ஃப்ஃப்ஃப் முடியல.

  அகராதி பிடித்த புத்தகமாக இருக்கும்போல இருக்கிறதே.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar