ஒன்பது காதல் கவிதைகள்

in கவிதை

1

திருமணம் ஆனபிறகு
உனக்கு என் ஞாபகம் வருமா
எனக் கேட்கிறாய்.
நான் உன்னையே
திருமணம் செய்துகொண்டுவிட்டால்?

2

அழகான பெண்களைப் பார்க்கும்போது
உன் ஞாபகம் வருகிறது.
உன்னைப் பார்க்கும்போது
அழகான பெண்களின் ஞாபகம் வருகிறது.

3

வாழ்க்கையில்
ஒரு புத்தகமாவது
எழுதிவிடவேண்டும்
உன்னைப் பற்றி.

4

தொலைவினால்
ஆனது
நம் பிரிவு.

5

நான்
இல்லாமல்
வாழக் கற்றுக்கொள்.

6

நேற்று நீ என்னுதட்டில் பதித்த காயம்
கண்ணாடியில் தனைக் கண்டு சிவக்கிறது.

7

என்னென்னவோ
சொல்கிறதுன் பார்வை.
அட வேண்டாமடி,
வாயைத் திற
கேட்கிறேன்
உன் குரலையாவது.

8

எங்கோ போகும் வழியில்
திடீரென எதிர்ப்படும் உன்னை
எதிர்பாராமல் திகைக்கிறேன்
ஆறாம் வாய்ப்பாடு மறந்தவனாய்.

9

நான் மட்டும் இல்லையென்றால்
எதைப் பற்றிக் கவிதை எழுதுவாய் என்கிறாய்.
யாரைப் பற்றி என்று கேள்.

Tags: ,

8 Responses

 1. வேதனை,கிளுகிளுப்பு,ஆதங்கம்,சோகம்,அறிவுரை,லவ்ஸ்சு,நக்கல் எல்லாம் கலந்த டெரர் கவிதைகள்! :)

 2. பேயோன்No Gravatar says:

  மூன்றாவது கவிதையை கவனமாக படித்தீர்களானால் அப்பட்டமான காமம்கூட இருப்பது தெரியும்.

 3. //மூன்றாவது கவிதையை கவனமாக படித்தீர்களானால் அப்பட்டமான காமம்கூட இருப்பது தெரியும்//

  நான்கு சுவர்களுக்கு நடக்கும் விசயத்தை நான்கு வரிகளுக்கு அப்பட்டமாகவா? ஆச்சர்யமே!
  இனி கவனமாக படிக்கிறேன் :)

 4. அனைத்தும் அருமையான உணர்வுகளின் வெளிப்பாடுகள் !

 5. ssrajapriyanNo Gravatar says:

  நன்று …….!

 6. CNRANo Gravatar says:

  வெகு அருமை!!

 7. salamNo Gravatar says:

  “இரண்டாம் வாய்பாடு மறந்தவனாய்… ” என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும் ஒரு small அபிப்ராயம்

  • பேயோன்No Gravatar says:

   சலாம்: அப்படியா? அந்த கவிதையை நீங்கள் எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைத்தாலே குலைநடுங்குகிறது.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar