மனம் திருந்திய மன்னன்

in புனைவு

துவாபர யுகத்தில் மயூரசன்மன் என்றொரு மன்னன் வைரபுரி என்ற நாட்டில் கொடுங்கோலாட்சி புரிந்துவந்தான். பல ஆண்டுகள் தன் பிரஜைகளைக் கொடுமைப்படுத்திவந்த மன்னன், திடீரென ஒரு நாள் தன் தவறை உணர்ந்து மனம் வருந்தினான். தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேட விரும்பி ஒரு முனிவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதபூஜை நடத்தி அன்னதானம் செய்தான்.

போஜனம் ஆனவுடன் முனிபுங்கவர், “ராஜனே! எனக்கு போஜனம் அளிப்பதால் மட்டும் நீ செய்த பாவங்கள் கரைந்துவிடாது. அதற்கு நீ பிரம்மதேவனைக் குறித்து நாற்பத்தியாறு லக்ஷம் ஆண்டுகள் தவம் புரிய வேண்டும்” என்று கூறினார்.

மன்னன் முனிவரையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொன்றுவிட்டு பிரம்மனை நோக்கித் தவமிருக்கலானான். இடி, மின்னல், மழை, வெள்ளம், புயல், வெயில் என எல்லா இயற்கைச் சீற்றங்களையும் பொறுத்துக்கொண்டு பிரம்ம தரிசனத்துக்காகத் தவம் கிடந்தான்.

இவ்வாறாகப் பதினாயிரம் ஆண்டுகள் கழிந்தன. திடீரென ஒரு நாள் அவன் முன்னே ஓர் ஒளிப் பிழம்பு தோன்றியது. அதிலிருந்து அழகிய தேவகன்னிகை ஒருத்தி வெளிப்பட்டுப் புன்னகைத்தாள். “நரனே! நான் பிரம்மதேவனின் காரியதரிசி. நீ செய்திருக்கும் எண்ணற்ற பாவங்களுக்கு அவர் அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட மாட்டார். நீ முட்களின் மீது ஒற்றைக் காலில் நின்று இன்னும் ஐம்பத்தியெட்டு லக்ஷம் ஆண்டுகள் தவம் புரிய வேண்டும்” என்று கூறி மறைந்தாள்.

மயூரசன்மன் அவள் சொற்படி முட்களின் மீது ஒற்றைக் காலில் நின்று தவமிருந்தான். அறுபத்தியிரண்டு லக்ஷம் ஆண்டுகள் கழித்து மன்னனுக்கு நா வறண்டுபோய் சொல்லொணாத் தாகம் ஏற்பட்டுத் தவம் கலைந்தது. சிறிது நீர் அருந்திவிட்டுத் தவத்தைத் தொடரலாம் என்று எண்ணிய மன்னன், அந்தக் கானகத்தில் நீர் தேடி நெடுந்தூரம் அலைந்தான். அருவிகள், ஓடைகள் எல்லாம் வற்றியிருந்தன. சுனைகள் காய்ந்த இலைகளால் நிரம்பியிருந்தன. அவனிருந்த மரத்தைத் தவிர எல்லா மரங்களும் வெட்டப்பட்டிருந்தன. மனம் வெறுத்த மன்னன், காட்டிலிருந்து வெளியேறினான்.

மயூரசன்மன் நாட்டுக்குள் நுழைந்ததும் ஆட்டோக்களை, கார்களை, தொலைபேசி பூத்களை, மொபைல் போன் கடைகளை, திரையரங்குகளைக் கண்டான். யுகம் மாறிவிட்டது என்றும் தன் தவத்தை இனியும் தொடரவியலாது என்றும் உணர்ந்தான். கலியுகத் தொழில்கள் எவையும் தெரியாததால் மயூரசன்மன் தாகத்தைத் தணித்துக்கொண்ட பின் காசிக்குச் சென்று பிச்சை எடுக்கத் தொடங்கினான்.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar