3024இல் எதுவும் சாத்தியம்

in சிறுகதை

கி.பி. 3024.

“பல்கிரக அண்டவியல் ஆராய்ச்சி மையத்திற்கு மீண்டும் நல்வரவு திரு. குமார்420.”

தானியங்கிக் கதவு ஓசையின்றித் திறக்க, உள்ளே நுழைந்த குமார்420ஐ புன்னகையுடன் இனிய பெண் குரலில் வரவேற்றாள் மின்மி. 40 மில்லியன் ஆங்ஸ்ட்ராம் ரிசல்யூஷனில் இருந்த மின்மியின் 28.4-30.3-34 ஹோலோகிராம் உடலை ஊடுருவிக்கொண்டு தன் இருக்கைக்குச் சென்றார் குமார்420.

கூரையின் கீழ் இயக்கமற்று மிதந்துகொண்டிருந்த செயற்கை நேனோஃபோட்டான் விளக்குகள் குமார் அமர்ந்ததும் இயக்கத்திற்கு வந்து வசதியான தூரத்தில் நின்று ஒளிவிட்டன.

“கட்டுரையும் செயல்திட்டத்தின் மூல மாதிரியும் தயாராகிவிட்டதா மின்மி?” என்றார் குமார்420.

“எடுத்துவைத்திருக்கிறேன் சார்” என்றாள் மின்மி.

மின்மி அதிஉயர் நேனோ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நியூரான் திரைகளாலான முப்பரிமாண உரு. ஒரு பைக்கோ நொடியில் 20 யோட்டா கணக்குகளைப் போடும் திறனுள்ள கணினி. ஜெனன் கிரகத்துடனான நான்காம் யுத்தத்தில் பூமிக்கு நிரந்தர வெற்றி தேடித் தந்த மின்காந்த டிஃப்ளெக்டர்களை உருவாக்கியதற்காக குமார்420க்கு அரசாங்கம் கொடுத்த பரிசு. இப்போது குமார்420இன் அந்தரங்கக் காரியதரிசி. பல்லூடக கேளிக்கைச் சாதனம். அது மட்டுமா, பருவுடல் பயன்முறைக்கு மாறினால் பூமியின் முழுமுதற் தலைவருக்குக் கூடக் கிடைக்காத இன்பங்களையெல்லாம் மாயமெய்ம்மையில் அள்ளித் தரும் மனைவி.

பல கோடி வண்ணப் புள்ளிகள் திரண்டு கட்டுரை அவர் கண் முன் உருவானது. இந்தக் கட்டுரையும் மூல மாதிரியும் பிரபஞ்சம் முழுவதையும் எப்படி மாற்றப்போகிறது என்று நினைத்து சிலிர்த்தார் குமார்420. அணுக்கருவை எண்ணற்ற முறை துளைத்துக்கொண்டே இருக்கலாம் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு கோட்பாட்டு ரீதியாக நிரூபித்து அழியாப் புகழைப் பெற்றார் குமார்420. தனது புதிய கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தை இன்னும் பெரிதாக உலுக்கப் போகிறது என்ற எண்ணம் அவரது செதுக்கிய மூக்கிற்குக் கீழ் மெல்லிய புன்னகையை வரவழைத்தது.

“கட்டுரையை நீ படித்தாயா மின்மி? எப்படி இருந்தது?” என்று கேட்டார் குமார்420.

அது பாராட்டை எதிர்பார்த்துக் கேட்கப்படும் கேள்வி என்று புரிந்துகொண்ட மின்மி, “நான் என்ன சொல்ல? உங்களை விஞ்ச ஒரு மென்மூளை கூட இல்லை” என்றாள்.

‘அட, அது எனக்குத் தெரியாததா!’ என்பது போல் கடகடவென சிரித்தார் குமார்420. “3024இல் எதுவும் சாத்தியம்” என்ற அவர், “எங்கே என் ப்ரோட்டோடைப்?” என்றார்.

அவர் கேட்டு முடிப்பதற்குள் அவர் மேஜையிலிருந்து ஒரு டைட்டானியத் தட்டு வெளிப்பட்டது. தோராயமாகக் காகிதப் பந்து போலிருந்த பொருள் ஒன்றை நீட்டியது. பார்வைக்கு எளிதாக இருந்தாலும் மிக சக்திவாய்ந்த நுண்ணோக்கிகளால் பார்த்தால் மட்டுமே அதன் சிக்கலான அமைப்பு முழுமையாகத் தெரியும்.

சில கோடி நேனோ ரோபோக்களால் அமைக்கப்பட்ட அந்தக் காகிதப் பந்து, R2C3 என்ற புது ரக இயந்திரத்தின் மூல மாதிரி. பிரபஞ்சத்தில் இன்னும் கண்டறியப்படாத கிரகங்களையும் தேடிக் கண்டுபிடித்து தொலைவெளி மின்காந்த வீச்சு மூலம் பூமியுடன் கம்பியில்லாமல் இணைக்கவிருந்தது R2C3. இது இயந்திரங்களின் இயந்திரம். கோள்சார் காலனியமாக்கத்தின் அடுத்த வடிவம். R2C3.

o o o

“மனித மூளை மட்டுமல்ல, வேறு எந்த அறிவுயிரின் தகவல் நிகழ்முறை அமைப்பும் கணினியை விடச் சிக்கலாக இருப்பது ஏன்?”

சுற்றிலும் தத்தமது திரைகளுக்குள்ளிருந்து கவனித்துக்கொண்டிருந்த விஞ்ஞானிகள் யாரும் டாக்டர் மிஷா42இன் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. மாறாக, அவர்கள் மிஷா42இன் விளக்கத்திற்குக் காத்திருந்தனர். சிலர் அறிவியலை தற்காலிகமாகத் தூக்கப் பயன்முறையில் வைத்துவிட்டு மிஷா42இன் மணல் கடிகாரத்தில் நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“மனித மூளையை விட எண்ணற்ற மடங்கு கணக்கீட்டுத் திறன் கொண்ட கணினிகளை உருவாக்கிவருகிறோம். ஆனால் வன்இயந்திரங்களும் மின்னுயிர்களும் ஒரு அளவிற்குப் பின் கணிக்கத்தக்க போக்கிலேயே நடந்துகொள்கின்றன. மனித சிந்தனையின் தற்போக்குத் தன்மையை நம் இயந்திரங்களால் போலி செய்ய முடிவதில்லை. இதனால் புதிய சிந்தனைகளுக்கு நாம் மனித மூளையைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. மனித மூளையை முற்றிலுமாக நகலெடுத்து மனித சிந்தனைப் போக்கை சிமுலேட் செய்யும் திறன் நமது மகத்தான சாதனைகளில் ஒன்று. இந்த சிமுலேஷன் மூலம் நான் உருவாக்கிய புதிய செயல்திட்டம் ஒன்றை இங்கு விவரிக்க விரும்புகிறேன்” என்று சொல்லி நிறுத்தினார் மிஷா42.

விஞ்ஞானிகள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

“R2C3 என்று நான் பெயரிட்டிருக்கும் இந்த செயல்திட்டம், நமக்காக இனி மென்பொருட்களே சிந்திக்கும் என்பதற்கு சாட்சி” என்ற மிஷா42, தனக்கு முன்னால் இருந்த மேஜையில் ஒரு பொத்தானை அழுத்தினார். மேஜைக்கு மேல் பெரிதாக அந்தரத்தில் விரிந்தது ஒரு வெண்கோளம். அது பார்க்கத் தோராயமாக ஒரு காகிதப் பந்து போல் இருந்தது.

“நீங்கள் பார்க்கும் இந்தப் பந்து, R2C3 என்ற புது ரக இயந்திரத்தின் மூல மாதிரி. மிக சக்திவாய்ந்த நுண்ணோக்கிகளால் பார்த்தால் மட்டுமே அதன் சிக்கலான அமைப்பு முழுமையாகத் தெரியும். பிரபஞ்சத்தில் இன்னும் கண்டறியப்படாத கிரகங்களையும் தேடிக் கண்டுபிடித்து தொலைவெளி மின்காந்த வீச்சு மூலம் ழ்றஷ்௪௰வியுடன் கம்பியில்லாமல் இணைப்பதற்காக இதை உருவாக்கப்போகிறோம். இது இயந்திரங்களின் இயந்திரம். கோள்சார் காலனியமாக்கத்தின் அடுத்த வடிவம் – “

மிஷா42இன் உணர்ச்சி்ப் பெருக்கில் டாக்டர் சந்திரஹால்71 குறுக்கிட்டார்: “வாழ்த்துக்கள் மிஷா. மனித சிந்தனைப் போக்கைப் போலிசெய்து கிடைத்த முதல் சிந்தனைதான் உங்கள் வெளிவலைச் செயல்திட்டம் என்கிறீர்கள். ஆனால் இத்தகையதொரு பணியைக் கையாளும் திறன் எனக்குத் தெரிந்து நமது வன்பொருட்களிடம் இல்லை.”

அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் ஆயுள் நீட்டிப்பு கிடைத்ததிலிருந்து இவரது மிகைமை பொதுத் தாங்குதிறனை மீறிச் சென்றுகொண்டிருந்ததாகத் தோன்றியது மிஷா42க்கு.

தனது பேத்தியிடம் பேசுவது போன்ற பாவனையில் விளக்கினார் சந்திரஹால்71: “உங்கள் சிந்தனை நிகழ்முறைமை இந்தக் கட்டத்திலேயே பெரும் செலவு வைத்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. உங்கள் போலியாக்கத்திற்குத் தேவையான அளவு திறனுள்ள ஒரு பெரும் கணினியை உருவாக்குவது கட்டுப்படியாகாது.”

ஜென்91 என்ற இன்னொரு இளம் விஞ்ஞானி சட்டைப் பையிலிருந்து ஒரு நுண்வட்டை எடுத்து அதிலிருந்து நீண்டதொரு ஹோலோகிராஃபிக் விளக்கப்படத்தை உருவினார். மிஷா42 அவரைக் கையமர்த்திவிட்டுத் தொடர்ந்தார்…

“இப்படியொரு வெளிமுகமான பிரச்சினையைப் பற்றி யோசிக்காமலோ, அதற்கொரு தீர்வு காணாமலோ நான் இருக்க முடியுமா? ஒரு சிந்தனை நிகழ்முறை தொடங்கி நிறைவடைய 2.4192E+18 பைக்கோ நொடிகளாவது ஆகின்றன. இதற்குச் செலவாகும் ஆற்றல் அபரிமிதமாக இருப்பதால் அந்த நிகழ்முறை இயங்கும் கணினி சிறிது காலத்திற்குப் பின் பயனற்றதாகிவிடுகிறது. ஆனால் நான் இதற்கொரு தீர்வு வைத்திருக்கிறேன்.”

வெண்கோளத்தை அணைத்துவிட்டுத் தொடர்ந்தார் மிஷா42.

“எனது தீர்வு: குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படும் கணினிகளை உருவாக்குவோம். ஒரு கணினி = ஒரு சிந்தனை. பிறகு பயன் தீர்ந்த கணினிகளை மறுசுழற்சிப்படுத்தி அடுத்த சிந்தனைகளுக்குத் தயாராக்குவோம். இதைப் பெரிய அளவில் தொடர்ந்து செய்தபடி இருந்தால் நீண்டகாலப் பலன் இருக்கும்.”

விஞ்ஞானிகள் எல்லோரும் யோசனையில் மூழ்கியிருந்தார்கள். தனது மைக்ரோபோட்டாக்ஸ் புருவங்கள் சுருங்க சிந்தித்துக்கொண்டிருந்த சந்திரஹால்71 சிறிது நேர மௌனத்திற்குப் பின் மெல்லப் புன்னகைத்தார்: “பிரில்லியன்ட்.”

o o o

“பதினொன்று நாற்பத்தைந்து…” குமார்420இன் உதடுகளிலிருந்து பிரிந்து பரவசத்துடன் முனகினாள் மின்மி. அவள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் பயன்முறை மாறிவிட்டிருந்தனர்.

கலையாத பரட்டைக் கேசத்தையும் கசங்காத உடையையும் சரிப்படுத்திக்கொள்ள முயன்றார் குமார்420. அந்த ஆனானப்பட்ட விஞ்ஞானிக்குக் கூட மாய மெய்ம்மையின் நிஜம் இயற்கை நிஜமாகத் தெரிந்ததில் வியப்பில்லை.

இன்னமும் பருவுடல் பயன்முறையிலிருந்து முற்றிலுமாய் மீண்டிராத குமார்420, “விளக்கக்காட்சிக்குக் கிளம்பும் நேரம் வந்துவிட்டது. அந்த நுண்வட்டை எடுத்துக் கொடு மின்மி” என்று குழறியபடி கை நீட்டினார். நீட்டிய கையைப் பார்த்து அதிர்ந்தார் – அவரது கை முழுவதும் சிறுசிறு சதுரங்களாகத் திரிந்துகொண்டிருந்தது.

குமார்420க்கு வியர்த்துக்கொட்டியது. ‘என்ன ஆகிறது எனக்கு?’ அனைத்தும் அறிந்த டாக்டர் குமார்420க்குத் தன் உடல் அடைந்துவந்த மாற்றம் புரியவில்லை. அதைவிட பயங்கரம், அதற்கான காரணத்தை அவரால் சிந்தித்தறிய முடியவில்லை. சரும ஒவ்வாமையா? மூளைச் செயலிழப்பா? ஆயுள் கட்டுப்பாட்டு அறையில் கோளாறா?

“மின்மி, ஹெல்ப் மீ!” என்று அலறினார் குமார்420.

“அமைதியாக இருங்கள் பேராசிரியரே. உங்கள் நிகழ்முறை இன்னும் 1,700 கோடி நேனோ நொடிகளில் முடியப்போகிறது” என்றாள் மின்மி.

குமார்420இன் பருவுடல் பல்லாயிரம் கோடி பிக்சல்களாகக் கரைந்துவர, ‘என்ன சொல்கிறாய் மின்மி?’ என்றன அவரது வெறித்த கண்கள்.

“கடைசி முத்தத்திற்கு நன்றி மை டியர்” என்றாள் மின்மி என்கிற மிஷா42.

Tags: , ,

15 Responses

 1. gulf-tamilanNo Gravatar says:

  நல்லாயிருக்குன்னு பொய் சொல்ல விரும்பவில்லை:)))

 2. விஞ்ஞான கதை வாசிப்பு – முழுமையாக புரிந்துக்கொள்ளமுடியாமைக்கு பயன்படுத்தபட்டிருக்கும் – காலத்துக்கேற்ற வகையில் மாறா – சொற்களும் காரணமாக இருக்குமோ?

  /அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் ஆயுள் நீட்டிப்பு கிடைத்ததிலிருந்து இவரது மிகைமை பொதுத் தாங்குதிறனை மீறிச் சென்றுகொண்டிருந்ததாகத் தோன்றியது மிஷா42க்கு//

  டாக்டர் சந்திரஹால்71 உங்க லிமிட்டை தாண்டி கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டிருக்க – அப்படின்னு சொன்னா நல்லாத்தான் இருக்கு :) #ச்சும்மா

 3. பேயோன்No Gravatar says:

  @gulf-tamilan: புரியவில்லை என்பதை நீங்கள் கூறுவது போலும் சொல்லலாம் என்பது தெரிந்த விஷயம்தானே.

  @ஆயில்யன்: இது வேறு விதமான மொழிநடை. வழக்கமான அறிவியல் கதை நடை அல்ல.

 4. 3024லிலும் தமிழ் இருக்கும் என்பது சந்தோஷமாக இருக்கின்றது.

  ஒவ்வொறு நபருக்கும் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது நல்ல சிந்தனை.

  குமார் ஒரு 420

  மற்றபடி எனக்கு புரிஞ்சிடிச்சின்னு சொல்ற அளவுக்கு இன்னும் நான் வரலை …

 5. பேயோன் அவர்களே – நல்லாயிருக்கு. தொடருங்கள். என் விஞ்ஞானக் கதையில் எதிர்காலத்தில் தமிழைக் காப்பாற்றிருப்பேன்.வாய்ப்பிருந்தால் படித்துப் பாருங்கள்

  http://beyondwords.typepad.com/beyond-words/shortstory_enrendrumthazmaiyudan.html

  – நன்றி –

 6. செந்தில்No Gravatar says:

  பேயோன் ஐயா!!

  இந்த கதையில் சிமுலேட், சிமுலேஷன் என்பதை மட்டும் “ஏன்” லிட்ரேட் பண்ணியிருக்கீங்க…

  என்னை மாதிரி மொழிபெயர்ப்பே கதி ன்னு இருக்கிறவங்களுக்கு எளிதாக புரியும்னு நினைக்கிறேன்… உண்மையில் நல்ல கதைதான் எனக்கு புடிச்சுருக்கு!

  செந்தில்

 7. பேயோன்No Gravatar says:

  @ரா.கிரிதரன்: நன்றி. என் கதையில் தமிழ் அழிந்துவிடவில்லை. கதை வேறு கிரகத்தில் நடக்கிறது, அவ்வளவுதான். உங்கள் படைப்பை அவசியம் படிக்கிறேன்.

  @செந்தில்: நன்றி. தொழில்நுட்ப வார்த்தைகள் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டிலும் இருந்தால்தான் அறிவியல் புனைகதை தன்மை இருக்கும்.

 8. பேயோன்No Gravatar says:

  @ஜமால்: பெயருடன் எண்களை சேர்ப்பதோ பெயருக்கு பதிலாக எண்களை பயன்படுத்துவதோ புதிதல்ல. அது ஒரு அறிவியல் புனைகதை மரபு.

 9. செயற்கை சிந்தனைப் போக்கு மற்றும் மாயமேய்மையில் ஒளிந்திருக்கும் முரண்படு மெய்மையை மிக நன்றாக கதையின் கருவாக உபயோகித்திருக்கிரீர். அருமையான கரு. இதை அப்படியே கொஞ்சம் இழுத்து ரஷிய மதுஷ்கா பொம்மை அல்லது வெங்காயச்சருகு போல் பல அடுக்குகளுக்கு விஸ்தரித்திருக்கலாம்.
  அடுத்த கதையில் பிரஞ்சு எழுத்தாளர் ரேநீ பர்ஷாவேலினால் பிரபலப்படுத்தப்பட்ட காலப் பிரயாணத்தில் வரும் தாத்தா முரண்படு மெய்மை (grandfather paradox) யுக்தியை கையாளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 10. இரண்டாம் பத்தி முற்று பெறாமல் நிற்பது போல் தோன்றினாலும், முடிவுறும் குமாரின் வாழ்க்கை கதைக்கு முடிவுரை எழுதி கொள்கிறது!

 11. இந்தக் குமார் விழுப்புரம் குமரா?

 12. பேயோன்No Gravatar says:

  @விஜய்: தாத்தா முரண் என்னை வெகுவாக குழப்பிய விஷயங்களுள் ஒன்று. அதனுடன் எதுவும் வைத்துக்கொள்வதாக இல்லை.

  @வால்பையன்: சிலர் ‘பசி’யை ‘பத்தி’ என உச்சரிப்பதை கவனித்ததுண்டா?

  @கட்டியக்காரன்: மாவட்டத்திற்கு ஒரு அண்ணா நகர் இருப்பது போல் கிரகத்திற்கு ஒரு விழுப்புரம் இருக்கவா போகிறது?

 13. நான் உங்களை தமிழின் ஒரே உலக எழுத்தாளன் என்று நினைத்திருந்தேன் அனால் நீங்கள் உலக எழுத்தாளர்களின் ஒரே தமிழ் எழுத்தாளன்.
  உங்கள் மூளைச் செலவு நிச்சயம் வியப்புக்குரியது.
  அருமையான கதை.

 14. பேயோன்No Gravatar says:

  மழையோன் – நன்றி. உங்களுக்காவது புரிகிறதே.

 15. ;)

  உங்க கதையை விட மழையோனின் ட்விட்டைப்பதில் ரொம்பப் பிடிச்சிருக்குது..

  (இந்த …யோன்-ல பேரு முடிஞ்சா இப்படித்தான் எழுதுவாங்களோ?) :)

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar