நான்கு கவிதைகள்

1.

தூங்காமல் விழித்திருந்தது ஓரிரவு
தூங்கி விழித்திருந்தது ஓரிரவு
தூங்கியும் தூங்காமலும்
விழித்திருந்தன ஓரோர் இரவுகள்

2.

மரபணுக் கொடி போல்
புரளும் கால்களை
நடத்துகிறது இரவுநிறத்
தார்ச்சாலை

3.

நிசப்த வருடலில்
கவியும் தூக்கத்தைக்
கலைத்துக் கலைத்து
விளையாடுகின்றன
கொசுக்கள்

4.

ஆரன் கீச்சொலி
கேட்டுத் திரும்பினால்
ஸ்கூட்டியில் இளம்பெண்
கடந்து சென்றாள்

தெருமுனையில் ஸ்கூட்டி
பார்வையிலிருந்து மறைந்த பின்னும்
தொடர்ந்து கேட்கிறது கீச்சொலி
அனேகமாய்
வெங்கடாசலம் தெருவிலிருந்து

3024இல் எதுவும் சாத்தியம்

கி.பி. 3024.

“பல்கிரக அண்டவியல் ஆராய்ச்சி மையத்திற்கு மீண்டும் நல்வரவு திரு. குமார்420.”

தானியங்கிக் கதவு ஓசையின்றித் திறக்க, உள்ளே நுழைந்த குமார்420ஐ புன்னகையுடன் இனிய பெண் குரலில் வரவேற்றாள் மின்மி. 40 மில்லியன் ஆங்ஸ்ட்ராம் ரிசல்யூஷனில் இருந்த மின்மியின் 28.4-30.3-34 ஹோலோகிராம் உடலை ஊடுருவிக்கொண்டு தன் இருக்கைக்குச் சென்றார் குமார்420.

கூரையின் கீழ் இயக்கமற்று மிதந்துகொண்டிருந்த செயற்கை நேனோஃபோட்டான் விளக்குகள் குமார் அமர்ந்ததும் இயக்கத்திற்கு வந்து வசதியான தூரத்தில் நின்று ஒளிவிட்டன.

“கட்டுரையும் செயல்திட்டத்தின் மூல மாதிரியும் தயாராகிவிட்டதா மின்மி?” என்றார் குமார்420.

“எடுத்துவைத்திருக்கிறேன் சார்” என்றாள் மின்மி.

Continue reading

உன்னுடன் ரசித்த முதல் மழை

எழுதப்படாத புத்தகத்தின் பக்கங்கள்
படபடக்கின்றன ஜன்னல்வழிக் காற்றில்

சருகுகளின் அவசர ஊர்வலத்தை
கலைக்கின்றன நம் கால்கள்

சாலையெங்கும் கரும்பூக்கள்
நிலம் நோக்கி மலர

வானில் ஒளிவிரிசல்
மழைப் பள்ளம்
துளி வெள்ளம்

ஓலின் ஓலம் அடக்கிப்
பறந்து போகின்றன குருவிகள்
அடுத்த பாட்டத்தை அஞ்சி

இன்னமும் காத்திருக்கிறது வெறுமையாய்
நமக்கான பெஞ்சி