அடுத்த வாரத் தொடர்ச்சி

in சிறுகதை, புனைவு

கதையின் முதல் வரி என்பதால் அன்று நாராயணனின் தேனீர் அங்காடி வழக்கத்தை விட கூடுதலாகவே களைகட்டியிருந்தது. நாராயணன் தனது தொண்ணூற்றி மூன்றாவது வாடிக்கையாளரிடம் இரைந்தார்: “முதலில் காசை எடுத்து வை. அப்புறம் டீ சாப்பிடலாம்!” வாடிக்கையாளர், “நான் இங்கேதானே பக்கத்து கட்டிடத்தில் இருக்கிறேன், காசைக் கொடுக்காமல் எங்கே போய்விடப் போகிறேன்” என்றார். “இதோ பார், இந்த விளையாட்டெல்லாம் என்னிடம் வேண்டாம். காசு கொடுத்தால்தான் டீ” என்றார் நாராயணன் கறாராக.

சென்ற மாதம் நான் எழுதிய கதையைப் பிரசுரித்தமைக்கு நன்றி. என் கதை தங்கள் பத்திரிகையில் வந்து சரியாக 24 நாட்கள் ஆகின்றன. ஆனால் எனது சன்மானத்தைத் தாங்கள் இன்னும் எனக்கு அனுப்பவில்லை. திரு. பூபதி தங்கள் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தபோது கதை வெளிவந்த அடுத்த நாள் காசோலை எழுத்தாளர்களைச் சென்றடையும் என்பதைத் தாங்கள் அறிந்திருக்கலாம். மன்னிக்கவும், இது பணம் தொடர்பான விவகாரம் அல்ல. எழுத்தாளர்களுக்குத் தாங்கள் எவ்வளவு மதிப்பு தருகிறீர்கள் என்பது அவர்களுக்கு எவ்வளவு விரைவில் பணம் அனுப்பி வைக்கிறீர்கள் என்பதன் வாயிலாக வெளிப்படுகிறது.

வாடிக்கையாளர் சிறிது நேரம் தயங்கி நின்றார். நாராயணன் அவர் அங்கு நின்றதைப் பொருட்படுத்தாமல் பிறிதொரு வாடிக்கையாளருக்கு முறுக்கு எடுத்துக் கொடுத்தார். முறுக்குதாரர் தான் பெற்றதில் சிறிது கடித்து அதிலொரு பகுதியை உள்வாங்கிக்கொண்டார். முதல் பகுதியானது வாயில் மெல்லப்பட்டுக்கொண்டிருக்கையில் அவர் தயங்கி நின்றவரை ஏறவிறங்கப் பார்த்தார். முதல் வாடிக்கையாளர் அவரது பார்வையை சரியான சமயத்தில் தவிர்த்தார்.

அது கூடப் பரவாயில்லை. கதை வெளிவந்த பிறகு வழக்கமாக அனுப்பப்படும் அன்பிதழ்களையும் எனக்கு அனுப்பாததை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தாங்கள் அவைகளை அனுப்புவீர்கள் என்கிற நம்பிக்கையில் நான் பிரதிகளை வாங்கவில்லை. ஒரு வாரம் கழித்துக் கடைகளில் கேட்டால் உங்கள் பத்திரிகை விற்றுத் தீர்ந்துவிட்டது என்ற பதிலே கிடைத்தது. சில சமயங்களில் உங்கள் பத்திரிகை விரைவாக விற்பனை ஆகிவிடுகிறது போலும்.

தற்காலிகமாக வேறு வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை என்பதனால் நாராயணன் மீண்டும் முதல் வாடிக்கையாளரிடம் தமது பார்வையைத் திருப்பினார். “நான்தான் இல்லை என்று சொல்லிவிட்டேன் அல்லவா, பிறகு ஏன் என் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்?” என்றார் அவர். “இன்று கொடுக்கவில்லை என்றால் நாளைக்குக் கொடுக்கப் போகிறேன். நான் எங்கே இரண்டரை ரூபாய்க்கு டீ சாப்பிட்டுவிட்டு துபாய்க்கா ஓடிவிடப் போகிறேன்?” என்று முதல் வாடிக்கையாளர் மடக்கினார். நாராயணன் உடனே எதிர்மடக்கலில் இறங்கி, “உன்னை யார் துபாய்க்குள் அனுமதிக்கப் போகின்றனர்?” என்று கேட்டார்.

இது தொடர்பாக நான் நேற்று உங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தேன். அரை மணிநேரம் உங்களுக்காகக் காத்திருந்த பிற்பாடு உதவி ஆசிரியர் ஒருவர் வந்து என்னிடம் மரியாதை இல்லாமல் பேசினார். எனது காசோலை தயாராகிவிட்டது என்றும் பொது மேலாளர் கையொப்பமிட்டுவிட்டால் அது அனுப்பப்பட்டுவிடும் என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார். ஒரு காசோலையில் ஒரு கையொப்பம் போட எவ்வளவு நேரம் ஆகிவிடப் போகிறது?

இதற்கிடையில் மூன்றாவதாக ஒருவர் அவ்விடம் வந்தார். “என்ன நாராயணா, அவருக்கு ஒரு தேனீரைக் கொடுத்துத் தொலையேன்” என்றார் அவர். நாராயணன் உடனே கொதித்து, “காசை நீ தருகிறாயா?” என்றார். “ஏனப்பா, தினமும் பார்க்கிற முகம்தானே? கொடுத்தால் என்ன?” என்றார் மூன்றாமவர் சமாளித்து. நாராயணன், “தினமும் பார்க்கிற முகம் என்றால் அப்புறம் தினமும் காசு கொடுத்துவிட்டு சாப்பிடுகிறதுதானே?” என்றாரே பார்க்கலாம்.

என்றைக்கு ஒரு எழுத்தாளன் தனக்குப் பணமோ பிரதிகளோ அனுப்பத் தவறப்பட்டுவிட்டது என்று ஒரு பத்திரிகை அலுவலகத்தில் காலடி எடுத்து வைக்கிறானோ அப்போது தொடங்குகிறது அந்தப் பத்திரிகையின் கேடுகாலம். நான் பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு பத்திரிகை, எழுத்தாளர்களுக்கு நல்ல சன்மானத்தை உடனடியாக அனுப்புவதோடு ஒரு அன்பிதழுடன் ஒரு நன்றிக் கடிதத்தையும் அனுப்பி வைக்கிறது.

“சரி, ஒரு தேனீர், ஒரு பில்டர் கோல்டு ஒன்று கொடு” என்றார் மூன்றாமவர். நாராயணன் கோல்டு பில்டரை எடுத்துக் கொடுத்தபடி, “இந்த ஆள் தினமும் இலவசமாகத் தேனீர் அருந்தப் பார்க்கிறான். என்றோ ஒரு நாள் கடன் என்றால் பரவாயில்லை. தினமும் என்றால் கடுப்பாக இருக்காது மனிதனுக்கு?” என்றார்.

என்னைப் போன்ற மாத வருமானக்காரர்கள் வராத தொகைக்காகப் பஸ் ஏறி ஆறு ரூபாய் செலவழித்துப் பத்திரிகை அலுவலகத்திற்குப் படியேறும் அளவுக்கு இறங்கிவிட்டது இலக்கியத்தின் நிலமை. அது மட்டுமின்றி, என் கதையினில் சில அச்சுப் பிழைகளைக் கண்டேன், மனம் வருந்தினேன். எப்படி இருந்த பத்திரிகை!

இவ்வளவு நேரமும் நாராயணனின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முதல் வாடிக்கையாளர், எதிர்பாராத விதமாகத் தனது சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய்த் தாளொன்றை எடுத்துக் கடலை உருண்டை ஜாடியின் மூடி மீது வைத்து, “இந்தா. ஒரு கோல்டு பில்டர், ஒரு டீ, ஒரு பிஸ்கட்” என்று சொன்னவாறு பட்டர் பிஸ்கட் ஜாடியிலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்தார்.

எழுத்துக்களும் படங்களும் தம் இடத்திலிருந்து நகர்ந்தது போல் இரண்டாகத் தெரிகின்றன. எழுத்துக்களின் மை கையில் ஒட்டிக்கொள்கிறது. உங்கள் நகைச்சுவைத் துணுக்குகளைப் படித்தால் விரக்தி ஏற்படுகிறது. பேட்டிகள், கேள்வி-பதில் பகுதி, வாசகர் கடிதங்கள் ஆகியவை உங்கள் நிருபர்கள் எழுதியது போலிருக்கின்றன. கதைகளுக்கான சித்திரங்களில் மனிதர்களின் கைகளில் சிலவற்றில் நான்கு விரல்களும் வேறு பலவற்றில் 7 விரல்களும் இருக்கின்றன. கடைசிப் பக்கத்திற்குப் பிறகு எத்தனை பக்கங்களையோ காணவில்லை.

பூபதியின்பால் உள்ள மரியாதைக்காகவும் என் வளர்ச்சியில் அவர் ஆற்றிய பங்கிற்காகவுமே நான் உங்களுக்குச் சிறுகதை எழுதி அனுப்பினேன். எனக்கும் ஆயிரம் பணிகள் இருக்கின்றன. மகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். மகனுக்கு உயர்கல்வி அளிக்க வேண்டும். மனைவிக்கு நான் உயிர்நீத்த பின்னர் மறுமணம் செய்து வைக்க வேண்டும். இலக்கியம் படைத்துப் பல விருதுகள் பெற வேண்டும். தாம்பரம் போக ஜெமினியில் பஸ் ஏற வேண்டும். இங்கிருந்து நேரடி பஸ் இல்லை.

நாராயணன் அவர்தம் ஐந்து ரூபாயைக் கையிலெடுத்துக் காட்டி “என்ன? ஒரு சிகரெட்டு, ஒரு டீ, ஒரு பிஸ்கட் – மொத்தம் ஐந்து ஐம்பது. இன்னொரு ஐம்பது காசு எங்கே?” என்று எரிச்சலுடன் வினவினார். “நாளை தருகிறேன்” என்று சிகரெட்டுக்குக் கை நீட்டினார் முதலாமவர். “இதே வேலையாகப் போய்விட்டது உனக்கு” என்றபடி அவருக்கு சிகரெட்டை எடுத்துக் கொடுத்தார் நாராயணன். அன்புள்ள ஆசிரியருக்கு, இத்துடன் நாராயணன் எழுதிய தேனீர் ஒன்றை இணைத்திருக்கிறேன். இதைத் தங்கள் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டுகிறேன்.

Tags: , ,

2 Responses

  1. IMPAC-DUBLIN AWARDNo Gravatar says:

    Please continue writing and you may indeed write a readable story at-least in your sixteenth birth from now.

  2. பேயோன்No Gravatar says:

    இதுதான் எனது முதல் பிறவி என்று உங்களுக்கு யார் சொன்னது? பாலாஜியா? அந்த பெயரில்தான் எனக்கு யாரையும் தெரியாதே.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar