அந்த வெற்றுக் காகிதமே

in சிறுகதை, புனைவு

பேப்பர் வெயிட்டை ஞாபக மறதியாய் எடுத்ததே சாக்கென்று பறந்து போகிறது அந்த வெற்றுக் காகிதம். முழு வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஃபேனின் செல்வாக்கில் இருக்கும் என் அறை பூரா சுதந்திரமாய் அலைந்து திரிகிறது அந்த வெற்றுக் காகிதம். எல்லாம் ஃபேன் காற்றின் நட்பு கிடைத்த பெருமைதான். சும்மாவா, என் தலைமுடியையே கலைக்கிறதே இந்தஃப் ஃபேன் காற்று!

அலாக்காக உயரே பறந்து என் அந்தரங்க டைரி இருக்கும் அலமாரித் தட்டின் மேல் ஜம்மென்று அமர்கிறது அந்த வெற்றுக் காகிதம். ஏய் வெற்றுக் காகிதமே, என் அந்தரங்க வாழ்க்கை என்னுடையதே. அதில் நீ குறுக்கிட நான் ஒருபோதும் அனுமதியேன். உனக்கு எழுதப் படிக்கத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் என் காதலி எனக்கெழுதிய கடிதங்களை நீ மட்டுமல்ல, உன் அப்பன் வந்தாலும் தொட விட மாட்டேன்.

எத்தனை வெண்ணிற இரவுகளைத் தந்திருக்கின்றன அந்தக் கடிதங்கள்! அவற்றில்தான் எத்தனை உணர்ச்சிகள், சிணுங்கல்கள், கோபங்கள், அக்கறைகள்! ஆ…, எங்கே போயின அந்த நாட்கள்! அவள் மட்டும் இன்று இருந்திருந்தால் நீ வெற்றுக் காகிதமாகப் பறக்க நேரிட்டிருக்காது! இந்த அலமாரியில் பொழுதை வீணாக்குவதற்கு பதிலாக நீ அவள் கையில் தவழ்ந்திருப்பாய் – என் தயவுடன்.

ஆம், என் தயவின்றி அவளது ஆப்சன்மைண்டட் பார்வை கூட உனக்குக் கிடைக்காது. உன் மேல் நான் எழுதும் காதலின் மொழி உனக்குப் புரியாதெனினும் அவளது ஸ்பரிசத்தின் மொழி உனக்குப் புரியக்கூடும். நடக்காத ஒன்றைப் பற்றிப் பெருமூச்செறிந்தென்ன பயன், நீயே சொல்.

ஆஹா, இதையெல்லாம் கேட்டு திடீரென்று என் நம்பிக்கையைப் பெற்றுவிட்டதாகக் கனவு காணுகிறாய் அல்லவா நீ? நன்றாகக் கேட்டுக்கொள், நீ ஜெராக்ஸ் பேப்பராக (பிரீமியம் பாண்ட்) இருப்பதால்தான் உன்னை நண்பனுக்குக் கடிதம் எழுதப் பயன்படுத்தாமல் விட்டு வைத்திருக்கிறேன். 90 ரூபாயை வீசியெறிந்தால் உன்னைப் போல் 500 பேர் கிடைப்பார்கள் (09-03-2003 நிலவரப்படி).

நீ என் மேஜையில் கிடக்கும்போது கண்ணைக் கவர்வது, உன்னிடம் எல்லாம் இருக்கிறது என்பதால் அல்ல. உன்னிடம் எதுவுமே இல்லை என்பதால்தான். நீ பளிச்சென இருப்பது உன் வெறுமையால்தான்.

அதிர்ச்சியாக இருக்கிறதா? மேலும் சொல்கிறேன் கேள். முதலில் நீ எப்படி வந்தாய் என்னிடம்? ஏய், நில், எங்கே ஓடப் பார்க்கிறாய் ஜன்னல் வழியாக? கேள், உன் அப்பா, என் அப்பாவின் ஊட்டி எஸ்டேட்டில் சாதாரண கூலிக்காரனாக இருந்தார். அன்றாடங்காய்ச்சி அவர். உன்னையும் சேர்த்து அவருக்கு எட்டு பிள்ளைகள். கேரளாவில் பெரிய நிலச்சுவான்தாரராக இருந்த அவர், நில சீர்திருத்தங்கள் வந்த பிறகு ஓட்டாண்டியானார். என் அப்பாதான் பரிதாபப்பட்டு அவருக்கு வேலை போட்டுக் கொடுத்தார்.

பணம் இருக்கிற தெம்பில் குழந்தை பெற்றுத் தள்ளிய உன் தந்தையார், வறுமை வந்ததும் தான் பெற்ற மக்களில் பாதியைக் கூட விற்க முடியாமல் திணறினார். அரசாங்க வேலை பார்த்து வந்த பெண் சிசுவான உன் தங்கையைக் கொன்றதில் கிடைத்த ரூ. 10,000 அரசூழிய கருணைத் தொகையை மகள் இறந்த சோகத்தில் குடித்தே தீர்த்தார் உன் அப்பா!

அப்போதும் கூட உன் தந்தையை என் தந்தை வேலை நீக்கம் செய்யவில்லை. மிகப் பெரிதான உன் குடும்பத்திற்கு தினமும் அன்னதானம் நடத்தினார் என் அப்பா. இறந்து போன உன் தங்கை என் அப்பாவை மதியாமல் அவ்வன்னதானங்களைப் புறக்கணித்ததையும் மன்னித்தார் என் தந்தை. என்ன பெருந்தன்மை அவருடையது! யாரிடம் பார்க்க முடியும் இவ்வளவு நல்லதன்மையை? யாரய்யா அது நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் காந்தி படத்தை மாட்டியது? அதை எடுத்துவிட்டு, மாட்டுங்களய்யா என் அப்பாவின் படத்தை (கைதட்டல்).

உன் அம்மா சென்னைக்குச் சென்று செட்டில் ஆகி, வாழ்க்கையில் போராடி முன்னுக்குவரும் சுருக்கமான பெயரைக் கொண்ட பிராமணப் பெண்களைப் பற்றி நாவல் எழுத ஆரம்பித்துவிட்டாள். கார்கில் யுத்தத்தின்போது உன் சகோதரர்கள் எல்லோரும் ராணுவத்தில் சேர்ந்துவிட, எஞ்சியது நீ மட்டும்தான். குளிரில் விறைத்துப் போய் வீர மரணம் அடைந்தார்கள் உன் சகோதரர்கள். நீ என்ன செய்தாய் உன் தாய்நாட்டுக்கு, என் அலமாரியைக் குடைவதைத் தவிர? என் அலமாரியைக் குடைவதால் நாட்டுக்கு என்ன பிரயோஜனம்?

இப்போது காற்றை சாக்காக வைத்துக்கொண்டு சுவற்றோடு சுவராய் ஒட்டிக்கொள்கிறாய், என்னவோ பிரேம் செய்யப்பட்ட பட்டமேற்படிப்புச் சான்றிதழைப் போல. யாரைப் படிக்க வைத்தாய் நீ? உன் அப்பனே உங்களில் யாரையும் படிக்க வைக்கவில்லையே? உன் மேல் ஆங்கிலத்தில் எழுதிய சொற்களையாவது படிக்க முடியுமா உன்னால்? வேண்டுமானால் கண்ணாடியில் பார்த்துக்கொள், அப்போதும் முடியாது உன்னால். அது தலைகீழாகத் தெரிவதால் படிக்க முடியாது என்ற சமாளிப்புப் பேச்சையெல்லாம் என்னிடம் காட்டாதே, என் காதலியிடம் காட்டு. உனக்கெல்லாம் அவள்தான் சரிப்படுவாள்.

கூர்மையான ஓரங்களைக் கொண்ட வெற்றுக் காகிதமே, உன்னால் யாரையேனும் காயப்படுத்தவாவது முடிந்ததா? உன்னால் ஒரு பயனும் இல்லை. சிசுக் கொலையில் உயிரிழந்த உன் தங்கையை நான் திருமணம் செய்துகொண்டபோதுதான் உன்னை சீர்வரிசையில் ஒளித்து வைத்து என்னிடம் தள்ளினார்கள். இப்போது நீ என் அறையை உன் வீடாக நினைத்துக்கொண்டு இஷ்டப்படி சுற்றுகிறாய்.

என் மனைவியிடம் என் காதலியின் கடிதங்களை காட்டப் பார்க்கிறாயா நீ? அதற்காகத்தானே காற்றின் தோளில் ஏறி என் அந்தரங்க அலமாரியில் உட்கார்ந்தாய்? அறிவிலியே, பிரீமியம் பாண்ட் என்பதைத் தவிர உன்னால் உன் தங்கையிடம் எந்த உண்மையையும் சொல்ல முடியாது. என் காதலை ஒரு வெற்றுத் தாளின் தங்கையால் அழிக்க முடியாது. இந்தியா இன்னும் அந்தளவுக்குக் கெட்டுப் போய்விடவில்லை.

Tags: , ,

8 Responses

 1. ஒண்ணுமே புரியவில்லை. இதில் Zen தத்துவம் ஏதேனும் உள்ளதா?

 2. பேயோன்No Gravatar says:

  பினாத்தல் சுரேஷ்: நன்றி.

  விஜய்: இப்போதைக்கு இல்லை.

 3. வீ.புஷ்பராஜ்No Gravatar says:

  அருமை!

 4. பாளை ராஜாNo Gravatar says:

  பாஸ்..

  நீ பளிச்சென இருப்பது உன் வெறுமையால்தான்.

  யாரைப் படிக்க வைத்தாய் நீ?

  அருமையான வரிகள்..

  பல இடங்களில் புரியவில்லை.

  நன்றி

 5. எனக்கும் முதலில் புரியவில்லை. பிறகு அந்த காகிதமாகமே நான் மாறிய பின் தான் புரிந்தது.

 6. பேயோன்No Gravatar says:

  வீ. புஷ்பராஜ்: நன்றி.

  பாளை ராஜா: பல இடங்களில் மட்டும்தானா?

  மழையோன்: புரிந்தாற்சரி.

 7. //இதில் Zen தத்துவம் ஏதேனும் உள்ளதா? – இப்போதைக்கு இல்லை. // => சார் முடியல.. இது படு சூப்பரு…

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar