திசை காட்டிப் பறவை – 1

in புனைவு

அத்தியாயம் 1 – குமாரின் கதை

முன்னொரு காலத்தில் சென்னையில் சேல்ஸ் பிரிவில் குமார் என்பவன் வேலை பார்த்துவந்தான். குமார் தன் பெயருக்கேற்ப தங்கமானவனாக இருந்தான்.

இந்தக் கதை ஆரம்பித்தபோது குமாருக்கு 31 வயது. நடுவில் இரண்டாண்டுகள் நான் கதாசிரியத்தை நிறுத்தியிருந்தேன். கடன் தொல்லை. தங்கைகள் திருமணம். அப்பா, அம்மா பிக்கல் பிடுங்கல். கதை எழுதும் ஆர்வமே போய்விட்டது. முதல் தங்கையை ஒரு முன்வழுக்கைக்காரனுக்குக் கட்டிக் கொடுத்ததில் மனப்பாரம் தீர்ந்தது. அந்த நிம்மதி தந்த சந்தோஷத்தில் மீண்டும் எழுத நான் ஆரம்பித்தேன்.

இதற்கிடையில் எனக்கே தெரியாமல் குமாருக்கு 33 வயதாகிவிட்டிருந்தது. குமார் நாலு பேர் மதிக்கும்படியான சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தாலும் அவன் பார்வையில்லாத தனது தங்கைக்குத் திருமணம் செய்துவைக்கவும் தன் விதவைத் தாயை மேற்கொண்டு படிக்கவைக்கவும் அந்தச் சம்பளம் போதவில்லை.

இந்த சமயத்தில்தான் தெய்வாதீனமாக அவனுக்குத் தன்னுடைய அப்பாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவனது அப்பாவுக்கு குமாரின் தங்கமான குணம் பிடித்துப் போனது. அப்போது முதலாம் உலகப் போர் நடந்து முடிந்திருந்தது. ஹிட்லர் மெல்ல மெல்லப் பெரிய ஆளாகிக்கொண்டிருந்தான். கிழக்கு ஐரோப்பா முழுவதும் கம்யூனிசம் பரவிக்கொண்டிருந்தது. ஹிட்லர் தனது கட்சிக்காரர்களுடன் கொலோனில் பேரணி போகும் அதே நேரம் நான் அண்ணா சாலையில் தற்செயலாக சந்தித்த என் அலுவலக சகா சுப்பிரமணியத்திடம் ஒரு மரியாதைக்காக “சட்டை புதுசா?” என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

1920 வாக்கில் இந்தியா-பாகிஸ்தான் ஒரே நாடாக இருந்தது. அதனால் லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் அப்போது இந்தியாவில்தான் இருந்தார்கள். குமாரின் அப்பாவும் அவர்களில் ஒருவர். நல்ல செல்வந்தர், ஆனால் பாகிஸ்தானியர். அவருக்குப் பிடித்த ஒரே இந்து என்றால் அது குமார்தான்.

Tags: , ,

5 Responses

 1. ரியலி இண்ட்ரஸ்டிங்காத்தான் இருக்கும் அப்படிங்கற நம்பிக்கையில வந்துட்டேன் படிச்சுட்டேன்!

  //குமார் தன் பெயருக்கேற்ப தங்கமானவனாக இருந்தான்//

  முழுபேரு தங்க குமாரா? முழுபேரையும் சொன்னாத்தானே எங்களுக்கும் தங்கமான்னு புரிபடும்!

 2. சொல்லியது போலே செய்துவிட்டீர். உங்கள் தொடர் சேவை தொடரட்டும் :)

 3. பேயோன்No Gravatar says:

  ஆயில்யன்: காந்தி என்ற பெயர் இருந்தால்தான் நல்லவனாக இருக்க முடியுமா? குமார் என்று ஒருவர் தங்கமாக இருந்து, அவரைப் போல் இந்தக் குமார் தங்கமானவனாக இருக்க முடியாதா? அல்லது அதன் சாத்தியக்கூறுகளை பொதுவில் ஏற்க உங்கள் அரசியல் இடம்தரவில்லையா?

 4. ஆயில்யனுக்கு பேயோனின் மறுமொழி அவரது பேயோன்-ID யை யாரோ அபேஸ் செய்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.

 5. //விதவைத் தாயை மேற்கொண்டு படிக்கவைக்கவும் அந்தச் சம்பளம் போதவில்லை.//
  வெப் உலகம் முத்து குமாருக்கு மிகவும் பிடித்த வரிகள் ;-) எனக்கும் ;-)

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar