திசை காட்டிப் பறவை – 2

in புனைவு

அத்தியாயம் 2 – அப்பாவின் நண்பர்

வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. பேப்பரையும் பேனாவையும் கீழே வைத்துவிட்டு கதவைத் திறக்கப் போனேன். வாசலில் நிழலாடியது. ஏறிட்டுப் பார்த்தால் வந்தவர் அப்பாவின் நண்பர்.

“அப்பா இருக்காரா?” என்றார் அப்பாவின் நண்பர்.

“இருக்கிறார், உள்ளே வாருங்கள்” என்று அவருக்கு ஒரு நாற்காலியையும் ஃபேனையும் போட்டுவிட்டுப் பக்கத்து அறைக்குப் போனேன்.

“அப்பா, உங்களைப் பார்க்க உங்கள் நண்பர் ஒருவர் வந்திருக்கிறார்” என்று அப்பாவிடம் சொன்னேன்.

“யாரு?” என்றார் அப்பா. அப்பாவுக்குப் பல நண்பர்கள்.

“அப்பாவின் நண்பர்” என்றேன்.

அப்பா கூடத்திற்கு வந்து அப்பாவின் நண்பருக்கு வணக்கம் சொன்னார். நான் என் அறை வாசலில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தேன். அப்போது என் அறையில் யாராவது இருந்திருந்தால் அவர்களுக்கு வாசலில் நிழலாடியிருக்கும். திரும்பிப் பார்த்தேன். இவை ஒன்றுமே நடக்காதது போல் உள்ளே நான் மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தேன்.

அப்பாவின் நண்பர் ரொம்ப சத்தமாகப் பேசக்கூடியவர். அவர்களது சம்பாஷணை கதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாதே என்று என் அறைக் கதவை சாத்தினேன்.

“ஏண்டா கதவை மூடுறே?” என்றார் அப்பாவின் நண்பர்.

“நான் உள்ளே கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். கதை எழுதும்போது எனக்கு முழுமையான நிசப்தம் தேவை” என்றேன்.

வெள்ளையர்கள் இந்தியாவுக்குக் கொண்டுவந்த பண்டங்களையும் நெவ்ஸ்கி தெருவில் கிழவன் பெல்யூக்கின் விற்றுவந்த பொருட்களையும் ஒப்பிட்டுக் காரசாரமாக அவர்கள் நடத்திக்கொண்டிருந்த உரையாடல் உள்ளே கதை எழுதிக்கொண்டிருக்கும் என் கவனத்தைக் கலைத்துவிடக் கூடாதே என்ற எனது ஆதங்கம் அவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை.

நடுவில் நான் வெளியே வந்து என்னிடம் பேனா இரவல் வாங்கிக்கொண்டு போனேன். என்னிடம் எனக்குப் பிடிக்காத விஷயம் இதுதான். தீவிர எழுத்தாளனாக இருந்துகொண்டு எப்போதும் ஒரு பேனாவைக் கையில் வைத்திருக்காவிட்டால் அப்புறம் என்ன எழுத்தாளன்? இதை விளக்கினால் எனக்குப் புரியப் போவதில்லை.

Tags: , ,

3 Responses

 1. உமது வாசகன்No Gravatar says:

  தமிழ் நாட்டில் இந்த வருடக் கோடையின் வெயிலின் உக்கிரத்தை இந்த அத்தியாயம் தெளிவாக்கியது.
  இப்படிக்கு
  -பேயோன் பேரவையின் பிராதன மெம்பெர்.

 2. பேயோன்No Gravatar says:

  நன்றி. வெயில் மழை பனிப்புயல் எல்லாம் பார்க்காமல் எழுதுவதுதானே எழுத்தாளனின் வேலை, பொறுப்பு, தொழில் எல்லாம்.

 3. பாளை ராஜாNo Gravatar says:

  ” இதை விளக்கினால் எனக்குப் புரியப் போவதில்லை ”

  என்பது தெளிவாக புரிந்தது. அப்படிச் சொல்லும்போது இப்புனைவு புரியவில்லை என்று அர்த்தம் இல்லை..

  புரிய வாய்ப்பில்லை என்பது தான் சரி..

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar