திசை காட்டிப் பறவை – 4

in புனைவு

அத்தியாயம் 4 – 1860, ரஷ்யா

அதிகாலை, மாஸ்கோ. பனி மறைத்த நெக்ரசோவ் சாலையில் த்ரோய்க்கா ஒன்று மெல்ல அசைந்து வந்தது. இவான் வசீலியெவிச் புகையிலைக் கடை முன்பு நின்றது. தடித்த மேற்கோட்டு அணிந்த ஒரு சீமான் தனது கோட்டுப் பையிலிருந்து சில நாணயங்களை எடுத்தார். வண்டிக்காரனிடம் ஒரு கோப்பெக்கு கொடுத்தார்.

“ஐயா…” என்று இழுத்தான் வண்டிக்காரன்.

“நெவ்ஸ்கியிலிருந்து நெக்ரசோவுக்கு வர ஒரு கோப்பெக்கிற்கு மேல் ஆகாது” என்றார் அந்த சீமான்.

“நீங்கள் சொல்வது சரிதான் ஐயா, ஆனால் நான் மீண்டும் அவ்வளவு தொலைவு காலியாகப் போக வேண்டும்” என்றான் வண்டிக்காரன்.

“அதற்கு நான் என்ன செய்ய?” என்று கேட்டுவிட்டு நகர்ந்தார் அந்த சீமான். குதிரையை சாட்டையால் அடித்துக் கிளப்பினான் வண்டிக்காரன். அந்தச் சீமான் நமது குமார்தான்.

இவான் வசீலியெவிச் அன்றும் அதிகாலையிலேயே கடையைத் திறந்திருந்தார்.

“வாருங்கள் குமார் வாங்-ஃபெய்-ஹுங்கொவிச், இப்போதெல்லாம் உங்களைப் பார்க்க முடிவதில்லையே?” என்றார் இவான் வசீலியெவிச்.

குமார் எப்போதாவதுதான் பண வசதி படைத்த ரஷ்ய சீமானாக வருகிறான். எனவே அவனுக்கு இந்த முறை மரியாதை கொடுங்கள். குமாரை அவன் என்று சொல்லாமல் அவர் என்று அழைப்போம். தயவுசெய்து ஒத்துழையுங்கள்.

“தொழில் நிமித்தமாக பீட்டர்ஸ்பர்க் சென்றிருந்தேன். அங்கிருந்து வோல்கோகிராடுக்குப் போய்விட்டு வருகிறேன். வீட்டில் அனைவரும் நலமா?” என்று விசாரித்தார் குமார்.

“வீடு நன்றாகத்தான் இருக்கிறது. நாட்டைப் பற்றிக் கேளுங்கள்” என்றார் இவான் வசீலியெவிச்.

“போல்ஷெவிக்குகளைப் பற்றித்தானே சொல்கிறீர்கள்?” என்ற குமார், இவான் வசீலியெவிச்சிடம் கையை நீட்டினார்.

“ஐயய்யோ, அவர்களைப் பற்றிச் சொல்லி மாளாது குமார் வாங்-ஃபெய்-ஹுங்கோவிச்” என்றபடி நீட்டப்பட்ட கையில் ஒருசிறு புகையிலைப் பொட்டலத்தை வைத்தார் இவான் வசீலியெவிச்.

“அப்பா, உங்களுக்கு வென்னீர் தயாராகிவிட்டது” என்ற 17 ஆண்டுகள் நிரம்பிய இனிய குரல் ஒன்றைக் கேட்டுத் திரும்பினார் குமார். அது காத்தரினா வசீலியெவ்னாவின் குரல்தான்.

“என்ன கத்யா, என்னிடம் பாராமுகம் காட்டுகிறாய்? காத்தரினா குமாரோவா என்று பெயர் வாங்கும் ஆசையில்லையா?” என்றார் குமார்.

“போங்கள் குமார் வாங்-ஃபெய்-ஹுங்கோவிச், உங்களுக்கு எப்போதும் விளையாட்டுதான்” என்று சிணுங்கினாள் கத்யா.

“விளையாடத்தான் எனக்கு அனுமதி கிடைப்பதில்லையே கத்யா!” என்றார் குமார். ஆயிரம் கோப்பெக்குகளை தரையில் வீசியது போல் சிரித்துக்கொண்டு ஓடிப்போனாள் கத்யா.

இவான் வசீலியெவிச்சின் முகம் சுருங்கியிருந்தது. “குமார் வாங்-ஃபெய்-ஹுங்கோவிச், நான் சொல்வதைத் தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள். கத்யாவிடம் நீங்கள் பேசும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. சின்னப் பெண் அவள்” என்றார் இவான் வசீலியெவிச்.

குமார் செருமி நகைத்தார். “பயப்படாதீர்கள் இவான் வசீலியெவிச், ரஷ்யாவில் அப்படியெல்லாம் விபரீதமாக ஒன்றும் நடந்துவிடாது” என்றார் அவர். “நான் ஒரு இதற்காகத்தான் அவளிடம் அப்படிப் பேசுகிறேன். கத்யாவுக்கு நிஜமான ஆபத்து போல்ஷெவிக்குகளால் நேராத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.”

அதிர்ந்துபோனார் இவான் வசீலியெவிச். “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் குமார் வாங்-ஃபெய்-ஹுங்கோவிச்?”

“ஆமாம் இவான் வசீலியெவிச், நேற்று மீர் பூங்காவில் கத்யாவை அந்த முரடன் பாவலின் தம்பியுடன் பார்த்தேன்” என்றார் குமார்.

“மித்யாவுடனா?” அதிர்ச்சியில் எழுந்து நின்றேவிட்டார் இவான் வசீலியெவிச்.

ஆம், கத்யா போல்ஷெவிக் தலைவர்களில் ஒருவனான பாவல் பெத்ரோவிச்சின் தம்பி திமித்ரியுடன் சுற்றுவதை குமார் இவான் வசீலியெவிச்சிடம் தெரிவித்தார். பின்னாளில் இவரைப் போன்ற பல ஏழை எளியோர் கொடுமைக்கார ஜார் மன்னராட்சியை எதிர்த்துப் போராடவும் வழிவகுத்தார் குமார். 1917ல் ஏற்பட்ட அக்டோபர் புரட்சி, ரஷ்யாவுக்குக் குமார் போட்ட பிச்சை.

Tags: , , ,

3 Responses

  1. நான் ஒரு இதற்காகத்தான் அவளிடம் அப்படிப் பேசுகிறேன். கத்யாவுக்கு நிஜமான ஆபத்து போல்ஷெவிக்குகளால் நேராத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்///
    கதையின் முன் முதல் திருப்பம். பெண்களுக்கு தான் எத்தனை பிரச்சனைகள். குமார் தான் காப்பாற்ற வேண்டும்.

  2. dagaltiNo Gravatar says:

    பேராசான் ஆலென் மார்டினோவிச் க்யொனிக்ஸ்பெர்க்கின் ‘காதலும் மரணமும்’ பெருங்காப்பியத்தை நினைவூட்டுகிறது இவ்வத்தியாயம்.

  3. பேயோன்No Gravatar says:

    டகால்ட்டி: சார், நான் அந்த படத்தை பார்த்ததில்லை. அவமானம்தான், இருந்தும் பார்த்ததில்லை. ஆனி ஹாலுக்கு பிந்தைய படங்களைத்தான் பார்த்துள்ளேன்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar