திசை காட்டிப் பறவை – 5

in புனைவு

அத்தியாயம் 5 – இரவின் மடியில் குமார்

மொட்டை மாடியில் நின்று வானத்தைப் பார்க்கிறேன். எண்ணிலடங்காத நட்சத்திரங்கள். ஆகாய விருட்சத்தில் பூத்த விண்மலர்கள். விமானங்கள் தாழப் பறக்கும் தேனீக்கள். சுதந்திரம் கிடைத்து 52 வருடங்கள் ஆகிவிட்டதை இன்று வரை என்னால் நம்ப முடியவில்லை. சுதந்திரம் இந்த நட்சத்திரங்களைப் போல உண்மையானதுதானா? அல்லது இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்துப் பின்னோக்கிப் பார்த்தால்தான் அது கண்ணில் படுமா?

யாருக்குத் தெரியும்? தனியொரு மனிதனைத் தனியே தவிக்க விடாத இரக்கமற்ற மனிதாபிமான சமூகம் இது. இதில் சுதந்திரத்தை எங்கே எதிர்பார்க்க முடியும்? நிச்சயமாக நான் வாழும் தெருவில் முடியாது. மனிதத்தன்மையால் இதயம் மரத்துப் போன மாக்கள் இவர்கள். பேசாதீர்கள்! உங்கள் குரலுக்கு இடமில்லை என் செவியில்!

அக சிந்தனையில் சிக்கி வானை ஒரு கணம் மறந்த என் வெட்கத்தைக் கண்டு வியக்கிறது நிலா! மேகத் துயில் விலகிக் கண் விழித்துவிட்டாள் நிலாப் பெண். அவளைப் பொறுத்த வரை அலுப்பில்லாமல் அவளை ரசிக்கும் நானும் ஒன்றுதான், இன்று செய்தித் தாள் ஒன்றில் ஒரு பத்தி பேட்டியளித்த அறநிலையத் துறை ஆணையாளரும் ஒன்றுதான்.

இரவு தினமும் வருகிறது மெனக்கெட்டு, சாப்பாட்டு நேரத்தில் பார்க்க வரும் நண்பனைப் போல.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar