திசை காட்டிப் பறவை – 8

in புனைவு

அத்தியாயம் 8 – நிழல்

இந்த நாவலைப் படித்துவிட்டுப் பல வாசகர்கள் மின்னஞ்சலிலும் தொ.பேசியிலும் கடிதங்களிலும் என்னிடம் இரண்டு கேள்வி கேட்டார்கள். 1) குமாருக்கு நிழல் உண்டா? 2) குமாருக்கு நிழல் உண்டா? முதல் கேள்வி இரண்டாவது கேள்வியின் நிழல்தான். (கேட்டவர்கள் பார்வைரீதியாக சவால்விடப்பட்டவர்கள் என்பது எனது யூகம். ஏனெனில் பிரெய்லியில்தான் நிழல் வரும், அச்சில் வராது.)

குமார் ஒரு கருத்தாக்கம் (concept). எனவே குமாருக்கு நிழல் உண்டா என்ற கேள்விக்கு இந்த அமர்வின் இறுதியிலோ அல்லது வேறொரு குமார்சாரா நாவலிலோ பதில் சொல்கிறேன். இப்போதைக்கு ஒரு மறைமுக பதிலை மட்டும் தருகிறேன்.

குமார்-ன் நிழல் குமார்-ன் நிழலை விடப் பெரியது.

நிழலோடு
(ஒரு உப அத்தியாயம்)

நாம் நம் நிழலாகப் பிறந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் குமாரை அவ்வப்போது வாட்டும். தன் நிழலானது மனித எச்சில், மிருகக் கழிவுகள், சாக்கடை திரவப் போக்குகள், அசுத்தக் குட்டைகள், குப்பை, சேறு, தூசு, மண் மீதெல்லாம் தேய்ந்து, புரண்டு, இடித்து, உரசியும் சுத்தமாக இருப்பதைக் குமார் பொறாமையோடு பார்ப்பதுண்டு. உண்மையில் அந்த ஏக்கம், பொறாமைப் பார்வை அனைத்துமே மேற்கண்ட கிடைமட்டப் பட்டியலில் தினந்தினம் பாதிக்கப்படும் குமாரின் காலுக்கு உரியவைதான். ஆனால் குமாரின் கால் குமாரில் ஒரு பகுதிதானே. அதற்கென்று தனி நிழலா இருக்கிறது?

குமாருக்கு ஏட்டளவிலாவது நிழல் உண்டு என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஏட்டு நிழலை ஏற்காதவர்களுக்கு ஒரு கேள்வி – நான் ஏட்டில் இல்லை, அதற்கு வெளியில்தான் இருக்கிறேன்; எனக்கு நிழல் உண்டா? எனக்கு நிழல் உண்டா என்று கேட்பதற்கு முன் நான் யார் என்று யோசிப்பது அவசியம். நான் யார்? “யார்” என்பது “நான்”-இன் நிழலேயாம்.

Tags: , , ,

2 Responses

  1. HariNo Gravatar says:

    மார்க்வெஸுக்கு நிழல் உண்டா?

    • பேயோன்No Gravatar says:

      ஹரி: இருந்தால் போயிற்று. இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar