திசை காட்டிப் பறவை – 9

in புனைவு

அத்தியாயம் 9 – காலமும் கதாபாத்திரமும்

எல்லா நல்லவர்களிடமும் கட்டாயமாக ஒரு கெட்ட குணம் இருந்தே தீரும். குமாரிடம் பிடிவாதம் ஒரு பெருந்தொல்லையாக இருந்தது.

கதை ஆரம்பிக்கும்போது அவனுக்கு 33 வயது. இடையில் பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் இப்போதும் அவன் வயது அதிகரிக்காமல் 33-ஆகவே இருக்கிறது. நானும் அவனிடம் பல தடவை சொல்லிப் பார்த்துவிட்டேன். சமூக விரோதி ஆகிவிடாதே என்று தார்மீகமாக பயமுறுத்தியும் பார்த்திருக்கிறேன். காலம் கூட பதில் சொல்ல முடியாது போலிருக்கிறது. காரணம், அவன் காலத்திற்கு ஒத்துழைக்க மறுக்கிறான்.

ஒரு கற்பனைப் பாத்திரத்திற்கு ஏன் வயது ஏறிக்கொண்டே போக வேண்டும் என்பது அவன் வாதம். ஆனால் அவன் நிஜ வாழ்க்கையில் மட்டும் என்ன கிழித்துவிட்டான்? அப்போதும் 33தான், இப்போதும் 33தான். நிஜ வாழ்க்கைக் குமார் மூலமாக அவனைத் திருத்தலாம் என்று எண்ணி அவனைத் தொடர்பு கொண்டேன். அவன் வீடும் இவன் வீடும் பக்கத்துப் பக்கத்தில் இருக்கிறது. அவன் வீட்டு எண் 46 என்றால் இவன் வீட்டு எண் 46, அவ்வளவு பக்கம்.

ஒரு எட்டு போய் குமாருக்கு அறிவுரை சொல்லிவிட்டு வாயேன் என்று அவனிடம் சொன்னேன். அவனும் இந்தா போகிறேன் என்றுவிட்டு கையில் ஒரு பிள்ளையார் கோவிலை வைத்துக்கொண்டு விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருக்கிறான்.

அவனுக்கு வயது ஏறினால்தானே மற்ற கதாபாத்திரங்களுக்கும் வயது ஏறும்? இப்படிச் சற்றும் பொறுப்பில்லாமல் திரிகிறான் குமார். நிஜ வாழ்க்கையில் அவன் தானுண்டு தன் வயது உண்டு என்று இருந்தாலும் கதையில் வரும் குமாருக்கு அறிவுரை சொல்லும் தகுதி அவனுக்கு இல்லாமல் போய்விட்டது.

Tags: , ,

2 Responses

  1. மானஸ்தன்No Gravatar says:

    குமாருக்கு வயசு ஏறுதோ இல்லையோ. பேயோன் பேரவையின் மெம்பரான எனக்கு இந்தத் தொடரைப் படிச்சு BP ஏறிவிட்டது. எப்ப முடிப்பீங்க?

  2. பேயோன்No Gravatar says:

    மானஸ்தன்: மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள். நாளொரு அத்தியாயமாக வெளியிடுவதால் இன்னும் பத்து நாட்களில் முடியும். இயற்கையுடன் இயைந்த வாழ்க்கைமுறை பற்றிய எனது பத்தியில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி ரத்த அழுத்தத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar