திசை காட்டிப் பறவை – 11

in புனைவு

அத்தியாயம் 11 – பாலிய காலத்துப் படிமங்கள்

இன்று காலை பால் வாங்கப் போனபோது என் பாலிய கால ஆசிரியர் ஒருவரைப் பார்த்தேன். ஓவிய ஆசிரியர்தான். காரட், பாகற்காய், தக்காளி, கத்தரிக்காய் எல்லாம் அழகழகாக வரைவார் –

காரட் பார்த்திருக்கிறீர்களா? பாலியத்தில் நான் படித்த படக் கதைகளில் முயல்கள் காரட்டை லூசு மாதிரி தின்றுகொண்டிருக்கும். கண்ணுக்கு நல்லதுதான், இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக இப்படியா?! ஒரு படக் கதையை குறைந்தது அரை லட்சம் பிரதிகள் அச்சடித்திருப்பார்கள். அத்தனைப் பிரதிகளிலும் காரட் சாப்பிட்டால் வயிறு என்னத்துக்கு ஆகும்? அதனால்தான் கடைசியில் ஆமை ஜெயித்துவிட்டது.

பாகற்காயோ அபரிமிதக் கசப்பு. டினோசாரின் முதுகு போன்ற அதன் மேனியினுடைய முரட்டுத்தனமே அதனுடைய ருசியைக் கட்டியம் கூறுகிறது. என் தாயார் அதில் கறி செய்யும்போதெல்லாம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார். இப்போது வேறு மாதிரி செய்திருக்கிறேன், கசக்காது என்பார். தின்று பார்த்தால் கசப்பு மாறாமல் முகஞ்சுளிக்க வைக்கும். சீ கசப்பு என்றால், அதன் சுவையே கசப்புதான், கசப்பும் ஒரு சுவைதானே என்பார். இது எப்படி இருக்கு?

அடுத்து என்ன? காரட். இல்லை, அதை முதலிலேயே சொல்லிவிட்டேன். இப்போது தக்காளி. இப்பழமானது புற்றுநோயைத் தடுக்கும் என்று கேள்வி. உண்மையில் தடுக்குமா என்பதுதான் கேள்வி. தடுக்கும் என்பது பதில்.

கத்தரிக்காயைப் பற்றிப் பேச நான் பணிபுரியும் நிறுவனம் அனுமதிக்காது. ஆகவே வாசகர்களே, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

Tags: , , ,

6 Responses

 1. பாளை ராஜாNo Gravatar says:

  வணக்கம் குருவே !..

  கடைசியில் ஆமை ஜெயித்துவிட்டது.

  நல்ல விளக்கம்…

 2. தினேஷ்No Gravatar says:

  நானும் ஒவ்வொரு தடவையும் நீங்க எழுதுறது புரிஞ்சிடும்னு பாக்குறேன். ம்ஹூம்… மாட்டேன் தான் என்கிறது. அதனால எனக்கு தான் அந்த பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்…

 3. பேயோன்No Gravatar says:

  தினேஷ்: புரிவதற்கு இதில் ஒன்றுமில்லை. ஆனால் இது இப்போதைக்கு உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை போல.

 4. salamNo Gravatar says:

  பதில் எழுத ஆசை …ஆனால் என்ன எழுதுவது என்று தெரியாததால் இதையே என் பதிலாக எடுத்துகொள்ளவும்

 5. பேயோன்No Gravatar says:

  சலாம்: உலகில் ஒவ்வொரு படைப்பும் இன்னொரு படைப்புக்கான பதில்தான்.

 6. salamNo Gravatar says:

  //உலகில் ஒவ்வொரு படைப்பும் இன்னொரு படைப்புக்கான பதில்தான்//

  இதைதான் “பதிலுக்கு பதில்” என்கிறார்களோ

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar