திசை காட்டிப் பறவை – 13

in புனைவு

அத்தியாயம் 13 – அன்னியன் பிரவேசம்

இந்த நாவலை எழுதுவது குமார் அல்ல என்று சொன்னது யாருக்கோ பிடிக்கவில்லை போலிருக்கிறது. யாரோ என் அலுவலகத்திற்கு ஃபோன் செய்து என் மேலதிகாரியிடம் பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

நல்ல வேளையாக ரிசப்ஷனிஸ்ட் என் வாசகி. அவள் சட்டென்று சுதாரித்துக்கொண்டு நீங்கள் யார் என்று கேட்டிருக்கிறாள். ஃபோன் செய்தவன் குமார் என்று சொல்லியிருக்கிறான். மேலதிகாரி வெளியூர் போயிருப்பதான பொய்யைச் சொல்லிவிட்டு என்னைக் காப்பாற்றிவிட்டாள் ரிசப்ஷனிஸ்ட். வாழ்க அவள்.

அவள் கொடுத்த தகவலின்படி அது எனது குமார் அல்ல. 10 பாயிண்ட் சைஸ் எழுத்துருக் குரலில் அவன் பேசியிருக்கிறான். நான் எழுதுகிற பத்திரிகையில் பயன்படுத்தப்படுவதோ 8.5. இவன் வேறு ஏதோ கதையைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும். அவன் பெயரும் குமாராக இருந்ததால் போன அத்தியாயத்தைப் படித்துவிட்டுத் தப்பெண்ணம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

வீட்டிற்குப் போய் முதல் வேலையாக மேஜை மேல் இருந்த பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தேன். ஒரு பத்திரிகைக் கதையில் குமார் என்றொரு கதாபாத்திரம் தென்பட்டான். கையில் மங்கையர் மலரை வைத்துக்கொண்டிருந்தவாறு புத்தகத்தில் இருந்த அவனிடம் இவ்வாறு கூறினேன்:

“தம்பி, நீ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். நான் எழுதியது வேறொரு குமார் பற்றி. நடந்தது போகட்டும். இனியாவது என் வழியில் குறுக்கிடாமல் இரு.”

நான் சற்றும் எதிர்பாராத வகையில் குமார் தடாலென்று என் காலடியில் விழுந்தான். “ஐயா, என்னை மன்னித்துவிடுஙகள்!” என நா தழுதழுத்தான். “என் ஆசிரியர் என்னைப் புழுவைவிடக் கேவலமாக நடத்துகிறார். நான் உங்கள் குமார் போல நடித்தால் நீங்கள் ஏமார்ந்து போய் எனக்கு சுவராசியமான சம்பவங்களும் இடங்களும் தருவீர்கள் என ஆசைப்பட்டேன். நான் பணிபுரியும்  கதையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து இருந்து அலுத்துவிட்டது” என்றான் வேற்றுக் குமார்.

அவன் பேச்சைக் கேட்கக் கேட்க எனது கழிவிரக்கமும் அதிகரித்துக்கொண்டே வந்தது. அவனும் என் கதாபாத்திரமாக இருந்தால் இருவரையும் இணைத்து ஒரு கதாபாத்திரமாக்கிவிடலாம். ஆனால் இவன் இன்னொருவனுடைய ஆள். எழுத்துலக தார்மீக நெறிகளை மதியாமல் இருவரையும் இணைத்துவிட்டால் நாளைக்குப் பிரச்சினை ஏற்படும். இன்றைக்கே ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. நான் இதைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.

Tags: , ,

9 Responses

 1. குமார்களின்மீதான தங்கள் பாசமும் நேசமும் தந்தைத்துவமும் பிரமிக்க வைக்கிறது!

 2. பேயோன்No Gravatar says:

  கதைசொல்லியையும் ஆசிரியனையும் குழப்பிக்கொள்ளாதீர்கள் சார்!

 3. பாராNo Gravatar says:

  //10 பாயிண்ட் சைஸ் எழுத்துருக் குரலில் அவன் பேசியிருக்கிறான். நான் எழுதுகிற பத்திரிகையில் பயன்படுத்தப்படுவதோ 8.5. இவன் வேறு ஏதோ கதையைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும்.// பிரமித்தேன்!

 4. பாளை ராஜாNo Gravatar says:

  எழுத்துலக தார்மீக நெறிகளை //

  வணக்கம் குருவே !..

  தாங்கள் இதையெல்லாம் கடந்தவர் தானே ?!!!

 5. யாரோ குமாருக்கு கழிவிரக்கம் காட்டி கதையில் நல்ல நல்ல சுவாரஸ்யமான சம்பவங்கள் தருவதற்கு நாங்கள் இருக்கிறோமே க்யூ கட்டி….! :)

 6. NSRNo Gravatar says:

  அதக்களம் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்க ரகளைக்கு அளவே கிடையாதா?

 7. பேயோன்No Gravatar says:

  சாத்தியங்கள், சாத்தியங்கள்….

 8. dagaltiNo Gravatar says:

  //எனக்கு சுவராசியமான சம்பவங்களும் இடங்களும் தருவீர்கள்//

  எதை வைத்து அக்குமார் இந்நம்பிக்கை கொண்டாரென்று தெரியவில்லை. முதல் அத்தியாயம் தொடங்கி படித்துக்கொண்டு வருகிறேன் இதுவரை குமாரசம்பவம் எதுவும் நிகழவில்லையே.

 9. பேயோன்No Gravatar says:

  டகால்ட்டி: கதைசொல்லிக்கு இது தேவைதான்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar