திசை காட்டிப் பறவை – 16

in புனைவு

அத்தியாயம் 16 – கலியாண காலம்

ஜுரத்தின் அறிகுறிகளான தேக உஷ்ணாதிக்கம், தலைவலி, வெப்பமும் குளிரும் மாறி மாறி வருதல்-யாவும் ஜுரவிஷங்கள் நரம்புகளையும் தசை நார்களையும் தாக்குவதால்தான். நீங்கள் சோர்வடைவதோடு, உங்கள் ஜீர்ண சக்தியும் பலஹீனமடைகிறது. ஆனால் தேகத்தை சீர்படுத்த போஷணம் வேண்டுமே! ஹார்லிக்ஸே அதற்குத் தகுந்ததென டாக்டர்கள் அறிந்திருக்கிறார்கள். அது லகுவான ஆகாரம். எளிதில் ஜீர்ணமாகும். உடம்பிற்கு வலுவூட்டி சீக்கிரம் தேற்றுகிறது. முக்கிய ஆஸ்பத்திரிகளிலும் அதை ஜுரநோய்களுக்கு பத்திய உணவாக ஆதரித்து வருகின்றனர்.

* * *

பாகீரதி அத்தை ஊரிலிருந்து வந்தால் வீடு கல்யாண சத்திரம் மாதிரி களைகட்டிவிடும். அதுவும் முகுந்தன் மாமா ‘பாகீ, பாகீ’ என்று காலையில் கத்த ஆரம்பித்தால் இருட்டும் வரை அங்கே வேறு சப்தம் கேட்காது.

குமாரின் அம்மா அதைக் காண்பித்து அகமுடையானிடம் புலம்புவாள். “உங்கள் அத்திம்பேரைப் பாருங்கள், பெண்டாட்டியை எவ்வளவு பிரியமாகக் கூப்பிடுகிறார். நீங்களும் இருக்கிறீர்களே, ஏய், ஏய் என்று வேலைக்காரி மாதிரி” என்பாள்.

உடனே குமாரின் அப்பா ழர்த்தி, “உன்னை ராதை என்று கூப்பிடாமல் ரா, ரா என்றா கூப்பிடுவார்கள், தெலுங்குக்காராள் போல” என்று க்வதர்க்கம் பேசி அவள் வாயை அடக்கிவிடுவார்.

குமார் காலேஜ் முடிந்து பிரம்மராக்ஷஸ் துரத்துவது மாதிரி ஓடி வந்தான். எல்லாம் கோதையைப் பார்க்கிற ஆவல்தான்! கோதை மேல் அவனுக்கு ஒரு தனி பிரேமை. குமார் அவளைப் பார்த்து ஏறத்தாழ ஒரு வருஷம் ஆகியிருக்கும். தன்னை அவள் மறந்திருப்பாளோ என்ற ஸந்தேகம் அவன் மனதில் கிலேசத்தை உண்டுபண்ணியது வாஸ்தவந்தான். அதனாலென்ன, அவள் இன்னும் இருபது நாள் இருக்கப்போகிறாள், அவளுக்கு நம்மை ஞாபகப்படுத்தி விட அந்த அவகாஸம் யதேஷ்டம் என்று எண்ணிக்கொண்டான் குமார்.

வீட்டிற்குள் நுழைகிறபோதே ஜன்னலண்டை கோதையின் நீலோத்பல வதனம் தெரிகிறதா என்று ஓரக்கண்ணால் பார்த்தான் குமார். பாட்டிதான் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு இவனைப் பார்த்து “வாடாப்பா” என்றாள். கோதை அடுக்களையில் இருப்பாள் போலும் என்று குமார் தன்னை ஸமாதானப்படுத்திக்கொண்டான்.

முகுந்தன் மாமா குமாரைப் பார்த்ததுதான் தாமதம், “பாகீ, உன் மருமான் வந்திருக்கிறான் பார்” என்று பின்னால் திரும்பி சத்தமிட்டார். பாகீரதி அத்தை வாயெல்லாம் பல்லாக “வாடா, பள்ளிக்கூடம் முடிந்துவிட்டதா?” என்றாள்.

குமாருக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. “அத்தே, நான் காலேஜ் ரெண்டாம் வருஷம் படிக்கிறேன்” என்றான் அவன்.

“இந்த காலத்துப் பிள்ளைகள் விசுக்கென்று வளர்ந்துவிடுகிறதுகள்” என்றாள் பாகீரதி அத்தை.

“பாகீரதி, கோதைக்குட்டிக்கு என்ன வயஸாகிறது இப்போது?” என்றார் ழர்த்தி.

“மாசி வந்தால் பதினாறாகிறது. சின்னப் பெண்தானே” என்றாள் அத்தை.

“நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய். கலியாணம் பண்ணி வைத்திருந்தால் அவளுக்கு என் வயசில் ஒரு வாரிஸு இருக்கும்! ஹஹஹ!” என்று வீடே கிடுகிடுக்கும்படி சிரித்தார் முகுந்தன் மாமா.

கோதை இவனைப் பார்த்துப் பழிப்பு காட்டிவிட்டுத் தோட்டத்திற்கு ஓடிப்போனாள். குமாரின் மனஸும் கூடவே போனது.

“கொஞ்சம் கேலி பேஸாமல் இருங்களேன்” என்று கோபித்த அத்தை, “குமாருக்குப் பதிநேழு இருக்குமா?” என கேட்டாள்.

“பாகீ, உன் மனதிலிருப்பது எனக்குப் புரிகிறது. பயல் முதலில் கல்லூரியை முடிக்கட்டும். பிறகு என் ஆபீஸிலேயே அவனுக்கு ஒரு வேலை போட்டுத் தரலாமென்றிருக்கிறேன்” என்றார் ழர்த்தி.

“எதற்கும் கோதையை ஒருவார்த்தை கேட்டுவிடலாமே?” என்றாள் குமாரின் அம்மா.

“அதற்கு அவசியமே இல்லை. நாம் செய்யாவிட்டால் அவர்களே செய்துகொண்டுவிடுவார்கள். அதுவும் இந்துஸ்தான் லீவரில் உத்தியோகப் பார்க்கிற அகமுடையான் என்றால் எந்தப் பெண்ணுக்குக் கசக்கும்?” என்றார் ழர்த்தி.

அதை ஆமோதிப்பது போல முகுந்தன் மாமாவும் “ஏவ்!!!” என்று பெரிதாக ஏப்பம் விட்டார்.

Tags: , ,

7 Responses

 1. லார்டு லபக்குதாஸ் இதை சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாரா?

 2. பேயோன்No Gravatar says:

  ழர்த்தி தமிழில்தானேப் பேசுகிறார்?

 3. dagaltiNo Gravatar says:

  ஸ்ருஷ்டிகர்த்தாக்களில் ப்ரதானமானவராக தங்களை நினைக்கத்தூண்டுகிறது இந்த வ்யத்யாஸமான அத்யாயம். ஹாஸ்யரஸத்திற்கே உண்டான ஸாதுர்யங்களையும், புத்தி ஸாஹஸங்களையும் மீறி, தங்கள் க்ரியாபிரகாஷத்தையும் ஒரு தினம் தர்ஷிக்கும் ஆசையுள்ள ரஸிகாள் இங்கே பலருளோம்.

 4. பேயோன்No Gravatar says:

  டகால்டி: முதல் பத்தி மட்டும் 1930களில் ஆனந்த விகடனில் வெளிவந்த ஹார்லிக்ஸ் விளம்பரத்தை பார்த்து தட்டச்சு செய்தது. இது பீரியட் அத்தியாயம் எனக் குறிக்க தரப்பட்டுள்ளது.

 5. கென்No Gravatar says:

  ஹ்ம்ம்ம்ம் ஒரு வார்த்தை கவிதையில் வந்ததற்கான வினை எதிர்வினை தொடர்ந்து கொண்டிருக்கும் நடுவில்

  யாரங்கே ரைட்டர் பேயோனைப்பாருங்க :)))))))))))

 6. //ழர்த்தி தமிழில்தானேப் பேசுகிறார்?///

  அவர் மட்டுமா அனைவருமே தமிழில்தானே பேஸ்கிறார்கள்! வினோதமாகவும் நல்ல ஹாஸ்யமாகவும் திசை காட்டுகிறது :)

 7. ஆனந்த விகடன் பொக்கிஷம் / பெட்டகம் படித்த மாதிரி இருக்கு. என் குருநாதர் பேயோனுக்கு சுமார் ஐம்பத்தைந்து வயதாவது இருக்கணும்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar