திசை காட்டிப் பறவை – 18

in புனைவு

அத்தியாயம் 18 – கணேசு என்னும் கருதுகோள்

குமாருக்கு கணேசு கணேசு என்று ஒரு நண்பன் இல்லை. இருந்திருந்தால் குமார் அவனை கணேசு கணேசு என்றே அழைத்திருப்பான். கணேசு என்று ஒரு நண்பன் இல்லாததை குமார் ஒரு சுமையாகக் கருதவில்லை. என்றாலும் சில நடைமுறைப் பிரச்சினைகள் எழவே செய்தன.

கணேசுவின் தங்கை வசந்தலட்சுமியை ஒரு வருடமாகவே காதலித்தான் குமார். வசந்தலட்சுமியிடம் காதல் கடிதம் கொடுக்க நண்பன் என்ற முறையில் கணேசுதான் பொருத்தமான தூதுவன். ஆனால் கணேசு இல்லை. காதலிக்கத் தொடங்கிய முதல் ஆண்டிலேயே வசந்தலட்சுமிக்குப் பல காதல் கடிதங்கள் எழுதிப் பார்த்துவிட்டான் குமார். ஆனால் கொடுக்க ஆளில்லாததால் குமார் எழுதுவதும் கிழித்துப் போடுவதுமாக இருந்தான்.

பிறகுதான் வசந்தலட்சுமிக்கு சாந்தலட்சுமி என்று ஒரு தங்கை இருப்பது தெரியவந்தது. அதாவது கணேசுவின் இளைய தங்கை. இரண்டு தங்கைகளுமே பெயருக்கேற்ப அமைந்திருந்தார்கள். ஒன்று வசந்தம் என்றால் இன்னொன்று சாந்தம். வசந்தலட்சுமி முகத்தின் எடுப்பான அம்சங்களையெல்லாம் மழுப்பிவிட்டால் சாந்தலட்சுமி கிடைத்துவிடுவாள். மற்றபடி பெரிய வித்தியாசம் இல்லை.

ஒரு மகளை ஊரிலேயும் இன்னொன்றை வெளியூர் ஹாஸ்டலிலும் படிக்கவைத்தது ஏன் என்று குமாருக்குப் புரியவில்லை. இருந்தாலும் கணேசு இல்லாத பிரச்சினை தீர்ந்தது.

சாந்தலட்சுமி பூங்கதிருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்திருந்ததை கவனித்தான் குமார். அவளைப் பூங்கதிர் மூலமாக நட்பாக்கிக்கொள்ள அவன் திட்டமிட்டான். அசெம்பிளியில் அவனுக்குப் பக்கத்து வரிசையில் சாந்தலட்சுமி நின்றபோது அவளைப் பார்த்து முறுவலித்தான். அவளுடைய அக்காளுக்குத் தானே பொருத்தமான கணவன் என்று எப்படியெல்லாம் அவளை நம்பவைப்பது?

வழக்கம் போல் பாடபுத்தகங்கள் கைகொடுத்தன. தனது பழைய பாடபுத்தகங்களைத் தேடி எடுத்துப் பூங்கதிர் மூலம் கொடுத்து அனுப்பினான். பூங்கதிருக்கு அறிவுதான் போதாதா, இல்லை வேண்டுமென்றே செய்தாளா தெரியவில்லை, புத்தகங்களைக் கொடுத்தது குமார்தான் என்று சாந்தாவிடம் அவள் சொல்லவேயில்லை. புத்தகங்களைக் கொடுத்த பின் மறுநாள் எதேச்சையாக சாந்தாவின் பக்கம் போவது போல் போனான் குமார். அவள் நகர்ந்து வழி விட்டதோடு சரி. ஒரு வார்த்தை பேசவில்லை. பூங்கதிரிடம் ஒரு முறை கெஞ்சி நினைவுபடுத்திய பிறகுதான் தகவல் போய்ச் சேர்ந்தது.

அதற்குப் பின் சாந்தலட்சுமியுடன் பழகுவதில் குமாருக்குப் பிரச்சினை இருக்கவில்லை. சாந்தலட்சுமி கலகலப்பாகப் பழகினாள். ரத்தக் காயம் ஏற்படுமளவு அடித்துப் பேசி சிரிக்கும் தூரத்திற்குப் பழக்கம் வந்த பின் குமாருக்கு இரண்டு மனமாயிற்று. வசந்தம் கிடைக்கவில்லை என்றால் சாந்தத்தை முயற்சிக்கலாமா என்று யோசிக்கத் தொடங்கினான். மனதிற்குள் இருவரையும் தீவிரமாக ஒப்பிட்டுப் பார்த்த பின், இருவரில் யார் கிடைத்தாலும் நன்மையே என்ற முடிவுக்கு வந்தான். சாந்தலட்சுமிதான் தன்னை விட ஒரு வயது சிறியவள் என்பதால் அவளை அடையலாம் என்று தீர்மானித்தான் குமார்.

குமாரிடம் திடீரென ஒரு மாற்றம் ஏற்பட்டது. சாந்தலட்சுமி பேசும்போது மேலும் உன்னிப்பாகக் கேட்டுத் தீவிரமாகத் தலையசைக்கத் தொடங்கினான். சாப்பிட்டாயா தூங்கினாயா என்று வாஞ்சையுடன் கேட்கத் தொடங்கினான். கணேசுவுக்கு பதிலாக சாந்தலட்சுமியை அமர்த்தப் போய் இப்போது சாந்தலட்சுமிக்காகவே கணேசு தேவைப்படும் நிலை வந்துவிட்டது குமாருக்கு.

கணேசு இருந்தால் இவ்வளவு சிக்கல் இருந்திருக்காது. கணேசுவின், கணேசுவே, கணேசுவுடன், கணேசுவிடம், கணேசுவை, கணேசுவினை, கணேசுவினுடைய, கணேசுவால், கணேசுவுக்கு…

Tags: , , ,

4 Responses

 1. யப்பா! ஒருவேளை கணேசு இருந்திருந்தால் இந்த அத்தியாயம் எழுதப்பட்டிருக்காதோ? என் சிலபல தலைமயிர்கள் தப்பித்திருக்குமோ?

  கணேசு,, ஏண்டாப்பா இல்லை நீ?

 2. பேயோன்No Gravatar says:

  கணேசு இல்லை என்றால் வேறொரு கதாபாத்திரம். புனைவுலகம் எந்த தனிநபரையும் நம்பி இயங்குவதில்லை.

 3. //புனைவுலகம் எந்த தனிநபரையும் நம்பி இயங்குவதில்லை.//

  அதே வசந்தம் இல்லையெனில் சாந்தம் !

  கணேசு இருந்திருந்தா அம்சமான வசந்தம் கிட்டியிருக்கும் ஹம்ம்ம்ம்ம்ம்ம்!

 4. கணேசை பழிவாங்கதான் இந்த குமார் சாந்தலட்சுமிக்கு ரூட் போடுகிறான்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar