திசை காட்டிப் பறவை – 19

in புனைவு

அத்தியாயம் 19 – முன்கதை

சேல்ஸ் பிரிவில் வேலைபார்த்த 31 வயது குமார் தங்கமானவன். சொந்தப் பிரச்சினைகளால் இரண்டு ஆண்டுகள் என்னால் எழுத முடியாமல் போய்த் திரும்ப எழுதத் தொடங்கியதும் குமாருக்கு 33 வயதாகிப் பணப் பிரச்சினை. அதைத் தீர்க்கும் வகையாக அப்போது குமாருக்கு அறிமுகமானவர்தான் பணக்கார பாகிஸ்தானியரான அவனது அப்பா.

அப்பா குமாருக்கு இருப்பது போல் எனக்கும் உண்டு. எனவே இதற்கிடையில் என் அப்பாவைப் பார்க்க அப்பாவின் நண்பர் வந்தார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது என்னிடமிருந்து நானே பேனா இரவல் வாங்குகிற இழிநிலை. கிடக்கட்டும். பேனாவை வாங்கப்பட்டபின் என்ன எழுதப்பட்டது?

குமாரின் இரண்டாவது தங்கைக்கு அப்பா பாகிஸ்தானியராகிவிட்ட காரணத்தால் திருமணம் அசாத்தியமாகிக்கொண்டிருந்த நிலையில் அப்பாவை சீனராக மாற்றிக் குமாருக்கு மீளறிமுகம் செய்துவைத்தேன். பிறகு குமார் ரஷ்யாவில் ஒரு புகையிலைக் கடைக்காரரின் மகளைக் கெடுக்கப் பார்த்து முடியாமல் திருந்தி அக்டோபர் புரட்சியை விளைவித்தார். இந்நிலையில் நானோ குமாரோ மொட்டை மாடியில் சிந்தனையில் ஆழ்கிறோம். குமாருக்குக் கண்ணாடி உடைந்தால் பிரச்சினை. செல்போன் வைத்திருக்கிறான்.

குமாருக்கு நிழலுண்டா என்று இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுந்தாலும் முன்கதைச் சுருக்கத்தில் தத்துவங்களுக்கு இடமில்லை. இதற்கிடையில் குமார் தனது வயதான 33இலிருந்து பிரிய மறுக்கிறான். எனக்கு மற்றும் குமாருக்கு உள்ள கலா ரசனையின் பலனாகப் பின்னவன் ஒரு மேலான ஓவியம் தீட்டுகிறான்.

இடையில் ஒரு நாள் என் பாலிய கால ஓவிய ஆசிரியர் சாலையில் எதிர்ப்பட, காரட் நிறைய தின்றால் உடலுக்கு ஆகாது, பாகற்காய் உடலுக்கு ஆனாலும் அபரிமிதக் கசப்பு. இந்த நாவலைத் தானே எழுதுவதாகக் குமார் குடிக்கும் மனப்பாலில் ஒரு சொட்டு புளித்த மோரை ஊற்றி உறைகுத்திவிடுகிறேன்.

குமார் என்ற வேறொருவன் எனது குமாரை ஆள்மாறாட்டம் செய்யப் பார்க்கிறான். ரிசப்ஷனிஸ்ட்டின் உதவியால் அவனை அடையாளம் கண்டுபிடிக்கிறேன். நல்ல வரனைத் தட்டிக்கழிக்க வேண்டாம் என்று ரிசப்ஷனிஸ்ட்டிற்கு அறிவுரை அளிக்கப்போனால் அவள் என்னைத்தான் காதலிப்பதாக ஒரு கடிதம் எழுதித் தன் கைப்பையிலேயே வைத்துக்கொள்கிறாள்.

இதென்ன வில்லங்கம் என்று அடுத்த அத்தியாயத்தில் அவளது தாய் தந்தை மூலம் அவள் அந்த வரனையே திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறேன். குமார் இருக்கும் தெருவின் முனைவீட்டில் திருடுபோகிறது. குமாருக்கு கணேசு என்றொரு நண்பன் இல்லை. இந்த இன்மை நிலை அவனது காதலில் குறுக்கிடுகிறது.

தங்கமான 31 வயது குமாரின் அப்பா பாகிஸ்தானியர். எனக்கு வீட்டில் பிரச்சினை. அப்பாவை பார்க்க நண்பர் வர, பேனா கடன் வாங்கிக்கொள்கிறேன் என்னிடமே. குமாரின் அப்பா சீனர். குமார் ரஷ்ய சீமானாக ரஷ்யப் பெண்ணைக் கவர முயன்று தோற்றுத் திருந்தி அக்டோபர் புரட்சி செய்கிறான். மொட்டை மாடியில் சிந்தனை. கண்ணாடி உடைந்தால் குமாருக்குப் பிரச்சினை. குமார் செல்போன் வைத்திருக்கிறான். குமாருக்கு இப்போதும் 33 வயது. படம் வரைகிறான். எனது ஓவிய ஆசிரியரால் மனத் தோட்டத்தில் காய்கறிகள். இந்த நாவலை எழுதுவது குமார் அல்ல. குமாராக வேடமிடும் ஒருவனை ரிசப்ஷனிஸ்ட் கண்டுபிடிக்க, நான் அவனை நிராகரிக்கிறேன். திருமணம் செய்துகொள்ள மறுக்கும் ரிசப்ஷனிஸ்ட் என்னைக் காதலிப்பதால் அவள் வேறொரு ஆளை மணம் புரிய ஏற்பாடு செய்கிறேன். குமாரின் தெருவில் திருடுபோகிறது. குமாருக்கு நண்பன் இல்லாததால் அந்த நண்பனின் தங்கையை அடைய வழியில்லை.

குமாரின் அப்பா பாகிஸ்தானியர், பின்னர் சீனர். குமார் ரஷ்யாக்காரன், புரட்சிப் பித்தன், சிந்தனையாளன், கிட்டப்பார்வையாளன், செல்போன்தாரி, மார்க்கண்டேயன், ஓவியன், கனவு காணி, குற்றத் துவேஷி, காதலன். நான் எழுத்தாளன்.

முற்றும்

Tags: , ,

21 Responses

 1. //நான் எழுத்தாளன்.//

  உண்மையாவே.

  இப்படி ஒரு அத்தியாயத்துக்குத்தான் கதை சுத்தி சுத்தி வந்ததா?

 2. பேயோன்No Gravatar says:

  தொடக்கத்தில் தொடங்கி முடிவில் முடியும் கதையல்ல இது. பொதுவாக கடைசி அத்தியாயமானது தனக்கு முந்தைய அத்தியாயங்களின் உபவிளைவாக இருக்கும்.

 3. NSRNo Gravatar says:

  இது என்ன லீனியர் கதை சார்?

 4. அப்பாடி… எங்கே கல்கி, புதுமைபித்தன், சாண்டில்யன் பாணியில் புதிது புதிதாக அத்தியாயங்கள் எழுதிக் கொண்டே போவீர்களோ என்று ஒரு பயம் இருந்தது.

  சில ஜிகினா சங்கதிகளை தவிர்த்து, சில புதுமையான உத்திகள் பிரமாதமாக வந்திருந்தது.

  நல்லதொரு வாசிப்பனுபவம். நன்றி!

 5. அருமையான கதை. தன்னைத் தானே எழுதிக்கொண்ட எழுத்துக்களின் வரிசையில் குமார் தொலைந்து மீண்டு யாதுமாகி நிற்கும் அபத்தங்களின் ஆழ்மன உளைச்சலை படம்பிடித்திருக்கிறீர்கள். லிதுவேனிய நாட்டின் பல்கலையில் பாடமாகும் அத்தனை தகுதியும் இருக்கின்றது இந்த நாவலுக்கு.

 6. ரொம்ப புத்திசாலித்தனமான, மேக்ரோ/மைக்ரோ ஹ்யூமர் கொண்ட எழுத்து. படித்து ரசித்தேன். அல்லது ரசித்துப் படித்தேன். முக்கியமாக ரஷ்யாவும் தக்காளியும்.

 7. பேயோன்No Gravatar says:

  NSR: நான்.

  ஸ்ரீதர் நாராயணன்: சார், நான் பயிற்சிக்காக எழுதவில்லை, எனக்காக எழுதுகிறேன்.

  ராம்சுரேஷ்: லிதுவேனியா ஒரு நாடா? மொழி என்றல்லவா நினைத்திருந்தேன்.

  சித்ரன்: நன்றி. பொதுவாகவே ரஷ்யாவுக்கு உருளைக்கிழங்குதான் ஒத்துவரும்.

 8. //நான் எழுத்தாளன்.

  முற்றும்///

  கண்டினியூட்டி சங்கடப்படவைக்குது பாஸ் நான் எழுத்தாளன் போட்டு முற்றும் தொடரும் போடுங்க இன்னும் எத்தனை எத்தனையோ திசைகளை காட்டும் பறவைகளினை பேனாவில் பிரசவித்து ப்ளாக்கில் பறக்கவிடவேண்டுமல்லவா?

  ஆர்வம்+ஆவலுடன்
  ஆயில்யன்

 9. பாளை ராஜாNo Gravatar says:

  நான் எழுத்தாளன். //

  இந்த வரி அடுத்த பத்தியில் வந்திருக்கலாம்..

 10. பேயோன்No Gravatar says:

  பாளை ராஜா: சார்! எப்படி சார்?! உங்கள் லிட்ரேச்சர் டுடோரியல் யுனிவர்சிட்டியில் என்னை கடைநிலை மாணவனாக சேர்த்துக்கொள்ளுங்கள் சார்!

 11. பாளை ராஜாNo Gravatar says:

  குருவே !

  உங்களை கண்டுக்கொள்ளவே ! அந்த கமெண்ட் குருவே !

  தற்பொழுது உறுதி செய்து கொண்டேன்..

 12. பாஸ்,,,, //////சார், நான் பயிற்சிக்காக எழுதவில்லை, எனக்காக எழுதுகிறேன்.//////////

  என் சந்தேகம் தீர்ந்துவிட்டது.. உங்கள் அடுத்த படைப்புகாக காத்துக்கொண்டு இருக்கிறேன்.

  இன்னும் ஒரு சந்தேகம்.. இது முன்கதை சுருக்கத்தின் முற்றுமா??? இல்லை, திசை காட்டிப் பறவையின் முற்றுமா???

 13. பேயோன்No Gravatar says:

  சரவண வடிவேல்: நீங்கள் கூறுவது மாதிரி இருந்தால் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் முற்றும் போட்டிருப்பேனே. தர்க்க இடிபாடுகள் உங்கள் பேச்சில்.

 14. dagaltiNo Gravatar says:

  முற்றும் தறந்துவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல அதிர்ச்சி.

  “உங்கள் எழுத்து பூரணமாக யாரையுமே சென்றடையவில்லை என்ற ஏமாற்றத்தை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்” போன்ற இலக்கியப் பேட்டிக் கேள்விகளுக்குத் தயாரா?” போன்ற கேள்விகள் இனி உங்களுக்கு வரலாம்.

 15. பேயோன்No Gravatar says:

  டகால்டி: எப்படி சார் திருகித் திருகி எழுதுகிறீர்கள்?

 16. dagaltiNo Gravatar says:

  கெட்டிக்காரத் திறமையான
  சட்டிலொன்று அருமையான
  கெட்டிலொன்றை கருமையென்று
  சுட்டிகாட்ட வெறுமைதீர

  நட்டகல்லாம் பிரதியினை
  விட்டுவிட்டு நாதனைக்
  (உற்றுநோக்கும் வாசகன்)
  கேட்டிடுமிக் கேள்வியை

 17. பேயோன்No Gravatar says:

  டகால்டி:

  இட்டுக்கட்டி எழுதிடும்
  எட்டுப்பட்டி இலக்கியன்
  கட்டப்பட்டு உருட்டிய
  லிட்டரேச்ச எழுத்தினை

  நட்டகல்லு என்றிடும்
  திட்டமிட்ட உள்ளுறை
  பட்டவர்த்த னத்தைகை
  தட்டிமெச்சும் போதிலே

  அட்டதிக்கு முழுவதை
  அட்டுபீசு ஆள்கையில்
  தொட்டதைத் துலக்குமிக்
  கட்டமைப் புடைப்பவன்

  கட்டுவித்த பனுவலும்
  நட்டகல்லென் றாகினால்
  எட்டிநிற்கும் வாசகன்
  நாதனாவ தெப்படி?

 18. குருவே, மேலே உள்ள உங்கள் கவிதையை தனி பத்தியாக போட வேண்டும். இங்கே இருந்தால் இந்த அற்புதக் காவியத்தை பலர் பார்க்கத் தவறலாம்.

 19. dagaltiNo Gravatar says:

  சின்னத் திறனாளன் தருமிப் புலவன்
  எண்ணற் கறியானை சீண்டிப்பார்த்து
  ஒண்ணியு மாவாமல் ஆடியடங்கி
  மன்னித் தருளக் கோரிய நற்சொல் சொல்வேன்:
  “கன்னித் தமிழைச் சேர்ந்த புலவர் நீரே”

 20. //குருவே, மேலே உள்ள உங்கள் கவிதையை தனி பத்தியாக போட வேண்டும். இங்கே இருந்தால் இந்த அற்புதக் காவியத்தை பலர் பார்க்கத் தவறலாம்.//

  செம்மொழி விழா நடைபெறும் இந்நன்னாளில் தயை கூர்ந்து சேலத்து தலைவனின் கோரிக்கையினை ஏற்றிடவேண்டும்!

  அரபு தேசத்திலிருந்து
  ஆயில்யன்

 21. பேயோன்No Gravatar says:

  ஏற்றியாயிற்று.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar