மரத்தில் சிக்கிய கவிதை

in கவிதை

மாடி ஜன்னலோர மேஜை மேல் வைத்து எழுதிய கவிதை ஒன்று பால் பாயின்ட் பேனாவின் எடை போதாமல் நழுவிப் படபடத்து வெளியே பறந்தது.

பதறிப்போய் நான் பார்க்கும்போதே எதிர்வீட்டு மரத்தின் முனையுடைந்த கிளையில் ஓட்டல் பில் போல் குத்திக்கொண்டது. உடனே போய் அதை எடுக்கவா முடியும்?

முக்கியமான ஆவணம் காற்றில் பறந்து உங்கள் வீட்டு மரத்தில் மாட்டிக்கொண்டுவிட்டது என எதிர்வீட்டுக்காரரிடம் உதவி கேட்பதற்கில்லை. மரத்திலேறி மீட்டுக்கொடுத்ததை அவர் படித்தால் ரசாபாசமாகிவிடும்.

காற்றாடிக் குச்சி போன்ற அந்தக் கிளை முனையில் மழை, காற்று எதற்கும் அசராமல் குத்திய நிலையில் காகிதம் மாதங்கள் கிடந்தது. வெட்டுவாரின்றி மரமும் கிடந்தது.

பார்ப்பவருக்குத் தெரியாது அது (என்) கவிதை என்று. தினமும் காலையில் ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் கண் பதிவது மரத்தில் குத்திய கவிதை மேல்தான். துளையிடப்பட்டது எந்த வார்த்தை? ஊகித்தேன்.

பால் பாயின்ட் மை மழைநீரில் அழியாதென்றாலும் காகிதத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. காற்றின் ஈரம் மிச்சம்வைத்த சில வார்த்தைகளை காக்கையின் எச்சம் அழித்திருக்கக்கூடும்.

இரண்டாவது, மூன்றாவது, நான்காவது முறையாக அந்தக் கவிதையை மீண்டும் எழுதிப் பார்த்துவிட்டேன். அதற்குப் பிறகு பலவற்றை எழுதிக் கிழித்தாயிற்று. கழுவேறிய மரியாதை அந்த ஒரு கவிதைக்குத்தான்.

Tags:

16 Responses

 1. siddhan555No Gravatar says:

  kaidhalkkadhai kalakkal

 2. பேயோன்No Gravatar says:

  சித்தன்555: மொழி…. மொழி புரியவில்லை.

 3. குருவே,
  உங்கள் கவிதைகள், கதைகளில் காற்றில் அடித்துச்செல்லும் சம்பவம் recurring theme ஆக வருவதன் மர்மம் என்ன?

 4. பேயோன்No Gravatar says:

  விஜய்: காற்று என்பது வீசத்தானே செய்யும். இதை எழுத்தில் பதிவு செய்ய வேண்டாமா? இது தவிர ஒரு சிறுகதையில் மட்டும்தான் காற்று காகிதத்தை அடித்துச் சென்றுள்ளது. நல்ல அவதானிப்பு.

 5. dagaltiNo Gravatar says:

  சற்று அசந்தாலும் நெகிழ்ந்திருப்பேன்.
  மரமறுத்து கவிமீட்க ஒரு காளிதாசர் வர இருக்கிறார் என்று பட்சி சொல்கிறது.

  அடைப்புக்குறிப் பயன்பாடு மிகச்சிறப்பு.

 6. பேயோன்No Gravatar says:

  டகால்டி: நன்றி. கவிதை கழுவேறினால் நெகிழ்ச்சி ஏற்படுமா? இத்தனைக்கும் நான் மரியாதை என்றல்லவா குறிப்பிட்டுள்ளேன், வருத்தம்கூட இல்லையே.

 7. //துளையிடப்பட்டது எந்த வார்த்தை? ஊகித்தேன்.//

  பேயோன் டச்!

 8. NSRNo Gravatar says:

  நன்றாக இருந்தது, சார். ராவோடு ராவா மரமேறி விடுங்கள்.

 9. நீங்க பெரிய ஆளுதான்னு கேள்விப்பட்டேன், உங்களுக்கு எல்லாம் அட்வைஸ் தேவையில்லைதான்,
  ஆனா இதை மடக்கிப் போட்டு இருந்தால் கவிதையாயிருக்கும்.

 10. பேயோன்No Gravatar says:

  உஷா: இது கவிதைதான். கவிதை என்ற வகைப்பாட்டில்தான் இதை வெளியிட்டிருக்கிறேன். வரிகளை உடைக்காவிட்டாலும் கவிதைதான்.

 11. கலக்கல்.. உங்களுக்கு சென்டிமெண்ட்’ம் வருது பாஸ்…

 12. கவித்துவமாய் இருக்கு, ஆனா பத்தி பிரித்துப் போட்டு கவிதைன்னு வகைப்படுத்தினால் எப்பூடி?

 13. பேயோன்No Gravatar says:

  உஷா: அந்தக் காலத்தில் வசன கவிதை என்பார்கள். இப்போது அப்படி சொல்லிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதை வாசக அறியாமையில் முக்கியெடுத்த உங்கள் பின்னூட்டம் உணர்த்துகிறது.

 14. கவிதை தன்னையே பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதோ ??

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 15. அற்புதமான கவிதை. வாழ்த்துகள்சார்

 16. கென்No Gravatar says:

  அந்தக் காலத்தில் வசன கவிதை என்பார்கள். இப்போது அப்படி சொல்லிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதை வாசக அறியாமையில் முக்கியெடுத்த உங்கள் பின்னூட்டம் உணர்த்துகிறது.

  பேயோன் டச் :)

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar