நொடி முள்ளின் கதை

in சிறுகதை, புனைவு

கடிகாரத்திற்கு இரண்டு முட்கள் இருப்பது நமக்குத் தெரியும். 1824-ஆம் ஆண்டிற்குப் பின் தயாரிக்கப்பட்ட கடிகாரங்களில் நொடி முள்ளையும் உள்ளடக்கி மூன்று முட்கள் இருந்தன. ஆனால் இங்கிலாந்தில் 1824 பிப்ரவரியில் லூயி அண்டு மார்ட்டின் என்னும் நிறுவனம் கடிகாரத்தில் நொடியைக் காட்டுவதற்கு மூன்றாவதாக ஒரு முள்ளை அறிமுகப்படுத்தவிருப்பதாக ஓரறிக்கையை வெளியிட்டதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.1

இங்கிலாந்து நாட்டில் அக்காலகட்டத்தில் உற்பத்தியான அலுமினியத்தின் மொத்த எடையளவு 43 லட்சம் டன். உற்பத்தியான அலுமினியம் முழுவதுமாய் உள்நாட்டு நுகர்வுக்குப் பயன்படுத்தப்பட்டது. எனவே நொடி முள் உற்பத்தியால் 40 கிலோ அலுமினியத் தட்டுப்பாடு ஏற்பட்டது.2 இது மேலும் தொடராமல் தடுக்க நாலா திசைகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

ஆக்ஸ்போர்டு கனிம வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் சர் பீட்டர் எபர்ஹார்ட், ‘நொடி முள் தேவையா?’ என்றொரு சிறுநூலை எழுதி வெளியிட்டார் (இவர் வடக்கு திசையைச் சேர்ந்தவர்). தட்டுப்பாட்டின் காரணமாக 40 கிலோ அலுமினியத்தைக் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு, அதே அளவு அலுமினியத்தின் பணம்சார் மதிப்பை விட 4.23 மடங்கு அதிகம் என்பது அவரது நூலில் கண்டிருந்த வாதம்.3

மிகக் குறைந்த எடையளவான 40 கிலோ அலுமினியத்தை இறக்குமதி செய்வதற்கு அதனை விட 4.23 மடங்கு அதிகம் செய்யும் அளவிற்கு அலுமினியம் அரியதொரு உலோகமாகிவிட்டால் தங்கத்தைக் காட்டிலும் அது விலை மதிப்பற்றதாகிவிடுமோ என்னும் அச்சம் எழுந்தது. மேலும், நான்காம் ஜார்ஜ் மன்னர் தம் ராணி கரோலின் அலுமினிய நகைகள் அணிவதை விரும்பவில்லை.4

1824 ஜூலை மாதம் தம் இரண்டாவது துணைவியாரான ஜேன் வற்புறுத்தியதன் பேரில் மன்னர் நொடி முள்ளுக்கு அனுமதி வழங்கினார்.5 இருப்பினும் தங்க வியாபாரிகள் (தெற்கு), பொற்கொல்லர்கள் (மேற்கு) ஆகியோர் ஒத்துழைப்பில் எதிர்ப்பு நீடித்தது. அம்மாத இறுதியில் “பிரிட்டிஷ் மதிப்பு குறைந்த உலோகங்கள் பாதுகாப்பு சங்கத்”தின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் வில்மர் பிரபு சாலையில் திரண்டு தத்தம் புதுக் கடிகாரங்களின் நொடி முட்களை உடைத்தெடுத்து அவற்றைப் பல்குத்தப் பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

“நொடி முள் ஒழிக!”, “நாற்பது கிலோவுக்குப் பதில் சொல்லு!”, “கலப்பு இன ஆட்டுக்கு மூன்று கொம்புகள் எதற்கு? கடிகாரத்திற்கு மூன்று முட்கள் எதற்கு?”, “தியோடர் ஜேம்சனின் நாடகங்களைத் தடை செய்!” ஆகிய கோஷத் தட்டிகளை அவர்கள் ஏந்தி வந்தனர். பிறகு மன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுத் தந்தனர்.

இரு நாட்கள் கழித்து மன்னர் அப்பக்கமாக நகர்வலம் வந்தபோது அவர் காலில் முள் குத்தி ரத்தம் கசிய, அது கடிகார நொடி முள்தான் என மன்னர் அறிந்துகொண்டார். வில்மர் பிரபு சாலையின் துப்புறவுப் பணியாளர்களான ஸ்டூவர்ட் நிக்கல்சன், ஜாக்குவஸ் பெல்மான்ட், கென்னத் பார்க்கர் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதித்தார். நொடி முள் தொடர்பாக மன்னர் வேறு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதனால் பிரிட்டிஷ் மதிப்பு குறைந்த உலோகங்கள் பாதுகாப்பு சங்கத்தினர், லண்டன் மாநகரின் பெரிய பென் கடிகாரத்தின் புதிய நொடி முள்ளைப் பிடுங்கி எடுத்துவிடுவதாக சூளுரைத்தனர். ஆகஸ்டு மாதம் 2ஆம் நாள் சங்கத்தின் தலைவர் நார்மன் பிலிப், பெரிய பென் மணிக்கூண்டின் மீது ஏறி சம்மட்டியால் அடித்து நொடி முள்ளைப் பெயர்த்தெடுக்கும் முயற்சியில் கீழே விழுந்து மரணமடைந்தார். அவர் உயிர்நீத்த அத்தினம் இன்றும் கூட “கீழே விழுந்த பிலிப் தினம்” எனக் கொண்டாடப்படுகிறது. அவரது நினைவு இல்லம் இருந்த இடத்தில்தான் இன்று லண்டன் கூட்டுறவுச் சிறப்பங்காடி உள்ளது.

1825 ஜனவரியில் ஜார்ஜ் மன்னர் 50 கிலோ அலுமினியத்தை மாதாந்திர கப்பமாக செலுத்தவில்லையெனில் படையெடுப்பதாக அண்டை நாடான அயர்லாந்திற்கு எச்சரிக்கை விடுத்து அலுமினியத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு கண்டார். இத்தகையதொரு எளிய தீர்வை ஜார்ஜ் மன்னரைத் தவிர வேறு யாராலும் காண முடியாது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.

ஜனவரி 14ஆம் நாள் தம் அரண்மனையின் உப்பரிகையில் நின்று லட்சக்கணக்கான குடிமக்களுக்கு முன் அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையிலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு:

“எனதருமைக் குடிமக்களே! பிரஷ்ய நாட்டிற்கே வராத அலுமினியத் தட்டுப்பாடு நமக்கு ஏன் வந்தது என்று நீங்கள் வியப்படையலாம். பிரஷ்யாவில் நொடி முள் இல்லை. ஆனால் நம் நாட்டில் நொடி முள் உள்ளது. நம் நாட்டில் அலுமினியம் குறைவு. பிரஷ்யாவில் அலுமினியம் அதிகம் உள்ளது. ஆனால் அந்நாட்டில் நொடி முள் இல்லை. நம் நாட்டில் நொடி முள் உள்ளது.”

ஒரு வரலாற்று ஆய்வாளன் என்ற முறையில் எனது கருத்தையும் இங்கு தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இங்கிலாந்துக்கு அண்டை நாடான அயர்லாந்துடன் பகை ஏற்பட்டிராவிடில் அதனிடமிருந்தே உள்ளூர் வரிகளையும் சேர்த்துக் குறைந்த செலவில் 40 கிலோ அலுமினியத்தை இறக்குமதி செய்திருக்கலாம். அல்லது அயர்லாந்து மன்னர் எட்டாம் ஆல்பர்ட்டின் மகனான இருபத்தி நான்காம் ரோஜருக்கு ஜார்ஜ் மன்னர் தம் மகளை மணம் முடித்திருக்கலாம். இதனால் போக்குவரத்துச் செலவு மட்டுமே ஆகும்.

அதே சமயம் அலுமினிய ஏற்றுமதியால் அயர்லாந்துக்கு அலுமினியத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. தட்டுப்பாடு ஏற்பட்டால் அலுமினியம் அரிதாகி தங்கத்தைக் காட்டிலும் மதிப்பில் உயர்ந்து ஜார்ஜ் மன்னரின் ஒரே மகள் சார்லோட் அகஸ்டா அலுமினிய நகைகள் அணிய நேரிட்டிருக்கும். அப்போது ஒரே தீர்வு அயர்லாந்தில் நொடி முள்ளைத் தடை செய்வதுதான். அயர்லாந்து சிறிய நாடு என்பதால் அங்கு கடிகாரம் அணிபவர்களின் எண்ணிக்கையும் குறைவு. அதனால் 20 கிலோ மட்டுமே தட்டுப்பாடு ஏற்படும். ஐந்து அங்குலங்களுக்கு மேற்பட்ட உடல் அகலம் கொண்டவர்கள் நொடி முள் உள்ள கடிகாரத்தை அணியக் கூடாது என ஒரு சட்டத்தினைக் கொண்டுவந்திருப்பின் அப்பிரச்சனையும் தீர்ந்திருக்கும்.

இது தவிர இன்னொரு வழியுமிருந்தது. ஒரு கிழக்கு ஐரோப்பிய நாட்டிலிருந்து அலுமினியத்தை இறக்குமதி செய்வதற்கு பதிலாக மன்னர் தம் குடும்பத்தினர் மற்றும் பிரஜைகள் சகிதம் அந்நாட்டுக்குச் சென்றுவிட்டிருக்கலாம். கி.மு. 586ல் அசிரியப் பேரரசின் கடைசி மன்னன் இரண்டாம் டேமன் தன் நாட்டில் நிலக்கடலைப் பஞ்சம் தலைவிரித்தாடியதை முன்னிட்டு தென்கிழக்கு ஆசியாவுக்குத் தன் பிரஜைகளுடன் குடிபெயர்ந்தமைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன.6

சில பத்தாண்டுகளுக்குப் பிறகு பல்வேறு நாடுகளில் நொடி முள் அறிமுகமானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் கனிம வளக் கண்டெடுப்பு உன்னத நிலையை எட்டியது. தட்டுப்பாடுகளால் குறுக்கிடப்படாத நொடி முள் தயாரிப்பு பரவியது. இன்று நொடி முள் இல்லாத கடிகாரங்களே இல்லை எனலாம். இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுக்காலம் நிறைவடையும் இத்தறுவாயில் “சர்வதேச நொடி முள்” என்ற பத்திரிகை வெளியிட்ட ஒரு அரிய தகவலைக் கூறி இந்தக் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்:

“சர்வதேச நொடி முள்: ஆண்டுச் சந்தா: 480 பவுண்டு; ஆயுள் சந்தா: 51,000 பவுண்டு; தனி இதழ்: 4 பவுண்டு.”

கட்டுரை ஆசிரியர் லெஸ்லி மோர்கன் பெரிதும் மதிக்கப்படும் ஒரு வரலாற்று அறிஞர். இங்கிலாந்தின் வரலாறு பற்றிப் பல நூல்களை இவர் எழுதியுள்ளார். தற்போது ‘சர்வதேச நொடி முள்’ என்னும் இதழை நடத்திவருகிறார்.

1. Johnman, Rupert, Old Happenings of the 19th Century Variety, Pelican, 1996
2. Morgan, Leslie, The Metal: Production of Aluminium in the 19th Century England, Harper Collins, 1976
3. Eberhart, Sir Peter, Do We Need a Second?, Victoria Press, 1824
4. Levine, Andrew, What Happened in the 18th Century, OUP, 1977
5. IV, George, I, George, Crown Press, 1855
6. Williams, Richard, Agricultured in Assyria, Orient Longman, 2002

Tags: , , ,

5 Responses

 1. தகவல்களை ஒழுங்குபடுத்தி வரிசைகிரமமாக 1,2,3 என்று ஸப்ஸ்கிரிப்ட் உபயோகித்த விதம் நல்லா இருக்கு ! அடுத்தடுத்த இது போன்ற வரலாற்று கதைகளில் இணைய முகவரிகளையும் இடுங்கள் மேலும் வாசிக்க…! மத்தபடி கதை புரிந்துக்கொள்ளும் அளவுக்கு எனது நிலை இல்லை – இன்னும் நிறைய டெவலப் ஆகணும்போல! :(

  பிலிப் கீழ விழுந்த தினம் – சுவாரஸ்யம் அன்னிக்கு எப்படிகொண்டாடுவாங்க எல்லாரும் மேல ஏறி கீழ விழுந்து விழுந்தா? #ஸந்தேகம்

 2. பேயோன்No Gravatar says:

  நன்றி. வரலாற்று நூல்கள் போல் இணைய முகவரிகளை இட்டுக்கட்ட முடியாதே.

 3. சமகால புரட்சிக்கு உத்வேகம் அளிப்பது போல் உள்ளது உங்கள் இந்த சிறுகதை.
  இந்திய கடந்த ஒரு கோடி ஆண்டுகளில் எந்த நாட்டிற்கும் படையெடுத்துச் செல்ல வில்லை என்ற myth போல் மெலிந்து செல்கிறது நொடி முள் கதை.

  பரங்கி மக்களின் “கலப்பு இன ஆட்டுக்கு மூன்று கொம்புகள் எதற்கு? கடிகாரத்திற்கு மூன்று முட்கள் எதற்கு” என்னும் கோஷம் என் செவிப்பறைகளை கிழித்த வண்ணம் செல்கின்றன

  P.S: தேரோ கைகேயன் எழுதிய ‘நொடிமுள் நொடிந்து போகுமா?’ என்ற நூல் அயர்லாந்தின் பழிவாங்கும் முயற்சிகளை பட்டியலிடுகிறது . உங்கள் தொகுப்பில் அது காணோம்.

 4. பேயோன்No Gravatar says:

  உங்கள் புகாரை லெஸ்லி மோர்கனிடம்தான் செய்ய வேண்டும்.

 5. நல்லவேளை, ‘சிறுகதை, புனைவு’ என்று tag போட்டீர். இல்லையென்றால் நிஜம்ன்னே நம்பியிருப்போமே! ஆ!

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar