எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள்

in கட்டுரை, புனைவு

எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள்

ஐரோப்பிய அரசியலையும் அதன் மூலம் உலக அரசியலையும் உலக நாடுகளுக்கிடையிலான அரசியல், கலாச்சார, வர்த்தக உறவுகளையும் மட்டுமல்லாது கலை, இலக்கியத் துறைகளையும் பலவர்க்கத்து மக்களதும் வாழ்முறைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு பெருநிகழ்வு பிரெஞ்சுப் புரட்சியாகும். பொதுவாக ஒரு வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்து சில நூற்றாண்டுகள் ஆன பின்னர் அது குறித்துப் பல விதக் கேள்விகளை வரலாற்றாய்வாளர்கள் எழுப்புவதுண்டு. உண்மையில் நடந்தது என்னவென்ற தேட்டையில் வரலாற்றறிஞர்கள் ஈடுபடத் தொடங்குவதுண்டு. அது போலவே பிரெஞ்சுப் புரட்சி குறித்தும் பல கருதுகோள்கள் உண்டு ஆகும்.

பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை; அது பர்மாவில் நிகழ்ந்தது என ஒரு சாராரும், பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை; அது கனடாவில் நிகழ்ந்தது என இன்னொரு சாராரும், இவ்விருபெரும் புரட்சிகளுமே கட்டுக்கதைகள்தாம் எனப் பிறிதொரு சாராரும் கூறிவருகின்றனர். எனது இப்பதிவானது இம்மாறுபடும் கருத்துகளால் விளைந்துள்ள குழப்பங்களைக் களைவதுடன் பிரெஞ்சுப் புரட்சி நடந்தது பிரான்சில்தான் என்பதான உண்மையை நிறுவ முயல்கின்றது.

பிரெஞ்சுப் புரட்சி நிகழ்ந்த ஆண்டான 1789இன்போது நான் பிரான்சில் – இன்னும் கூறப்போனால் பாரீஸ் நகரில் – இருந்தேன். அக்காலத்தில் சென்னையிலிருந்து வியன்னாவிற்கு நேரடிப் பேருந்து கிடையாது. கல்கத்தா சென்று அங்கிருந்து சுமார் 750 மணிநேரம் ரயிலில் பயணித்துப் பாரீஸில் இறங்கி வியன்னா செல்லும் பேருந்தைப் பிடிக்க வேண்டும். பாரீஸிலிருந்து வியன்னாவிற்குப் பயணம் 12 மணிநேரம்தான். நான் வியன்னாவிற்குச் சென்ற காரணம், ஸ்பானிய நாவலாசிரியர் செர்வாண்டஸின் ஒன்றரை நூற்றாண்டு விழாவில் கட்டுரை வாசிக்க என்னை அழைத்திருந்தனர். 02-12-1789 அன்று நான் பாரீஸில் கால் பதித்தபோது வசந்தகாலம். பாரீஸின் வசந்தகாலம் அமெரிக்க இலையுதிர்காலம் போன்று உலகப் பிரசித்தி பெற்றது. விழா நடைபெற இன்னும் இரு நாட்கள் இருந்ததால் அங்கு தங்கத் தீர்மானித்தேன்.

நான் தங்கிய விடுதியான ‘பலெ திராத்வார் தெ பாரி’ (Palais Tröttoir de Pàris) முந்நூறு வருடப் பழமைவாய்ந்ததாகும். பல பிரெஞ்சு அறிவுஜீவிகளின் சரணாலயமாக, விவாதத் தலமாக அது இருந்தது. பிரெஞ்சுப் புரட்சி நடந்த அன்று அதைச் சிறிதும் எதிர்பார்த்திராத பலரில் நானும் ஒருவர். எனக்குப் பிரெஞ்சு மொழி தெரிந்திருந்தால் அந்நாட்டு நாளேடுகளைப் படித்து பிரெஞ்சுப் புரட்சியை எதிர்நோக்கியிருப்பேன். அது எனது முதல் பாரீஸ் விஜயமாதலால் நகரின் பழம்பெருமை வாய்ந்த நினைவுச் சின்னங்களைப் பார்க்கப் புறப்பட்டேன். முலான் ரௌஜ் அருகே நல்ல காபி கிடைக்கும் என நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டிருந்தேன்.

புரட்சி நடந்த அன்று காலை சுமார் 11 மணியளவில் ‘பிஸ்த்ரோ’ ஒன்றில் தேனீர் அருந்தியபடி தெருக் காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தேன் (‘பிஸ்த்ரோக்கள்’ என்பவை திறந்தவெளி உணவு விடுதிகளாகும். இங்குச் சிற்றுண்டி மட்டுமே கிடைக்கும்; சாப்பாடு கிடையாது. இவ்விடுதிகளில் மக்கள் பிரெஞ்சு நாளேடுகளைப் புரட்டியபடி பிரெஞ்சு பானங்கள் அருந்துவதும் அன்றாடக் காட்சி). அப்போது திடீரென ஒரு பேரோசை எழுந்தது. சுமார் இருபது பிரெஞ்சுக்காரர்கள் திபுதிபுவென ஓடிவந்தனர். ஒரு சிலர் விடுதியில் நுழைந்து ‘லா ரெவல்யூசியோன்! லா ரெவல்யூசியோன்!!’ எனக் கத்தினர். எனக்கு அம்மொழி தெரியாது எனினும் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்குக் கடத்தப்பட்ட 20,000 சொற்களில் ஒரு நூறாவது எனக்குத் தெரிந்திருந்தன. புரட்சி எனும் பொருள் கொண்ட ‘ரெவல்யூஷன்’ என்பதும் அதில் ஒன்று. ரெவல்யூசியோன் என்பதன் பொருளை அதன் மூலமாகப் புரிந்துகொண்டேன். உலகைச் சுனாமியாய்ப் புரட்டிப் போட்ட பிரெஞ்சுப் புரட்சி வந்துவிட்டதென்பதும் அது தற்போது அந்தத் தெருவின்வழியே வந்துகொண்டிருந்தது என்பதும் எனக்குப் புரியத் துவங்கின.

எனது வாழ்நாள்க் காலத்தில் ஒருசிறு தகராற்றைக் கூடப் பார்த்தறியாதவன் நான். ஆகவே புரட்சிக்கு எவ்வாறு உடனடி எதிர்வினையாற்றுவது என்றறியாது குழம்பி நான் நிற்கையினில், சுமார் ஆயிரம் பிரெஞ்சுப் பொதுமக்கள் ‘வீவ் லா பிரான்ஸ்! வீவ் லா பிரான்ஸ்!! (பிரான்ஸ் வாழ்க!) எனக் கோஷமிட்டபடி அத்தெருவில் விரைந்துவந்தனர். கிட்டத்தட்ட ஒவ்வொருவரதும் கைகளில் கொடிகளிருந்தன. சிறிது தொலைவிலிருந்து துப்பாக்கி குண்டுச் சத்தங்கள் எழும்பின. நான் பிரெஞ்சுப் புரட்சியை மாடியிலிருந்து பார்க்கலாமென விரைந்தேன். மொட்டை மாடியில் சுமார் இருநூறு பேர் பழைய நூல்களையும் நாளேடுகளையும் சஞ்சிகைகளையும் துண்டுதுண்டாகக் கிழித்துப்போட்டுக்கொண்டிருந்தனர். அது ஜனத் திரளின் மீது தூவுவதற்காக எனப் பின்னரே எனக்குத் தெரியவந்தது. மொட்டை மாடியில் இடமின்றி உடனடியாக முதல் தளத்திற்கு இறங்கினேன்.

முதல் தளத்தில் கம்பளி நூல் கொண்டு உடை பின்னிக்கொண்டிருந்த ஒரு சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி புரட்சி வெடித்த காரணியை எனக்கு எடுத்துரைத்தார். மன்னர் பதினாறாம் லூயியின் மோசமான ஆட்சியினால் நாட்டில் பலவாறான சமூகச் சீர்கேடுகளும் சீர்திருத்தமின்மையும் தலைவிரித்தாடத் தொடங்கியிருந்தன. பிரெஞ்சுப் பிரபுக்களும் பிறவகைப்பட்ட செல்வந்தர்களும் செழிப்பில் திளைத்துக்கொண்டிருந்தனர். மக்கள் மனதில் சற்றுச் சற்றாக அதிருப்தி வலுத்தது. வால்டேர், ரூஸோ, திதரோ முதலான சிந்தனையாளர்கள் மற்றும் மக்கள்நலப் பணியாளர்கள் மேற்கொண்ட அனைத்துப் போராட்டங்களும் திட்டமிடப்படாத சிறைநிரப்புப் போராட்டங்களாயின. ‘ரொட்டி இல்லை என்றால் என்ன, கேக் சாப்பிடவும்’ என்கிற ராணியாரிணி மேரி அந்த்வானெத்தினது பேச்சு, மக்களது குமுறலுக்கு எரிபொருளூட்டவே செய்திருந்தது.

உயர்த்தப்பட்ட கைகளில் ஆயுதமேந்திக் கோஷமிட்டவாறு தெருக்களில் பெருந்திரளாய்ச் சுற்றியலைந்து புரட்சிக்குக் கூட்டம் திரட்டியபடி அரண்மனையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தவர்களுடைய – புரட்சியாளர்களுடைய – வாழ்க்கையினது அவலங்களையும் போராட்ட வழிமுறைகளையும் அந்த அம்மாள் எனக்கு விளக்கினார். ஒன்றிற்கு மேற்பட்டோரின்றிப் புரட்சி சாத்தியமான சரித்திரமில்லை என ஜெர்மானிய எழுத்தாளர் எலியாஸ் கானட்டி எழுதியிருப்பது நினைவில் தோன்றி மறைந்தது.

நானிருந்த தெருவைக் கடந்திருந்த ஐம்பதினாயிரம் பேரே மீள மீள வந்துகொண்டிருப்பதான உணர்வு எனக்கேற்படும் வகையில் மக்கள் வெள்ளம் புழங்கியபடி இருந்தது. பாதாள ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதை முழுவதிலும் புரட்சியாளர்களும் அவர்களது மனைவியரும் குழந்தைகளும் நிரம்பியிருந்தனர். மன்னரும் அரசியும் சிரச்சேதம் செய்யப்பட்டுவிட்டனர் எனவும் அவர்களைக் கொல்லுவதற்கென்றே அவசரமாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘கில்லட்டின்’ கருவி அதற்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் மூட்டை முடிச்சுக்களுடன் காணப்பட்ட பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

அரண்மனையிலிருந்து திரும்பி வந்தவாறு இருந்த ஒரு கூட்டமானது கழுத்தில் நகைகள் மற்றும் கைகளில் பெரிய விலையுயர்ந்த ஜாடிகளுடன் காட்சியளித்தது. மாலைச் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த பிரெஞ்சுக்காரர் ஒருவரிடம் புரட்சி எப்போது முடியும் என ஆங்கிலத்தில் வினவினேன். குறைந்தபட்சம் அதிகாலை மூன்று மணி ஆகலாம் என்று அவர் பிரெஞ்சு மொழியில் அளித்த பதிலின் பொருளை ஒருவாறாகப் புரிந்துகொண்டேன்.

புரட்சி என்று வந்துவிட்டால் புரட்சியாளர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என வர்ணிக்கும் நுட்பமான பாடல் ஒன்று ஸ்வப்னவாசவதத்தையில் உண்டு. ஸ்ரீரங்கம் கீதாசாரியார் உரையைக் கேளுங்கள் –

“தீக்குச்சி தானாகப் பற்றிக்கொள்ளாது. அதை யாராவது வந்து உரச வேண்டும். தீக்குச்சி வம்பு தும்பு வைத்துக்கொள்ளாது. அதாவது யாராவது வந்து உசுப்பும் வரையில். ஒவ்வொரு புரட்சியாளனின் மனமும் தலா ஒரு தீக்குச்சியைப் போலத்தான்.”

பிரெஞ்சுப் புரட்சி பற்றி வால்டேர் சொல்வதைக் கேளுங்கள்:

“புரட்சிக்கான தேவை பற்றி எழுத்தாளன், தத்துவ ஞானி என்ற முறையில் நிறைய பேசியாயிற்று. இனி நீங்கள் ஆச்சு, ராணி மேரி ஆச்சு என்று விட்டுவிட்டேன். இனி ரொம்பக் காலத்திற்கு எந்தப் பத்திரிகைக்கும் பத்தி எழுதப்போவதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். பிரெஞ்சுக்காரர்களுக்கு என் பத்தியை எதிலும் படிக்கவில்லை என்றால் உருளைக் கிழங்கு செரிக்காது.”

வால்டேரின் சமகாலச் சிந்தனையாளரான ரூஸோவின் கருத்தும் வால்டேரினுடையதுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது:

“அந்த்வானெத்தின் கொடுங்கோலாட்சியை ஒழிக்கப் புரட்சி அவசியம். ஆனால் புரட்சி என்பது கொடியவர்கள் கூடுமிடம் ஆகிவிடக் கூடாது.”

இத்தனைக் களேபரத்திலிருந்து தப்பித்து வந்து மாம்பலம் பாசஞ்சர் ரயிலைப் பிடிக்கும்போது காலை 5 மணி ஆகிவிட்டிருந்தது. டிக்கெட்டை வாங்கிக்கொண்டு வந்து ஒரு பெஞ்சிற்குப் புட்டத்தைக் கொடுத்தேன். உலகின் இன்னொரு மூலையில் புரட்சி நடப்பதற்கான எந்த அறிகுறியையும் காணோம். எனக்கு சுக்குக் காபி தேவைப்படுமா என ஆவலுடன் வந்து கேட்ட இளைஞனிடம் சில்லறையைக் கொடுத்து ஒன்று வாங்கிக் குடித்தேன். வால்டேரும் ரூஸோவும் தெரியாத அவனுக்கு அன்று நிச்சயம் உருளைக் கிழங்கு செரித்திருக்கும்.

Tags: , , , , , , , ,

19 Responses

 1. //தீக்குச்சி தானாகப் பற்றிக்கொள்ளாது. அதை யாராவது வந்து உரச வேண்டும். தீக்குச்சி வம்பு தும்பு வைத்துக்கொள்ளாது. அதாவது யாராவது வந்து மிரட்டும் வரையில். ஒவ்வொரு புரட்சியாளனின் மனமும் தலா ஒரு தீக்குச்சியைப் போலத்தான்.//

  உசுப்புதல் என்பது மிரட்டுதல் என்று புரிந்து கொண்டேன் :)

  பத்தி எழுத்திற்கு நல்ல உத்தி. கலக்கல்!

 2. பாராNo Gravatar says:

  பேயோன், இந்த நடை ஒரு காலக்கட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஐம்பது-அறுபதுகளில் எழுதிய பல்வேறு கட்டுரையாளர்கள் ஒருங்கே நினைவுக்கு வருகிறார்கள். உடனடி உதா – சாமிநாத சர்மா, ஏ.கே. செட்டியார். படைப்பாளியின் மொழி என்பது ஒரு கட்டத்தில் தளம் மாறி, காலக்கட்டத்தின் மொழி என்றாகிவிடுமா? புரியவில்லை. ஆனால் வியப்பாக உள்ளது. இப்புனைவில் ஒளிந்துள்ள கூர்மையான அங்கதத்தைக் காட்டிலும் எனக்கு இது முக்கியமாகப் படுகிறது. 2050ல் பேயோனின் மொழியும் பாராவின் மொழியும் ஒன்றென யாராவது சொல்வார்களா. அதற்கான சாத்தியங்களை நாம் நம்மையறியாமல் ஒளித்துவைக்கிறோமா? யோசிக்கவேண்டிய விஷயம் இது.

 3. //மக்கள்நலப் பணியாளர்கள் மேற்கொண்ட அனைத்துப் போராட்டங்களும் திட்டமிடப்படாத சிறைநிரப்புப் போராட்டங்களாயின.//

  அற்புதம் குருவே.

  தாங்கள் போட்டிருக்கும் படத்தில் கருப்பு பெட்டி போட்டு உங்கள் படைப்பாற்றலுக்கு அணை போட்ட தணிக்கையாளர் யார்? இது முறையல்ல.

 4. ஊருக்கு திரும்பி வரும்பொழுதும் கல்கத்தா வழியாகத்தான் வந்தீர்களா??

 5. கென்No Gravatar says:

  வீவ் லா பேயோன் :)

 6. பேயோன்No Gravatar says:

  ஸ்ரீதர் நாராயணன்: ஓ! வார்த்தை மாறிவிட்டதா? வாசவதத்தர் கோபித்துக்கொள்ளப்போகிறார். மாற்றிவிடுகிறேன்.

  பாரா: நல்ல அவதானிப்பு. அந்தந்த காலகட்டத்து எழுத்துநடைகள் பல்வேறு விதமாக இருந்தாலும் நடை ரீதியான பொதுமைப்படுத்தலுக்கு இடமளிப்பதாகவே நினைக்கிறேன். கல்கியின் அலை ஓசை போன்ற படைப்புகளில் காணப்படும் அந்தக் காலத்திய சமகால எழுத்துநடையும் த.நா. குமாரஸ்வாமியின் மொழிபெயர்ப்புப் படைப்புகளில் உள்ள எழுத்துநடையும் ஒன்று போல் எனக்கு தெரிவதற்கு இந்த மொசைக் தன்மைதான் காரணமாக இருக்க முடியும். அது போல நமது நடைகளை குழப்பிக்கொள்ள வாய்ப்பில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் எனக்கென்று ஒரு நடையை நான் வைத்துக்கொள்ளவில்லை. அது நேரடியாக பல மொசைக்குகளின் பாளங்களிலிருந்து படியெடுக்க/வார்த்தெடுக்கப்படுவது.

  விஜய்: தமிழ்ச் சூழலை கருத்தில் கொண்டு அந்த தணிக்கையை நான்தான் செய்தேன்.

  சரவண வடிவேல், கென்: நன்றி.

  இதென்ன? வேறு யாரும் இல்லையா?!

 7. ஸ்வப்னவாசவதத்தையில் வந்த முக்கியமான இந்த பாடலை தீனா என்ற மசாலாப் படத்தில் முக்கி எடுத்து குத்துப்பாடலாக மாற்றி நக்மாவை ஆட வைத்த கொடூரத்தை எதிர்த்தும் புரட்சியாளர்கள் குரல் கொடுக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

 8. உங்களிடமிருந்து ஒரு மிக வித்தியாசமான புனைவு (பதிவின் அளவை சொல்கிறேன்)

  • பேயோன்No Gravatar says:

   சென்ஷி: முடிந்த பின்பு சொல்லி என்ன பயன்?

   பிரசன்னா: இதை எழுத்துக்கூட்டி கண்டுபிடிக்க உங்களுக்கு குறைந்தது நான்கு மணிநேரம் ஆகியிருக்குமே?

   டகால்டி: புரட்சி என்னை காப்பாற்றவே செய்திருந்தது. கைதவறி ஹைன்ரிஷ் ஹைன் பற்றி கட்டுரை எழுதிவிட்டிருந்தேன். பிறகு இந்த மக்கள் உணர்ச்சி பற்றி – அது ஒரு தனி கதை.

 9. dagaltiNo Gravatar says:

  ஒண்ணரை சதத்துக்கு ஒரு சதம் தள்ளியழைத்தும் சர்வாண்டஸ் கட்டுரை படிக்கவிடாமல் இடையூறு செய்த புரட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்.

  புரட்சியை நேராக கண்டபின்னும், மக்களிடம் இயற்கையாக பொங்குபவற்றை அடைத்துவிட முடியும் என்று நீங்கள் இன்றும் எண்ணுவது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

 10. வலைஞன்No Gravatar says:

  புரச்சி செய்ய ஒரு தலைவரோ தலைவியோ வேண்டும்
  தலைவர் மறைந்து அகவை இருபது ஆகிவிட்டது
  தலைவியோ கொடா கண்டி,விடா கண்டியாக உள்ளாள்
  கலைஞர்கள் புரச்சி செய்ய பயன்படார்!
  தளபதிகள் probation period யே இன்னும் முடிக்கவில்லை.அவர்களை நம்பி புரச்சி செய்ய முடியாது.
  காப்டன்கள் இருக்கும் இடமே தெரியவில்லை
  என்ன செய்வது ?

 11. //பிரெஞ்சுப் புரட்சி நடந்தது பிரான்சில்தான் என்பதான உண்மையை நிறுவ முயல்கின்றது.//

  இன்னும் முயற்சித்துதான் கொண்டிருக்கின்றோம் என்ற நிலையில் இந்த பூமி சமூகத்தினை நினைத்து,நினைத்து ஒரே ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது ஐயா!

 12. இலக்கியச்சேவை என்று வந்துவிட்டால், நான் நேரங்காலம் பார்ப்பது இல்லை..

 13. த்ரே பியன் பேயோன்!

 14. கார்மேகராஜாNo Gravatar says:

  பிரெஞ்சு புரட்சியை பற்றி இவ்வளவு தெளிவாக வேறு யாரும் எழுதியதாக தெரியவில்லை! தொடர்க உமது இறைப்பணி!

 15. பேயோன்No Gravatar says:

  வானம்பாடி: நன்றி.

  கார்மேகராஜா: இறைப்பணியா? நான் என்ன வாடிகன் புரட்சியைப் பற்றியா எழுதியிருக்கிறேன்?

 16. இன்று என்னுடைய சொந்த அனுபவத்தை “பிரெஞ்சுப் புரட்சி” என்று ஒரு பதிவில் எழுதிவிட்டு இங்கு வந்தால்… நிஜ பிரெஞ்சுப் புரட்சியை உங்களுடைய அருவமான பயணத்தில் ஒரு வெர்ச்சுவல் சிமுலேட்டரை வைத்து எங்களுக்கு அழகாகக் காட்டியிருக்கிறீர்கள். நன்றி.

  http://kanchiraghuram.blogspot.com/2010/07/blog-post.html

 17. பேயோன்No Gravatar says:

  காஞ்சி ரகுராம்: நன்றி. சோஃபியா கொப்போலா இயக்கத்தில் பில் மர்ரே நடித்த Lost in Translation என்கிற சினிமாவில் அமெரிக்க நடிகரான மர்ரே ஜப்பானில் விளம்பரப் படப்பிடிப்பிற்கு சென்று மொழி-கலாச்சார அவஸ்தைகளுக்கு ஆளாவது கலைநயத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆங்கிலம், தமிழ் போல பிரெஞ்சு இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஆங்கிலத்தில் இல்லாத ஒரு ஒழுங்கு (pattern) பிரெஞ்சு உச்சரிப்பில் இருக்கிறது. இந்த ஒழுங்கை கற்றுக்கொண்டால் பிரெஞ்சு உச்சரிப்பு கடினமாக இருக்காது. உதாரணமாக, en, in, on, un, eu, ll, ei, ai, ou போன்றவை சொற்களில் வரும்போது பெரும்பாலும் அதே உச்சரிப்பை கொண்டிருக்கும். மொழியை கற்பவருக்கு இத்தகைய தகவல்களை அளித்து அவரது மிரட்சியை போக்குவது ஆசிரியரின் கடமை.

 18. வாணிNo Gravatar says:

  அற்புதமான கட்டுரை

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar