கனவினூடே

in சிறுகதை, புனைவு

சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் பேருந்தை விட்டு ஒவ்வொரு ஆளாக இறங்குகிறார். பேருந்து, ஐந்து ரூபாய் நாணயங்களை டயர்களாகக் கொண்டு ஓடுகிறது. பேருந்திலிருந்து இரண்டடி தூரத்தில் பையுடன் ஒரு வலது கை போகிறது. அந்தக் கையுடன் இணைக்கப்பட்டுள்ள குண்டு மனிதர் நான் பார்வையிலிருந்து மறையும் வரை என்னை முறைக்கிறார்.

கட்டணச் சீட்டைக் கிழித்து நீட்டும் நடத்துநரின் விரல்கள் தீக்குச்சிகள் போல் மெலிந்திருக்கின்றன. பழைய ஒரு ரூபாய் நாணயங்களின் எடையைத் தாங்க முடியாமல் விரல்கள் வளைகின்றன. கட்டணச் சீட்டினால் துண்டாகி விழும் நடுவிரல் நடத்துநராலேயே தெரியாமல் மிதிக்கப்படுகிறது. ‘பரவாயில்லை, வீட்டில் இன்னும் நாலு வைத்திருக்கிறேன்’ என்று நடத்துநர் 10 ரூபாய் காந்தியிடம் சொல்கிறார்.

அருகில் காலைப் பரப்பி உட்கார்ந்திருப்பவரின் பகுதி இருக்கை அவரது வீட்டு சோபாவாக இருக்கிறது. பேருந்தை U போல் வளைத்துத் திருப்பும் ஓட்டுனர் தன் முன்னே தன் பேருந்தின் பின்புறத்தைக் கண்டு வேகமாய் அதைத் தவிர்த்துப் பசுஞ்சொல் உதிர்க்கிறார். தவிர்த்ததில் பேருந்து மோதி வாலிபர் சாவு. உடனே அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக சாகிறார்.

தினமும் பேருந்து நிலையத்தில் பார்க்கும் பெண் நிர்வாணமாக வந்திருக்கிறாள் எனினும் தலை, கால் தவிர மற்ற பகுதிகளைக் காணவில்லை. அமெரிக்க நடிகரின் முகச் சாயல் கொண்ட, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சரியாக உலராத முகம் கொண்ட, காலையில் ஹிண்டு பேப்பர் படிக்கும் பெரியவர் என்னைப் பார்த்து சிநேகமாய் சிரிக்கிறார், அநேகமாய் காரணத்துடன்.

இருக்கைகளிடையே அவசரமாக ஒரு ஆட்டோ புகுந்து ஓடுகிறது. பக்கத்து இருக்கையில் இருப்பவர் அதிலிருந்து இறங்கி ஆட்டோ ஓட்டுநரிடம் காசு கொடுக்கிறார். ஆண் பயணி ஒருவர் யுரேகா விலாஸ் நிறுத்தத்திற்குக் கட்டணச் சீட்டு கேட்கிறார். நடத்துநர் அவரிடம் கட்டணச் சீட்டிற்கு பதிலாகப் பேருந்தின் பிரேக்கைத் தருகிறார். (என் பேருந்தின் எண்ணைக் கொண்ட இன்னொரு பேருந்தைப் பற்றிய எனது வேறொரு கனவு எதிரில் வர, ஓட்டுநர்கள் நலம் விசாரித்துக்கொள்கிறார்கள்)

பிறிதொரு நிறுத்தத்தில் அசட்டுச் சிரிப்புடன் ஏறிய பலரில் அச்சிரிப்பு காணப்படாத முகம் வாய்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் என்னை உற்றுப் பார்க்கிறான், 55 ஆண்டுகள் கழித்து என் கனவில் அவன் மனைவி பேருந்தை விட்டு இறங்கும் விதத்தைப் பற்றி நான் எழுதப் போவது தெரிந்துவிட்டது போல. காலி கிளாஸை அவனிடம் கொடுத்துவிட்டுக் கடையிலிருந்து வெளியேறி சாலையைக் கடக்கிறேன். நான் பயணிக்கும் பஸ் மோதி நான் சாவு. பயம் உலுக்கிக் கனவு கலைந்து கண் விழிக்கிறேன் மூன்றாம் பக்கத்தின் பன்னிரண்டாம் பத்தியில்.

Tags: , , ,

15 Responses

 1. அருமை பேயோன்.
  கனவுகள் போல தொடர்ச்சியாக-தொடர்பு-இருந்தும்-இல்லாமலும்-போல மிகு புனைவுடன் கனவு காணப்பட்டுள்ளது.

 2. ஒருவர் ஒவ்வொருவராகிறார்
  5 விரலுக்கும் ஸ்பேரு
  டபுள் சாவு
  சிரிப்பு காணப்படாத முகம் வாய்ந்த
  நான் பயணிக்கும் பஸ் மோதி நான் சாவு – டோட்டல ரொம்ப டெரரா வந்திருக்கு கனவும் & கதையும்!

 3. பேயோன்No Gravatar says:

  நன்றி.

 4. அருமை!

  //பிறிதொரு நிறுத்தத்தில் அசட்டுச் சிரிப்புடன் ஏறிய பலரில் அச்சிரிப்பு காணப்படாத முகம் வாய்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் என்னை உற்றுப் பார்க்கிறான், 55 ஆண்டுகள் கழித்து என் கனவில் அவன் மனைவி பேருந்தை விட்டு இறங்கும் விதத்தைப் பற்றி நான் எழுதப் போவது தெரிந்துவிட்டது போல//

  Slipstream போல் ஒரு ஒழுங்கில்லா ஒழுங்கு. இல்லை எனது பிரமையோ.

  //கண் விழிக்கிறேன் மூன்றாம் பக்கத்தின் பன்னிரண்டாம் பத்தியில்//

  இது இரங்கல் செய்தியோ… இங்கிருந்து இன்னொரு பயணம் தொடங்குகிறது.

 5. படித்துக்கொண்டிருக்கும்போது எழுத்துகள் உதிர்கின்றன. அவசரப்பட்டு வெறும் கையால் தடுக்குமுன் கண்டக்டர் விசில் ஊதுகிறார். உதிர்ந்த அவர் விரலால் ஒரு எழுத்தை தேய்த்து எடுத்துத் தருகிறார். ஈரமாக இருக்கிறது. காயட்டும் என்று உங்கள் வலைப்பக்கத்தின் பின்னூட்டக்கட்டங்களில் ஒற்றியெடுக்கிறேன். ஒவ்வொருமுறையும் பிறழ்கிறது.

  கடலில் பூக்கும் தாமரையின் ரீங்காரம், இந்த வெளிச்சப்பூங்காவில் நிறையும் வேளை தவளை மலர்கிறது.

 6. இந்த புனைவை ஏற்கனவே உங்கள் வலைப்பதிவில் படித்தேன். அப்பொழுது ஒன்றுமே புரியவில்லை. ஏன், இப்பொழுதுகூட ஒன்றும் புரியவில்லை !!!!!!!!!!!!!!! :)

  /***கனவுகள் போல தொடர்ச்சியாக-தொடர்பு-இருந்தும்-இல்லாமலும்-போல மிகு புனைவுடன் கனவு காணப்பட்டுள்ளது.***/

  இந்த பின்னூடத்தை படித்த பிறகுதான் ஒரு தெளிவு கிடைத்தது. சூப்பர்….

 7. எல்லாம் கனவு மாதிரி இருக்கு :)

  //பேருந்து, ஐந்து ரூபாய் நாணயங்களை டயர்களாகக் கொண்டு ஓடுகிறது//

  என்ன ஒரு கற்பனை!!

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 8. பேயோன்No Gravatar says:

  ஸ்ரீதர் நாராயணன்: ஆயுட்கால பேருந்து பயணங்களினதும் கனவுகளினதுமான விளைவுதான் இப்புனைவு. பெரும்பாலும் லீனியராகத்தான் இருப்பதாகத்தான் படுகிறது.

  சரவண வடிவேல்: புரிந்துகொள்ள முயல்வதைக் கைவிட்டாலே புரிந்துவிடும் என நினைக்கிறேன்.

  சுவாசிகா: நன்றி.

 9. மிகச்சிறப்பான மற்றுமொன்று பேயோனிடமிருந்து…

  அணுகுதல் என்பவற்றை புனைவின் கண் கொண்டு காணுதலும் அவற்றில் தமக்கு பிடித்த, வசதிப்படுபவற்றையெல்லாம் எழுத்தில் கொண்டு இயங்க வைத்தலும் புனைவை அணுகும் பிரதியை தவிர்க்க இயலாமல் புனைவாய் மாற்றி வைப்பதுமாய்… நீண்ட நாட்களுக்குப் பின் சிறந்த எழுத்து வாசித்த திருப்தி.

  ***

  இந்த புனைவு வடிவத்தை மிக எளிமையானதாக அல்லது என்னளவில் நீர்த்துப்போன ஒன்றாக நகுலன் வீட்டில் யாருமில்லை என்ற புத்தகத்தில் வாசித்து சலித்த நினைவு வந்து போகிறது. அறிவு போதாமையாய் இருக்கக்கூடுமென்று தேற்றிக்கொண்டேன்.

  மிக்க நன்றி பேயோன்.

 10. பேயோன்No Gravatar says:

  சென்ஷி: நன்றி. புரியாமை ஒரு சமூகத் தீமையாயும் அவ்வாறு எழுதுவதாகக் கருதப்படுபவரின் மேதாவிலாசப் பிரகடனமாயும் எண்ணப்படுகையில் உங்கள் பின்னூட்டம் சற்று ஆசுவாசப்படுத்துகிறது. நீங்கள் கூறியுள்ள நூலை நான் படிக்கவில்லை. இந்த வாரத்திற்குள் படிப்பேனா என்பதும் நிச்சயமில்லை.

 11. கடைசி வரியை படித்ததும் இந்நாள் கலிஃபோர்னியா கவர்னர் அர்னால்டு நடித்த டோடல் ரிகால் படத்தின் முடிவில் எது கனவு எது நிஜம் என்று எனக்கிருந்த குழப்பம் ஞாபகம் வந்துவிட்டது குருவே.

 12. பேயோன்No Gravatar says:

  இப்போதெல்லாம் மேட்ரிக்ஸ்தான் சார் மோஸ்தர்.

 13. //நீண்ட நாட்களுக்குப் பின் சிறந்த எழுத்து வாசித்த திருப்தி//

  அதான் திருப்தியாயிடுச்சுல்ல… அப்புறம் ஏன்யா இந்த கொலை வெறி?

  //அறிவு போதாமையாய் இருக்கக்கூடுமென்று தேற்றிக்கொண்டேன்//

  பத்தாது. இதப் படிச்சு மண்டைய பிச்சுகிட்ட எங்களையும் தேற்ற வாங்க சென்ஷி.

  //நீங்கள் கூறியுள்ள நூலை நான் படிக்கவில்லை. இந்த வாரத்திற்குள் படிப்பேனா என்பதும் நிச்சயமில்லை//

  //இப்போதெல்லாம் மேட்ரிக்ஸ்தான் சார் மோஸ்தர்//

  இதெல்லாம் எப்படி சார்? அப்படியே ஃப்ளோல வர்றதா? :))

 14. பேயோன்No Gravatar says:

  ஸ்ரீதர் நாராயணன்: மேலே ஸ்ரீதர் நாராயணன் என்ற பெயரில் பின்னூட்டம் இட்டிருப்பதும் நீங்கள்தான் என்கிற பட்சத்தில் ஏன் சார் கதை மீது இந்த புதுக்குழப்பம்?

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar