கடிதங்கள்

in கடிதம்

பிற்கால நூலாக்கத்திற்காக, திட்டமிட்ட இலக்கியத் தரத்துடன் நான் எழுதிய கடிதங்களில் மூன்று.

*

அன்பின் ஜெயக்குமார்,

பாராட்டுதல்களுக்கு நன்றி. நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘மரண வீட்டின் குறிப்புகள்’ தற்போது கைவசமில்லை. எங்கோ அலமாரியில் ஏதோ மூட்டைக்குள் கிடக்கிறது. தேடி எடுக்க நேரமில்லை. அதை இரவல் பெற்றுக்கொண்ட ஒரு நண்பர் தில்லிக்கு மாற்றலாகிக் கையோடு எடுத்துச் சென்றுவிட்டார். பஸ்ஸில் தவற விட்டுவிட்டேன். இந்த விதி நீங்கள் கேட்ட பிற நான்கு நூல்களாலும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

உங்கள் நிதிப் பிரச்சினை எனக்குக் கலக்கமளிக்கிறது. நீங்கள் தொடர்ந்து என்னிடம் ஓயாமல் பணம் கேட்டுக்கொண்டேயிருக்கும் நிலைமை மாறும், நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். கடிதப் போக்குவரத்துச் செலவாக இவ்வார இறுதியில் ஐம்பது ரூபாய்/- ஒரு வாசக நண்பரின் மூலம் கொடுத்தனுப்புகிறேன். தயங்காமல் பெற்றுக்கொள்ளுங்கள்.

இப்பவும் மணி 11.20 ஆகிறது. சென்ற வாரம் இதே நேரத்தில் உங்கள் முந்தைய கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது அதில் நீங்கள் கேட்டிருந்த ஆழமான கேள்விகளைப் பலர் கேட்கக் கேட்டிருக்கிறேன். இம்மாதிரியான கேள்விகள்தாம் நமக்கென ஒரு தனித்துவ அடையாளத்தைத் தருபவை. கேள்விகள் கேட்பதை மட்டும் நாம் நிறுத்திவிடக் கூடாது. உதாரணமாக, சமகால வாழ்வியலில் மனிதன் கால்களை எதற்காகப் பயன்படுத்துகிறான்? நிற்க. அடுத்த இருவாரங்களுக்கு நான் ஊராந்திரம் போவதால் கடிதம் பெற நிலையான முகவரி இருக்காது. குழந்தை இலக்கியனுக்கு அன்பு முத்தங்கள்.

வாழ்த்துக்களுடன்
பேயோன்

* * *

அன்பின் சுலைமான் அபெக்கே,

உங்கள் அளவிற்கு ஆங்கிலப் புலமை எனக்கில்லாமையால் தமிழிலேயே எழுதுகிறேன். நீங்கள் ராஜ குடும்பத்தவர் என்பதால் இதை யாரிடமாவது மொழியாக்கம் செய்து வாசித்துக்கொள்வதில் சிரமம் இருக்காது என நம்புகிறேன்.

உங்கள் உறவினர் மரணப் படுக்கையில் இருப்பது குறித்த உருக்கமான கடிதம் கண்டேன். மகிழ்ச்சி. தமிழ் எழுத்தாளர்கள் இத்தனைப் பேர் இருக்கையில் நீங்கள் என்னிடம் உதவி கேட்டிருப்பது நெகிழவைக்கிறது. நைஜீரியாவில் உள்ள எனது நண்பர் கிரி சொல்லித்தான் உங்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்கலாமா? கொஞ்சம் போல் வறுமையில் திண்டாடும் ஒரு முன்னணி தமிழ் எழுத்தாளன் என்ற அறிமுகமே எனக்குப் போதும்.

சகமனிதனுக்கு உதவாத ஒரு எழுத்தாளன் என்ன எழுதியும் பயனில்லாத காரணத்தால் நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். உங்கள் பணம் ரூபாய் 20 மில்லியன் டாலர் வங்கியில் முடங்கியிருப்பது உங்கள் மனதை எந்தளவிற்குப் பாதித்திருக்கும் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு டால்ஸ்டாய் நாவல் படித்துக்கொண்டிருக்கையில் பக்க அடையாளமாக வைத்த 100 ரூபாய் நோட்டு காணாமல் போனதால் 10 நிமிடம் தூக்கத்தை இழந்த அனுபவம் உண்டு எனக்கு.

இந்தத் தொகை எனது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டபின் நான் அதை ஏமாற்றி எடுத்துக்கொள்ள வேண்டாம் என நீங்கள் கெஞ்சியிருப்பது எனக்குக் கோபத்தை ஏற்படுத்தவில்லை. அவ்வளவு பெரிய தொகையாக இருக்கும்போது நீங்கள் கொஞ்சினால்தான் ஆச்சரியம். நான் ஒரு நடுத்தரவர்க்கத்தினன். 20 மில்லியன் என்ன, 19 மில்லியனைக்கூட வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று எனக்குத் தெரியாது. உண்மையான எழுத்தாளர்களால் பெரிய பண மோசடிகளைச் சாதித்துவிட முடியாது.

நீங்கள் கூறும் திரு. ஜோசப் மாரா தார்மீக ரீதியில் தனித்துவ மனிதராகத் தென்படுகிறார். இந்த நைஜீரிய பாதுகாப்புத் துணைச் செயலரே என்னைத் தொடர்பு கொள்வார் எனில் பணப் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. 25 சதவீதத்தை எனக்குத் தருவதாகக் கூறியுள்ளீர்கள். நான் பார்த்த வரை 30 சதவீதம்தான் நைஜீரிய சந்தை நிலவரம். இருந்தாலும் உங்களுக்குள்ள சூழ்நிலை காரணமாக நான் பேரம் பேச விரும்பவில்லை. அந்த நேரத்தில் நான் இன்னொரு கடிதம் எழுதிவிடுவேன். எனவே உங்கள் வாழ்வாதாரத்திற்குரிய பணம் உங்களைச் சேர வேண்டியது என்னுடையதும் திரு. ஜோசப் மாராவினுடையதும் பொறுப்பாகும்.

உலகம் சுருங்கச் சுருங்க மனிதர்களிடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டிருந்தால் கடைசியில் மனிதர்கள் உலகிற்கு வெளியே சென்றுவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும். உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் ராயல் வங்கியால் நேரடியாக உங்களுக்கு உங்கள் நாட்டிலுள்ள வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்ப முடியாதது இந்தப் பரஸ்பர மனித அவநம்பிக்கையைத்தான் காட்டுகிறது.

இன்றைக்குச் சற்று வேலையாக இருக்கிறேன். திங்கட்கிழமை (15.03.2010) காலையன்று நீங்கள் கொடுத்த ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் 20,000 ரூபாய்/- செலுத்திவிடுகிறேன். உங்கள் கைக்குப் பணம் வந்த அடுத்த நொடியே எனக்குச் சேர வேண்டிய பணத்தை அனுப்பிவிட்டால் போதும். இனியும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எச்சில் கையால் காக்காய் விரட்டும் ஒரு செயலாக இது எனக்கு இருந்துகொள்ளட்டும்.

உதவுதல் நாடி,
பேயோன்

* * *

அன்பின் ரூபேஷ்,

பாராட்டுதல்களுக்கு நன்றி. 2004-ல் ஷாங்காயின் புகழ்பெற்ற ஷாங்காய் மக்லெவ் ரயில் ஓடத் தொடங்கியது. மக்லெவ் (Maglev) என்பது Magnetic Levitation என்பதன் சுருக்கமாகும். இந்த வகை ரயிலில் சக்கரங்கள் இருக்காது. காரணம், அவை மின் மற்றும் காந்த சக்திகளால் இயங்குகின்றன. உலகின் முதல் வணிக மக்லெவ் ரயில் 1984-ல் இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாமில் அறிமுகப்படுத்தப்பட்டது. மணிக்கு 42 கி.மீ. வேகத்தில் ஓடிய இந்த ரயில் 1995-ல் நம்பகத்தன்மை மற்றும் வடிவமைப்புப் பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டது. 2003-ல் ஜப்பானின் மக்லெவ் ரயில் மணிக்கு 361 கி.மீ. வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்தது. இருந்தாலும் அதற்குப் பின்பு வந்த ஷாங்காய் மக்லெவ் ரயில் மணிக்கு 431 கி.மீ. வேகத்தில் ஓடி அந்தச் சாதனையை முறியடித்தது. உலகிலேயே மிக வேகமான இந்த ரயில்கூட மின்சக்தி இன்றி ஓடாது. அது போலத்தான் என்னைப் போன்ற எழுத்தாளர்களும் உங்களைப் போன்ற வாசகர்களின் நேர்மறைக் கருத்துக்களைச் சார்ந்திருக்கிறோம்.

பொதுவாகப் பாராட்டுகள் குவிந்தாலும் அவ்வப்போது சில விமரிசன முட்கள் லேசாகவாவது குத்தத் தவறுவதில்லை. அத்தகைய சூழ்நிலைகளில் “தல, எப்புடி தல!!!!”, “முடியல” போன்ற உங்களுடைய வார்த்தைகளே மனதிற்கு இதம் தந்து படைப்பூக்கம் தொடர்ந்தியங்க உதவுகின்றன. நீங்கள் கேட்டதற்கிணங்க எனது ‘ஆட்டோகிராப்’பை இணைத்திருக்கிறேன். அதை இக்கடிதத்தின் இறுதியில் “வாழ்த்துக்களுடன்” என்கிற வார்த்தைக்குக் கீழ் பார்க்கலாம். வெள்ளி விசில் மட்டும் சாத்தியமில்லை.

தினமும் சுமார் 20 பக்கங்களுக்குக் குறையாமல் கடிதம் எழுதும் உங்களைப் போல் பலரும் எனக்கு தினமும் சுமார் 20 பக்கங்களுக்குக் குறையாமல் கடிதம் எழுதுகிறார்கள். அத்தனையையும் படிப்பது சாத்தியமல்ல. அதனால்தான் உங்கள் தோழியுடனான பிரச்சனை என் கவனத்திற்கு வரவில்லை. கடிதங்களையே அன்றாடப் போக்கில் 200 பக்கங்களுக்கு மேல் படிக்க வேண்டியிருந்தால் படைப்புச் செயல்பாடுகளுக்கு நேரம் இருக்காது. நான் எழுதுவது குறைந்தால் அது உங்களையும்தானே பாதிக்கும். அதனால் எனக்குக் கடிதம் எழுதும்போது அதில் என்னைப் பற்றி எங்கெல்லாம் வருகிறதோ அந்த இடங்களை மஞ்சள் மார்க்கரால் ஹைலைட் செய்துவிட்டால் படித்து நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ள வாகாக இருக்கும்.

தயவுசெய்து என் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்காதீர்கள். படித்தாலும் மறுவாசிப்புச் செய்ய புதிதாக வாங்கிப் படியுங்கள். இதை எனக்குத் தனிப்பட்ட முறையில் செய்யும் பண உதவியாகக் கருதிக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்களுடன்
பேயோன்

Tags: , , , ,

16 Responses

 1. புஷ்பராஜ்No Gravatar says:

  நைஜீரிய ஸ்கேம் வரலாற்றிலேயே இப்படி ஒரு பதில் அவர்களைச் சென்று சேர்ந்திருக்காது.

  பேயோன் கடித இலக்கிய வகைப்பாட்டியலிலும் தனித்துவ விகசிப்புடன் படைப்பூக்கத்தை நிறுவியுள்ளதைக் காணும்போது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது:

  “தல, எப்புடி தல!!!!”, “முடியல”

  :-))

 2. :-))))))))))))))))))))))))))))))))

 3. //உலகம் சுருங்கச் சுருங்க மனிதர்களிடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டிருந்தால் கடைசியில் மனிதர்கள் உலகிற்கு வெளியே சென்றுவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும்/

  அடடே! இப்படி ஒரு விசயம் மனசுக்கு கஷ்டமாக தெரியுதே! உலகிற்கு வெளியே சென்றுவிட்டால் சக மனிதர்களோடோ வணிக விசயங்களோடோ தொடர்புகொள்வதில் மிக சிரமமாக அல்லவா இருக்கும் ?

 4. //ஒரு டால்ஸ்டாய் நாவல் படித்துக்கொண்டிருக்கையில் பக்க அடையாளமாக வைத்த 100 ரூபாய் நோட்டு காணாமல் போனதால் 10 நிமிடம் தூக்கத்தை இழந்த அனுபவம் உண்டு எனக்கு./

  :))))

 5. siddhan555No Gravatar says:

  உங்களில் யார் அடுத்த சாரு நிவேதிதா?

 6. :) :) :)

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 7. sabarinathanNo Gravatar says:

  //வெள்ளி விசில் மட்டும் சாத்தியமில்லை.//
  விசிலடிச்சான் …(?)… :))

 8. GanpatNo Gravatar says:

  கடிதங்கள் மிக நவீனமாகவும், சுவையாகவும்,வேறுபட்டும் உள்ளன.

  வாழ்த்துக்கள்!

 9. பேயோன்No Gravatar says:

  ஆயில்யன்: உலகிற்கு வெளியே சென்றால் புவியீர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதந்து போய்விடுவார்கள்.

  siddhan555: யாரிடம் கேட்கிறீர்கள்?

  Ganpat: கடிதங்களை பெற்றவர்களுக்கு சொல்லுங்கள்.

 10. உங்களுக்கு கடிதம் எழுத விரும்புகிறான் ஒரு நண்பன்.. வீட்டு முகவரி கொடுக்கவும் :)

  • பேயோன்No Gravatar says:

   விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு வீட்டிற்கு போய் தூங்கிய கதையாக இருக்கிறதே.

 11. வெள்ளி விசில் :))))

  தாங்க முடியல… :)

 12. :D இது அத்தனையும் நான் உங்களுக்கு எழுதிய கடிதங்களின் பதில் போல இருக்கிறது ;)

 13. பேயோன்No Gravatar says:

  ஸ்ரீதர் நாராயணன்: இதைத்தான் சொன்னேன்.

  வானம்பாடி: நீங்கள் கிரியுறவினரா?

 14. //இதைத்தான் சொன்னேன்.//

  அவ்வ்வ்… நாந்தான் அந்த விசிலடிச்சான் குஞ்சா?

  ஆழம் தெரியாம பின்னூட்டப் பெட்டியில காலை விட்டுட்டேனோ? அடுத்த ஸ்கூட்டர் போஸ்ட்ல டேமேஜ் கண்ட்ரோல் பண்ணப் பாக்குறேன்.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar