‘பேயோன் 1000′ புத்தகத்தின் அட்டையில் பயன்படுத்தப்பட்ட கோட்டோவியம்.

‘பேயோன் 1000′ புத்தகத்தின் அட்டையில் பயன்படுத்தப்பட்ட கோட்டோவியம்.

ஒரு விமானத்தில் ஒரு இந்தியர், பாகிஸ்தானியர், அமெரிக்கர், சீனர், ஜப்பானியர் உட்பட பலர் இருந்தார்கள். விமானத்தில் பழுது ஏற்பட்டு நான்கு பேர் குதித்து உயிர்த் தியாகம் செய்ய வேண்டிய நிலை. முதலில் அமெரிக்கர், அமெரிக்கா வாழ்க என்று கத்திவிட்டு குதிக்கிறார். அடுத்து சீனர், சீனா வாழ்க என்று குதிக்கிறார். பிறகு ஜப்பானியர், ஜப்பான் வாழ்க என குதிக்கிறார். கடைசியில் இந்தியர், இந்தியா வாழ்க எனக் கத்திவிட்டு பாகிஸ்தானியரைத் தள்ளிவிட்டுவிடுகிறார். அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், “பாகிஸ்தானியரை தள்ளிவிட்டால் பாகிஸ்தான் வாழ்க என்றுதானே சொல்ல வேண்டும்? இந்தியா வாழ்க என்று எப்படி வரும்?” என போட்டாரே ஒரு போடு!
சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் பேருந்தை விட்டு ஒவ்வொரு ஆளாக இறங்குகிறார். பேருந்து, ஐந்து ரூபாய் நாணயங்களை டயர்களாகக் கொண்டு ஓடுகிறது. பேருந்திலிருந்து இரண்டடி தூரத்தில் பையுடன் ஒரு வலது கை போகிறது. அந்தக் கையுடன் இணைக்கப்பட்டுள்ள குண்டு மனிதர் நான் பார்வையிலிருந்து மறையும் வரை என்னை முறைக்கிறார்.
கட்டணச் சீட்டைக் கிழித்து நீட்டும் நடத்துநரின் விரல்கள் தீக்குச்சிகள் போல் மெலிந்திருக்கின்றன. பழைய ஒரு ரூபாய் நாணயங்களின் எடையைத் தாங்க முடியாமல் விரல்கள் வளைகின்றன. கட்டணச் சீட்டினால் துண்டாகி விழும் நடுவிரல் நடத்துநராலேயே தெரியாமல் மிதிக்கப்படுகிறது. ‘பரவாயில்லை, வீட்டில் இன்னும் நாலு வைத்திருக்கிறேன்’ என்று நடத்துநர் 10 ரூபாய் காந்தியிடம் சொல்கிறார்.
அருகில் காலைப் பரப்பி உட்கார்ந்திருப்பவரின் பகுதி இருக்கை அவரது வீட்டு சோபாவாக இருக்கிறது. பேருந்தை U போல் வளைத்துத் திருப்பும் ஓட்டுனர் தன் முன்னே தன் பேருந்தின் பின்புறத்தைக் கண்டு வேகமாய் அதைத் தவிர்த்துப் பசுஞ்சொல் உதிர்க்கிறார். தவிர்த்ததில் பேருந்து மோதி வாலிபர் சாவு. உடனே அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக சாகிறார்.
தினமும் பேருந்து நிலையத்தில் பார்க்கும் பெண் நிர்வாணமாக வந்திருக்கிறாள் எனினும் தலை, கால் தவிர மற்ற பகுதிகளைக் காணவில்லை. அமெரிக்க நடிகரின் முகச் சாயல் கொண்ட, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சரியாக உலராத முகம் கொண்ட, காலையில் ஹிண்டு பேப்பர் படிக்கும் பெரியவர் என்னைப் பார்த்து சிநேகமாய் சிரிக்கிறார், அநேகமாய் காரணத்துடன்.
இருக்கைகளிடையே அவசரமாக ஒரு ஆட்டோ புகுந்து ஓடுகிறது. பக்கத்து இருக்கையில் இருப்பவர் அதிலிருந்து இறங்கி ஆட்டோ ஓட்டுநரிடம் காசு கொடுக்கிறார். ஆண் பயணி ஒருவர் யுரேகா விலாஸ் நிறுத்தத்திற்குக் கட்டணச் சீட்டு கேட்கிறார். நடத்துநர் அவரிடம் கட்டணச் சீட்டிற்கு பதிலாகப் பேருந்தின் பிரேக்கைத் தருகிறார். (என் பேருந்தின் எண்ணைக் கொண்ட இன்னொரு பேருந்தைப் பற்றிய எனது வேறொரு கனவு எதிரில் வர, ஓட்டுநர்கள் நலம் விசாரித்துக்கொள்கிறார்கள்)
பிறிதொரு நிறுத்தத்தில் அசட்டுச் சிரிப்புடன் ஏறிய பலரில் அச்சிரிப்பு காணப்படாத முகம் வாய்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் என்னை உற்றுப் பார்க்கிறான், 55 ஆண்டுகள் கழித்து என் கனவில் அவன் மனைவி பேருந்தை விட்டு இறங்கும் விதத்தைப் பற்றி நான் எழுதப் போவது தெரிந்துவிட்டது போல. காலி கிளாஸை அவனிடம் கொடுத்துவிட்டுக் கடையிலிருந்து வெளியேறி சாலையைக் கடக்கிறேன். நான் பயணிக்கும் பஸ் மோதி நான் சாவு. பயம் உலுக்கிக் கனவு கலைந்து கண் விழிக்கிறேன் மூன்றாம் பக்கத்தின் பன்னிரண்டாம் பத்தியில்.

ஐரோப்பிய அரசியலையும் அதன் மூலம் உலக அரசியலையும் உலக நாடுகளுக்கிடையிலான அரசியல், கலாச்சார, வர்த்தக உறவுகளையும் மட்டுமல்லாது கலை, இலக்கியத் துறைகளையும் பலவர்க்கத்து மக்களதும் வாழ்முறைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு பெருநிகழ்வு பிரெஞ்சுப் புரட்சியாகும். பொதுவாக ஒரு வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்து சில நூற்றாண்டுகள் ஆன பின்னர் அது குறித்துப் பல விதக் கேள்விகளை வரலாற்றாய்வாளர்கள் எழுப்புவதுண்டு. உண்மையில் நடந்தது என்னவென்ற தேட்டையில் வரலாற்றறிஞர்கள் ஈடுபடத் தொடங்குவதுண்டு. அது போலவே பிரெஞ்சுப் புரட்சி குறித்தும் பல கருதுகோள்கள் உண்டு ஆகும்.
பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை; அது பர்மாவில் நிகழ்ந்தது என ஒரு சாராரும், பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை; அது கனடாவில் நிகழ்ந்தது என இன்னொரு சாராரும், இவ்விருபெரும் புரட்சிகளுமே கட்டுக்கதைகள்தாம் எனப் பிறிதொரு சாராரும் கூறிவருகின்றனர். எனது இப்பதிவானது இம்மாறுபடும் கருத்துகளால் விளைந்துள்ள குழப்பங்களைக் களைவதுடன் பிரெஞ்சுப் புரட்சி நடந்தது பிரான்சில்தான் என்பதான உண்மையை நிறுவ முயல்கின்றது.
பிரெஞ்சுப் புரட்சி நிகழ்ந்த ஆண்டான 1789இன்போது நான் பிரான்சில் – இன்னும் கூறப்போனால் பாரீஸ் நகரில் – இருந்தேன். அக்காலத்தில் சென்னையிலிருந்து வியன்னாவிற்கு நேரடிப் பேருந்து கிடையாது. கல்கத்தா சென்று அங்கிருந்து சுமார் 750 மணிநேரம் ரயிலில் பயணித்துப் பாரீஸில் இறங்கி வியன்னா செல்லும் பேருந்தைப் பிடிக்க வேண்டும். பாரீஸிலிருந்து வியன்னாவிற்குப் பயணம் 12 மணிநேரம்தான். நான் வியன்னாவிற்குச் சென்ற காரணம், ஸ்பானிய நாவலாசிரியர் செர்வாண்டஸின் ஒன்றரை நூற்றாண்டு விழாவில் கட்டுரை வாசிக்க என்னை அழைத்திருந்தனர். 02-12-1789 அன்று நான் பாரீஸில் கால் பதித்தபோது வசந்தகாலம். பாரீஸின் வசந்தகாலம் அமெரிக்க இலையுதிர்காலம் போன்று உலகப் பிரசித்தி பெற்றது. விழா நடைபெற இன்னும் இரு நாட்கள் இருந்ததால் அங்கு தங்கத் தீர்மானித்தேன்.
நான் தங்கிய விடுதியான ‘பலெ திராத்வார் தெ பாரி’ (Palais Tröttoir de Pàris) முந்நூறு வருடப் பழமைவாய்ந்ததாகும். பல பிரெஞ்சு அறிவுஜீவிகளின் சரணாலயமாக, விவாதத் தலமாக அது இருந்தது. பிரெஞ்சுப் புரட்சி நடந்த அன்று அதைச் சிறிதும் எதிர்பார்த்திராத பலரில் நானும் ஒருவர். எனக்குப் பிரெஞ்சு மொழி தெரிந்திருந்தால் அந்நாட்டு நாளேடுகளைப் படித்து பிரெஞ்சுப் புரட்சியை எதிர்நோக்கியிருப்பேன். அது எனது முதல் பாரீஸ் விஜயமாதலால் நகரின் பழம்பெருமை வாய்ந்த நினைவுச் சின்னங்களைப் பார்க்கப் புறப்பட்டேன். முலான் ரௌஜ் அருகே நல்ல காபி கிடைக்கும் என நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டிருந்தேன்.
புரட்சி நடந்த அன்று காலை சுமார் 11 மணியளவில் ‘பிஸ்த்ரோ’ ஒன்றில் தேனீர் அருந்தியபடி தெருக் காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தேன் (‘பிஸ்த்ரோக்கள்’ என்பவை திறந்தவெளி உணவு விடுதிகளாகும். இங்குச் சிற்றுண்டி மட்டுமே கிடைக்கும்; சாப்பாடு கிடையாது. இவ்விடுதிகளில் மக்கள் பிரெஞ்சு நாளேடுகளைப் புரட்டியபடி பிரெஞ்சு பானங்கள் அருந்துவதும் அன்றாடக் காட்சி). அப்போது திடீரென ஒரு பேரோசை எழுந்தது. சுமார் இருபது பிரெஞ்சுக்காரர்கள் திபுதிபுவென ஓடிவந்தனர். ஒரு சிலர் விடுதியில் நுழைந்து ‘லா ரெவல்யூசியோன்! லா ரெவல்யூசியோன்!!’ எனக் கத்தினர். எனக்கு அம்மொழி தெரியாது எனினும் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்குக் கடத்தப்பட்ட 20,000 சொற்களில் ஒரு நூறாவது எனக்குத் தெரிந்திருந்தன. புரட்சி எனும் பொருள் கொண்ட ‘ரெவல்யூஷன்’ என்பதும் அதில் ஒன்று. ரெவல்யூசியோன் என்பதன் பொருளை அதன் மூலமாகப் புரிந்துகொண்டேன். உலகைச் சுனாமியாய்ப் புரட்டிப் போட்ட பிரெஞ்சுப் புரட்சி வந்துவிட்டதென்பதும் அது தற்போது அந்தத் தெருவின்வழியே வந்துகொண்டிருந்தது என்பதும் எனக்குப் புரியத் துவங்கின.
எனது வாழ்நாள்க் காலத்தில் ஒருசிறு தகராற்றைக் கூடப் பார்த்தறியாதவன் நான். ஆகவே புரட்சிக்கு எவ்வாறு உடனடி எதிர்வினையாற்றுவது என்றறியாது குழம்பி நான் நிற்கையினில், சுமார் ஆயிரம் பிரெஞ்சுப் பொதுமக்கள் ‘வீவ் லா பிரான்ஸ்! வீவ் லா பிரான்ஸ்!! (பிரான்ஸ் வாழ்க!) எனக் கோஷமிட்டபடி அத்தெருவில் விரைந்துவந்தனர். கிட்டத்தட்ட ஒவ்வொருவரதும் கைகளில் கொடிகளிருந்தன. சிறிது தொலைவிலிருந்து துப்பாக்கி குண்டுச் சத்தங்கள் எழும்பின. நான் பிரெஞ்சுப் புரட்சியை மாடியிலிருந்து பார்க்கலாமென விரைந்தேன். மொட்டை மாடியில் சுமார் இருநூறு பேர் பழைய நூல்களையும் நாளேடுகளையும் சஞ்சிகைகளையும் துண்டுதுண்டாகக் கிழித்துப்போட்டுக்கொண்டிருந்தனர். அது ஜனத் திரளின் மீது தூவுவதற்காக எனப் பின்னரே எனக்குத் தெரியவந்தது. மொட்டை மாடியில் இடமின்றி உடனடியாக முதல் தளத்திற்கு இறங்கினேன்.
முதல் தளத்தில் கம்பளி நூல் கொண்டு உடை பின்னிக்கொண்டிருந்த ஒரு சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி புரட்சி வெடித்த காரணியை எனக்கு எடுத்துரைத்தார். மன்னர் பதினாறாம் லூயியின் மோசமான ஆட்சியினால் நாட்டில் பலவாறான சமூகச் சீர்கேடுகளும் சீர்திருத்தமின்மையும் தலைவிரித்தாடத் தொடங்கியிருந்தன. பிரெஞ்சுப் பிரபுக்களும் பிறவகைப்பட்ட செல்வந்தர்களும் செழிப்பில் திளைத்துக்கொண்டிருந்தனர். மக்கள் மனதில் சற்றுச் சற்றாக அதிருப்தி வலுத்தது. வால்டேர், ரூஸோ, திதரோ முதலான சிந்தனையாளர்கள் மற்றும் மக்கள்நலப் பணியாளர்கள் மேற்கொண்ட அனைத்துப் போராட்டங்களும் திட்டமிடப்படாத சிறைநிரப்புப் போராட்டங்களாயின. ‘ரொட்டி இல்லை என்றால் என்ன, கேக் சாப்பிடவும்’ என்கிற ராணியாரிணி மேரி அந்த்வானெத்தினது பேச்சு, மக்களது குமுறலுக்கு எரிபொருளூட்டவே செய்திருந்தது.
உயர்த்தப்பட்ட கைகளில் ஆயுதமேந்திக் கோஷமிட்டவாறு தெருக்களில் பெருந்திரளாய்ச் சுற்றியலைந்து புரட்சிக்குக் கூட்டம் திரட்டியபடி அரண்மனையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தவர்களுடைய – புரட்சியாளர்களுடைய – வாழ்க்கையினது அவலங்களையும் போராட்ட வழிமுறைகளையும் அந்த அம்மாள் எனக்கு விளக்கினார். ஒன்றிற்கு மேற்பட்டோரின்றிப் புரட்சி சாத்தியமான சரித்திரமில்லை என ஜெர்மானிய எழுத்தாளர் எலியாஸ் கானட்டி எழுதியிருப்பது நினைவில் தோன்றி மறைந்தது.
நானிருந்த தெருவைக் கடந்திருந்த ஐம்பதினாயிரம் பேரே மீள மீள வந்துகொண்டிருப்பதான உணர்வு எனக்கேற்படும் வகையில் மக்கள் வெள்ளம் புழங்கியபடி இருந்தது. பாதாள ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதை முழுவதிலும் புரட்சியாளர்களும் அவர்களது மனைவியரும் குழந்தைகளும் நிரம்பியிருந்தனர். மன்னரும் அரசியும் சிரச்சேதம் செய்யப்பட்டுவிட்டனர் எனவும் அவர்களைக் கொல்லுவதற்கென்றே அவசரமாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘கில்லட்டின்’ கருவி அதற்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் மூட்டை முடிச்சுக்களுடன் காணப்பட்ட பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
அரண்மனையிலிருந்து திரும்பி வந்தவாறு இருந்த ஒரு கூட்டமானது கழுத்தில் நகைகள் மற்றும் கைகளில் பெரிய விலையுயர்ந்த ஜாடிகளுடன் காட்சியளித்தது. மாலைச் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த பிரெஞ்சுக்காரர் ஒருவரிடம் புரட்சி எப்போது முடியும் என ஆங்கிலத்தில் வினவினேன். குறைந்தபட்சம் அதிகாலை மூன்று மணி ஆகலாம் என்று அவர் பிரெஞ்சு மொழியில் அளித்த பதிலின் பொருளை ஒருவாறாகப் புரிந்துகொண்டேன்.
புரட்சி என்று வந்துவிட்டால் புரட்சியாளர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என வர்ணிக்கும் நுட்பமான பாடல் ஒன்று ஸ்வப்னவாசவதத்தையில் உண்டு. ஸ்ரீரங்கம் கீதாசாரியார் உரையைக் கேளுங்கள் -
“தீக்குச்சி தானாகப் பற்றிக்கொள்ளாது. அதை யாராவது வந்து உரச வேண்டும். தீக்குச்சி வம்பு தும்பு வைத்துக்கொள்ளாது. அதாவது யாராவது வந்து உசுப்பும் வரையில். ஒவ்வொரு புரட்சியாளனின் மனமும் தலா ஒரு தீக்குச்சியைப் போலத்தான்.”
பிரெஞ்சுப் புரட்சி பற்றி வால்டேர் சொல்வதைக் கேளுங்கள்:
“புரட்சிக்கான தேவை பற்றி எழுத்தாளன், தத்துவ ஞானி என்ற முறையில் நிறைய பேசியாயிற்று. இனி நீங்கள் ஆச்சு, ராணி மேரி ஆச்சு என்று விட்டுவிட்டேன். இனி ரொம்பக் காலத்திற்கு எந்தப் பத்திரிகைக்கும் பத்தி எழுதப்போவதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். பிரெஞ்சுக்காரர்களுக்கு என் பத்தியை எதிலும் படிக்கவில்லை என்றால் உருளைக் கிழங்கு செரிக்காது.”
வால்டேரின் சமகாலச் சிந்தனையாளரான ரூஸோவின் கருத்தும் வால்டேரினுடையதுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது:
“அந்த்வானெத்தின் கொடுங்கோலாட்சியை ஒழிக்கப் புரட்சி அவசியம். ஆனால் புரட்சி என்பது கொடியவர்கள் கூடுமிடம் ஆகிவிடக் கூடாது.”
இத்தனைக் களேபரத்திலிருந்து தப்பித்து வந்து மாம்பலம் பாசஞ்சர் ரயிலைப் பிடிக்கும்போது காலை 5 மணி ஆகிவிட்டிருந்தது. டிக்கெட்டை வாங்கிக்கொண்டு வந்து ஒரு பெஞ்சிற்குப் புட்டத்தைக் கொடுத்தேன். உலகின் இன்னொரு மூலையில் புரட்சி நடப்பதற்கான எந்த அறிகுறியையும் காணோம். எனக்கு சுக்குக் காபி தேவைப்படுமா என ஆவலுடன் வந்து கேட்ட இளைஞனிடம் சில்லறையைக் கொடுத்து ஒன்று வாங்கிக் குடித்தேன். வால்டேரும் ரூஸோவும் தெரியாத அவனுக்கு அன்று நிச்சயம் உருளைக் கிழங்கு செரித்திருக்கும்.
பேயோன் is using WP-Gravatar