ஒரு லோட்டா இரத்தம்

தற்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் புனைவின் முதல் அத்தியாயம். முழுவதும் எழுதிய பின் அச்சில் வரும்.

*

ஜூலை, 1904.

“நாங்கள் அகன்று, நீண்டு சென்ற ஒரு பாதையில் மெல்ல நடந்துகொண்டிருந்தோம். தூறலின் ஈரப் புள்ளிகள் விழுந்திருந்த அப்பாதை பழைய காலத்திய பெரிய வீடு ஒன்றின் வழியே செல்வதை என்னால் காண முடிந்தது. “இப்பாதை செம்யனோவ்களின் இல்லத்திற்கு இட்டுச் செல்கிறது” என்றான் புதோவ்கின்.

செம்யனோவ்களில் யாரையும் நான்அறிந்திருக்கவில்லை எனினும் யெவ்கெனி செம்யனோவை அரிதாக நடன விழாக்களில் காண்பதுண்டு. அவர்களைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் என் மனதில் எப்போதும் ஓடியபடி இருக்கும். இப்போது அவர்களது இல்லத்தைப் பார்த்ததும் அந்த ஆர்வம் மீண்டும் என்னுள் எழுந்தது. ஆந்த்ரெய் யாக்கோவ்லெவிச் செம்யனோவ் அந்த ஊரின் போஸ்ட் மாஸ்டராக இருந்தது மட்டுமின்றி கவர்னரின் தூரத்து உறவினராகவும் இருந்தார். 1843இன் வசந்தகாலத்தில் அவர் ச_______லிருந்து வேரா செம்யனோவாவுடனும் மகள்கள் வேரா மற்றும் அன்னாவுடனும் வந்திருந்தார். நான் செம்யனோவ் பெண்களை இன்று வரை பார்த்ததில்லை.

“வா, அவர்களைப் பார்த்து வரலாம். நீ அவர்களை விரும்புவாய்” என்றான் புதோவ்கின்.

செய்வதற்கு மேலானதாக எனக்கு வேறு எதுவும் இல்லாததால் நான் அவனுடன் செல்லத் தீர்மானித்தேன். நாங்கள் அந்த வீட்டை நெருங்குகையில், தூறல் அதை மேலும் பழையது போல் தோற்றம் கொள்ள வைத்திருந்ததைக் கண்டேன். அதன் ஜன்னல்களில் ஒன்றிலிருந்து மெலிந்த கரம் ஒன்று தோன்றியது, பின் உடனே மறைந்துபோனது. அந்தக் கைக்கு 18 வயதிருக்கலாம் என ஊகித்தேன். அல்லது, ஓரிரு மாதங்கள் இளையதாகவும் இருக்கக்கூடும்.

கிழவன் மிகையில் அனைவரும் நூலகத்தில் இருப்பதாகக் கூறினான். புதோவ்கின், நூலகத்திலிருந்து வந்த மெல்லினிய பியானோ இசையைக் கலைக்க விரும்பாததைப் போல் மிக மென்மையாகப் படிகளில் ஏறினான்.

அது ஒரு மிகப் பழைய பெரிய வாழ்வறை. “நான் ஏதேனும் தொந்தரவு செய்யவில்லையே?” எனக் கேட்டவாறு உள்ளே நுழைந்தான் புதோவ்கின். நானும் பின்தொடர்ந்தேன்.

“வாருங்கள் அலெக்சி பாவ்லோவிச். ஆக உங்களுக்கு எங்களை நிச்சயம் நினைவிருக்கிறது, அல்லவா?” என ஆச்சரியக் கூச்சலிட்டாள் அவர்களில் மூத்தவள். புதோவ்கின் அவளை வேரா செம்யனோவா என அறிமுகப்படுத்தினான் – “

பிரபல ரஷ்ய எழுத்தாளர் அந்தோன் பாவ்லோவிச் சேகவ் என்ற ஆன்டன் செக்காவ் (1860-1904) எழுதுகோலைப் போட்டுவிட்டுக் கழுத்தைப் பிடித்துக்கொண்டார். மின்சாரம் சுண்டியிழுப்பது போல் ஒரு வலி. என்ன ஆயிற்று எனக்கு என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டார். விளக்கவியலாதபடி, அவருக்கு வியர்க்கத் தொடங்யிருந்தது. அந்த மங்கிய அந்திமாலையின் குளிருக்காக அவர் ஜன்னல்களை சாத்தியிருந்தார். சிறிது காற்றோட்டமாக இருந்தால் சரியாகிவிடும் என்றெண்ணி செக்காவ் எழுந்தார்.

‘அட மனித உடலே, என்னே உனது பலவீனம்!’ என்றபடி தட்டுத் தடுமாறி வீட்டிலிருந்து வெளியே வந்தார். அந்தி நேரம் சூரியனுக்குக் கீழிருந்த அனைத்தையும் வெளிர்ச் சாம்பல் நிறமாக்கியிருந்தது. சாலையைக் கடந்து தனது இல்லத்தை முகங்கொண்டிருந்த சீமெந்து பெஞ்சில் சரிந்து அமர்ந்தார்.

கானல் நீரினூடே ஒட்டகக் கூட்டம் போல் யாரோ வருவது மசங்கலாகத் தெரிந்தது. “பனியில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் அந்தோன் பாவ்லோவிச்?” என்று காதருகில் ஓர் இளம் குரல் கேட்டது. அது சிறுவன் யோஹானாகத்தான் இருக்க வேண்டும். செக்காவின் கண்கள் குத்திடத் தொடங்கின. “அந்தோன் பாவ்லோவிச்! அந்தோன் பாவ்லோவிச்! நீங்கள் சீக்கா?” என்று அலறினான் யோஹான்.

“நானா ஆன்டன் செக்காவ்? இல்லை! நான் அந்தோன் சேகவ்! என் பெயர் அந்தோன் சேகவ் – “

நிலைகுத்தத் தொடங்கியிருந்ததும் பீதி வெளிப்பட்டதுமான செக்காவின் விழிகளிலிருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது. சிறுவன் யோஹான் வான் பெர்க் செக்காவின் மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்தான். ஆன்டன் செக்காவ் சத்தியமாக செத்துப் போயிருந்தார்.

இரண்டாம் அத்தியாயம் »

வெட்டு

“சார்!” கைக்கடிகாரத்தைப் பார்த்து மணி சொல்ல மனதைத் தயார்ப்படுத்திக்கொண்டு குடையுடன் திரும்பினார். “உங்களை ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறேன் சார்.” அலறக்கூட நேரமின்றி கழுத்தைப் பிடித்துக்கொண்டு இருளுக்குள் சரிந்தார்.

நம்மை வாசிக்கும் புத்தகங்கள்

நாம் புத்தகங்களை வாசிப்பது போல புத்தகங்களும் நம்மை வாசிப்பது உங்களுக்குத் தெரியுமா? அனுபவப் பக்கங்களைத் தங்கள் அறிவிற்குள் கோர்த்துக்கொண்டு நடமாடும் புத்தகங்களாக விளங்கும் மனிதர்களை நான் பார்க்கிறேன். மனிதர்களான நாம் புத்தகங்களை வாசிப்பது போல இந்த மனிதர்கள் நம்மைப் புத்தகங்களாக வாசிக்கிறார்கள். நாம் விளிம்பிற்குத் தள்ளப்படும்போதெல்லாம் வாழ்க்கைப் புத்தகத்தில் தாங்கள் கடந்து வந்த பக்கங்களை நமக்குப் படித்துக் காட்டி நம்மை மீட்கிறார்கள்.

எனது பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத அனுபவங்களை எனது பள்ளி நூலகம் எனக்குத் தந்தது. தொலைக்காட்சித் தொடர் வசதி எங்கள் கிராமத்திற்கு இன்னும் வந்தபாடில்லாத காலகட்டம் அது. பள்ளி முடிந்தபின் ஓணான் அடிக்க சக பிள்ளைகள் ஓடுகையில் என் போன்ற வெகு சிலர் பள்ளி நூலகத்தில் தஞ்சம் புகுவோம்.

நான் படிக்கும் புத்தகங்களில் தென்படும் சுவாரசியமான வாக்கியங்களை கருப்பு ஸ்கெட்ச் பேனாவால் வட்டமிட்டு அதனருகே மார்ஜினில் சிவப்பு ஸ்கெட்ச்சால் எனது கருத்துகளைப் பதிவுசெய்யும் பழக்கம் எனக்கிருந்தது. எனது முதல் நூல் மதிப்புரை இப்படித்தான் உருப்பெற்றது. சில கதைப் புத்தகங்களில் கதைகளின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லாதுபோனால் கத்தரித்த வெள்ளைத் தாளை அதன் மேல் ஒட்டி மாற்று முடிவை எழுதும் பழக்கமும் அப்போதே எனக்கிருந்தது.

இப்படி எங்களூரில் ஒரு தலைமுறைக்குப் பள்ளி நூலகமே ஒரு புத்தகமாக இருந்தது. மயிலிறகை இனப்பெருக்கம் செய்யவைக்க எந்த ஆசிரியரும் எங்களுக்குப் பயிற்சியளிக்கவில்லை. எந்த இறகுக்கு நட்ராஜ் பென்சில் சீவல் பிடிக்கும், எந்த இறகுக்கு அப்சரா ஒவ்வாமை இருந்தது என புத்தகங்களின் வாயிலாகவே நாங்கள் கற்றுக்கொண்டோம். தனது பக்கங்களை எங்களுக்குப் படிக்கக் கொடுத்த புத்தகமாகத்தான் எங்கள் பள்ளி நூலகத்தை நான் பார்க்கிறேன். நம் ஒவ்வொருவர் விஷயத்திலும் புத்தகங்கள் பல வடிவங்களில் வந்து நம் வாழ்க்கையின் ஓரங்களில் சாலைகளை அமைக்கின்றன. மரங்களை நட்டு மலர்களைப் பொழியவிடுகின்றன.

சமீபத்தில் நான் பார்த்த டாஸ்மேனிய இயக்குநர் ஜி்ம்மி வேல்ஸின் The Paid Piper of Libria என்ற சினிமாவின் முழுக் கதையை வேலை மெனக்கெட்டுச் சொல்கிறேன். லிப்ரியா என்ற ஒரு கற்பனை நாட்டில் எல்லா நூலகங்களிலும் புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த தேசத்தில் மனித எண்ணிக்கையைவிட எழுத்தாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வீட்டுக்கொருவரின் படைப்பு பிரசுரம் கண்டுவந்ததால் மரங்கள் நிறைய அழிக்கப்படுகின்றன. மர அழிவால் மழை பொழிவு நின்றுபோய் ஒரு கட்டத்தில் லிப்ரியா நாட்டினர் மழைக்காக அண்டை நாட்டிற்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட லிப்ரியா அமைச்சரவை ஜேம்ஸ் என்கிற ஒரு அறிமுகவாதியை ஏற்பாடு செய்கிறது.

எங்கெல்லாம் புத்தகக் குப்பை சேருகிறதோ அங்கெல்லாம் ஒரு நல்ல தொகைக்கு புத்தக அறிமுகம் எழுதி அவற்றை ஒழிப்பது ஜேம்ஸின் தொழில். லிப்ரியாவிற்கு வரும் ஜேம்ஸ் தனது ஹீரோ பேனாவினால் லிப்ரிய நூலக உள்ளடக்க அறிமுக அழிவைத் தொடங்குகிறான். லிப்ரியாவின் தார் மின்னும் தெருக்களில் நடந்தபடி ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு அறிமுகம் எழுத, நூலகங்களிலிருந்தும் புத்தகக் கடைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் லட்சோபலட்சம் புத்தகங்கள் கிளம்பித் தெருவில் இறங்குகின்றன. அறிமுகவாதியின் சொற்களில் கட்டுண்டு பின்தொடர்கின்றன. நடந்துகொண்டே செல்பவனுக்கு ஒரு மலையுச்சி கால்வருகிறது. ஹீரோ பேனாவை மலை விளிம்பிலிருந்து தூக்கி ஜேம்ஸ் எறிகிறான். அறிமுகித்த புத்தகங்கள் மலையிலிருந்து வீழ்ந்து அழிகின்றன. மலையுச்சியில் ஒரு பாறைக்கு அடியில் முளைத்த ஒரு நெருஞ்சிப் பூவை சட்டையில் குத்திக்கொண்டு வீடு திரும்புகிறான் ஜேம்ஸ்.

நாமும் இப்படித்தான் வீட்டுக்குப் போகிறோம். காரணம், ஒரு வேலை முடிந்தபின் அந்த வேலை நடந்த இடத்தில் நாம் இருப்பதற்கான காரணங்கள் வலுவிழந்துவிடுகின்றன. நமது மனித வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வீட்டிற்கு செல்லும் வழியில் கடைக்குப் போகும் சூழ்நிலைகளும் நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு. நுகர்வுக் கலாச்சாரத்தின் தேவைகளை உந்துமையமாகக் கொண்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் தள்ளுபடிகள் வகிக்கும் இடம் புறக்கணிக்க முடியாதது.

சில்வியா ஸ்பேட் கெய்ஷா எழுதிய Discounts and Good Deals for Seniors in Texas-ல் 380க்கு மேற்பட்ட டெக்சாசிய நகரங்களில் மனதையள்ளும் 1,200 தனித்துவ தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஒரு நல்ல பேரத்தை கண்டதுமே இனங்காணும்படியாக இந்நூலை வடிவமைத்திருக்கிறார்கள். தங்குமிடங்கள், கடைத்தெரு, உணவகங்கள், கால்ஃப் மற்றும் பிற கேளிக்கை வாய்ப்புகள், மருத்துவ மற்றும் பல் மருத்துவ சேவைகள் ஆகியவை உட்பட 16 வகையான ரம்மியம் கொஞ்சும் தள்ளுபடிகள் இருக்கின்றன.

நமக்கு அறிவை அளிக்கும் ஆகச்சிறந்த கருவிகளுள் அதிக பக்கங்களைக் கொண்டிருப்பவை புத்தகங்களே. நாம் புத்தகம் படிக்கும்போது ஒரு பக்கத்திற்கு இத்தனை நியூரான்கள் வளர்சிதைமாற்றத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய பாங்காங் பல்கலைக்கழக ஆய்வு ஒரு கணக்கு காட்டுகிறது. பெரிய விஷயம்தான்.