முதலையும் சியாமள விகாச பட்சியும்

in ஓவியம், புனைவு

(குழந்தைகளுக்கான புனைவு)

காலமும் வெளியும் இணையுமொரு புள்ளியில் முகிழ்த்த கண்காணா பூமியொன்றில் ஒரு வனம் இருந்தது. பல்வகை விலங்குகள் பூட்டப்பட்ட, பறவைகள் அடைக்கப்பட்ட ஒரு விசித்திரப் பிராந்தியம் அந்த வனம். வாசகர்கள் காலடித் தடம் பதியாத இந்தத் தன்னந்தனித்துவப் பிரதேசத்தை பல்வேறுபட்ட உயிர்வாழ் மிருகங்கள் பகிர்ந்துவந்தன.

அந்த வனத்தினூடே மனிதர் அறியா மர்ம மொழியில் தன்னோடு தானே பேசிக்கொண்டு இலக்கில்லாத் திசையில் ஒரு அவர்ண திரவ நாகமாய் சதா பயணித்தபடி இருந்தது அந்த ஜல நதி. விருட்சங்கள் மண்டிய பச்சிருளில் பரவியிருந்த அதன் கரையோரத்தில் பூமிக்கும் ஆகாயத்திற்குமான ஒரு செங்குத்துப் பாலத்தின் எஞ்சிய துண்டு போல் ஒரு நெடுங்கத்தரி மரம் முளைத்திருந்தது. எண்ணிக்கை துறந்த ஆலகால விழுதுகள் ஆயிரங்கால் மண்டபமாய் அம்மரத்தைத் தோற்றங்கொள்ள வைத்தன.

இப்படியான அந்தக் கத்தரி மரத்தில் ஏறி அதன் கனிகளை உண்டு செரிக்கும் பழக்கத்தைத் தனதாக்கிக்கொண்டிருந்தது ஒரு நதி முதலை. அனுதினமும் சூரியன் ஆகாயத்தின் உச்சிக்கு மெல்லத் தாவிக்கொண்டிருக்கும் காலப்பொழுதில் நமது முதலையும் கத்தரிப்பழம் தேடி மரத்தில் ஆரோகணிக்கும்.

ஒருநாள் முதலையின் கண்களில் பட்டவை ஆற்றுநீரின் மேல் கிளைத்தோங்கிய ஒரு கிளையில் தொங்கிய கத்தரிப் பழங்கள். நான்கு கால்களால் மரத்தைப் பிடித்து ஏறி நீள்முகத்தை நீட்டிக் கத்தரிப் பழங்களை அண்மிக்கையில் சறுக்கி விழுந்தது நதி நீரில் தலைகீழாக நமது கதாநாயக உயர்முதலை. வாயிலும் மூக்கிலும் நீரும் சேறும் உட்புகுந்து மூச்சுத் திணறி முதலை தத்தளித்தது. அதன் குட்டைக் கால்களை ஆற்றின் அல்லிப் பாம்புகள் சுற்றிக்கொண்டன.

திடீரென சிறகடிக்கும் சத்தம் கேட்டு அண்ணாந்தது முதலை. அது சறுக்கிய கிளையில் வந்து அமர்ந்தது ஒரு புராதன சியாமள விகாச பட்சி. முதலை திமிறத் திமிற பாம்புப் பிடிகள் இறுகியதைப் பட்சி பார்த்தது. முதலையின் உயிரூசல் நீடித்தால் அதன் பௌதிக இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும் என உணர்ந்தது பட்சி.

இன்னொரு இணை உலகில் ஒரு மூதாட்டியிடம் களவாடியிருந்த வடையைக் காலடி பொந்திற்குள் பதுக்கிவைத்த அந்தச் சிறகுதாரி, விருட்டென எழுந்து கருஞ்சிறகுகளை அடித்தபடி நீரினுள் பாய்ந்தது. கணப்பொழுதில் பாம்புகளைக் கொய்து முதலையை விடுவித்து முதலையின் நன்றிக்குக் காத்திராமல் வானுக்குள் தாவியது. கத்தரி மரத்தின் நீர் தீண்டாக் கிளையில் ஏறிக் கத்தரிப் பழங்களை உண்டு நதிக்கரைக்குத் திரும்பியது முதலை, புராதன சியாமள விகாச பட்சியின் மேலதிக பிரக்ஞையுடன்.

பிறிதொரு நாள், பிறிதொரு சமயம், பட்சியினுடைய முறையின்பேரில் ஒரு வேட்டுவன் அந்த வனத்தில் பிரவேசித்தான். ஆகாயத்தை இடைவிட்டு மறைத்த இலைகளின் பொய்க் கூரையினுடைய நீலப் பொத்தலில் நின்றிருந்த பட்சியை வேட்டுவப் பார்வை அவதானித்தது. அன்றிரவு சியாமள விகாச பட்சியை அடித்து சூப்புச் செய்துவிடத் தீர்மானித்தது வேட்டுவ மனம்.

அந்நேரம் வேட்டுவத் துப்பாக்கி தோளேறியதைக் கண்ணுற்றது நதியில் நீந்திய உயர்கதாநாயக முதலை. சின்னஞ்சிறு கால்களால் நீரை அளைந்தபடி மெல்லக் கரை நோக்கி முன்னேறிய முதலை, வேட்டுவனின் விழிகளூடே மரணம் தன் இரக்கமற்ற பார்வையைப் பட்சியின் மீது செலுத்தியதைக் கண்டு பதைத்தது. பட்சிக்கு நன்றி சொல்ல இது நல்ல தருணம் என உணர்ந்து வேட்டுவனை நோக்கி விரைந்தது.

மிகைப்படுத்திய மனிதத் தலை போன்றதொரு பாறையின் மேல் நின்றிருந்தான் வேட்டுவன். துப்பாக்கியின் எய்விசையில் விரலை அமர்த்திப் பட்சியின் தரிசனத்தில் அவன் ஆழ்ந்தான். முதலை நீரிலிருந்து வெளிப்பட்டு வேட்டுவனுக்கும் பட்சியின் மரணத்திற்கும் இடையிலிருந்த அரை நொடியில் அடியெடுத்து வைத்தது. வணக்கம் சொல்லிப் பிரியும் கைகள் போன்ற வாயைத் திறந்தது. கடித்தது வேட்டுவனுடைய காலை. வலி பொறுக்காமல் வேட்டுவன் அலறி துப்பாக்கியைத் தலை சுற்றி வீசியெறிந்தான். சப்தம் எழும்பிய இடத்தைப் பட்சியின் காதுகள் தேட, அவற்றைப் பின்தொடர்ந்த அதன் கண்கள் இலை இடைவெளிகளூடே ஓடிய வேட்டுவன் மீது பதிந்து புரிதலில் விரிந்தன.

ஒவ்வொரு பிரதிக்கும் ஒரு நீதி உண்டு. குழந்தைகளே, இந்தப் பிரதிக்கும் அது உண்டு. அது என்ன தெரியுமா? மற்றவர்கள் நமக்கு உதவி செய்தால் நாமும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் இன்னொரு முறை நமக்கு உதவி செய்வார்கள்.

Tags: , ,

17 Responses

 1. கென்No Gravatar says:

  அருமை குருவே

 2. //ஒவ்வொரு பிரதிக்கும் ஒரு நீதி உண்டு. //

  அருமை. குழந்தைகளின் பிரதியை நான் தொலைத்து விட்டு குழந்தைகளுக்கு கதை சொல்ல முடியாது.

 3. siddhan555No Gravatar says:

  என்னையும் குழந்தையாக்கி விட்டீர்கள்.எப்போது பெரியாளாவது?

 4. //அவர்ண திரவ நாகமாய் சதா பயணித்தபடி இருந்தது அந்த ஜல நதி. விருட்சங்கள் மண்டிய பச்சிருட்டில் பரவியிருந்த அதன் கரையோரத்தில் பூமிக்கும் ஆகாயத்திற்குமான ஒரு செங்குத்துப் பாலத்தின் எஞ்சிய துண்டு போல் ஒரு நெடுங்கத்தரி மரம் முளைத்திருந்தது.//
  பாவம் குழந்தைகள்

 5. பேயோன்No Gravatar says:

  கென்: நன்றி.

  ஸ்ரீதர்: நன்றி.

  siddhan555: உங்கள் பெயரில் 555-ஐ இருக்கும்போது ஏன் சார் இந்த கவலை?

  சபரிநாதன் அர்த்தநாரி: நான் நினைத்தேன், நீங்கள் சொல்லிவிட்டீர்கள்!

 6. //ஆகாயத்தை இடைவிட்டு மறைத்த இலைகளின் பொய்க் கூரையினுடைய நீலப் பொத்தலில் நின்றிருந்த பட்சியை வேட்டுவப் பார்வை அவதானித்தது. அன்றிரவு சியாமள விகாச பட்சியை அடித்து சூப்புச் செய்துவிடத் தீர்மானித்தது வேட்டுவ மனம்/

  நல்லா ஒரு ஃப்ளோவா போய்க்கிட்டிருக்கும்போது நடுவில இந்த சூப்பு நிரடுது படிக்க…!

 7. //வணக்கம் சொல்லிப் பிரியும் கைகள் போன்ற வாயைத் திறந்தது. கடித்தது வேட்டுவனுடைய காலை. வலி பொறுக்காமல் வேட்டுவன் துப்பாக்கியைத் தலை சுற்றி வீசியெறிந்தான். //

  கையெடுத்து கும்பிட்டு என்னைய காப்பாத்துட ஆண்டவான்னு


  சொல்லியிருப்பானோ?

 8. //மற்றவர்கள் நமக்கு உதவி செய்தால் நாமும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் இன்னொரு முறை நமக்கு உதவி செய்வார்கள்.//

  தொடர்ந்து மற்றவர்கள் உதவி செய்துகொண்டே இருக்கவேண்டுமெனில் நான் என்ன செய்ய வேண்டும் குருஜி?

 9. NSRNo Gravatar says:

  நல்ல புனைவு. ஆனால் ஒரே வார்த்தை ஜாலம்..

 10. பேயோன்No Gravatar says:

  ஆயில்யன்: மெனக்கெட்டு எழுதுபவன் யோசிக்காமலா சார் எழுதுவான்?

  NSR: வார்த்தை ஜாலம்தான் சார் முக்கியம்.

 11. incrediblemonkeNo Gravatar says:

  ஒரு கதை.

  ஆனால் உள்ளே இருப்பது
  இரண்டு கதை.

  சற்று ஆழ்ந்து பாத்தால்
  முதல் கதைக்குள் நுழையும் இரண்டாவது கதை ஒன்று
  இரண்டாவது கதைக்குள் நுழையும் முதல் கதை ஒன்று

  கடைசியில்
  ஒரே கதை இரண்டு விதங்களில்சொல்லப்படுகிறது.

  இரண்டு மிக பிரம்மாண்டமான நிலைக்கண்ணடிகள்
  எதிர்ரெதிரே வைக்கப்பட்டால் எல்லை இல்லாத
  பிம்பங்களை உருவாக்கிக் கொள்வது போல்
  கதையும், கதையின் வரிகளும், ஒவ்வொரு
  வார்த்தையும் எல்லையில்லா படிமங்களை
  அமைத்துக் கொள்கின்றன்.

  இந்த கதையை வலைதளத்தில் இருந்து
  எடுத்துவிட்டால் என்ன செய்வது என்று
  பயந்து தனியாக எடுத்து சேமித்து
  வைத்துவிட்டேன்.

  இப்போது இது என்னுடைய கதை.

  இப்படி ஒரு அபூர்வமான கதையை தந்தமைக்காக
  ஆயிரம் நன்றிகள்.

 12. ChithranNo Gravatar says:

  முன்பொருமுறை நீங்கள் ட்வீட்டாமல் போயிருந்தால் ’சியாமள விகாசப் பட்சி என்பது காக்காய் என்று தெரியாமலே போயிருக்கும். (பாட்டி வடையை வைத்து யூகிப்பவர்கள் அதி புத்திசாலிகள்)

  இலக்கிய வார்த்தை ஜாலத்தில் நிஜக் குழந்தைகள் தெறித்து ஓடினாலும், வாசகர்களின் இலக்கிய மனக்குழந்தைகளுக்கு பிடிக்கிற கதை.

 13. பேயோன்No Gravatar says:

  incrediblemonke: சிக்கலாக ஏதேதோ சொல்கிறீர்கள். ஆமோதிக்கிறேன். Over-interpretation என்ற வலைக்குள் சிக்கிவிட வேண்டாம். ஜாதி வெறி, மத வெறி, வசவு போன்று எதையாவது எழுதியிருந்தால் மட்டுமே வலைத்தளத்திலிருந்து எடுப்பேன். மற்றபடி எதையும் நீக்குவதற்கில்லை.

  சித்ரன்: குழந்தைகளுக்காக எழுதப்படும் கதைகளை படிப்பதுண்டா? இப்படித்தான் எழுதுகிறார்கள், ஆனால் இவ்வளவு ஆழமாக இல்லை. நான் மட்டுமே புத்திசாலிக் குழந்தைகளுக்கும் சேர்த்து எழுதுகிறேன்.

 14. dagaltiNo Gravatar says:

  இந்த தனித்துவ மொழியை இப்பருவத்திலேயே ரசிக்கப்போகும் இக்காலக் குழந்தைகள் பாக்கியசாலிகள்.

  படம் சிந்தனையைச் சீண்டுகிறது.

  வணக்கம் சொல்லிப் பிரிந்த கைகள் மறுபடி ஒன்று சேரும்பொழுது இடையில் பட்சியே அகப்பட்டுவிட்டதாய் குறிப்புணர்த்துவதாய் தெரிகிறது.
  இந்த வாசிப்பில் வேட்டுவனின் literality கரைந்து, அவன் ஒரு உருவகமாகி விடுகிறான்.

  இரண்டு படங்களையும் ஒப்புநோக்கும் போது, முதல் படத்தில் காண்பிக்கப்பட்ட ஒற்றைக்காலைத்தான், முதலை இரண்டாவதில் கவ்விக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. அப்படி என்றால் வேட்டுவன் என்று தனி entity-யாக முதலை தன்னைத் தான் நினைத்திருக்கிறது.

  நன்றி மறக்க இருந்த தருணத்தில் தன்னைத் தானே வதைத்து உயர்கதாநாயகப் பட்டத்துக்கு தகுதியை சம்பாதிப்பதாய் தெரிகிறது.

  குழந்தைகளுக்கு மீபொருண்மையை அறிமுகம் செய்யும் உங்கள் சிறப்பான பணி, குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும் நாள் வரை, போற்றப்படும்.

 15. பேயோன்No Gravatar says:

  டகால்டி: உங்கள் வாசிப்பு சுவையாக இருக்கிறது. ஆனால் அர்த்த நெய்யை அதிகமாகக் குத்திவிட்டீர்கள். இக்கதையில் ஒவ்வொரு இடத்திலும் புராதன சியாமள விகாச பட்சி என குறிப்பிடுவது வாசகனை ஆயாசப்படுத்தக்கூடும் என்பதால்தான் மீத இடங்களில் சுருக்கமாக பாலு என்பது போல் பட்சி என எழுதியிருக்கிறேன். இருந்தாலும் இருக்கட்டும் சிலபல அர்த்தங்கள்.

 16. சந்தோஷ்No Gravatar says:

  இந்த கதையுலுள்ள நீதி என்னை வழிநடத்தும். நன்றி.

 17. பேயோன்No Gravatar says:

  நன்றியெல்லாம் பலமாக இருப்பதை பார்த்தால் உங்களுக்கு 40 வயதாவது இருக்கும் போலுள்ளது. இது ஆறு வயது குழந்தைகளுக்கான கதை.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar