நம்மை வாசிக்கும் புத்தகங்கள்

in கட்டுரை

நாம் புத்தகங்களை வாசிப்பது போல புத்தகங்களும் நம்மை வாசிப்பது உங்களுக்குத் தெரியுமா? அனுபவப் பக்கங்களைத் தங்கள் அறிவிற்குள் கோர்த்துக்கொண்டு நடமாடும் புத்தகங்களாக விளங்கும் மனிதர்களை நான் பார்க்கிறேன். மனிதர்களான நாம் புத்தகங்களை வாசிப்பது போல இந்த மனிதர்கள் நம்மைப் புத்தகங்களாக வாசிக்கிறார்கள். நாம் விளிம்பிற்குத் தள்ளப்படும்போதெல்லாம் வாழ்க்கைப் புத்தகத்தில் தாங்கள் கடந்து வந்த பக்கங்களை நமக்குப் படித்துக் காட்டி நம்மை மீட்கிறார்கள்.

எனது பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத அனுபவங்களை எனது பள்ளி நூலகம் எனக்குத் தந்தது. தொலைக்காட்சித் தொடர் வசதி எங்கள் கிராமத்திற்கு இன்னும் வந்தபாடில்லாத காலகட்டம் அது. பள்ளி முடிந்தபின் ஓணான் அடிக்க சக பிள்ளைகள் ஓடுகையில் என் போன்ற வெகு சிலர் பள்ளி நூலகத்தில் தஞ்சம் புகுவோம்.

நான் படிக்கும் புத்தகங்களில் தென்படும் சுவாரசியமான வாக்கியங்களை கருப்பு ஸ்கெட்ச் பேனாவால் வட்டமிட்டு அதனருகே மார்ஜினில் சிவப்பு ஸ்கெட்ச்சால் எனது கருத்துகளைப் பதிவுசெய்யும் பழக்கம் எனக்கிருந்தது. எனது முதல் நூல் மதிப்புரை இப்படித்தான் உருப்பெற்றது. சில கதைப் புத்தகங்களில் கதைகளின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லாதுபோனால் கத்தரித்த வெள்ளைத் தாளை அதன் மேல் ஒட்டி மாற்று முடிவை எழுதும் பழக்கமும் அப்போதே எனக்கிருந்தது.

இப்படி எங்களூரில் ஒரு தலைமுறைக்குப் பள்ளி நூலகமே ஒரு புத்தகமாக இருந்தது. மயிலிறகை இனப்பெருக்கம் செய்யவைக்க எந்த ஆசிரியரும் எங்களுக்குப் பயிற்சியளிக்கவில்லை. எந்த இறகுக்கு நட்ராஜ் பென்சில் சீவல் பிடிக்கும், எந்த இறகுக்கு அப்சரா ஒவ்வாமை இருந்தது என புத்தகங்களின் வாயிலாகவே நாங்கள் கற்றுக்கொண்டோம். தனது பக்கங்களை எங்களுக்குப் படிக்கக் கொடுத்த புத்தகமாகத்தான் எங்கள் பள்ளி நூலகத்தை நான் பார்க்கிறேன். நம் ஒவ்வொருவர் விஷயத்திலும் புத்தகங்கள் பல வடிவங்களில் வந்து நம் வாழ்க்கையின் ஓரங்களில் சாலைகளை அமைக்கின்றன. மரங்களை நட்டு மலர்களைப் பொழியவிடுகின்றன.

சமீபத்தில் நான் பார்த்த டாஸ்மேனிய இயக்குநர் ஜி்ம்மி வேல்ஸின் The Paid Piper of Libria என்ற சினிமாவின் முழுக் கதையை வேலை மெனக்கெட்டுச் சொல்கிறேன். லிப்ரியா என்ற ஒரு கற்பனை நாட்டில் எல்லா நூலகங்களிலும் புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த தேசத்தில் மனித எண்ணிக்கையைவிட எழுத்தாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வீட்டுக்கொருவரின் படைப்பு பிரசுரம் கண்டுவந்ததால் மரங்கள் நிறைய அழிக்கப்படுகின்றன. மர அழிவால் மழை பொழிவு நின்றுபோய் ஒரு கட்டத்தில் லிப்ரியா நாட்டினர் மழைக்காக அண்டை நாட்டிற்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட லிப்ரியா அமைச்சரவை ஜேம்ஸ் என்கிற ஒரு அறிமுகவாதியை ஏற்பாடு செய்கிறது.

எங்கெல்லாம் புத்தகக் குப்பை சேருகிறதோ அங்கெல்லாம் ஒரு நல்ல தொகைக்கு புத்தக அறிமுகம் எழுதி அவற்றை ஒழிப்பது ஜேம்ஸின் தொழில். லிப்ரியாவிற்கு வரும் ஜேம்ஸ் தனது ஹீரோ பேனாவினால் லிப்ரிய நூலக உள்ளடக்க அறிமுக அழிவைத் தொடங்குகிறான். லிப்ரியாவின் தார் மின்னும் தெருக்களில் நடந்தபடி ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு அறிமுகம் எழுத, நூலகங்களிலிருந்தும் புத்தகக் கடைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் லட்சோபலட்சம் புத்தகங்கள் கிளம்பித் தெருவில் இறங்குகின்றன. அறிமுகவாதியின் சொற்களில் கட்டுண்டு பின்தொடர்கின்றன. நடந்துகொண்டே செல்பவனுக்கு ஒரு மலையுச்சி கால்வருகிறது. ஹீரோ பேனாவை மலை விளிம்பிலிருந்து தூக்கி ஜேம்ஸ் எறிகிறான். அறிமுகித்த புத்தகங்கள் மலையிலிருந்து வீழ்ந்து அழிகின்றன. மலையுச்சியில் ஒரு பாறைக்கு அடியில் முளைத்த ஒரு நெருஞ்சிப் பூவை சட்டையில் குத்திக்கொண்டு வீடு திரும்புகிறான் ஜேம்ஸ்.

நாமும் இப்படித்தான் வீட்டுக்குப் போகிறோம். காரணம், ஒரு வேலை முடிந்தபின் அந்த வேலை நடந்த இடத்தில் நாம் இருப்பதற்கான காரணங்கள் வலுவிழந்துவிடுகின்றன. நமது மனித வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வீட்டிற்கு செல்லும் வழியில் கடைக்குப் போகும் சூழ்நிலைகளும் நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு. நுகர்வுக் கலாச்சாரத்தின் தேவைகளை உந்துமையமாகக் கொண்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் தள்ளுபடிகள் வகிக்கும் இடம் புறக்கணிக்க முடியாதது.

சில்வியா ஸ்பேட் கெய்ஷா எழுதிய Discounts and Good Deals for Seniors in Texas-ல் 380க்கு மேற்பட்ட டெக்சாசிய நகரங்களில் மனதையள்ளும் 1,200 தனித்துவ தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஒரு நல்ல பேரத்தை கண்டதுமே இனங்காணும்படியாக இந்நூலை வடிவமைத்திருக்கிறார்கள். தங்குமிடங்கள், கடைத்தெரு, உணவகங்கள், கால்ஃப் மற்றும் பிற கேளிக்கை வாய்ப்புகள், மருத்துவ மற்றும் பல் மருத்துவ சேவைகள் ஆகியவை உட்பட 16 வகையான ரம்மியம் கொஞ்சும் தள்ளுபடிகள் இருக்கின்றன.

நமக்கு அறிவை அளிக்கும் ஆகச்சிறந்த கருவிகளுள் அதிக பக்கங்களைக் கொண்டிருப்பவை புத்தகங்களே. நாம் புத்தகம் படிக்கும்போது ஒரு பக்கத்திற்கு இத்தனை நியூரான்கள் வளர்சிதைமாற்றத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய பாங்காங் பல்கலைக்கழக ஆய்வு ஒரு கணக்கு காட்டுகிறது. பெரிய விஷயம்தான்.

Tags: , , , ,

26 Responses

 1. //எந்த இறகுக்கு நட்ராஜ் பென்சில் சீவல் பிடிக்கும், எந்த இறகுக்கு அப்சரா ஒவ்வாமை இருந்தது என புத்தகங்களின் வாயிலாகவே நாங்கள் கற்றுக்கொண்டோம்//

  நாஸ்டாலஜிக்கு ! :))

  நீங்க இறகுக்கு இட்டிலி வைச்சு பழக்கப்படுத்தலயா பாஸ்?

  //நம் ஒவ்வொருவர் விஷயத்திலும் புத்தகங்கள் பல வடிவங்களில் வந்து நம் வாழ்க்கையின் ஓரங்களில் சாலைகளை அமைக்கின்றன. மரங்களை நட்டு மலர்களைப் பொழியவிடுகின்றன.//

  மரங்களை நட்டு மலர்களை மையத்தில்/மையமாக தூவிகின்றன! #இதுவும் சரிதானே?!

  //லிப்ரியா நாட்டினர் மழைக்காக அண்டை நாட்டிற்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது//

  பேயோன் தொடல்!!!

  //மலையுச்சியில் ஒரு பாறைக்கு அடியில் முளைத்த ஒரு நெருஞ்சிப் பூவை சட்டையில் குத்திக்கொண்டு வீடு திரும்புகிறான் ஜேம்ஸ்.//

  பத்தியில இது 1தான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு பாவி பயபுள்ளைக்கு குட்டியூண்டு நெருஞ்சு பூ தான் கிடைக்கணுமா ஒரு வேளை அழிந்த புத்தகங்கள் “மண்ணை வாரி இறைச்சுட்டு செத்துப்போச்சோ?

 2. //நாம் புத்தகம் படிக்கும்போது ஒரு பக்கத்திற்கு இத்தனை நியூரான்கள் வளர்சிதைமாற்றத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய பாங்காங் பல்கலைக்கழக ஆய்வு ஒரு கணக்கு காட்டுகிறது. பெரிய விஷயம்தான்//

  இன்னும் நிறைய பெரிய பெரிய புத்தகம் படிச்சா வெயிட் லாஸ் சாத்தியமா எந்த யுனிவர்சிட்டியாச்சும் ஆய்வு செஞ்சு அறிவிச்சிருந்தா இன்போ ப்ளீஸ்!

  இப்படிக்கு நார்மல் வெயிட்டுடன் +25% அதிகம் எடை கொண்ட,
  ஆயில்யன்

 3. விஜய்வீரப்பன்No Gravatar says:

  ஆம். நீங்கள் சொல்வது சரி. புத்தக வாசிப்பு ஒரு சிறந்த அனுபவம். எங்கள் ஊரில் நூலகம் எங்கு இருக்கிறது என்று பிள்ளைகளுக்கு தெரியவில்லை. வருத்தப்பட வேண்டிய விஷயம். ஏதாவது செய்ய வேண்டும்.

 4. ramji_yahooNo Gravatar says:

  சில கதைப் புத்தகங்களில் கதைகளின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லாதுபோனால் கத்தரித்த வெள்ளைத் தாளை அதன் மேல் ஒட்டி மாற்று முடிவை எழுதும் பழக்கமும் அப்போதே எனக்கிருந்தது

  Enjoyed this. thanks for this post

 5. cleverboyNo Gravatar says:

  image not available உள்பட பிக்சலுக்குப் பிக்சல் எஸ்.ராமகிருஷ்ணனை நன்கு பகடி செய்திருக்கின்றீர்கள். இம்மாதிரி கண்ணில் நீர்வர நான் சிரித்துப் பலகாலம் ஆகிவிட்டது. சிறந்ததொரு வாசிப்பனுபவம் வழங்கியமைக்கு தன்யவாத்.

 6. sharavkumarNo Gravatar says:

  வழக்கமான பேயோன் எழுத்து போல் இல்லை.
  எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது போல் இருக்கிறது.

 7. natbasNo Gravatar says:

  பதிவைத் தளம் மாற்றிப் போட்டு விட்டீர்களோ?

 8. பேயோன்No Gravatar says:

  ஆயில்யன்: நன்றி. நான் சாப்பிடும் பொருட்களை இறகுகளுக்கு தந்ததில்லை.

  விஜய்வீரப்பன்: நன்றி. என்னத்தையாவது செய்தாக வேண்டும்தான். நவீனத்தையும் தொன்மத்தையும் இணைக்கும் உங்கள் பெயர் எனக்கு பிடித்துள்ளது.

  ramji_yahoo: நன்றி.

  cleverboy, sharavkumar, natbas: நீங்கள் கூறுவது முறையல்ல. பத்தி எழுதுவதற்கென நான் ஒரு பார்முலா வைத்திருக்கிறேன். அதைத்தான் பின்பற்றுகிறேன். மேலதிக விவரங்களுக்கு:- என்னைப் போல் பத்தி எழுதுவது எப்படி?

 9. விஜய்வீரப்பன்No Gravatar says:

  நன்றி பேயோன். உங்கள் பெயரும் வித்தியாசமானது. இது பகடி-ப் பதிவென்று தெரியாமல் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டம் இட்டு விட்டேன். ஹ்ம்ம்ம்….இன்னும் பயிற்சி போதவில்லை.

 10. பேயோன்No Gravatar says:

  விஜய்வீரப்பன்: பகடியெல்லாம் கிடையாது சார். என்னை நானே பகடி செய்துகொள்வேனா? இது எனது வழக்கமான பத்தி.

 11. natbasNo Gravatar says:

  @விஜய்வீரப்பன்

  நீங்கள் பகடிப் பின்னூட்டம் இட்டீர்கள் என்றுதானே நான் நினைத்துக் கொண்டிருந்தேன்!

  இப்போதெல்லாம் எது பகடி எது அபகடி என்று ஒரே குழப்பமாக இருக்கிறது- பேயோன் சார்தான் பகடியின் இலக்கணத்தை வரையறை செய்ய வேண்டும்…

 12. ChithranNo Gravatar says:

  ///நாமும் இப்படித்தான் வீட்டுக்குப் போகிறோம். காரணம், ஒரு வேலை முடிந்தபின் அந்த வேலை நடந்த இடத்தில் நாம் இருப்பதற்கான காரணங்கள் வலுவிழந்துவிடுகின்றன. நமது மனித வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வீட்டிற்கு செல்லும் வழியில் கடைக்குப் போகும் சூழ்நிலைகளும் நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு. நுகர்வுக் கலாச்சாரத்தின் தேவைகளை உந்துமையமாகக் கொண்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் தள்ளுபடிகள் வகிக்கும் இடம் புறக்கணிக்க முடியாதது.///

  சான்ஸே இல்ல.

 13. விஜய்வீரப்பன்No Gravatar says:

  @பேயோன்
  நம்பி விட்டேன். அடுத்த முறை நிச்சயமாக, சரியாக கண்டுபிடித்து விடுகிறேன்.

  @natbas
  பகடியெல்லாம் கிடையாது சார். நான் பேயோனை பகடி செய்வேனா? இது எனது 100% அக்மார்க் உணர்ச்சி பின்னூடடம்.

 14. பேயோன்No Gravatar says:

  natbas: என்னை பொறுத்த வரை பகடி இலக்கணம் எளிது:- நீங்கள் யாருடைய எழுத்தை பகடி செய்ய முனைகிறீர்களோ அந்த எழுத்தில் இருக்கும் பெயர்கள், முக்கியமான வார்த்தைகள், நிகழ்வுகள், விவரிப்புகள் முதலானவற்றை நீக்கிவிட்டு, யதார்த்தத்திற்கு பொருந்தாதவற்றை பயன்படுத்துங்கள்.

 15. natbasNo Gravatar says:

  இலக்கணம் என்னவோ எளிமையாகத்தான் இருக்கிறது.

  ஆனால் பாருங்கள், ஒருத்தர் எழுதியதிலிருந்து பெயர்கள், முக்கியமான வார்த்தைகள், நிகழ்வுகள், விவரிப்புகள் முதலானவற்றை நீக்கியபின் வெற்றுக் காகிதம்தான் மிச்சம்- அது (கூடவே அதற்கு மறைமுகக் காரணமாகிய நீங்கள்) என் வெற்று மூளையைப் பகடி பண்ணுகிறீர்களோ என்ற ஐயம் ஏற்பட்டு விட்டது.

 16. நீங்கள் எந்த கம்பெனியில் வேலை செய்கிறீர்கள்?

  ரிப்பீட்டு.

  எனக்கு சப்பாத்திதான் பிடிக்கும்.

  Libria-வை நான் லைபீரியா என்று படித்தேன். லிப்ரா என்றும் படித்தேன். ஏன்?

  நூலகத்தில் டிவிடி கிடைக்குமா? அதில் ரஜினி சார் படம் கிடைத்தால் நன்றாக இருக்குமே?

 17. சந்தோஷ்No Gravatar says:

  The Paid Piper of Libria படத்தை பார்சன் காம்ப்ளெக்சிலிருந்து வாங்கிவந்து ஒருமாதம் ஆகிவிட்டது. உங்களுடைய இந்த “பத்தி” அதை பார்க்கும் ஆர்வத்தை இப்போது தூண்டுகிறது. கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் பார்த்து விடுவேன்.

 18. incrediblemonkeNo Gravatar says:

  //புத்தகம் படிக்கும்போது ஒரு பக்கத்திற்கு இத்தனை
  நியூரான்கள் வளர்சிதைமாற்றத்திற்கு உள்ளாவதாக//

  உங்கள் தீவிர இலக்கிய பதிவுகள் நியூரான்களை
  தீவிரமாக வளர்சிதைமாற்றத்திற்கு உள்ளாக்கும்
  முயற்சிதான் போலும்.

  எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது போல்
  இருந்தாலும்,பதிவைத் தளம் மாற்றிப் போடுபவர்
  இல்லை தாங்கள் என்பதாலும் ஒளிந்து இருக்கும்
  பேயோனை தேடிக் கொண்டு இருக்கிறேன்.

 19. dagaltiNo Gravatar says:

  படித்தாகிவிட்டதால் இவ்விடம் இருக்கவேண்டிய காரணங்கள் வலுவிழந்துவிட்டாலும் நெருஞ்சி குத்தி விடும் விருப்பம் விட்டபாடில்லை.

  நான் சிறுவயதில் படித்து, அதே நடராஜ் பென்சிலால் நேருவுக்கு மீசையும், காந்திக்கு தாடியும், படேலுக்கு பட்டைநாமமும் வரைந்திருந்த ஒரு பொம்மை புஸ்தகத்தை, தேஸிய உணர்வுபொங்க அடுத்த தலைமுறையினனுக்குப் படிக்கக் கொடுத்தேன். தேவையில்லாமல் “டு யூ நோ ஹூ நேரு இஸ்” என்று நான் கேட்டதும் உடனே, “சம் ரிலேடிவ் அஃப் சோனியா காந்தி” என்றுவிட்டான்.

  இக்காலக் குழந்தைகள் அறிவை நேராக மனிதர்களை வாசித்தே பெற்றுக்கொண்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு எதுக்கைய்யா புஸ்தககங்கள்?

 20. பேயோன்No Gravatar says:

  natbas: நீக்குவதை மாற்றீடு செய்வது என்று புரிந்துகொள்ளவும்.

  பத்ரி: நான் கம்பெனியில் தொழிற்படவில்லை, முழுநேர எழுத்தாளன். லிப்ரியாவை இருவிதமாக படித்ததன் காரணம் Freudian sleepஆக இருக்கலாம்.

  சந்தோஷ்: பார்க்க நேரமில்லாது போனாலும் பின்னட்டை கதை சுருக்கத்தையாவது படியுங்கள்.

  incrediblemonke: யார் எஸ். ராமகிருஷ்ணன்? நெடுங்குருதி நாவல் எழுதியவர்தானே? கேள்விப்பட்டதேயில்லை.

  dagalti: பார்த்தீர்களா? மாணவ நூலகர் திட்டத்தில் நூலகர் ஆகியிருந்த நண்பன் ஒருவன் யாரும் படிக்காத புத்தகங்களில் பெண்களை ஆடை அணிவதற்கு முந்தைய நிலையில் வரைவான். சிலர் புக் கிரிக்கெட் விளையாடுவார்கள். புத்தகங்களை கலை மற்றும் விளையாட்டு வேட்கைக்கும் பயன்படுத்தலாம்தானே? அப்படி கற்கும் பாடங்கள் எத்தனை!

 21. பகடி எழுத்துக்கு நீங்கள் தந்த விளக்கம் அருமை.

  உங்களிடம் நான் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.

 22. அந்த லிபிரிய படத்தின் டிவிடி எங்கே கிடைக்கும்.. டிவிடி கவராவது கிடைக்குமா? தயவு செய்து உதவி செய்தால் மகிழ்வேன்.

 23. பேயோன்No Gravatar says:

  சரவண வடிவேல்: அதனால்தான் நானும் என் படைப்புகளை தவிர வேறெதையும் படிப்பதில்லை.

  அதிஷா: எனக்கே அட்டை மட்டும்தான் கிடைத்தது. அதுவும் ஏதோ இணையதளத்தில் பார்த்து நானாக வரைந்துகொண்டது.

 24. Can’t understand anything. Something you’ve written I just read it. Not that much impressed me like your previous works…Anyway keep rocking sir.

  With All Rights,

  ஞெலிநரி வெய்யோன்

  http://FirefoxSurya.blogspot.com

  • பேயோன்No Gravatar says:

   ஞெ: புரியவில்லை என ஒப்புக்கொண்டுவிட்டு விமர்சனம் என்ன வேண்டிக்கிடக்கிறது?

 25. புரியவில்லை என்று சொன்னால்தானே அனைத்துத் தரப்பு வாசகர்களும் விரும்புமாறு
  தங்களால் எழுத முடியும். அதனால்தான் கூறினேன். மற்றபடி உள்குத்து ஏதும் இல்லை ஐயன்மீர்.

  உரிய உரிமையுடன்,

  ஞெலிநரி வெய்யோன்

  http://FirefoxSurya.blogspot.com

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar