ஒரு லோட்டா இரத்தம்

in புனைவு

தற்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் புனைவின் முதல் அத்தியாயம். முழுவதும் எழுதிய பின் அச்சில் வரும்.

*

ஜூலை, 1904.

“நாங்கள் அகன்று, நீண்டு சென்ற ஒரு பாதையில் மெல்ல நடந்துகொண்டிருந்தோம். தூறலின் ஈரப் புள்ளிகள் விழுந்திருந்த அப்பாதை பழைய காலத்திய பெரிய வீடு ஒன்றின் வழியே செல்வதை என்னால் காண முடிந்தது. “இப்பாதை செம்யனோவ்களின் இல்லத்திற்கு இட்டுச் செல்கிறது” என்றான் புதோவ்கின்.

செம்யனோவ்களில் யாரையும் நான்அறிந்திருக்கவில்லை எனினும் யெவ்கெனி செம்யனோவை அரிதாக நடன விழாக்களில் காண்பதுண்டு. அவர்களைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் என் மனதில் எப்போதும் ஓடியபடி இருக்கும். இப்போது அவர்களது இல்லத்தைப் பார்த்ததும் அந்த ஆர்வம் மீண்டும் என்னுள் எழுந்தது. ஆந்த்ரெய் யாக்கோவ்லெவிச் செம்யனோவ் அந்த ஊரின் போஸ்ட் மாஸ்டராக இருந்தது மட்டுமின்றி கவர்னரின் தூரத்து உறவினராகவும் இருந்தார். 1843இன் வசந்தகாலத்தில் அவர் ச_______லிருந்து வேரா செம்யனோவாவுடனும் மகள்கள் வேரா மற்றும் அன்னாவுடனும் வந்திருந்தார். நான் செம்யனோவ் பெண்களை இன்று வரை பார்த்ததில்லை.

“வா, அவர்களைப் பார்த்து வரலாம். நீ அவர்களை விரும்புவாய்” என்றான் புதோவ்கின்.

செய்வதற்கு மேலானதாக எனக்கு வேறு எதுவும் இல்லாததால் நான் அவனுடன் செல்லத் தீர்மானித்தேன். நாங்கள் அந்த வீட்டை நெருங்குகையில், தூறல் அதை மேலும் பழையது போல் தோற்றம் கொள்ள வைத்திருந்ததைக் கண்டேன். அதன் ஜன்னல்களில் ஒன்றிலிருந்து மெலிந்த கரம் ஒன்று தோன்றியது, பின் உடனே மறைந்துபோனது. அந்தக் கைக்கு 18 வயதிருக்கலாம் என ஊகித்தேன். அல்லது, ஓரிரு மாதங்கள் இளையதாகவும் இருக்கக்கூடும்.

கிழவன் மிகையில் அனைவரும் நூலகத்தில் இருப்பதாகக் கூறினான். புதோவ்கின், நூலகத்திலிருந்து வந்த மெல்லினிய பியானோ இசையைக் கலைக்க விரும்பாததைப் போல் மிக மென்மையாகப் படிகளில் ஏறினான்.

அது ஒரு மிகப் பழைய பெரிய வாழ்வறை. “நான் ஏதேனும் தொந்தரவு செய்யவில்லையே?” எனக் கேட்டவாறு உள்ளே நுழைந்தான் புதோவ்கின். நானும் பின்தொடர்ந்தேன்.

“வாருங்கள் அலெக்சி பாவ்லோவிச். ஆக உங்களுக்கு எங்களை நிச்சயம் நினைவிருக்கிறது, அல்லவா?” என ஆச்சரியக் கூச்சலிட்டாள் அவர்களில் மூத்தவள். புதோவ்கின் அவளை வேரா செம்யனோவா என அறிமுகப்படுத்தினான் – “

பிரபல ரஷ்ய எழுத்தாளர் அந்தோன் பாவ்லோவிச் சேகவ் என்ற ஆன்டன் செக்காவ் (1860-1904) எழுதுகோலைப் போட்டுவிட்டுக் கழுத்தைப் பிடித்துக்கொண்டார். மின்சாரம் சுண்டியிழுப்பது போல் ஒரு வலி. என்ன ஆயிற்று எனக்கு என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டார். விளக்கவியலாதபடி, அவருக்கு வியர்க்கத் தொடங்யிருந்தது. அந்த மங்கிய அந்திமாலையின் குளிருக்காக அவர் ஜன்னல்களை சாத்தியிருந்தார். சிறிது காற்றோட்டமாக இருந்தால் சரியாகிவிடும் என்றெண்ணி செக்காவ் எழுந்தார்.

‘அட மனித உடலே, என்னே உனது பலவீனம்!’ என்றபடி தட்டுத் தடுமாறி வீட்டிலிருந்து வெளியே வந்தார். அந்தி நேரம் சூரியனுக்குக் கீழிருந்த அனைத்தையும் வெளிர்ச் சாம்பல் நிறமாக்கியிருந்தது. சாலையைக் கடந்து தனது இல்லத்தை முகங்கொண்டிருந்த சீமெந்து பெஞ்சில் சரிந்து அமர்ந்தார்.

கானல் நீரினூடே ஒட்டகக் கூட்டம் போல் யாரோ வருவது மசங்கலாகத் தெரிந்தது. “பனியில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் அந்தோன் பாவ்லோவிச்?” என்று காதருகில் ஓர் இளம் குரல் கேட்டது. அது சிறுவன் யோஹானாகத்தான் இருக்க வேண்டும். செக்காவின் கண்கள் குத்திடத் தொடங்கின. “அந்தோன் பாவ்லோவிச்! அந்தோன் பாவ்லோவிச்! நீங்கள் சீக்கா?” என்று அலறினான் யோஹான்.

“நானா ஆன்டன் செக்காவ்? இல்லை! நான் அந்தோன் சேகவ்! என் பெயர் அந்தோன் சேகவ் – “

நிலைகுத்தத் தொடங்கியிருந்ததும் பீதி வெளிப்பட்டதுமான செக்காவின் விழிகளிலிருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது. சிறுவன் யோஹான் வான் பெர்க் செக்காவின் மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்தான். ஆன்டன் செக்காவ் சத்தியமாக செத்துப் போயிருந்தார்.

இரண்டாம் அத்தியாயம் »

Tags: , ,

19 Responses

 1. புனைவு சுவாரஸ்யமாக செல்லும் என்று டிரெய்லரில் தோன்றுகிறது!

  எனினும்,கேரக்டர்களின் பெயர்களினை வாசகர்களுக்கு நெருக்கமாக எடுத்து செல்லும் வகையில் குமாரு சாந்தி ராஜா என எளிமையாக இருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூட்டும் என்பது அடியேனின் சிரம் கரம் தாழ்ந்த கோரிக்கை!

 2. பேயோன்No Gravatar says:

  ஆயில்யன்: ஆன்டன் செக்காவ் ரஷ்ய எழுத்தாளர். அவர் எப்படி குமார் சாந்தி ராஜா முதலானவர்களை பற்றி எழுதுவார்? அவரை பற்றி மேலதிக விவரங்கள்….

 3. ஒரு வேண்டுகோள் குருவே.
  பதிவில் Rating Plug-in இருந்தால் என்னைப் போன்ற மறுமொழியிடும் அளவிற்கு விஷயம் அறியாதவர்களுக்கு உதவியாக இருக்கும்.
  ஐந்து நட்சத்திரங்களை அழுத்திவிட்டு எங்கள் வழி செல்வோம்.

 4. ஆன்டன் செக்காவ் (1860-1904)……… இது தவறு… அவர் 1903’ம் வருடமே இறந்துவிட்டதாக wikipedia சொல்கிறது.

 5. பேயோன்No Gravatar says:

  சரவண வடிவேல்: நீங்கள் எதையுமே அரைகுறையாகத்தான் பார்ப்பீர்கள் போல. முதலில் என் பெயரை உங்கள் வலைப்பதிவில் தவறாக எழுதியிருந்தீர்கள். அடுத்தபடியாக விக்கிபீடியாவை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.

 6. பேயோன்:

  தடங்களுக்கு மிகவும் வருந்துகிறேன்.

 7. //ஆன்டன் செக்காவ் சத்தியமாக செத்துப் போயிருந்தார்//

  பேயோன் சார்..நீங்க அவர் செத்துட்டார்னு எழுதினாலே நாங்க நம்பிடுவோம்..இதுக்கு எதுக்கு போய் சத்தியம் பண்றீங்க :)

  அப்புறம் டாக்டர் சார் சொன்ன மாதிரி ரேட்டிங் பட்டை எல்லாம் வேண்டாம்..உங்களை ரேட் பண்ண நாங்க யார்?அதற்கு எங்களுக்கு தகுதி இருக்கிறதா?

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 8. ChandruNo Gravatar says:

  ஒரு சாரார் செக்காவ் இறக்கும் தருவாயில் champagne அருந்தியபடி புன்னகையுடன் இறந்தார் என்று கூறுகிறார்கள் …உங்களைபோன்ற ஒரு சாரார் அவர் வலியுடன் கண்ணில் நீருடன் இறந்தார் என்று கூறுகிறார்கள் …மேலும் ஒரு சாரார் இரண்டுமே கட்டுக்கதை செக்காவ் இறக்கவே இல்லை என்று கூறுகிறார்கள் …

  அது சரி எழுத்தாளர்கள் வாழ்வில் புனைவு இருந்தால்தானே சுவாரசியம்

 9. பேயோன்No Gravatar says:

  சுவாசிகா: புரியவில்லை என்று சொல்லாத பின்னூட்டங்களில் கூட புரியவில்லை என்று உணர்த்தும் ஜாலம் எப்படி உங்களுக்குக் கைவருகிறது?

  சந்துரு: இது செக்காவ் பற்றிய புனைவுதான். எந்த தகவலும் சரியாக இருக்காது.

 10. MytheesNo Gravatar says:

  //இது செக்காவ் பற்றிய புனைவுதான். எந்த தகவலும் சரியாக இருக்காது.//

  புனைவுன்னா எந்த தகவலும் உண்மையா இருக்ககூடதா என்ன …

 11. பேயோன்No Gravatar says:

  Mythees: அப்படி இல்லையே. செக்காவ் என ஒருவர் இருந்தது உண்மை. இலக்கியம் என ஒன்றும் இருந்தது. இவை இரண்டும் புனைவுகளல்ல.

 12. MytheesNo Gravatar says:

  அப்போ புணைவுன்கர லேபில் அழிந்து (அ ) கவனிக்காமல் போனால் செக்காவ் பத்தின போலியான தமிழ் மொழி பெயர்ப்பு ஆககூடிய அபாயம் இர்ருக்கு இல்லையா எழுத்தாளரே ……..

 13. பேயோன்No Gravatar says:

  Mythees: நாம் படிக்கிற விசயங்களை நம் வீட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால் நீங்கள் கூறுகிற குழப்பம் கண்டிப்பாக ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் தனித்தனியாக புனைவுகள் எழுதுகிறேன். குழந்தைகள்தானே படிக்கிற எல்லாவற்றையும் உண்மையாக எடுத்துக்கொள்ளும் அப்பாவிகள்.

 14. ChandruNo Gravatar says:

  புனைவு எழுத்தில் உண்மையான பெயர்களை கொடுத்ததால் தகவலும் உண்மையாக இருக்குமோ என நினைத்தேன்…நன்றி

  இப்படிக்கு
  அப்பாவி இளைஞன்

 15. பேயோன்No Gravatar says:

  சந்துரு: அப்படி இருக்க அவசியமில்லை. குவாண்டின் டராண்டினோவினுடைய (உண்மையில் அது குவென்டின் டரன்டினோ) இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸில் இரண்டாம் உலகப் போரின் தகவல்களை மாற்றி காட்டியிருப்பார்.

 16. incrediblemonkeNo Gravatar says:

  //போஸ்ட் மாஸ்டராக இருந்தது மட்டுமின்றி
  கவர்னரின் தூரத்து உறவினராகவும் இருந்தார்//
  போஸ்ட் மாஸ்டர்,கவர்னர் ஏணி வைத்தாலும்
  எட்டாதே, இடிக்கிறதே. வில்லங்க உரவை
  துரத்து உரவு என்றும் சொல்வதுண்டு.அப்படியோ!

  ஜன்னலின் வழியே நீட்டிய கையை மட்டும் பார்த்துது
  18 வயதிருக்கும் என்பதே பெரிய விஷயம்.அதைவிட
  ஒரிரு மாதங்கள் வரை இளைய கை என்று கணிப்பது
  எவ்வளவு மோசமான கண்கள்.

  ஆன்டன் செக்காவ்,அந்தோன் சேகவ் இவை
  இரண்டும் ஒரு மனிதருக்கு இருந்த இரண்டு
  பெயர்களா?ஒரு உடலில் இருந்த இருவரின்
  பெயர்களா?

  விளக்கவியலாதபடி செத்ததுதான் செத்தார்
  இப்படி குழப்பமான ஒன்றை சொல்லிவிட்டு
  செத்தால் எப்படி?

  எப்படியோ எனக்கும் செம்யனோவ் பெண்களை
  புரிந்து கொள்ளும் ஆர்வம் வந்துவிட்டது.
  மற்ற அத்தியாயங்கள் வரும் வரை காத்திருக்க
  வேண்டியதுதான்

 17. GanpatNo Gravatar says:

  ஆரம்பமே அபாரம்

  அடுத்த அத்தியாயம் எப்போ வரும்ன்னு ஏங்க வைக்குது

  இரண்டு கோரிக்கைகள்

  தயவு செய்து “பொன்னியின் செல்வனை” விட பெரிய நாவலாக எழுதுங்கள்.

  nonlinear type ஆக இருக்கட்டும்
  அதாவது அத்தியாயங்கள் வரிசையாக இராமல் random order இல இருக்கட்டும்

  முடிந்தபின்,இதை TV serial ஆக எடுங்கள்.கம்ப்யூட்டர் பழக்கம் இல்ல மாந்தரையும் இது சென்றடையும்!

  ம்ம்ம் ஆசை யாரை விட்டது?இறை அருள் இருந்தால் சினிமாவாக கூட எடுக்கலாம்.செகாவ் ரோலுக்கு கமல்ஹாசன்! ஸ்ஸ்ஸ்

 18. பேயோன்No Gravatar says:

  கண்பத்: இது நாவல் அல்ல, நெடுங்கதை. நான்லீனியர் அல்ல, லீனியர். திரைக்கதை எழுதிப்பார்க்கும் யோசனை இருந்தது. ஆனால் இது அமெரிக்கா இல்லையே.

 19. MytheesNo Gravatar says:

  இல்ல சார் நன் குரங்கு மாதிரி பத்திகளை தாவி தாவி தான் படிக்குறேன். அதுனால எனக்கு எது போலி எது உண்மைன்னு சிலநேரம் குழப்பம் அடைகிறேன் .

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar