வாழும் கணங்கள்

in கட்டுரை

முக ரோமத்தின் கடைசி மில்லிமீட்டரில் ஒரு பகுதியை மட்டும் சதைக்குள் மிச்சம் வைத்து சவரத்தை முடித்துத் தெருவில் இறங்கினேன். காற்றும் வெப்பமும் ஊடும் பாவுமாகக் கலந்திருந்தாலும் அப்போதுதான் சவரம் செய்து கழுவப்பட்டிருந்த முகவாயில் காற்று படும்போதெல்லாம் குளிர்ந்தது. அந்தக் குளிர்ச்சியையும் ஷேவிங் லோஷனின் மெல்லிய ரசாயன நறுமணத்தையும் அதைவிட மெல்லியதாக ரசித்தபடியே எனது கால்களை ஒவ்வொன்றாக எடுத்துவைத்துத் தெருவில் நடந்தேன். ஒரு காலைத் தரையிலிருந்து எடுக்கும்போது சமநிலை தவறி கீழே விழ வாய்ப்பளிக்காதபடிக்கு மறு கால் உடனே தரையிறங்கிவிடும் அதிசயத்தை ரசிக்காதிருக்க முடிக்கவில்லை.

தெரு முடியும் இடத்தில் ஒரு பெரிய மரம் பல்வேறு கிளைகளை நீட்டி என்னை வரவேற்றது. பார்த்ததும் நெகிழ்ந்தேன். இன்றுதான் முளைத்தது போல ஒரு புத்துணர்ச்சி உடனே என்னுடனான ஒரு பந்தத்தை நிறுவிவிடுகிறது. இந்த மரத்திற்கு அங்குமிங்கும் நகரும் வசதி இல்லை. அதன் உடலின் ஆயிரக்கணக்கான உறுப்புகள் சதா அழிந்துகொண்டும் உதிர்ந்துகொண்டும் இருக்கின்றன. இருந்தாலும் அந்த மரம் தொடர்ந்து தழைத்துக்கொண்டுதான் உள்ளது. வெயில் அடித்தால் காய்வதும் மழை பெய்தால் நனைவதும் காற்றடித்தால் அசைவதுமாக, எந்த நூற்றாண்டிலோ கொடுக்கப்பட்ட ஏதோ ஒரு அற்புத சாபத்தை நிறைவேற்றிக்கொண்டிருப்பது போல் நிற்கிறது அந்த மரம். மரங்களின் கடமையுணர்ச்சி, அசகாய உழைப்பு மற்றும் உறுதி ஆகியவற்றிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு இலையும் ஒரு பாடம்.

உடலில் துணி மூடாத இடங்களில் ஆங்காங்கே சிறு குளிர்ச்சிகள். தூறல் போடத் தொடங்கியிருந்தது. ரசிக்கலாமா ஒதுங்கலாமா என யோசித்துக்கொண்டிருக்கும்போது சாலை ஈரமாகிவிட்டிருந்தது. மழை என்றாலே ஈரம்தான். பல சிறு ஈரங்கள் சேரும் பெரிய, பரவலான ஈரம். இன்னும் கனத்துப் பெய்தால் ஓடும், தேங்கும், நனைக்கும் ஈரம். ஒரு திரவப் பனி போல் மேலே கவிந்துகொண்டிருக்கிறது மழையின் ஈரம். மர இலைகளும் மழைத் துளிகளும் நிலத்தில் விழுவதை ஒப்பிட்டுக்கொண்டேன்.

ஒரு முதியவர். வயது எண்பது இருக்கலாம். சைக்கிளில் சுக்கு காபி கேன் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். மழை காரணமாக நல்ல கூட்டம் இருந்தது. முகத்தில் ஒரு புன்னகையை ஓடவிட்டபடி ஒரே ஆளாக சுமார் 20 வாடிக்கையாளர்களைக் கையாண்டுகொண்டிருந்தார். வாழ்வின் அனுபவங்கள் ஏற்படுத்திய அந்த ஆழமான சுருக்கங்களின் கால்வாய்களில் மழைத் துளிகள் இறங்கி ஓடின. அவருக்கு சர்வ கண்டிப்பாகக் குடும்பம் இருக்கும். அன்றன்றைக்குக் கிடைக்கும் வருமானத்தில் பேரக் குழந்தைகளுக்கு இனிப்புகளையும் விளையாட்டுப் பொருட்களையும் அவர் வாங்கிச் செல்லக்கூடும். அம்மனிதர் அந்தத் தள்ளாத வயதிலும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தெருத் தெருவாக வியாபாரம் செய்துகொண்டிருந்தது எனக்குள் ஒரு இனம்புரியாத பெருமிதத்தைக் கிளறியது. இவரைப் போன்றவர்கள் வாழும் உலகில்தான் நாமும் வாழ்கிறோம் என்கிற புரிதல் புன்னகையைத் தருவித்தது. பத்து ரூபாயை அவர் கையில் கொடுத்துவிட்டு அவர் சில்லறையை எண்ணித் திரும்பத் தருவதற்குள் ரகசியமாக விலகி நடந்தேன். ஒரு அற்பத் திருப்தி நிறைவேறிய திருப்தி.

சாலையோர மழைக் குட்டை ஒன்றில் குடிசைப் பகுதிக் குழந்தைகள் இருவர் சட்டை கூட அணியாமல் குதித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். வரும் வழியில்தான் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் “தண்ணில வெளையாடாதடா கபோதி” என்று கண்டித்ததைப் பார்த்தேன். இருவேறு உலகத்துப் பெற்றோர்கள். நமது நடுத்தரவர்க்க பாதுகாப்பின்மை உணர்வை நம் குழந்தைகளுக்கு இளமையிலேயே புகட்டிவிடுகிறோம். அவர்களுடைய இளமைக்கு ஆயிரம் கவலைகளைக் கற்றுத் தருகிறோம். இப்படித்தான் நடுத்தரவர்க்கக் கவலைகள் மரபணு அமைப்பில் பதியப்பெற்று ஒரு வர்க்கத்தின் பரம்பரைக் குணாம்சமாக மாறுகின்றன. விளைவு, ஒரு பக்கம் குழந்தைகள் சேற்றில் விளையாடுகிறார்கள், இன்னொரு பக்கக் குழந்தைகள் எதையும் அனுபவிக்காமல் வீட்டில் தொலைக்காட்சி பார்த்து வளருகிறார்கள். இருவரும் பள்ளியில் சந்திக்கும்போது பகிர்ந்துகொள்ளும் அனுபவங்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்கின்றன.

மாலைக்கு முதுமை கூடிப் பார்வை மங்கி இருட்டிக்கொண்டது. வெளிச்சத்தின் அனைத்துக் கதவுகளையும் சாத்திவிட்டது போல் ஒரு இருட்டு. பூச்சிகளின் இசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. கூடவே ஏகாந்தத்தின் இரைச்சலும் குருவிகளின் கீச்சொலியும் ஓணான்களின் சரசரப்பும் எனது காலடி ஓசையும். தெருவோர எருக்கஞ்செடிகளின் தாழ்வான நீண்ட கிளைகள் கால்களில் தட்டுப்பட்டன. எருக்க மொட்டுகளை மனதால் உடைத்துக்கொண்டு நடந்தேன். அந்தக் கும்மிருட்டில் கண்களைத் திறந்தாலும் மூடினாலும் காட்சி ஒரு வண்ணத்தியதாகவே இருந்தது. காதுகள் கண்களாக மாறி ஒவ்வொரு சிறு சப்தத்தையும் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தன. சில நொடிகளில் அங்கிருந்த உயிரினங்களும் வாயை மூடிக்கொண்டு தத்தம் வேலையைப் பார்த்துக்கொண்டு போயின. காதை அடைக்கும் நிசப்தம். அந்த நிசப்தத்தினைத் தட்டித் தட்டி வடிவம் கொடுக்கும் ஒலி போல் எனது காலடிச் சத்தம் மாறாத லயத்துடன் கேட்டுக்கொண்டிருந்தது. இருளும் நிசப்தமும் பிறப்பில் பிரிக்கப்பட்ட குழந்தைகள் போலும்.

இருளில் எதிரே இழுத்துக் கிடந்த சாலைக்குள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மங்கிய விளக்கொளியில் புகுந்தார்கள். இருவரும் தங்கள் எண்ணங்களைத் தாங்கள் பொதுவாக அறிந்த ஒரு மொழியில் பரஸ்பரம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். ஒருவர் பேசுவதும் அதை இன்னொருவர் கேட்பதும், பிறகு இருவருடைய பாத்திரமும் தலைகீழாகி பேசுபவர் கேட்பதும் கேட்பவர் பேசுவதுமாக, ஒரு தொலைக்காட்சித் தொடரில் இருவர் பேசும் காட்சி தெருவிற்கு இறங்கி வந்தது போலிருந்தது. இவர்களது உறவின் தன்மை குறித்து சிந்திக்கத் தொடங்கினேன். கணவன்-மனைவியாகவோ காதலர்களாகவோ இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு ஆணும் பெண்ணும் தெருவில் போகிறார்கள் என்றால் அவர்கள் தம்பதியாகவோ காதலர்களாகவோதானே இருக்க முடியும். மிஞ்சிப்போனால் மணமக்களாக இருக்கலாம். நாமுள்ள இடமப்படி. தெருவில் கணவன்-மனைவியே நடந்துபோனால் கூட அவர்களுக்கு இடையே ஏதோ உறவு இருப்பதாக சந்தேகப்படும் சமூகம் இது.

ஏதோ ஒரு வீட்டினுள்ளிருந்து குறுந்தொகைப் பாடல்கள் ஒலித்தன. நான் நெருங்குகையில் பாடல்கள் முடிந்து விளம்பரம் ஒலிக்கத் துவங்கியிருந்தது. தெருவில் இன்னும் சிலர் மிச்சமிருந்ததோடு அவர்கள் நடமாடிக்கொண்டும் இருந்தார்கள். எல்லோருமே அவரவர் நோக்கங்களுக்கேற்ப ஒவ்வோரிடத்திற்குச் சென்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் புரிந்துகொள்ளலாம். குறும்பட திரையிடல்கள் போன்ற நிகழ்வுகளுக்குத்தான் இவர்கள் தங்கள் வித்தியாசங்களை மறந்து ஒரே இடத்திற்குச் செல்லக்கூடியவர்கள். தொலைவில் எனது வீடு தெரிந்தது. உலகையே சுற்றி வந்தாலும் நம்முடைய வீட்டினை அடையும்போது அவரவருக்கு ஏற்படும் பரிச்சய ஆசுவாசம் மனதைக் கவ்விக்கொண்டது. இருளின் முடிவில் எனது தெரு தொடங்கிவிட்டிருந்தது.

Tags: , , , , , ,

13 Responses

 1. //எனது கால்களை ஒவ்வொன்றாக எடுத்துவைத்துத் தெருவில் நடந்தேன்//
  நான் மட்டுமல்ல ஊரே ரசித்திருக்கும்!

  //ஒவ்வொரு இலையும் ஒரு பாடம்.//
  வாழ்க்கை சக்கரம் மாதிரி இலையும் சக்கர வாழ்க்கை நடத்துகிறது பச்சையாகி பழுப்பாகி மருங்கி மண்ணாகி பின் உரமாகி உரம் வழியே உயிர் ஆகி….! [போதும்ல!]

  //பேரக் குழந்தைகளுக்கு இனிப்புகளையும் விளையாட்டுப் பொருட்களையும் அவர் வாங்கிச் செல்லக்கூடும்//

  அது எப்படி சர்வ நிச்சயமாக தடால்ன்னு பேரக்குழந்தைகள்???!!!

  //சில நொடிகளில் அங்கிருந்த உயிரினங்களும் வாயை மூடிக்கொண்டு தத்தம் வேலையைப் பார்த்துக்கொண்டு போயின//
  பின்னே இப்படி உங்களை மாதிரி எல்லாரும் காதுகளை கண்களாக்கினால் வாயை மூடிக்கொண்டு கம்முன்னு போகத்தான் செய்யும்!

  //இருளின் முடிவில் எனது தெரு தொடங்கிவிட்டிருந்தது.//

  அட்டகாசம்!

 2. incrediblemonkeNo Gravatar says:

  //ஒரு காலைத் தரையிலிருந்து எடுக்கும்போது சமநிலை தவறி கீழே விழ வாய்ப்பளிக்காதபடிக்கு மறு கால் உடனே தரையிறங்கிவிடும் அதிசயத்தை ரசிக்காதிருக்க முடிக்கவில்லை.// இனி நடக்கும் போது எல்லாம் பேயோனின் நினைவுகளோடுதான் நடக்க
  வேண்டியிருக்கும்.

 3. குருவே,
  நீங்கள் இன்று எழுதியிருப்பது பத்தாயிரம் ஹால்மார்க் கார்டுகளைக் கூர்தீட்டி மூஞ்சியில் விட்டெறிவது போலிருக்கிறது.

  இஃகி… இஃகி…

  படிக்கப் படிக்க சர்க்கரைப் பாகில் சில வாரங்கள் ஊறிய குலாப் ஜாமூன் போல எனக்கு திகட்டிய நேரம் இந்த வரிகளை பார்த்தேன்…

  //தெருவில் கணவன்-மனைவியே நடந்துபோனால் கூட அவர்களுக்கு இடையே ஏதோ உறவு இருப்பதாக சந்தேகப்படும் சமூகம் இது.//

  ஆஹா! பச்சை மிளகாயை அப்படியே கடித்தது போல் இருந்தது.

  காரமும் நாம் அனைவரும் ரசிக்கக்கூடிய சுவைதான் என்று உணர்ந்தேன்.

 4. ஆமா பேயோன் சார்..இது நிஜமாவே கட்டுரையா..நான் நல்ல கதைன்ல இம்புட்டு நேரம் படிச்சிட்டு இருந்தேன் :(

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 5. MuraliNo Gravatar says:

  பேயோன் சார்,

  அருமையான கட்டுரை.

  வீட்டிலிருந்து தொடங்குகிறீர்கள் என நினைத்தேன். முடியும் தருவாயில் தான் தெரிந்தது நீங்கள் சலூனிலிருந்து வீட்டிற்க்கு வருர்கிரீர்கள் என…

  //இருளும் நிசப்தமும் பிறப்பில் பிரிக்கப்பட்ட குழந்தைகள் போலும்.//

  இது எனக்கு புரியவில்லை. முதலில் ‘பிரிக்கபடாத’ என்று படித்தேன்!

 6. ramji_yahooNo Gravatar says:

  பதிவு மிக அருமை

 7. வணக்கம்,
  மிக அருமை. இந்தத் தருணம் முதல் நான் உங்கள் விசிறி.
  வரதராஜன் செல்லப்பா

 8. ”என்னைப்போல் பத்தி எழுதுவது எப்படி” என்பதன் இலக்கணப்படி எழுதப்பட்ட இன்னொரு படைப்புதானே சார்? என்ன உலகப்பட, உலகநாவல் ஒப்பீடுகள், மேற்கோள்கள், ஜென்கதை மிஸ்ஸிங்.

  ///மழை என்றாலே ஈரம்தான். பல சிறு ஈரங்கள் சேரும் பெரிய, பரவலான ஈரம். இன்னும் கனத்துப் பெய்தால் ஓடும், தேங்கும், நனைக்கும் ஈரம். ஒரு திரவப் பனி போல் மேலே கவிந்துகொண்டிருக்கிறது மழையின் ஈரம். ///

  நீங்க பெரியாள் சார்.

 9. பேயோன்No Gravatar says:

  ஆயில்யன், incrediblemonke, விஜய்: நன்றி.

  சுவாசிகா: நாங்கள் கட்டுரை என்றுதான் சொல்லிக்கொள்வோம்.

  முரளி: வீட்டில் தொடங்கித்தான் வீட்டில் முடிகிறது கட்டுரை.

  ராம்ஜி_யாஹு, வரதராஜன் செல்லப்பா: நன்றி.

  சித்ரன்: மிகவும் கவனக்குறைவான வாசகராக இருக்கிறீர்களே. இது அந்த பார்முலா அல்ல, புதிய பார்முலா. இதில் ஒவ்வொரு பாராவையும் சிறு கட்டுரை போல முத்தாய்ப்புடன் எழுதியிருக்கிறேன். பாரா வரிசை மாற்றிக்கூட படிக்கலாம்.

 10. சமகால உலக இலக்கியங்களில் ஆகச்சிறந்த இலக்கியம் இதுதான்!

 11. incrediblemonkeNo Gravatar says:

  சுக்கு காப்பி விற்பது போன்ற எளிய தொழில் செய்பவர்களின் அன்றைய வருமானம்,ரகசியமாக கொடுக்கப்படும் பணம் அகியவை டாஸ்மாக் அனுபவமாகதான் மாறும் என்று நினைக்கிறேன்.பேரக் குழந்தை, இனிப்புகள், விளையாட்டு பொம்மை எல்லாம் சந்தேகம்தான்.
  //தெருவில் கணவன்-மனைவியே நடந்து போனால் கூட அவர்களுக்கு இடையே ஏதோ (தகாத) உறவு இருப்பதாக சந்தேகப்படும் சமூகம் இது//
  தவறான வார்த்தைகள்,தவறான் எண்ணங்கள் தவறாமல் புகுந்துவிடுகின்றன.

 12. போலியான சமூகம் என்பது போலியான உணர்வுகள் மூலமும் கட்டமைக்கப்படுகின்றது. போலியான அந்த உணர்வுகளை சுட்டிக்காட்ட அபரிதமான மொழித்திறமையை உபயோகித்துப்பின் அதற்கு உதவாத வார்த்தைகளை இலக்கியத்தரமாய் உணர்த்துவது போலி சமூகத்தில் எத்தகைய பாதிப்பையும் அதிகம் ஏற்படுத்தப்போவதில்லை.

  ***

  ஒரு மிகச்சாதாரண விஷயத்தை அபூர்வப்படுத்துவதுபோல மாற்றி உயர்த்தி எழுதப்படும் மாயயதார்த்தவகை பத்தி உத்தி சிலருக்கு நன்கு கை வருமொன்று. அதில் பகடி கலத்தலில் பின்நவீனப்படுத்தியது மாத்திரமின்றி வாசகர்களையும் இதை புரிந்து கொள்ளச் செய்யும் பாங்கு மிகப்பிடித்துள்ளது. (ஆளுக்கொன்றாய் புரிந்துகொள்ளலும் பின்நவீனத்தில் சாருமென்றால் உங்கள் பதிவுகள் அனைத்துமே அந்த வகையினதாகிறது :) )

  **

  என்னதான் பகடியாக எழுதியதாய் உணர்ந்தாலும் வார்த்தைகள் கோர்க்கப்பட்ட அழகிலும், போலியாய் மெய்யுணர்த்தும் பாங்கிலும் மயங்கித்தான் போகவேண்டியுள்ளது.

  மிக்க நன்றி பேயோன்.

 13. செந்தில்No Gravatar says:

  //”காதுகள் கண்களாக மாறி ஒவ்வொரு சிறு சப்தத்தையும் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தன.”//
  சின்ன விஷயத்தையும் பயங்கர சீன் காமிச்சு வித்தியாசமா எழுதும் சிலரை நினைவுப்படுத்தியது… வழக்கம்போல வெடிச்சிரிப்பு வரலை… ஆனா சிரிப்பு வந்தது!

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar