எனக்குத் தெரிந்த வரை

in கட்டுரை

பதினைந்து பில்லியன் (பில்லியன் என்றால் நூறு கோடி) ஆண்டுகளுக்கு முன்பாக, எதுவுமே இல்லாத ஒரு சமயத்தில் திடீரென்று ஒரு வெடிப்பு ஏற்பட்டது. இப்போது அது Big Bang எனப்படுகிறது. இந்த வெடிப்பில்தான் காலமும் வெளியும் பிரபஞ்சமும் அதனுள் கிரகங்களும் நட்சத்திரங்களும் தோன்றின. பிரபஞ்சம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து பூமி என்கிற நாம் வாழும் கிரகத்தில் உயிரினங்கள் தோன்றின. உயிரினங்கள் தோன்றிய புதிதில் டினோசார்கள் போன்று மிகப் பெரிதாகவோ நியாண்டர்தால்கள் போன்று வளர்ச்சியடையாததாகவோ இருந்தன. பின்னர் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். உயிரினங்களைப் போன்று சீதோஷ்ண நிலையும் பரிணாம வளர்ச்சியின் தொடக்கக் கட்டங்களில் இருந்தது. முதலில் வந்த பனி யுகத்தில் உலகமே உறைந்தது. இது உயிரினங்களை அதீதமாக பாதித்தது. உலகம் சகஜநிலை அடைந்த பின்பு கண்டங்களாகப் பிரிந்தது. இதற்குச் சற்று முந்தைய காலகட்டத்திலோ சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்போ மனிதக் குரங்கிலிருந்து மனிதன் முழு பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தான். ஆனால் பல மனிதக் குரங்குகள் பரிணாம வளர்ச்சியில் சேராமல் விட்டுப்போயின. மனிதன் முதலில் சமைக்காத இறைச்சி தின்றுகொண்டிருந்தான். தற்செயலாகத் தீயைக் கண்டுபிடித்த பின் இறைச்சியைத் தீயில் வாட்டி உண்ணத் தொடங்கினான். அடுத்து இரும்பைக் கண்டுபிடித்து சுத்தியல், ஆயுதங்கள் போன்ற கருவிகள் செய்தான். வெண்கல யுகம் வந்த பின் பாத்திரங்களைக் கண்டுபிடித்தான். இடையில் சக்கரத்தைக் கண்டுபிடித்தான். சீன, எகிப்திய, சுமேரிய, கிரேக்க, ஐரிஷ் நாகரிகங்கள் பிறந்தன. ஆரிய திராவிடர்கள் தோன்றினர். சீனர்கள் வெடிமருந்தையும் குண்டுகளையும் கண்டுபிடித்தார்கள். கிரேக்கரான அலெக்சாந்தர் உலகின் பல இடங்களைத் தன் கைக்குள் கொண்டுவந்தார். இந்தியா வரை வந்தார். ஆனால் இளமையில் இறந்தார். இத்தாலியில் ரோம சாம்ராஜ்யம் ஏற்பட்டு மெல்ல மெல்ல அழிந்தது. திருக்குறள், தொல்காப்பியம், ராமாயணம், மகாபாரதம் எழுதப்பட்டன. எகிப்தில் பாரோ என்கிற மன்னர்கள் ஆட்சி புரிந்து நிறைய பிரமிடுகளைக் கட்டினார்கள். புத்தரும் இயேசுவும் பிறந்தார்கள். இந்தியாவில் குப்தர்கள், மௌரியர்கள், முகலாயர்கள், தெற்கில் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகரம் என பல ஆட்சியாளர்கள் வந்தார்கள். அசோக மன்னர் பௌத்த மதத்தைத் தழுவினார். ராஜராஜ சோழன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். மதுரை தமிழ் சங்கம் உருவானது. பல சங்க கால ஓலைச் சுவடிகள் மீட்கப்பட்டன. இந்திய துணைக்கண்டத்தில் முகலாயர் படையெடுப்பு தொடங்கியது. பிரிட்டனில் முடியாட்சி தொடங்கியது. ஜெஃப்ரி சாசர் தொடங்கி வில்லியம் ஷேக்ஸ்பியர் வரை ஆங்கில இலக்கியம் தழைத்தோங்கியது. ஜப்பானில் முராசாகி ஷிகிபு உலகின் முதல் நாவலான தி டேல் ஆஃப் ஜெஞ்சியை எழுதினார். இத்தாலியில் மைக்கேலாஞ்சலோவும் லியனார்டோ டாவினசியும் ஸ்பெயினில் பிரான்சிஸ்கோ டி கோயாவும் ஓவியக் கலையை முன்னுக்குக் கொண்டுவந்தார்கள். கொலம்பஸ் இந்தியா என நினைத்துக்கொண்டு அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். ஜெர்மனியில் குட்டன்பர்க் என்பவர் முதல் அச்சியந்திரத்தை உருவாக்கினார். இது பதிப்புத் துறையின் தொடக்கத்தைக் குறித்தது.  முகலாயர்கள் காலம் முடியும்போது கிழக்கிந்திய கம்பெனி வாயிலாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் காலடி எடுத்துவைத்தது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் பிரெஞ்சானது பாண்டிச்சேரியையும் போர்ச்சுகீஸ் கோவாவையும் தத்தம் கைகளுக்குள் கொண்டுவந்தன. கோப்பர்நிகஸ் உலகம் உருண்டை என்று கண்டுபிடித்து அவப்பெயர் தேடிக்கொண்டார். 18ஆம் நூற்றாண்டில் இந்தியா முழுவதுமாக பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. நெப்போலியன் பல போர்களில் வென்று சக்திவாய்ந்த மன்னர் ஆனார். ஆனால் ரஷ்யா மீது போர் தொடுத்துத் தோற்றார். பின்னர் இங்கிலாந்துடன் போரிட்டுத் தோற்றார். நெப்போலியன் மறைவுக்குப் பிறகு லூயி போன்ற மன்னர்கள் வந்து பிரெஞ்சு நாட்டை சீரழித்தார்கள். இதன் விளைவாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் புரட்சி வெடித்தது. ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்தார். 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சில் இம்ப்ரஷனிச ஓவிய இயக்கமும் புகைப்படக் கலையும் தோன்றின. தனித்துவ ஓவியங்களைப் படைத்த வான் கோக், மோனே, மானே ஆகியோரில் முதலாமவர் தற்கொலை செய்துகொண்டார். சார்லஸ் டார்வின் மனிதன் குரங்கிலிருந்து தோன்றியதாக ஒரு நூல் எழுதி உலகை மாற்றினார். ரஷ்யாவில் டால்ஸ்டாய், புஷ்கின், தாஸ்தாயெவ்ஸ்கி, ஆன்டன் செக்காவ், டர்ஜெனிவ், ஷோலக்கோவ் போன்ற எழுத்தாளர்கள் அமர இலக்கியம் படைத்தார்கள். தொழிற்புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாக வளரும் நாடுகளில் தொழில்மயமாக்கம் தொடங்கியது. 1857இல் முதலாம் இந்திய சுதந்திரப் போர் நிகழ்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாம்ராஜ்யங்களிடையே உறவு விரிசல் ஏற்பட்டு முதல் உலகப் போர் விளைந்தது. ஜெர்மனி பெரும் தோல்வியடைந்தது. கியூபிச, சர்ரியலிச இயக்கங்கள் உருவாயின. பாப்லோ பிகாசோவும் சால்வடார் டாலியும் புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்தார்கள். கியூபிச காலத்தில்தான் சினிமாவும் மையநீரோட்ட கேளிக்கை ஊடகமானது. 1917இல் ரஷ்ய புரட்சியாளர்கள் மார்க்சியரான லெனின் தலைமையில் ஜார் மன்னருக்கு எதிராகப் புரட்சி செய்து கம்யூனிச ஆட்சியை நிறுவினர். 1921இல் பாரதியார் இறந்தார். இந்திய சுதந்திரப் போர் காந்தியின் உழைப்பில் தீவிரமடைந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஜெனரல் டயரின் ஆணையால் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஐன்ஸ்டீன் சார்பியல் தத்துவத்தைக் கண்டறிந்தார். இடையில் லெனின் இறந்து ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். 1930களில் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியைப் பிடித்து லட்சக்கணக்கான யூதர்களை வதை முகாம்களில் கொல்லத் தொடங்கினார். சார்லி சாப்ளின் என்ற சிறந்த நகைச்சுவைக் கலைஞர் தோன்றினார். பிரெஞ்சில் இருத்தலியம் வலுப்பெற்று ழீன் பால் சார்த்தர், ஆல்பர்ட் காம்யு போன்ற எழுத்தாளர்கள் சிறப்பான இலக்கியங்களை படைத்தனர். 1939இல் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டது. 1945இல் போர் முடியும் கட்டத்தில் அமெரிக்கா ஜப்பானில் இரண்டு அணுகுண்டுகளை வீசியது. பல்லாயிரக்கணக்கானோர் இதில் பலியானார்கள். ஹிட்லரின் மரணத்துடன் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. அமெரிக்க-ரஷ்ய பனிப்போர் தொடங்கியது. 1947இல் இந்தியாவிற்கு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தும் முடிவற்ற சுரண்டலிலிருந்தும் சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் என்ற நாடு உருவானது. 1948இல் காந்தி கொல்லப்பட்டார். ஹெமிங்வே, ஜான் அப்டைக் சில சிறப்பான புத்தகங்களை எழுதினர். 1950களில் பல சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இங்மார் பெர்க்மன், அகிரா குராசோவா, யசுஜிரோ ஒசு படங்கள் வரத் தொடங்கின. 1963இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் ஹிப்பி கலாச்சாரம் தொடங்கியது. ரஷ்ய-அமெரிக்க பனிப்போர் முடிந்தது. இடையில் இந்தியாவில் சத்யஜித் ரே பல முக்கியமான திரைப்படங்களை எடுத்தார். 1975இல் அன்றைய காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவில் நெருக்கடி நிலையை அறிவித்தார். 1977இல் இது நிறைவடைந்தது. பாகிஸ்தான் அதிபர் புட்டோ மரணமடைந்தார். 1979இல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. 1984இல் இந்திரா காந்தி கொல்லப்பட்டார். 1985இல் அமெரிக்க உதவியுடன் ஆப்கன்கள் ரஷ்ய ராணுவத்தை விரட்டினர். 1991இல் சோவியத் ரஷ்யாவில் கம்யூனிசம் வீழ்ந்து நாடு பல துண்டுகளாக சிதறியது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். உலகமயமாக்கம் பெருமளவில் உலகை வியாபித்தது. 2001இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடத்தை ஜிகாதிகள் தாக்கி ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். 2003இல் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்து கொடுங்கோலர் சதாம் ஹுசைனை வீழ்த்தி எண்ணெய் பெற்றது. 2000களில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி வலுவடைந்து இணையமும் கணினியும் பல வீடுகளில் புகத் துவங்கின. இவை இது வரை நிகழ்ந்தவை. ஆனால் வரலாறு முடியவில்லை. இனி இன்னும் பல சம்பவங்கள் நிகழவிருக்கின்றன.

Tags: ,

16 Responses

 1. /ஆனால் வரலாறு முடியவில்லை/

  இந்த வரியை எதிர்பார்க்கவே இல்லை! வரலாறு மட்டுமா, எங்களாலும்!

 2. மானஸ்தன்No Gravatar says:

  ஐயா, மெய்யாலுமே முடியல!

  சும்மாச் சொல்லணுமே என்பதற்காக, ஒரு திருத்தம்.

  //1947இல் இந்தியாவிற்கு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தும் முடிவற்ற சுரண்டலிலிருந்தும் சுதந்திரம் கிடைத்தது.//

  இந்த வரியில் முதல் பாதி சரி. இரண்டாம் பாதி சரியா? நீரே நியாய தர்மத்துக்குக் கட்டுப்பட்டுச் சொல்லும்! :>

 3. பேயோன்No Gravatar says:

  பினாத்தல் சுரேஷ்: உங்களுக்கு வரலாற்று பிரக்ஞை இல்லாதது தெரிகிறது.

  மானஸ்தன்: நீங்கள் வெள்ளைக்காரன் ஆளா?

 4. மானஸ்தன்No Gravatar says:

  நான் வெள்ளைக்காரனா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். நீர் எந்தக் “கழ(ல)கத்தைச்” சேர்ந்தவர்? :>

  • பேயோன்No Gravatar says:

   மானஸ்தன்: பார்வை மட்டுமா, சிரிப்பு கூட கூர்மை சார் உங்களுக்கு.

 5. paraNo Gravatar says:

  நல்ல ’பேரா’ நன்றி பேயோன்.

 6. dynoNo Gravatar says:

  >>>> அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்கி ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். 2003இல் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்து கொடுங்கோலர் சதாம் ஹுசைனை வீழ்த்தியது.
  <<<<

  காவிக்குண்டோ அடைக்கும் தாழ்!! :)

 7. //ஹிட்லரின் மரணத்துடன் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.//

  இல்லீங்க. அதுக்கு அப்பறமும் கொஞ்ச மாசம் சண்டை போட்டாங்க.

 8. பேயோன்No Gravatar says:

  dyno: நாங்களெல்லாம் படித்ததைத்தானே எழுதுறோம். சொந்தமாக கண்டுபிடித்தா எழுதுகிறோம்?

  மணிவண்ணன்: நீங்கள் சொல்வது போல் எதையும் விடாமல் எழுத துவங்கினால் என் அண்ணன் மகன் திருமணத்தை கூட பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

 9. வழக்கம் போல் புதுமை.

 10. அதற்கப்புறம் நிகழ்ந்த வரலாறுதான் இதை நீங்கள் பதித்ததும் அதை நாங்கள் படித்ததும் அப்புறம் பின்னூட்டம் இட்டதும். இனி இன்னும் பல சம்பவங்கள் நிகழவிருக்கின்றன.

 11. Incredible MonkeyNo Gravatar says:

  அக்பர் 1605 இல் மறைந்தார். 2008 இல் ஜோதா அக்பர் வந்தது. என் பங்கிற்கு.

 12. பேயோன்No Gravatar says:

  பின்னூட்டங்களில் நம்பிக்கை இழந்துகொண்டிருக்கிறேன்.

 13. //பின்னூட்டங்களில் நம்பிக்கை இழந்துகொண்டிருக்கிறேன்.//

  யேய்… எங்கப்பா அந்த ஆயில்யன், டொக்டர் விசய், சுவாசிகா, டகால்ட்டி குரூப்பு? பாவம் ரைட்டர் நொந்து போயிருக்கார். சீக்கிரம் வந்து நல்லதா நாலு கமெண்ட் போட்டு ரைட்டரை உற்சாகபடுத்துங்கய்யா…

 14. //
  பின்னூட்டங்களில் நம்பிக்கை இழந்துகொண்டிருக்கிறேன்.
  //

  வரலாற்றில் இணைத்துக் கொள்கின்றேன் :)

 15. >>
  ஸ்ரீதர் நாராயணன் responded on 02 Nov 2010 at 10:35 pm
  //பின்னூட்டங்களில் நம்பிக்கை இழந்துகொண்டிருக்கிறேன்.//

  யேய்… எங்கப்பா அந்த ஆயில்யன், டொக்டர் விசய், சுவாசிகா, டகால்ட்டி குரூப்பு? பாவம் ரைட்டர் நொந்து போயிருக்கார். சீக்கிரம் வந்து நல்லதா நாலு கமெண்ட் போட்டு ரைட்டரை உற்சாகபடுத்துங்கய்யா…
  >>

  ஸ்ரீதர் சார், எங்களாலத்தான் பேயோன் சார் நொந்து போயிருக்கார்..அதான் கொஞ்ச நாளைக்கு பின்னூட்டம் போடாம இருக்கேன்..(மெளன விரதம் இருக்கேன்னு வடிவேலு சொன்ன மாதிரி) :)

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar