பாஸ் என்கிற பாஸ்கரன்

in கட்டுரை

சமீபத்தில் அனேகமாக எனது அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் ராஜேஷின் பாஸ் என்கிற பாஸ்கரனைப் பார்த்தேன். ராஜேஷ் சார் தமிழ் சினிமாவின் புதிய அலையால் அடித்து வரப்பட்டவர். இவருடைய முதல் படம் தமிழ் சினிமாவின் தனித்துவமானதொரு காதல் கதையாகும். இரண்டாவது படமாகிய பாஸ் என்கிற பாஸ்கரன் முற்றிலும் வேறு திசையில் பயணம் கொள்கிறது.

கதையின் நாயகன் பாஸ்கரன் உயர் மத்தியதர வகுப்புக் குடும்பத்தில் பிறந்தவன். சிறு வயது தந்தை இழப்பில் உறவுப் பிரிவை சந்திக்கும் பாஸ்கரன் தாயின் மிகையான அன்பால் லௌகீக ஈடுபாடுகளில் உடல் சாராத யத்தனங்களைக் கைவிடுகிறான். மனதின் வாழ்க்கை அவனுக்கு தந்தை எரித்த சிதையிலேயே அவிந்துவிடுகிறது. இதனால் உடலின் தேவைகளை பிரதானப்படுத்திய ஒரு வாழ்க்கையினை அவன் வாழ்கிறான். சமுதாயத்தில் முனைப்புடன் பங்கெடுக்கத் தனிமனிதனைத் தயார்படுத்தும் ஒரு கருவியாக கல்வியமைப்பை இனங்கண்டு பாஸ்கரன் அதில் மனதைச் செலுத்த மறுக்கிறான். சமூகத்தின் விளிம்பில் நிற்கும் அவனுக்கு ஆறுதலாக உடனிருக்கிறான் அவனின் நண்பன் நல்லதம்பி.

இப்படியான பாஸ்கரனின் வியர்த்தமானதொரு தேர்வு முயற்சியின்போது சந்திரிகாவை அவன் எதிர்கொள்ள நேரும் அனுபவம் ஏறபடுகிறது. அவளை பார்த்தவுடன் காதல் வசப்படுகிறான். அவளோ வாழ்க்கையின் இன்னொரு கூட்டமான முனையில் இருக்கிறாள். துவக்கத்தில் இந்த முரண் இவர்களிடையேயான அடிப்படை சமூக முரண்பாட்டினை வலுவாக்கி வைக்கிறது. கல்வியிலும் சொத்து உருவாக்கும் திறனிலும் உள்ள போதாமை காதலுக்கு தடையாக இருப்பதை தீர்க்க பல முயற்சிகளை மேற்கொள்கிறான். இதற்கிடையில் அவனது முரண்கள் குடும்பத்தினுடனான உறவுகளைக் குலைத்து அவனை பிரிக்கிறது. இதற்கு இன்னொரு இடையில் அவனை காதலிக்க துவங்குகிறாள் சந்திரிகா. அவளுக்காகவாவது பொதுப்புத்தியை செயல்படுத்தும் நெருக்கடிக்கு ஆளாகிறான் பாஸ்கரன்.

எந்த கல்வியமைப்பு தன்னை சமூகத்தின் மையநீரோட்டத்திலிருந்து அகற்றி வைத்ததோ அதே கல்வியமைப்பிற்கு ஒரு கிளையை உருவாக்கி காதலியை அடைவதற்காக சமூகத்துடன் கலக்க பாஸ்கரன் தீர்மானிக்கிறான். நல்லதம்பியின் பணத்தில் கடன் வாங்கி ஒரு டுடோரியல் பள்ளியினை அவன் துவங்குகிறான். கல்வி வணிகமயமாதலால் உண்மையான முன்னேற்றம் கிடைக்காது என்று சித்தரிக்கும் விதமாக சில திருப்பங்களை வைக்கிறார் இயக்குநர். திருப்பங்களின் இறுதியில் நாயகியை அடைகிறான் நாயகன்.

சினிமா முழுவதும் பாஸ்கரன் தனக்கு நேரும் சம்பவங்களை வாழ்க்கையின் பின்விளைவுகளாக ஏற்றபடி அடுத்தடுத்த சம்பவங்களை நோக்கி நகர்கிறான். அக உலகிலேயே வாழும் பாஸ்கரனையும் புற உலகினையும் இணைக்கும் ஊடகமாக வரும் நல்லதம்பி பாஸ்கரனுக்கு கிடைக்காத சராசரி சமூக அந்தஸ்தை பெற்றிருந்தாலும் அதில் திருப்தியுறாமல் அன்னியமானதொரு மொழியில் சதா அதிருப்தியை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறான். படிக்காத நடப்பு தலைமுறையை சுரண்டும் முந்தைய தலைமுறையின் கோரப் பிரதிநிதி நம் வேல்பாண்டி. சினிமாவில் வேறு எவரையும் விட அதிக அறிவுசாலியான சந்திரிகா ஒரு சமகால சினிமா கதையின் எல்லைகளை சரியாகப் புரிந்துகொண்டவளாக இருக்கிறாள். இந்த புரிதலே பாஸ்கரனை காதலிக்க அவளைத் தூண்டுகிறது என்று சொல்ல வேண்டும். நாயகனையும் நாயகியையும் அவர்களின் தோற்றத்தைக் கொண்டே அவர்கள்தான் நாயக நாயகியர் என ஊகிக்கும்படி இயக்குநர் செய்திருப்பது பாராட்டத்தக்கது.

இங்கு எடிட்டிங் பற்றி சில வரிகள்.

இயல்பாக அமைய வேண்டிய மனித உறவுகள் சமூகம் விதித்த விதிகளால் எவ்வளவு அல்லல்களுக்கு உட்படுகின்றன என்று இந்த சினிமா கூறுகிறது. அத்துடன் இலக்கின்மை சார்ந்த வாளாவிருத்தலுக்குத் தீர்வாக உலகாயதவாதத்தை முன்வைக்கிறது ராஜேஷ் சாரின் இந்த படம்.

Tags: ,

19 Responses

 1. கவிதாNo Gravatar says:

  ஒரு பழைய படத்துக்கு ரெவ்யூ வர்றப்பவே நினைச்சேன், மாட்டிக்க போறோம்னு. சொந்த செலவுல சூனியம். வேற என்ன சொல்ல?

 2. //எனது அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் ராஜேஷின்/

  அப்ப பஸ்ட்டு வாழ்த்துகள் சொல்லிடறதுதான் சம கால தமிழனுக்கு சிறப்பே! வாழ்த்துகள் பாஸ் :))

 3. //மனித உறவுகள் சமூகம் விதித்த விதிகளால் எவ்வளவு அல்லல்களுக்கு உட்படுகின்றன என்று இந்த சினிமா கூறுகிறது//
  அடுத்து படம் பண்ண போற இயக்குநர்ன்னு சொல்லிட்டீங்க! அப்புறம் என்ன “இந்த சினிமா” அப்படின்னு சிம்பிளா சொல்லிட்டா சரியா?

  “இந்த சினிமாவே” கூறுகிறதுன்னு அமுத்தில்ல சொல்லணும்!?

  இங்ஙனம்
  சமகாலத்திலேயே பிரபலமாகிவிட நினைக்கும் இன்னுமொரு மனிதன் :)

 4. அப்போ நீங்க யாருன்னு எங்களுக்கு தெரியப் போகுது.. நன்றி..

 5. SrinarayananNo Gravatar says:

  Ha ha ha….LOL

  Really enjoyed a lot…

  Jemo Jemo Jemo :-)

 6. ChandraNo Gravatar says:

  class

 7. பேயோன்No Gravatar says:

  கவிதா: மேடம், சினிமாவில் சீனியாரிட்டி ஜூனியாரிட்டி எல்லாம் பார்த்தால் நமக்கு பைசைக்கிள் தீஃப் கிடைக்காமல் ஆகியிருக்கும்.

  ஆயில்யன்: நன்றி.

  பிரசன்னா: நான் முன்பே எல்லோருக்கும் தெரிந்தவன்தான். உங்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டதென நினைக்காதீர்கள்.

  ஸ்ரீநாராயணன்: நான் யாரையும் பின்பற்றி எழுதவில்லை.

  சந்திரா: நன்றி. வேறு வழி?

 8. இந்தப் படத்தைப் பார்த்ததும் இது ஒரு சாதாரண வெகுஜன ரசனை மட்டுமே உள்ள சமகால தமிழ் மசாலாப் படம் என்று நான் தட்டிக் கழித்தது எவ்வளவு தவறு என்று உணர்த்தியதற்கு நன்றி குருவே.

 9. ஒசாவிலிருந்து ஒபாமாNo Gravatar says:

  ஐயா படத்தில் வெளிப்படும் அதினுட்பமான உடல் மொழி பற்றி ஒரிரு வாக்கியங்கள் எழுதியிருக்கலாமே.இயக்குனர் அதில் காட்டிய வித்தியாசங்கள் தமிழ் சினிமாவில் கிலோமீட்டர் கல் என்பது என் தாழ்மையான கருத்து.திராவிட சினிமா வைத்த சமூக விமர்சனத்தை சமகால வாழ்க்கையுடன் சரியாக கலந்து உருவாக்கப்பட்ட கலகப் பிரதியை தெளிவாக அடையாளம் கண்டு முன்னிறுத்தி
  அதை பரப்பிய பிரதி என்று புறந்தள்ளாமல் எழுதியுள்ளீர்கள்.
  இது போல் சமகால இலக்கியத்தையும் பற்றி எழுதி தமிழை அடுத்த நூற்றாண்டிற்கு அழைத்துச்செல்லுங்கள்.

 10. Incredible MonkeyNo Gravatar says:

  இந்த மாதிரி பதிவு வரும் என்று தெரியாததால் படத்தை பார்க்க வில்லை.

 11. பேயோன் சார்,
  ஒரு தடவை பார்த்தாலே புரியற மாதிரி இருந்த படத்துக்கு எத்தனை தடவை படித்தாலும் புரியாத மாதிரி ஒரு விமர்சனமா :(

  //விஜய் responded on 23 Nov 2010 at 9:46 am #

  இந்தப் படத்தைப் பார்த்ததும் இது ஒரு சாதாரண வெகுஜன ரசனை மட்டுமே உள்ள சமகால தமிழ் மசாலாப் படம் என்று நான் தட்டிக் கழித்தது எவ்வளவு தவறு என்று உணர்த்தியதற்கு நன்றி குருவே.//

  ரீப்பீட்டு!

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 12. GanpatNo Gravatar says:

  படம் miss ஆயிடுச்சு …. த்சொ

 13. வாழ்த்துகள். நல்ல விமர்சனம். இதே போன்று எனது முந்தைய படத்தை இயக்கியவரின் பிந்தைய படத்துக்கான எனது விமர்சனம் படித்து கருத்து சொல்லவும்.

  http://thodar.blogspot.com/2009/07/blog-post_12.html

 14. பேயோன்No Gravatar says:

  விஜய்: எப்பொருளும் மெய்ப்பொருள்.

  ஒ.ஒ.: நன்றி. எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டியிருக்கிறது.

  IM: யாருக்கு நட்டம்?

  சுவாசிகா: உங்களுக்குத்தான் இது நாள்பட்ட நோயாயிற்றே. பின்னர் புலம்பி என்ன பயன்?

  மணிகண்டன்: நான் எழுதப் போவதை படிக்கவே நேரம் சரியாக இருக்கிறது.

 15. ரோஸாவசந்த்No Gravatar says:

  /சினிமாவில் வேறு எவரையும் விட அதிக அறிவுசாலியான சந்திரிகா ஒரு சமகால சினிமா கதையின் எல்லைகளை சரியாகப் புரிந்துகொண்டவளாக இருக்கிறாள். இந்த புரிதலே பாஸ்கரனை காதலிக்க அவளைத் தூண்டுகிறது என்று சொல்ல வேண்டும். /

  ட்வீட்டரில் இதை மேற்கோள் காட்டி சுட்டி கொடுக்க நினைத்தால் 140 எழுத்துக்கு மேல் உள்ளது. ஒரு ட்வீட்டிற்கு மேல் பயன்படுத்த விழையாமலும், எடிட் செய்யவும் மனசு வராமலும் இங்கேயே அளிக்கிறேன்.

  http://www.writerpayon.com/2010/11/22/பாஸ்-என்கிற-பாஸ்கரன்/

 16. பேயோன்No Gravatar says:

  ரோஸாவசந்த்: நன்றி. ஆனால் இங்கே இந்த இணைப்பு இருப்பது இந்த பக்கத்திற்கு வந்தால்தானே தெரியும்.

 17. ரோஸாவசந்த்No Gravatar says:

  /ஆனால் இங்கே இந்த இணைப்பு இருப்பது இந்த பக்கத்திற்கு வந்தால்தானே தெரியும்./

  எல்லா செயலையும் திருந்த செய்ய முடியவில்லையே. மேலும் இணைப்பு தருவது என்பதைவிட, இணைப்பு தர நான் விரும்பியதை தெரிவிப்பதுதானே என் நோக்கம்.

 18. //படிக்காத நடப்பு தலைமுறையை சுரண்டும் முந்தைய தலைமுறையின் கோரப் பிரதிநிதி நம் வேல்பாண்டி.//

  நன்று. மேலும் ‘நம்’ வேல்பாண்டி என்றதால் யார் இதில் வயதானவர் என்று கணிப்பது கடினமாக உள்ளது!
  ;)

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar