இன்றைய செய்தித்தாள்

in கட்டுரை, புனைவு

இன்றைய செய்தித்தாள் எல்லோரும் படித்த பின்னும் கசங்காமல் இருக்கிறது. எனக்கோ ஒரே ஆச்சரியம். எல்லோரையும் கூப்பிட்டு காட்டிக்கொண்டிருக்கிறேன். என் மைத்துநர் மகன் மாலையூரிலிருந்து வந்தான். அவன் வரும்போது ஆறு மணி இருக்கும். அவன்தான் முதலில் வந்ததும் வராததுமாய் செய்தித்தாளைக் கவனித்து என்னிடம் சொன்னான்.

“இது இன்றைய பேப்பரா? காலையிலிருந்து இதை யாருமே படிக்கவில்லையா? அல்லது இப்போதுதான் கடையிலிருந்து வாங்கி வந்தீர்களா? பொதுவாக அன்றன்றைய பேப்பர் மாலைக்குள் விற்றுவிடுமே?” என்று அடுக்கிவிட்டு மூட்டை முடிச்சுகளைப் பிரிக்கப் போய்விட்டான். அத்தனை கேள்விகளும் என் மனதில் ரீங்கரித்தபடி இருந்தன. அவன் கேட்பதில் அர்த்தம் இல்லாதில்லை. ஏறத்தாழ தினமுமே செய்தித்தாளானது உள்ளூர் விநியோக மையத்திலிருந்து என் வீட்டு வாசற்படியை அடையும் கட்டத்தில் கசங்கிய நிலையில்தான் இருக்கிறது. இதற்கு பேப்பர் போடும் குழந்தைத் தொழிலாளியைக் குறைசொல்ல முடியாது. வக்கில்லையும் கூட.

இந்நிலையில் பேப்பர் கடையிலிருந்து என் வீட்டை வந்தடைந்து எல்லோரும் படித்து முடித்த பின்பும் ஒரு செய்தித்தாள் கசங்காமல் கிடக்கிறது என்றால் அது அன்றாட நிகழ்வு இல்லையே? அன்றாட நிகழ்வு என்றால் நான் மேலே சொன்னதுதான் அன்றாட நிகழ்வு. எதற்கு சந்தேகம் என்று நானும் என் மனைவியையும் மகனையும் விசாரித்துப் பார்த்துவிட்டேன். அவர்கள் இன்றைய செய்தித்தாளைப் படித்ததாகத்தான் சொன்னார்கள். என் கேள்வியின் உள்நோக்கம் தெரியாததால் என் மனைவி நேர்மையாக பதில் சொல்லிவிட்டாள். ஆனால் மகனை நம்ப முடியாது. அதனால் அகமதாபாத் சிவில் மருத்துவமனை விளம்பரம் எந்தப் பக்கத்தில் வந்திருக்கிறது என்று கேட்டுப் பார்த்தேன். ஒன்பதாம் பக்கம் என்றதும் திருப்தியடைந்தேன். அந்த விளம்பரம் வந்திருப்பதே எனக்கு அவன் சொல்லித்தான் தெரியும்.

ஒன்றுமே இல்லை, பக்கத்து வீட்டுக்காரருக்கு இரவல் கொடுத்தாலே திரும்பி வரும்போது அவருடைய செய்கூலியால் சேதாரமடைந்துதான் வரும். அதனால்தான் அவர் பேப்பர் இரவல் கேட்டால் பேச்சை மாற்றிவிடுவது.

என் லேப்டாப்பில் வெப்க்யாம் இருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் என் சகோதரருடன் அடிக்கடி அதில் பேசுவேன். அவனிடம் கூட வெப்க்யாம் வழியாக செய்தித்தாளைக் காட்டினேன். அவன் என் சகோதரன்தானே, அவனுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. மனைவி, குழந்தைகளைக் கூப்பிட்டுக் காட்டினான். நான் அவனுக்கு செய்தித்தாளைக் காட்டும்போது ஒரு பக்கம் விலகி அகமதாபாத் சிவில் மருத்துவமனை விளம்பரம் கண்ணில் பட்டது. சகோதரனிடம் அதைத் தனியாகக் காட்டி அதன் இன்றைய பின்னணியை விளக்கினேன். அப்போது என் மகனும் அருகில்தான் நின்றிருந்தான். ஆனால் முகத்தில் ஒரு உணர்ச்சியும் இல்லை. அந்த சம்பவத்தை அதற்குள் மறந்துவிட்டிருப்பான் போல. ஆனால் எனக்கு இனி அகமதாபாத் என்றால் ஹைதராபாத் நினைவுக்கு வராது, அகமதாபாத் சிவில் மருத்துவமனைதான் வரும்.

அவசரமாக ஒரு கவிதைத் தொகுப்பு எழுத வேண்டியிருந்தது. அந்த வேலையைத் தற்போதைக்கு நிறுத்திவிட்டு செய்தித்தாளை மீண்டும் ஒரு முறை வாசிக்கத் தொடங்கிவிட்டேன். இப்போது கூட இதை எழுதிக்கொண்டிருப்பதற்கு பதிலாக அதைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். கசங்காத செய்தித்தாளைப் படிக்கும்போது இன்றைய செய்தித்தாளை முதன்முறையாகப் படிக்கும் புலனின்பம் கிடைத்தாலும் அதிலுள்ள செய்திகளை முன்பே படித்துவிட்டதால் நேற்றைய செய்தித்தாளைப் படிப்பது போல் இருக்கிறது. ஒவ்வொரு செய்தியாகப் படித்து பக்கத்தைப் புரட்டி வர, அதற்குள் நான் தற்காலிகமாக மறந்துவிட்டிருந்த அகமதாபாத் சிவில் மருத்துவமனை திடீரென்று ஒரு பக்கத்தில் தோன்றி என் மகனை மனக்கண்ணின் முன் நிறுத்துகிறது. நான் ஒரு முறை தலையைத் திருப்பி அவனைப் பார்த்துக்கொள்கிறேன். அவன் டி.வி. பார்த்துக்கொண்டிருக்கிறான். நான் அகமதாபாத் சிவில் மருத்துவமனை சம்பந்தமாக அவனைப் பார்ப்பது தெரியாத முகபாவம் அவன் முகத்தில். இந்த காலத்துக் குழந்தைகள்!

பின்னர் மீதப் பக்கங்களைப் படித்து முடித்ததும் ஒரு ஆயிரம் பக்க நாவலைப் படித்த காவிய ஆசுவாசத்துடன் செய்தித்தாளை டீப்பாய் மேல் விசிறியடிக்கிறேன். வாசலில் பக்கத்து வீட்டுக்காரர். இன்றைக்கு பேப்பர் இருக்குமா என்று கேட்கிறார். பக்கங்கள் விலகி அலங்கோலமாகக் கிடந்த செய்தித்தாளை அவர் கண் முன்னேயே மடித்து அவர் கையில் கொடுக்கிறேன். திருப்பித் தந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு முதுகு காட்டி எடுத்துச் செல்கிறார் அவர். திரும்பி வரும்போது அது எந்த லட்சணத்தில் இருக்கும் என்று எனக்குத் தெரியாதா?

இதன் திரைக்கதை »

Tags: , , , ,

11 Responses

 1. //எனக்கு இனி அகமதாபாத் என்றால் ஹைதராபாத் நினைவுக்கு வராது, அங்குள்ள அகமதாபாத் சிவில் மருத்துவமனைதான் வரும்//

  எனக்கு வாங்கிபாத் நினைவுக்கு வருகிறது. ஆனால் அவர்தான் வாங்கிக் கொண்டுப் போய்விட்டாரே என்று வருத்தமாகவும் இருக்கிறது.

 2. முடியல சார். வயிறு புண்ணாகிறது..

 3. Incredible MonkeyNo Gravatar says:

  தாங்கள் ஆச்சரியப்பட்டு, வியந்து,ரசித்த செய்தித்தாளை மோசமான பக்கத்து வீட்டுக்காரரின் கைகளில் கொடுக்கும் கணங்கள் உண்மையிலேயே சோகமானது.

 4. ruskinNo Gravatar says:

  cant you make this as a short film.u may ask IR to score background music and sing the title song.

 5. dagaltiNo Gravatar says:

  Gone are the days when writerpayon’s posts were accessible.

 6. //என் கேள்வியின் உள்நோக்கம் தெரியாததால் என் மனைவி நேர்மையாக பதில் சொல்லிவிட்டாள்.//
  //அந்த விளம்பரம் வந்திருப்பதே எனக்கு அவன் சொல்லித்தான் தெரியும்.//
  //அவருடைய செய்கூலியால் சேதாரமடைந்துதான் வரும்.//

  சூப்பர்!!

  @dagalti: The esteemed Writer Payon knows that accessibility breeds familiarity breeds contempt.

 7. பேயோன்No Gravatar says:

  ஸ்ரீதர் நாராயணன்: வேறு ஏதாவது?

  வானம்பாடி: அன்றாட வாழ்க்கையின் பரபரப்பில் நம் பார்வையிலிருந்து தப்பிவிடும் எளிய அழகியல்களை பற்றி எழுதினால் உங்களுக்கு ஏன் சார் வயிறு பாதிக்க வேண்டும்?

  IM: கட்டுரையில் முழுக்க உபயோகப்படுத்திவிட்டு கடைசி வரியில்தானே கொடுத்தேன். அதனால் பரவாயில்லை.

  dagalti: நீங்கள் இத்தாலியரா? பெயரை பார்த்தால் அப்படி தோன்றுகிறது.

  விஜய்: நன்றி.

 8. ஆசைNo Gravatar says:

  அன்புள்ள பேயோன் இன்றைய தமிழ் இலக்கியத்துக்கு உங்கள் கலாட்டா மிகவும் தேவையானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது. உங்களுடைய எழுத்துக்களைப் பார்த்துவிட்டு அடப்பாவி எஸ். ராமகிருஷ்ணனை எவ்வளவு சரியாக என்னைப் போலவே ஒருவர் புரிந்துவைத்திருக்கிறார் என்று எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. க்ரியா அகராதியைப் பற்றிய கட்டுரை தமிழில் யாரும் இதுவரை முயற்சிக்காத ஒரு வகை. (அந்த அகராதியின் உருவாக்கத்தில் நானும் பங்குபெற்றிருக்கிறேன்). வலைப்பூ என்ற வட்டத்தைத் தாண்டியும் உங்கள் கலாட்டாவை விரிவுபடுத்தி எஸ். ரா (அதாவது நீங்கள்) வகையறாக்களுக்கு பீதியை ஏற்படுத்தலாமே? தயவுசெய்து உங்கள் அடையாளத்தை எக்காரணத்தை முன்னிட்டும் வெளிப்படுத்திவிட வேண்டாம்.

  ஆசை

 9. பேயோன்No Gravatar says:

  ஆசை: நன்றி. நீங்கள் க்ரியாவினுடைய தந்தையா சார்? மிக்க சந்தோசம். நீங்கள் கூறும் நபரை நான் கேள்விப்பட்டதல்ல. கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் போல் மலையாள பிரபலமாக இருக்கக்கூடும். வாசகர் தவிர வேறு யாருக்கும் பீதி ஏற்படுத்த நான் விரும்பவில்லை. அதையும் ஒரு உரிமையுடன்தான் செய்கிறேன். ஒரே ஒரு திருத்தம். இது வலைப்பூ அல்ல, வலைதளம். எனது எழுத்துதான் எனது ஒரே அடையாளம். அதை மறைத்தால் நான் இறந்துபட்டவன் ஆவேன்.

 10. உங்கள் எழுத்துக்களைப் படித்துவிட்டு, உங்களுக்கே மேற்கோள் காட்டுபவர்களைப் பற்றி நீங்கள் மோசமான நினைப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

 11. :))))

  மனதிற்கு நிறைவு தந்தது.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar