சென்னைப் பனி

in கவிதை

ஐஸ்ஹவுஸ் முனைக் கடையில் பஜ்ஜிக்காரர்
துளைக் கரண்டியால் துழாவிய வாணலியில்
மென்மையாக விழுந்து கரைந்தது வெண்பனி
பீடி சிகரெட்டு நுனிகள் பனியால் அணைந்தன
சாலைகளில் ஆயிரம் பேர் சட்டைப் பைக்குள்ளிருந்து
பனியை எடுத்து வெளியே போடுகிறார்கள்
சிலர் கைகளில் குடைகள் விரிகின்றன
நாய்கள் முதுகில் பனியைச் சுமந்தபடி அலைகின்றன
முறத்தாலும் மண்வெட்டியாலும் பனியைத் தள்ளுகிறார்கள்
ராட்சதக் குப்பை லாரியில் பனி நிரம்புகிறது
குழந்தைகள் பனிப்பந்து எறிந்து விளையாடுகிறார்கள்
குடிசை வரிசைகளுக்கிடையிலும் பனிச்சறுக்கு வண்டிகள்
கதீட்ரல் சாலையில் இளம்பெண்கள்
பனிமனிதனைச் செய்து மீசை வைக்கிறார்கள்
நின்றுவிட்ட வாகனங்கள் உருவாக்கிய சந்துகளில்
திடீர் தெர்மகோல் பனிவண்டிகள் சறுக்கிச் செல்கின்றன
பாதியில் நின்ற ஆட்டோக்கள் சவாரிகளைக் கைவிடுகின்றன
சொகுசுக் கார்களை நிறுத்தி மேம்பாலங்களிலிருந்து
புகைப்படம் எடுக்கிறார்கள் சிலர்
மாநகரப் பேருந்துகள் கூரை நிறைய பனியுடன்
மெல்ல ஊர்ந்து ஓரங்கட்டுகின்றன
தி. நகரில் போக்குவரத்து நெரிசல்
சாலையோர மரங்களின் கிளைகளூடே பனி பொழிகிறது
அதைப் பறவைகள் உடல் சிலிர்த்து உதறுகின்றன
ஐஸ்க்ரீம் என சுவைத்துப் பார்க்கும் குழந்தைகளை
பெற்றோர்கள் அடித்துக் கண்டிக்கிறார்கள்
உழைப்பாளர் சிலையின் தலைகளில் வெள்ளைக் குல்லாக்கள்
கண்ணகியின் நீட்டிய புறங்கையிலும் பனிப்பஞ்சு
மொட்டை மாடிகள் கோவில் குளங்கள்
விளையாட்டு மைதானங்கள் குப்பைத் தொட்டிகள்
பனியால் நிரம்பின
மாலை நீலம் பாரித்து எங்கும் பயங்கரக் குளிர்

Tags:

6 Responses

 1. //சென்னைப் பனி//

  மழைக்குள் பனி ?!!!

 2. Incredible MonkeyNo Gravatar says:

  உங்கள் இயல்பான அதிதீவிர கற்பனை அழகு சார்.

 3. chantoosNo Gravatar says:

  என்ன நக்கலா ?அனுபவிக்கறவன்களுக்கு தானே தெரியும் .

 4. பேயோன்No Gravatar says:

  IM: நன்றி.

  chantoos: மழையும் அப்படித்தான் நண்பரே.

 5. அதிஷாNo Gravatar says:

  இதே மாதிரி ஒரு ஜப்பானிய கவிதையும் உண்டு.

 6. ruskinNo Gravatar says:

  இதே மாதிரி ஒரு ஜப்பானிய கவிதையும் உண்டு

  payon sir lives in osaka.he knows that there is also a novel in japan
  on snow in osaka.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar