டைரிக் குறிப்புகள்

in பிற

டிசம்பர் 29, 2010

அடுத்த பத்திக்கு “பட்டாம்பூச்சிகளின் காதல்” என்று தலைப்பு வைத்தாயிற்று. இனி அதில் என்ன எழுதுவது என்று யோசிக்க வேண்டும். பட்டாம்பூச்சியும் காதலும் ஒரே வாக்கியத்தில் இடம்பெற்ற உயர்அற்புதத்தைக் குறித்தும் எழுதலாம். அல்லது “பட்டாம்பூச்சிகள் காதலிக்கும் நூலகம்” என்று தலைப்பையே மாற்றி பத்தியின் விஸ்தாரத்தை விசாலிக்கலாம். “பட்டாம்பூச்சிகள் காதலிக்கும் நூலகத்தின் மீது கவியும் தனிமையின் நிசப்தம்” என்று வைத்தால் பலர் வாயை அடைத்த கையோடு அவர்களுடன் சேர்ந்துகொண்ட மாதிரியும் இருக்கும். அல்லது இன்னும் இரண்டு வார்த்தைகள் சேர்க்க வேண்டியிருக்குமோ?

* * *

லார்டு லபக்குதாசை புனைவு எழுதச் சொல்லி நாள்பட்டு வற்புறுத்திவந்தேன். பின்னர் அவரின் மொழிபெயர்ப்புகளே ஒருவகையில் புனைவுகள்தாம் என்று புரிந்துகொண்டேன். இருந்தாலும் நம் புனைவுகள் நம் பெயரில் வந்தால் அது தனித்துவ மரியாதைதானே. ஆகையால் கதை எழுதுங்களேன் என்றேன். அவர் இந்திய அரசியல் சாசனத்தை விவிலியத் தமிழில் மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறாராம். புதுமையான புனைவு முயற்சியாம். முடிப்பார் என்று தோன்றவில்லை.

* * *

உண்மையான எழுத்தாளன் ஒரு காட்டாறு போல இருக்க வேண்டும். அல்லது சில காட்டாறுகளைப் போல* (*அவரவர் வசதிப்படி).

* * *

ஏதோ ஏரியில் படகு கவிழ்ந்து இருவர் செத்திருப்பதை செய்தித்தாளில் படித்ததால் கிளறப்பட்ட நினைவில் ஒரு உறவினர் வீட்டிற்கு ஐந்து வயதில் சென்றிருந்தவன் அவ்வீட்டுக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது சட்டைப்பையில் இருந்த ஒரு ரூபாய் நாணயம் அதனுள் விழுந்துவிட, பெற்றோர் காசைக் கேட்டால் என்ன சொல்வது என்ற பயத்தில் நான் அருகாமையில் இருந்த ஒரு புதருக்குப் பின்னே பதுங்கிச் சில நிமிடங்களில் தேடி வந்த ஒருசிறு கூட்டம் நீண்ட நேரம் தேடிப் பார்த்துவிட்டு என் தந்தையிடம் போய் நான் காணாமல் போனதாய்ச் சொன்னதும் இதென்னடா வம்பு என்று அவர் நேரடியாகப் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துவிட்டுத் திரும்பி வந்து என்னைப் புதருக்குப் பின்னே பார்த்து நொய்யப் புடைத்துவிட்டார்.

* * *

காலை 11:00 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். சில அடிகள் தள்ளி என்னைப் போல் ஒரு இளம்பெண்ணும் நின்றிருந்தாள். நான் நிழற்குடைக்குக் கீழ் நின்றதும் ஒரு பேருந்து வந்து அவள் அதில் ஏறிச் சென்றுவிட்டாள். பேருந்தில் நிறைய கூட்டம். நான் வந்ததால்தான் அவள் அதில் ஏறிப் போய்விட்டாளோ என்று எனக்கு சந்தேகம். ஒருவேளை அடுத்த நிறுத்தத்தில் அவள் இறங்கிவிடலாம் என்று தோன்ற, உடனே அந்தப் பக்கம் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்திப் பேருந்தைப் பின்தொடரச் சொன்னேன். அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப் பார்த்தால் அந்த இடத்தில் அந்தப் பெண்ணுக்குப் பதிலாய் குள்ளமான முதியவர் ஒருவர்தான் நின்றிருந்தார். எனக்கோ சந்தேகம் வலுத்தது. முதியவர் அருகில் எதிரில் நின்று அவர் முகத்தை உற்றுப் பார்த்தேன். அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார். ஒரு பேருந்து நிறுத்த இடைவெளியில் ஏதோ நடந்திருக்கிறது.

* * *

உலகில் அன்பைத் தவிர வேறு எந்த உணர்வும் சந்தேகத்தைக் கிளப்புவதாகவே இருக்கிறது. ஒவ்வொரு வெட்டு, குத்து, கொலையையும் அன்பிற்கான வேண்டுகோளாகவே என்னால் பார்க்க முடிகிறது. கால, தேச, வர்த்தமான எல்லைகளைத் தாண்டி எல்லோரையும் தொடுகிறது அன்பு. உறவுகளுக்கேற்ற வேடங்களைத் தரிக்கிறது அன்பு. அன்பிற்கு இல்லை அடைக்கும் தாள்.

Tags: , ,

7 Responses

 1. //இந்திய அரசியல் சாசனத்தை விவிலியத் தமிழில் மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறாராம். புதுமையான புனைவு முயற்சியாம்.

  :)))))))))))))))
  டாப்பு

  //அன்பிற்கு இல்லை அடைக்கும் தாள்.//

  அம்பிற்கும் கூட இல்லை அணைக்கும் தாள் – விமர்சனம்ங்கற பேர்ல என்னா கிழி கிழிச்சுப்புட்டாங்க !

  லார்டு லபக்குதாஸிற்கு என் அன்பு கலந்த வணக்கம் சேர்த்த புத்தாண்டு வாழ்த்துகள் & உங்களுக்கும் சேர்த்தே!

 2. “பட்டாம்பூச்சிகள் காதலிக்கும் நூலகத்தின் மீது கவியும் அடர்ந்த தனிமையின் நிசப்தக் குரலின் நிழல்” என்று வைக்குமாறு பரிந்துரைக்கிறேன். ஆனால் தலைப்பை எழுதுவதற்கு இடம் போதாமை ஏற்பட்டு பின்னட்டையையும் சேர்க்க வேண்டியிருக்கும்.

  ஐந்தில் காணாமல் போனதற்கு ஐம்பதில் டைரிக் குறிப்பா? அநியாயம் சார்.

  //ஒரு பேருந்து நிறுத்த இடைவெளியில் ஏதோ நடந்திருக்கிறது.// :-)))

 3. paraNo Gravatar says:

  //என்னைப் போல் ஒரு இளம்பெண்ணும் நின்றிருந்தாள்// உயர்கவித்துவத்தில் ரொம்ப கவனம் செலுத்திவிட்டீர்கள். காலில் ஜென் தடுக்கி பொருட்பிழையாகிவிட்டது.

 4. Incredible MonkeyNo Gravatar says:

  வெட்டு, குத்து,கொலை மட்டுமல்ல பின்னுட்டமும் அன்பிற்கான வேண்டுகோள்களே.

 5. பேயோன்No Gravatar says:

  ஆயில்யன், சித்ரன்: நன்றி.

  பாரா: நான் நின்றிருந்ததை போலவே ஒரு இளம்பெண்ணும் நின்றிருந்தாள் என பொருள்.

 6. பேயோன், உங்களைத் தேடித் திரிகிறார்கள் பலர். உங்களைக் காட்டிக் கொடுத்தால் பணம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். காட்டிக் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளாமா என்று யோசிக்கிறேன். குறிப்பாக சால்வை போர்த்திய அறுபதுகளின் நபரிடம்.

 7. அவர் தருவதாகச் சொன்ன தொகையை நீங்கள் கொடுத்துவிட்டால், ஒதுங்கிக்கொண்டுவிடுகிறேன். எப்படி வசதி?

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar