இரண்டாம் அத்தியாயம்

in புனைவு

(‘ஒரு லோட்டா இரத்தம்’ என்கிற எனது நெடுங்கதையின் இரண்டாம் அத்தியாயம். மொத்தம் ஆறு அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன. முதல் அத்தியாயம் இங்குள்ளது)

2. இன்டர்போல் இடையீடு

ஜூலை, 2009

மேகங்களுக்குள் தலையை விட்டிருந்த அந்தக் கட்டிடத்தின் 116ஆம் தளத்தில் இன்டர்போலின் கலை இலக்கியக் குற்றங்கள் பிரிவு பரபரப்பில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தது. யாராவது பார்த்தால் கலை, இலக்கியத்தில் குற்றங்களே நடப்பதில்லை என்று நினைத்துக்கொள்ளக்கூடும். பன்னாட்டு நிறுவனத்திற்குரிய பளபளப்பு. வழுக்குத் தரை, விலையுயர்ந்த டிசைனர் மேஜைகள், நாற்காலிகள், அலமாரிகள் – ஒற்றை வார்த்தையில் சொன்னால் ஃபர்னிச்சர் -, வழவழ சுவர்களில் ராட்சத தொலைக்காட்சித் திரைகள், செழிப்பில் திளைத்த ஊழியர்கள்… சி.ஐ.ஏ. அலுவலகம் தோற்றது.

வாட்டர் கூலர் அருகே பாதி குடித்த பிளாஸ்டிக் நீர்க் கோப்பையைக் கையிலேந்தியபடி சிங்கப்பூரின் மற்ற வானுயர் கட்டடங்களுக்கு அப்பால் வெறித்துக்கொண்டிருந்தார் துப்பறியும் அதிகாரி மைக் பிரையர். அமெரிக்கக் கடற்படை உளவுப் பிரிவில் இருபது ஆண்டுகள் ஜேம்ஸ் பாண்ட் வேலை பார்த்த அனுபவம் போன வருடம் அவரை இன்டர்போலுக்கு அனுப்பியிருந்தது. கடற்படையில் பெல்ட்டிற்குப் பின்னால் அடங்கியிருந்த வயிறு இப்போது பெல்ட்டை இறுகப் பிடிக்கத் தொடங்கியிருந்தது.

இங்கு வந்த நாளிலிருந்தே பிரையரின் புகழ்பெற்ற நிபுணத்துவம், மீட்டிங் அறைகளிலும் தொலைபேசி அழைப்புகளிலும் வீணாகிக்கொண்டிருந்தது. தனது முன்னாள் சகஊழியர்களைப் போல் தானும் தொப்பை எக்சிக்யூட்டிவாக மாறிவிட்டதை ஏற்க மறுத்து இப்போதும் தன் பழைய 9 மிமீ சிக் சாயர் பிஸ்டலைக் காதலியின் புகைப்படம் போல் கோட்டிற்குள் வைத்திருந்தார் பிரையர்.

ஆனால் இதெல்லாம் போன வாரத்துக் கதை.

புதிதாக முளைத்திருந்த ஒரு ‘ஹைப்ரொஃபைல்’ கொலை வழக்கு அவரது மூளை நரம்புகளை முறுக்கிக்கொண்டிருந்தது. பத்து வயது குறைந்துவிட்டது போல் உணர்ந்தார் 45 வயது பிரையர். அந்த வினோத வழக்கைப் பற்றிய பிரையரின் யோசனையைக் கலைத்தது அவரது மேஜையில் ஒலித்த தொலைபேசி மணி. மீதமிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு பிளாஸ்டிக் கோப்பையை வாட்டர் கூலரின் தலை மேல் கவிழ்த்து வைத்துவிட்டு நிதானமாக போனை எடுத்தார். சுருக்கமாக பதிலளித்துவிட்டு போனை வைத்தார். அந்த ஹைப்ரொஃபைல் வழக்கின் மீது முதல் கல்லை எறியும் வேளை வந்துவிட்டதா?

பிரையரின் பிரத்தியேக மேஜையில் ஒரு மெல்லிய ஃபைல் பவ்ய ஒழுங்குடன் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கையிலெடுத்த பிரையருக்குக் கண்ணில் பட்ட தேதி உடனே எரிச்சலைக் கிளப்பியது. 14-07-1904.

“நான் கேட்டது புதிய போஸ்ட்மார்ட்டம். இது காலாவதியாகி ஒரு நூற்றாண்டாகிவிட்டது” என்று திரும்பிப் பார்த்துக் கத்தினார் மைக்.

ஆன்டன் செக்காவ் மரண வழக்கு இன்டர்போலுக்கு மாற்றப்பட்டதாக முந்தாநாள்தான் மைக்கிற்குத் தகவல் வந்தது. இது பெரிய விவகாரம் என்பதால் புலனாய்வை விரைவில் தொடங்க வேண்டும் என அன்று சீக்கிரம் வரச் சொல்லியிருந்தது மேலிடம். அதனால் மைக் வழக்கத்தை விடப் பத்து நிமிடம் முன்கூட்டியே அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

ஃபைல் அசிஸ்டன்ட் அன்னா புரூக்ஸ் சாலிட்டேர் யன்னலைச் சிறிதாக்கிவைத்துவிட்டுப் பெரிய மார்பகங்கள் நிமிர எழுந்தாள். ஒரு பக்கச் சுவர் முழுவதையும் அங்குலம் விடாமல் ஆக்கிரமித்திருந்த ஃபைல் காபினட்டிலிருந்து ஒரு ஃபைலை எடுத்து அதனுள் பார்வையை ஓட விட்டாள். பிறகு மைக்கிடம் கொண்டுவந்தாள்.

ஃபைலைக் கையில் வாங்கிக்கொண்ட மைக்கின் கண்கள் அதன் முகப்பில் இருந்த தேதியை உள்வாங்கின. 09.11.2009. “இதுதான்” என்று சொல்லிவிட்டு அதனுடன் உட்கார்ந்தார் மைக்.

ஆன்டன் செக்காவும் ஒரு பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி (1821-1881) கதாபாத்திரம் போல் காசநோய் முற்றி இறந்ததாகத்தான் பழைய போஸ்ட்மார்ட்டம் கருதியது. 09.11.2009 அன்று அவர் இறந்த தகவல் கிடைத்து உள்ளூர் இன்ஸ்பெக்டர் ஒரு மரியாதைக்காக அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று பார்த்திருக்கிறார். கழுத்தில் கயிற்றால் நெரிக்கப்பட்டது போன்ற அடையாளங்களைக் கண்டவர் சந்தேகப்பட்டு உடனே போஸ்ட்மார்ட்டம் செய்ய உத்தரவிட்டிருக்கிறார். இந்தப் புதிய போஸ்ட்மார்ட்டத்தில் காணப்பட்ட புதிய தகவல்கள் செக்காவ் மரண வழக்கை நேரே இன்டர்போலிடம் கொண்டுவந்திருக்கின்றன. இது முன்கதை.

09.11.2009 தேதியிட்ட போஸ்ட்மார்ட்டத்தின் ஆறு பக்கங்கள் 600 பக்கங்களாகக் கனத்தன மைக்கிற்கு. காசநோய் முற்றியிருந்தாலும் அந்தக் குறிப்பிட்ட தேதியில் அவர் இறந்தது கழுத்து நெரிப்பால். ஃபைலில் இணைக்கப்பட்டிருந்த கோரமான புகைப்படங்கள் மைக்கின் ரத்தத்தைக் கொதிக்கத் தூண்டின.

கல்லூரிப் பருவத்தில் அவர் படித்த செக்காவ் சிறுகதைகள் தூக்கத்தை வரவழைத்தவை. நாடகங்களை அவர் தொடக்கூட விரும்பவில்லை. ஆனால் உலகம் போற்றும் ஒரு எழுத்தாளனை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் யாராக இருக்க முடியும்? அவன் எப்படிப்பட்ட ஆளாக இருப்பான்? அவன் நோக்கம் என்ன? அதில் அவனுக்கு என்ன லாபம்? எத்தனை பேர் அவனுக்கு உதவியிருப்பார்கள்? அல்லது கொன்றது பெண்ணாக இருக்குமா? பெண்ணாக இருந்தால் அவள் எப்படிப்பட்டவளாக இருப்பாள்? அவள் நோக்கம் என்ன? அதில் அவளுக்கு என்ன லாபம்? எத்தனை பேர் அவளுக்கு உதவியிருப்பார்கள்? இவை மைக்கிற்கு சர்வநிச்சயமாகப் புரியவில்லை.

செக்காவ் இறந்ததை நேரில் பார்த்த ஒரே சாட்சியான ஜெர்மானியச் சிறுவன் யோஹானிடம் மிக விரிவான விசாரணை நடத்தியாயிற்று. செக்காவ் அவனை மாதிரியாகக் கொண்டு ‘இயோனிட்ச்’ என்ற சிறுகதையில் பாவ்லுஷா என்ற கதபாபாத்திரத்தை உருவாக்கியிருந்தது பற்றிய டைரிக் குறிப்புகளும் அதற்காக அவனைப் பற்றி எழுதிவைத்திருந்த விலாவரியான குறிப்புகளும் யோஹானை அப்பாவியாகக் காட்டின.

இணைக்கப்பட்டிருந்த எட்டுப் படங்களில் ஆறு படங்கள் கழுத்தின் குளோசப்கள். மற்ற இரண்டில் ஒன்று பக்கவாட்டுத் தோற்றம். இன்னொன்று செக்காவ் பற்றிய பத்திரிகைக் கட்டுரைகளில் தவறாமல் இடம்பெறும் பிரபல புகைப்படம்.

கழுத்துப் படங்களில் ஒன்றில் நெரிபட்ட இடத்தில் பிசிறாக ஏதோ எழுத்துக்கள் போல் தெரிந்தன. அவருக்குத் தெரிந்து 19ஆம் நூற்றாண்டு ருஷ்ய எழுத்தாளர்களுக்குப் பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. ‘மூன்று சகோதரிக’ளை எழுதியவர் அப்படியிருக்க வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.

டிராயரிலிருந்து பூதக் கண்ணாடியை எடுத்தார் மைக். அதில் தூரத்தை சரிசெய்து எழுத்துக்கள் போல் தெரிந்த இடத்தின் மேல் வைத்துப் பார்த்தார். அவை எழுத்துக்கள்தான். ஆனால் ரஷ்ய மொழி அல்ல, ஆங்கிலம். அதில் இருந்த வார்த்தை: LETEEB.

மூன்றாம் அத்தியாயம் »

Tags: , ,

8 Responses

 1. ஆன்டன் செக்காவினுடைய நாவலை யாரோ தமிழில் படமாக எடுக்க இருப்பதை கேள்விபட்டு அவரே தற்கொலை செய்து கொண்டாரோ என்ற கண்ணோட்டத்திலும் விசாரிக்கச் சொல்லுங்கள்…

 2. Incredible MonkeyNo Gravatar says:

  இரண்டாம் அத்தியாயத்திற்கு காரணமான உள்ளூர்
  இன்ஸ்பெக்டருக்கும், உள்ளூர் கிளைக்கும் பாராட்டுக்கள்.முதல் அத்தியாயம் நன்றாக
  வந்திருக்கிறது.

 3. இந்த இரண்டாம் அத்தியாயத்தை எழுதியவர் ராஜேஷ் குமார் போலிருக்கிறதே?

 4. dagaltiNo Gravatar says:

  ஆன்றன் மட்டுமல்ல எல்லா ஆசிரியர்களுமே இறந்துவிட்டதாக சொல்லுகிறார்கள். அதையெல்லாம் தீர விசாரித்து வெளியுடும் சாத்தியங்கள் நிரம்பி வழியும் லோட்டாவாக இது தெரிகிறது.

 5. பேயோன்No Gravatar says:

  தமிழினியன்: ஆசிரியனே கற்பனையாக இருந்தாலும் அவனால் கற்பனை உலகினுள் நுழைய முடியாது.

  IM: வாழ்த்துக்கள்.

  வானம்பாடி: ஏன் சார், ராஜேஷ்குமார் மட்டும்தான் படித்திருக்கிறீர்களா?

  dagalti: திருத்தம்:- அது அன்ரன். இவை வெறும் மரணங்கள் அல்ல சார். திட்டமிட்டு செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

  • பேயோன்No Gravatar says:

   பாரதசாரி: அடுத்த அத்தியாயம் அப்படித்தான் சொல்கிறது.

 6. ஆ! தடயம் கிடைத்துவிட்டது. BEETEL என்று ஸ்க்ரீன் பிரிண்டிங் செய்யப்பட்ட டெலிஃபோன் வயரால் கழுத்து இறுக்கப்பட்டு சாகடிக்கப்பட்டிருக்கிறார்.

  //இவை வெறும் மரணங்கள் அல்ல சார். திட்டமிட்டு செத்துக்கொண்டிருக்கிறார்கள்.//

  இதற்காக ஒரு ஸ்மைலி.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar