ரஷ்ய இலக்கியம் பேசுகிறேன்

in கட்டுரை

பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘சூதாடி’ நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். வெறும் 98 பக்கங்கள்தான். புத்தகம் முடிந்த பிறகுகூடக் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக்கொண்டிருப்பார்கள் போலும். அத்தனை கதாபாத்திரங்கள். இந்தச் சிறிய புத்தகத்திற்கு எதற்காக இவ்வளவு கூட்டம் சேர்க்கிறார்? அந்தப் பாட்டியை முதலிலேயே கொன்றுவிட்டிருந்தால் இவ்வளவு கதாபாத்திரங்கள் தேவைப்பட்டிருக்காது. நாயகனுக்கும் நாயகிக்கும் பிரிட்டிஷ்காரனுக்கும் கூடுதல் பக்கங்கள் கிடைத்திருக்கும். வர்ணனைகளையும் வேறு விதமாகக் கொண்டுபோயிருக்கலாம். கிடக்கட்டும்.

லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ ஒருவன் கடந்தகாலத்தில் செய்த ஆகப்பெரிய தவறுக்கு வருந்தி மன்னிப்பு தேடுவதைக் கதையாக வர்ணித்துக் கூறுகிறது. இது டால்ஸ்டாய்க்கும் தெரியும் – இயற்கையாகவே. சுமார் 500 பக்கங்கள். புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்க மாட்டீர்கள். அதுவே தானாகக் கையிலிருந்து நழுவி விழுந்துவிடும். பிறகு யாராவது பார்த்து எடுத்து வைத்துவிட்டு உங்கள் தலைக்குக் கீழே ஒரு தலையணையை வைப்பார்கள். சீதோஷ்ண நிலையைப் பொறுத்து போர்வையும் கிடைக்கலாம். நித்திராதேவிக்கு மாமா வேலை பார்ப்பவனெல்லாம் அமர எழுத்தாளன்!

பொதுவாகவே வேறு எந்த எழுத்தாளரையும்விட டால்ஸ்டாயின் கதாபாத்திரங்கள் எனக்கு வெள்ளந்தியாகத் தெரிகிறார்கள். காரணம், டால்ஸ்டாய் தங்களை மனித தூக்க மாத்திரைகளாகப் பயன்படுத்துவது இந்த அன்னாக்களுக்கும் கோல்யாக்களுக்கும் தெரியாது. மாஸ்லோவாவை ரயில் நிலையத்தில் வைத்து கோமகன் விரான்ஸ்கி சந்திக்கும் தருணம் சமகால தமிழ் தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பொறாமை தரக்கூடியது.

(மூன்றாம் அத்தியாயத்தில் நெஹலூதவை அறிமுகப்படுத்தும்போது “தனது வழவழப்பான, வெள்ளைக் கால்களைக் கீழே வைத்து சப்பாத்துகளுக்குள் அடியெடுத்துவைத்தான்” என்று எழுதுவதற்கான அவசியம் என்ன? எட்டாம் அத்தியாயத்தில் மாஸ்லோவாவைப் பற்றிச் சொல்லும்போது, “சிறையின் மேற்கோட்டிற்கு அடியிலிருந்து விம்மிய மார்பகங்கள்” என வர்ணிக்கிறார். யார் இந்த டால்ஸ்டாய்?)

டால்ஸ்டாய் சிறுகதைகள் மீள்வாசிப்பில் புதுப்புது அர்த்த சாத்தியங்களை ஏற்படுத்தித் தருபவை. எளிதில் செரிமானம் ஆகிவிடுபவை. உதாரணமாக ‘இவான் இலியீச்சின் மரணம்’. ஆனால் நாவல்களின் கதையே வேறு. டால்ஸ்டாய் நல்லவரா கெட்டவரா என்று ஒரு கேள்வி எழுந்தால் பதிலை ஊகிப்பது கடினமல்ல.

மருத்துவர் ஆன்டன் செக்காவின் ‘என் வாழ்க்கை’ ரஷ்ய செவ்வியல் அச்சில் வார்க்கப்பட்ட, 80க்கும் குறைவான பக்கங்களைக் கொண்ட புனைவு. ஒரு தேனீர்க் கோப்பையில் துன்பப் புயல் என வர்ணிப்பார் ஒரு மொழிபெயர்ப்பாள நண்பர். மனித வாழ்வு குறித்த அவருடைய துன்பியல் பார்வையை நம்மீது கொட்டுகிறார் செக்காவ். ஒவ்வொரு கதையையும் விரக்தியில் தோய்த்தெடுத்து நமக்குப் புகட்டுகிறார். வாழ்க்கையின் மற்றும் அவ்வாழ்க்கையில் நேரும் உறவுகளின் அர்த்தமின்மையை இயன்ற வரை துயரம் சிந்த எடுத்துரைத்த திருப்தியுடன் புனைவை முடிக்கிறார். ஒவ்வொரு புனைவையும் முடிக்கையில் நாயகன் அல்லது நாயகி மனநோயாளி ஆகும்போதோ, விரக்தி கலந்த கேள்விக்குறியில் வறட்டுப் புன்னகை கலக்கும்போதோ, அல்லது லட்சியங்கள் தகர்ந்து தனிமை கவியும்போதோ நமக்கு ஆச்சரியம் ஏற்படுவதில்லை. அவர் தொடக்கத்திலிருந்தே அதற்குத்தான் அடிபோட்டுவந்திருக்கிறார் என கூர்மையான வாசகர்கள் அவதானிக்க முடியும். ஒருவாறாகக் கதை முடியும்போது, “இதற்குத்தானே எல்லாம்?” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

உலக செவ்விலக்கியத்தில் ரஷ்ய இலக்கியத்திற்குத் தனி இடம் உண்டு. இவர்கள் தவிர புஷ்கின், துர்கெனிவ், ஷோலோக்கோவ் என்று இன்னும் சில கதை மாந்தர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக எழுதக்கூடியவர்கள். துர்கேனிவ் அப்படியே செக்காவ் போல் எழுதக்கூடியவர். அவர் ‘மூன்று ஆண்டுகள்’ என்று எழுதினால் இவர் அதே அளவில் ‘மூன்று காதல் கதைகள்’ என ஒன்று எழுதியிருக்கிறார். மனித வாழ்க்கை அர்த்தமற்றது, துயரமானது, எதுவும் நிலைக்காது என்று எழுத இத்தனை பேர்.

(‘திசை காட்டிப் பறவை’ புத்தகத்திலிருந்து)

Tags: , , ,

9 Responses

 1. basheerNo Gravatar says:

  “” நித்திராதேவிக்கு மாமா வேலை பார்ப்பவனெல்லாம் அமர எழுத்தாளன்!” “” உள்ளூர் அமர எழுத்தாளர்கள் லிஸ்ட் எப்போது வெளிவரும்?

 2. ஆயில்யன்No Gravatar says:

  //நித்திராதேவிக்கு மாமா வேலை பார்ப்பவனெல்லாம் அமர எழுத்தாளன்!//

  :))))))))))))))

  இப்படியாக புத்தகத்திலிருந்து மாதம்/வாரம் ஒரு கட்டுரையினை வெளியீட்டுக்கொண்டிருந்தால், ஊருக்கு வந்தப்போது என் கைக்கு அகப்படாத திசை காட்டிப்பறவை,தங்களின் புண்ணியத்தில்,என் மனசுக்குள் ஃபீனிக்ஸாக எந்திரிச்சு பறக்கும் என்று விரும்புகிறேன்!

  நெஹலூத- இவான் இலியீச்சின்- துர்கெனிவ், ஷோலோக்கோவ் போன்ற புரிபடாத/விளங்கிக்கொள்ள முடியாத வார்த்தைகளினை தங்களின் குரலில்,ஒலியுடன் விவரிக்கும் வகையினில் இனி வரும் பதிவுகள் இருக்குமெனில் தன்யனாவோம்!

  • பேயோன்No Gravatar says:

   Aayilyan: பல மாத இடைவெளியால் வெளியிட்டேன். இதோடு சரி.

 3. இந்த மதிப்பு வாய்ந்த புத்தகத்தை வாங்கி அனுப்பச் சொல்லி கேட்டும் நண்பர்கள் பாரா முகமாய் (அவர் அல்ல) இருக்கிறார்கள். காலக்கொடுமை!!

 4. Incredible MonkeyNo Gravatar says:

  எத்தனை அழிவுகள் நடந்தாலும் அதைத் தாண்டி வாழ்க்கை இருக்கிறது என்று நம்பிக்கை ஊட்டும் அந்த தமிழ் எழுத்தாளர் உங்களையும் பாதித்து விட்டரா?

 5. நிக்கொலோய் கோகோல் மீது எதாவது கோபமா அல்லது அளவு கடந்த மரியாதையா? பட்டியலில் அவர் இல்லையே?

 6. பேயோன்No Gravatar says:

  பாரதசாரி: எல்லா அன்னா, கோல்யாக்களையும் சேர்த்தால் தாலியறுபடும் சார்.

 7. சில ராத்தல்களை சிதற விட்டது போல் சிரிக்கிறேன் :)

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar