புதிய கவித்துவங்கள்

in கட்டுரை, கவிதை

(கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை)

I’m not the one you want, babe
I will only let you down

– Bob Dylan

ஆங்கிலத்தில் “Blinding Light” என்று சொல்வார்கள். உலகைப் பார்க்க வெளிச்சம் அவசியமாகிறது. ஆனால் அந்த வெளிச்சம் மிகையாக இருந்தால் எதையும் பார்க்க முடியாது. அப்படித்தான் கவிதையும். படித்தவுடனே புரிந்துவிட அது நீதிக் கதை அல்ல. ஒன்றுமே புரியாமல் அடித்துவிட அது மழலை மொழியும் அல்ல. வெளிச்சத்திற்கும் இருண்மைக்கும் இடைப்பட்ட பாதையை அது தெரிவு செய்து பயணிக்க வேண்டும். கவிதை அந்தப் பயணத்தை மேற்கொள்ள கவிஞன் உடந்தையாக இருக்க வேண்டும்.

கவிதை எங்கும் இருப்பது. அதை எழுதுவது கவிஞனின் பொறுப்பு. எழுதப்படும் வரை கிடைப்பதில்லை கவிதையின் இருப்பிற்கு நியாயம். கவிதை அதன் மொழியில் எழுதப்படுவதும் முக்கியம். இல்லையெனில் கவிதை கவிதையாக இல்லாமல் ஆகிவிடும். கவிதை மொழி என்பது தமிழ், ஆங்கிலம், கொங்கணி, ஸ்வீடிஷ் போல ஒரு மொழிதான். அதன் எழுத்துகள் வேண்டுமானால் தமிழ் எழுத்துகளாக இருக்கலாம். ஆனால் அதற்கும் தனியாகச் சொற்களும் வாக்கிய அமைப்பு விதிகளும் இலக்கணமும் உண்டு.

ஒரு கவிதை எப்படி கவித்துவமாகிறது? அது கையாளும் பொருண்மையினால். இந்தப் பொருண்மை என்கிற விசயம் அடிக்கடி மொழிநடையால் நிறுவப்படுகிறது. மொழிநடை தன் பங்கிற்கு குறிப்பிட்ட வார்த்தைகளால் வடிவம் பெறுகிறது. இந்த வார்த்தைகள்தான் ஒட்டுமொத்த கவிதையையும் உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டிற்கு –

நினைவுகளின் வனத்தினூடே
நெளியும் நதியில்
யாருமற்ற தனிமையில்
மௌனத்தின் குரல்
கேட்டுத் திரும்பினேன்
கவியோ கவியென்று
கவிகிறதென் இரவு

என்கிற என் வரிகளை ஒருவர் படிக்கும்போதே இது கவிதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்துவிடுகிறது. நினைவு, வனம், நதி, யாருமற்ற தனிமை, மௌனம், கவிதல், இரவு எல்லாம் பொருந்தி வந்திருக்கிறது இந்தக் கவிதையில். ‘கவிதை அகராதி’ என்கிற என்னுடைய படைப்பில் கவிதை வார்த்தைகள் குறித்து விரிவாக எழுதியிருக்கிறேன். புதியவர்கள் ஒரு கவிதையை எழுதத் தொடங்குவதற்கு முன்பு இந்த வார்த்தைகளை விரல்களில் மாட்டிக்கொண்டுவிட்டால் கவிதையின் பொருண்மைக்கேற்ப வார்த்தைகள் வந்து விழுவதைப் பார்க்கலாம். இந்த வார்த்தைகள் இல்லாவிட்டால் அது கவிதை அல்ல, உரைநடை. உரைநடையின் கவித்துவம் என்பது வேறு. ஒரு இளங்கவிஞன் புகழேணியின் உச்சிக்குச் செல்ல இந்த வார்த்தைகள் என்கிற உத்தியைப் பின்பற்றுவது முக்கியம்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும் கவிதை மொழியைக் கற்றுக்கொள்ளும் அனுபவத்தின் பதிவுகளே. நடமாடும் படிமத் தொழிற்சாலைகளாகப் பிரகாசிக்கும் சிலருக்கு அந்த மொழி எழுதத் தொடங்கும்போதே கற்றுக்கொள்ளத் தேவையில்லாமல் எளிதாகக் கைவருவதோடு அவர்கள் பல தொகுப்புகள் கொண்டுவந்து புத்தக மதிப்புரையாளர்களாகவும் நிறுவப்பட்டுவிடுவது சமகால வரலாறு. இவர்களுடைய பட்டியலில் சேருவது ஆகச் சாத்தியமான ஒரு விசயமாகும் என நிரூபிப்பதே இத்தொகுப்பின் நோக்கம்.

ஒரு நல்ல கவிதையை எழுதுவதில் கவிஞனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடானது, அந்தக் கவிதையை அவனது பிற கவிதைகளுடன் சேர்ந்து ஒரு தொகுப்பாகப் பார்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சிதான். அதனை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. அதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

கவிதையை அணுவணுவாக ரசிக்கும் என் நண்பர்கள் மட்டும் அல்ல எனில் இத்தொகுப்பு வெளிவராமலே போயிருக்கும். அவர்களுக்கு நான் பெரிதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.

குறிப்பு: பாப் டைலன் பாப் இசையின் பிதாமகராக அறியப்படும் பாடகர்.

Tags: , ,

4 Responses

 1. ஆயில்யன்No Gravatar says:

  ////கவிதை எங்கும் இருப்பது. அதை எழுதுவது கவிஞனின் பொறுப்பு////

  முழுவதும் படித்து முடிக்கையில் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே பெரும் உவகை கொள்ள வைக்கின்றது!

  //கவிதை மொழியைக் கற்றுக்கொள்ளும் அனுபவத்தின் பதிவுகளே.//

  படிச்சு முடிச்ச பிறகு கவிதை எழுதிடுவேனோன்னு ஒரு டெரர் பகல் கனவும் வருதே!!!!!!!!!

 2. Incredible MonkeyNo Gravatar says:

  It Ain’t Me, Babe ஐ முழுகிக் கேட்டேன். என்ன மாதிரியான சோகப் பாடல் !!.

 3. பேயோன், என்ன அநீதியான முன்னுரை இது. நவகவிதையில் வெறிப்பாய்ச்சல் நிகழ்த்திய ‘முடியலத்துவம்’ குறித்து நீங்கள் மூச்சுக்கூட விடவில்லை. ஆயிரம் பேயோன் மறைத்து நின்றாலும் முடியலத்துவத்தின் புகழ் ஒருபோதும் மங்கா.

  • பேயோன்No Gravatar says:

   உள்ளூர் இசங்களை பற்றி எனக்கு தெரியாது.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar