ஆறாவது சி

in சிறுகதை, புனைவு

பள்ளிக்கு வெளியே தள்ளுவண்டியில் நாலணாவிற்குப் பட்டாணியும் பத்து பைசாவிற்கு மாங்காய்த் துண்டுகளும் வாங்கி மிலிட்டரி பேகில் ராமு போட்டுக்கொள்ளும்போது அந்தப் பக்கம் பாலு வந்துவிட்டான். பாலு ராமுவுக்குப் பக்கத்து இருக்கை. இவனுக்கு வேறு பங்கு கொடுக்க வேண்டுமா என்று அலுத்துக்கொண்டான் ராமு. பாலு நாலணாவுக்கு உப்புக் கடலை வாங்கி கூச்சம் பார்க்காமல் அங்கேயே நின்று அநாயாசமாக தின்னத் தொடங்கினான். ராமுவுக்குப் பொறாமையாக இருந்தது. பள்ளியில் நுழையத் தாமதமாகிவிடாதா என்ற கவலை நமக்கு மட்டும்தான் போல என்று நினைத்துக்கொண்டான்.

பாலுவும் ராமுவுடன் கேட்டை நோக்கி நடந்தான். ராமுவின் நடையில் பதற்றம் ஏறியிருந்தது. “என்னடா பரம ஃபாஸ்ட்டா நடக்கிறே?” என்றான் பாலு. ராமுவுக்கு உடனே பாலு மீது ஒரு கணநேர மரியாதை ஏற்பட்டது. “பரம” என்பது அவன் கேட்டிராத வார்த்தை. “கேட்டை மூடப் போறாங்கடா” என்றான் திரும்பிப் பார்க்காமல். பியூன் பெருமாள் கேட்டை முக்கால்வாசி மூடிக்கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்துவிட்டு உள்ளே யாரிடமோ “இன்னியும் ரண்டு பேர் வர்றாங்கெ” என்றான்.

நீண்டு இருண்ட காரிடாரில் நடக்கும்போது ஒலிபெருக்கியில் மைக்கின் கீச்சொலி கேட்டது. ஆறாவது சி வகுப்பறையைச் சற்று ஏக்கத்துடன் பார்த்துக் கடந்து சென்றான் ராமு. ஆறாவது சி ஜன்னலிலிருந்து பார்த்தால் முருங்கை மரமும் அம்மன் கோவில் கோபுரமும் விசாலமான பிரகாரமும் தெரியும். ஆறாவது கே-யில் ஜன்னலோர பெஞ்சியாக இருந்தாலும் ஓட்டுவீட்டுக் கூரைகள்தாம் தென்பட்டன. அவ்வப்போது வரும் அணில்தான் ஆறுதல்.

பாலு வகுப்பறை வாசலருகே நின்று அங்கிருந்த அறிவிப்புப் பலகை அறிவிப்புகளை சாவகாசமாகப் படிக்கத் தொடங்கினான். நெல்சன் சாமுவேல் ஆசீர்வாதம் பென்சில் பாக்ஸ் சத்தத்தோடு வகுப்புக்குள் ஓடினான். ராமு நேராக உள்ளே சென்று தன் பெஞ்சியில் அமர்ந்தான். பல இருக்கைகள் காலியாக இருந்தன. எல்லோரும் எங்கே போனார்கள்?

நேரத்திற்கு வகுப்பறை வந்தது ராமுவுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது. ஜன்னலுக்கு வெளியே ஓட்டுக் கூரை மேல் அணிலைத் தேடினான்; காணவில்லை. அணில் தினசரி விருந்தாளி அல்ல என்றாலும் ராமுவுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. கீழே ஏதோ ஒரு வீட்டிலிருந்து துணி துவைக்கும் பலத்த சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அணில் வந்து துவைக்கும் சத்தத்தைக் கேட்டு ஓடிப்போயிருக்கும் என்று நினைத்தான் ராமு.

வகுப்பறை திடீரென நிசப்தமானதை உணர்ந்து ராமு பதறித் திரும்பி உட்கார்ந்தான். நாகநாதன் சார் நாற்காலியில் அமரும் பணியில் இருந்தார். எல்லா பெஞ்சிகளும் மாயாஜாலமாக நிரம்பியிருந்தன. பாலு எப்போதோ வந்துவிட்டதோடு ஆங்கிலப் புத்தகத்தையும் தயாராகத் திறந்துவைத்திருந்தான். ராமுவும் புத்தகத்தைத் திறந்துகொண்டான். அதற்குப் பிறகு அவனுக்கு மனம் பாடத்தில் லயிக்கவில்லை. நாகநாதன் சாரின் நாராசமான கணீர் குரல் அன்றைக்கென்னவோ தாலாட்டு போல் உதவியது.

ஆழ்ந்த யோசனையிலேயே கால் மணிநேரம் கடந்திருக்கும். திடீரென அருகிலிருந்து “டேய்!” என்று சார் குரல் கேட்டது. நாகநாதன் சார் எதிரிலேயே நின்றிருந்தார். “உன்னைத்தான்” என்றார் நாகநாதன் சார் இவன் திசையைப் பார்த்து. ராமுவுக்கு வெலவெலத்தது. ‘அடேய் ஜோசியா, இன்னெக்கி நாகநாதன் சார்ல கண்டம்னு சொல்லலியேடா’ என உள்ளுக்குள் ஜபித்துக்கொண்டே முன்னேற்பாடாக நிமிர்ந்து உட்கார்ந்தான். நாகநாதன் சாருக்கு மாறுகண். அதனால் அவர் பாலுவிடம் கேட்கிறாரா, நம்மிடம் கேட்கிறாரா என்று குழம்பினான் ராமு. பாலுவிடம் கேட்டு நாம் பதில் சொன்னால் நமக்குத் திட்டு விழும். அதுவும் நாகநாதன் சாரிடம் எப்போதுமே எழுந்து நின்றுதான் பதில் சொல்ல வேண்டும். நிற்பதா, எப்படி என்று ராமு குழம்பினான். பாலு அலட்டிக்கொள்ளாமல் இவனைப் பார்த்தான். வகுப்பு முழுவதும் நிசப்தமாகி இவன் பக்கம் பார்த்தது.

“எந்திரிடா” என்றார் நாகநாதன் சார். இன்னும் தெளிவு பிறக்காமலே தயங்கித் தயங்கி ராமு எழுந்து நின்றான். “நீதாம் பாலுவா? உக்கார்டா” என்றார் சார். ராமு முகம் மலர்ந்து வாயெல்லாம் பல்லாகி, “சாரி சார்” என்றுவிட்டு உட்கார்ந்தான். ஆனால் உட்கார்ந்திருந்தானே தவிர மனமும் உடலும் லேசாகி பறப்பது போலிருந்தது அவனுக்கு. அதற்குள் பாலு விருட்டென்று எழுந்து நின்றான். ராமு திரும்பி பாலுவின் முகத்தை வேடிக்கை பார்த்தான். “Cursed vociferation” என்றார் நாகநாதன் சார். பாலு முழித்தான். சில பையன்கள் காது வரை வலக்கையை உயர்த்தி “சார், சார்” என்று தவித்தார்கள். “சார், loud outcry சார்” என்றான் ராமு அசால்ட்டாக. ‘பொளேர்’ என்று மண்டையில் விண்ணென்று விழுந்தது ராமுவுக்கு. “உன்னையாடா கேட்டேன்?” என்றார் நாகநாதன் சார். வகுப்பு சிரித்தது. ஏன், ராமுவும்தான்.

Tags: , ,

15 Responses

 1. அதிஷாNo Gravatar says:

  வளமான சிறுகதை. இதன்மூலம் இன்று ஒரு வார்த்தையை கற்றுகொண்டேன். ஆனால் இந்த சிறுவர்கள்தான் பாவம்.

  • பேயோன்No Gravatar says:

   ஏன், நாமும்தான், ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா!

 2. M.G.R.,No Gravatar says:

  இந்தக் கதையைப் புரிந்து கொண்டவர்கள் தயுவு செய்து விளக்கம் தரவும்.

  • பேயோன்No Gravatar says:

   ^^ – இவருக்கு யாராவது உதவுங்களேன்.

   • அதிஷாNo Gravatar says:

    பேயோன் எம்ஜிஆர்தான் எல்லோருக்கும் உதவுவார். அவருக்கே உதவியா?

 3. ‘நறுக்’னு ஒரு கதை. மிக அருமையா இருக்கு பேயோன்.

  கதைக்கு ஏற்ற நடையை தேர்வு செய்து கொள்கிறீர்கள். அதுதான் உங்களிடம் எனக்கு பெரிய ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

 4. பேயோன்No Gravatar says:

  இனிமேற்கொண்டு படைப்பினுக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்கள் எனது வலைதள பெருவெளியில் சுவடின்றி மறைந்துவிடும்.

 5. Incredible MonkeyNo Gravatar says:

  ஆறாவது சி- என்ற தலைப்பை நீங்கள் வைக்காவிட்டால் அதை பற்றி எழுதும் படி கேட்டிருப்பேன்.

 6. அருமையான எழுத்து..

  (இது படைப்பிற்குத் தொடர்பில்லாத பின்னூட்டமா?)

  • பேயோன்No Gravatar says:

   உங்கள் பின்னூட்டத்தில் உள்ள கருத்தின் சாரம் சுத்தமாக புரியவில்லை.

 7. YetanothervenkatNo Gravatar says:

  பாலு, ராமு இரண்டும் இரட்டை சிலபலாகவும், உச்சரிப்பில் நெருக்கமாகவும் இருப்பதால் பெயர் குழப்பம் ஏற்படுகிறது. நெல்சன் சாமுவேல் ஆசீர்வாதம் என்ற அழகான பெயரை இவ்விருவரில் ஒருவனுக்கு வைத்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம்.

  • பேயோன்No Gravatar says:

   ராமு-சோமுவுக்கு ராமு-பாலு நல்ல தேர்வுதான்.

 8. பேயோன் சார்,

  ரொம்ப நாள் கழிச்சு உங்க வலைதளத்திற்க்கு வந்தேன்..

  விஷயம் என்னன்னா இந்த கதையும் எனக்கு புரியல :(

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  • பேயோன்No Gravatar says:

   பொறாமையாக இருக்கிறது. வளராமலே இருந்திருக்கலாமே என்று எனக்கும் தோன்றுவதுண்டு.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar