மூன்றாம் அத்தியாயம்

in புனைவு

(‘ஒரு லோட்டா இரத்தம்’ என்கிற எனது நெடுங்கதையின் மூன்றாம் அத்தியாயம். முதலிரு அத்தியாயங்கள்: 1, 2)

3. கார்க்கியின் கதி

ஜூலை 1904. பிரபல ரஷ்ய எழுத்தாளர் மக்சீம் கார்க்கி என்ற மாக்சிம் கார்க்கி (1868-1936) கணப்பின் மங்கிய வெளிச்சத்தில் ப்ராவ்தா செய்தித்தாளை மேய்ந்துகொண்டிருந்தார். தனது உடலை ஒரு பிரம்மாண்ட சோபாவுக்குக் கொடுத்திருந்தார். நடுவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் ஒரு சுருட்டு தனது புகையை மெல்ல கூரைக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. புகையோ, கூரையைத் தொடுவதற்குப் பெரிய ஆர்வம் ஏதுமின்றி முன்கூட்டியே கலைந்து அறைச் சூழலில் ஐக்கியமானது.

கிராமபோனில் சைக்கோவ்ஸ்கியின் யூஜின் ஓனெகின் சன்னமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு உச்சத்தையும் கார்க்கியின் தலை ஆமோதித்தது.

காஸ் ‘ஏ’ கார் வாசலில் மெல்ல வந்து நிற்கும் பரிச்சயமான சத்தம் கார்க்கியின் அனுபவமிக்க காதுகளில் அடியெடுத்துவைத்தது. இன்ஜின் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது. கார்க்கி கடிகாரத்தைப் பார்த்தார். சாப்பாட்டு நேரம் இன்னும் ஆகவில்லையே. யாராக இருக்கும்? வியந்தார்.

பனிக்காலக் காலையின் இருளைத் தள்ளிக்கொண்டு பல அடுக்கு ஆடைகளால் இன்னும் குண்டாகத் தெரிந்த ஒரு நெடிய உருவம் வாசலில் கிடந்த ஒரு மூக்குக் கண்ணாடியை பூட்ஸ் காலால் நசுக்கித் தூளாக்கியபடி உள்ளே வந்தது. புகைமூட்டத்தின் மறுகரையிலிருந்து அதன் கை நீண்டது. தந்தி. கார்க்கியின் கை நீண்டு அதை வாங்கிக்கொண்டது. கெட்ட செய்தியா நல்ல செய்தியா?

நல்லது கெட்டதில் நம்பிக்கையிழந்து கார்க்கிக்கு நெடுநாளாகிவிட்டது. தந்தியில் இருந்தது வெறும் செய்தியாகத்தான் இருக்க வேண்டும். தந்தியைக் கணப்பிற்கு அருகில் வைத்துப் படிததார் கார்க்கி.

கடவுளே! என் பிரிய ஆன்டன் பாவ்லோவிச்!

கண்களைப் பனித்த கண்ணீர் போஸ்ட்மேனை மறைத்தது. நடுங்கும் கைகளிலிருந்து நழுவிப் பறந்த மரணத் தந்தி கணப்பின் நெருப்பில் விழுந்து எரியத் தொடங்கியது.

இமயம் போன்ற ஒரு ஆளுமையின் கடைசிக் கணங்களுக்குத் தான் சாட்சியாகிக்கொண்டிருப்பது ராணுவ போஸ்ட்மேன் ஜோசப்பிற்கு மெல்லப் புரிந்தது. “அலெக்செய்! மேலுக்கு ஒன்றுமில்லையே?” என்று அலறினார். “யாராவது வாருங்கள்!”

வாசலை நோக்கி பனித் தரையில் திபுதிபுவென்று பலர் ஓடி வரும் ஒலி பின்னணிச் சத்தமாக, கார்க்கிக்குக் கண்கள் செருகின. கழுத்திலிருந்து ரத்தம் ஊற்றெடுத்து ஓடையாக இறங்கியது. கார்க்கியின் கடைசி வார்த்தைகள் சரித்திரத்தின் செவியில் விழாமல் குழறலாய்க் கரைந்தன. கார்க்கியின் கைவிரல்கள் உலகிற்குத் தமது கடைசிச் செய்தியைக் கழுத்து ரத்தத்தில் தோய்த்து எழுதின. அந்தச் செய்தி: 045.

நான்காம் அத்தியாயம்

Tags: , ,

9 Responses

 1. Incredible MonkeyNo Gravatar says:

  ஒவ்வொரு வரியாகவும், வார்த்தையாகவும் எடுத்துப் பாராட்ட வேண்டும் போல் இருக்கிறது.

  • பேயோன்No Gravatar says:

   இதற்கெல்லாம் சோம்பேறித்தனப்படலாகாது.

 2. dagaltiNo Gravatar says:

  காஸ் ‘ஏ’ கார் – அப்படியென்றால்?

  ருஷ்யாவைச் சேர்ந்தவர்கள் உடலை ஷினெலுக்குக் கொடுப்பார்கள், சோபாவுக்குமா!
  ஒற்றை ரெஃபெரென்ஸ் புரிந்தது என்று காண்பித்துக்கொள்ள வாசகர்கள் படாதபாடு படவேண்டியிருக்கிறது.

  அத்தியாயத்திற்கு ஒன்று என்ற ரீதியில் போனால் பெல்ஹாம் க்ரென்விலோவிச் சொன்னது போல: the supply of Russian novelists must eventually give out.

  • பேயோன்No Gravatar says:

   Gaz A. என்னை மாதிரி நீங்களும் சோவியத் கால மோட்டார் வாகன வரலாறு என்று இணையத்தில் தேடியிருக்கலாம். நீங்கள் கூறும் பிஜிடபிள்யூ கதையை படித்திருக்கிறேன். இன்னும் ஒரு ரஷ்யர் பாக்கி.

 3. //தனது உடலை ஒரு பிரம்மாண்ட சோபாவுக்குக் கொடுத்திருந்தார். நடுவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் ஒரு சுருட்டு தனது புகையை மெல்ல கூரைக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. ///

  ராஜேஷ்குமார் வாடை அடிக்கிறதே…

 4. karthi_1No Gravatar says:

  When are you going to publish the 4th part of this story?

 5. karthi_1No Gravatar says:

  found out the 4th part.. thanks! :-)

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar