4. “இன்னொரு மர்டர் கேஸ்”

in புனைவு

(ஒரு லோட்டா இரத்தம் 1, 2, 3)

“எங்கே? யார்?” என்றார் மைக்.

“மாக்சிம் கார்க்கி என்று இன்னொரு ரஷ்யாக்காரர்…” என்றாள் அன்னா, பிளாஸ்டிக் கப்பில் லிப்ஸ்டிக் ரேகை பதிய எந்திரக் குளம்பியை உறிஞ்சியபடி.

“ரஷ்ய இலக்கியத்திற்குக் கேடுகாலம்…!” என்றார் மைக்.

அன்னா தயாராக வைத்திருந்த ஃபோல்டரை நீட்டினாள். மைக் அதைப் பெருமூச்சுடன் வாங்கிக்கொண்டார்.

அலெக்செய் மக்சீமோவிச் பெஷ்கோவ் என்ற மக்சீம் கார்க்கி என்ற மாக்சிம் கார்க்கி ஃபைல் ஃபோட்டோ என லேபிள் ஒட்டியிருந்த எண்ணெய் ஓவியத்தில் கம்பீரத் தோற்றமளித்தார். அடுத்த பக்கத்திலிருந்த விவரங்கள் அந்த கம்பீரத்தை உடனே மறக்கடித்தன.

கூர்மையான – ஆனால் கத்தியளவிற்குக் கூர்மையில்லாத – ஒரு ஆயுதம் கழுத்தின் முன்பக்கம் குத்தி கரோட்டிட் தமனிகளூடே பின்பக்கம் வெளியேறியிருக்கிறது. கொடூரம். தொழில்முறைக் கொலையாளியாக இருக்கலாம்.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் இருந்த ஒரு சிறு விவரம் அவர் கவனத்தை ஈர்த்தது. மர்ம ஆயுதம் ஊடுருவியிருந்த இடத்தில் ஃப்தாலோசயனைன் (phthalocyanine) என்ற வேதிப்பொருள் அப்பியிருந்ததாக ரிப்போர்ட்டில் இருந்தது.

அடுத்த புகைப்படத்தில் கார்க்கி ரத்தத்தைத் தனது கடைசி மையாகப் பயன்படுத்தி விரலால் கிறுக்கியிருந்த “045” மைக்கைப் புதிராக்கியது.

“ஒரு டான் பிரவுன் நாவலில் மாட்டிக்கொண்டுவிட்டேன்,” மைக்கிடமிருந்து ஒரு முணுமுணுப்பு வெளியேறியது.

“சார்?”

“ஒரு மோசமான கொலைக் கதையில் சிக்கிக்கொண்டுவிட்டேன் என்று சொன்னேன்… செக்காவ் துப்பு விடயமாக என்ன கிடைத்தது?”

“கில்லியன் இந்த ப்ரின்ட் அவுட்களைக் கொடுத்தாள்.”

LETEEB என்பது BEETEL. ஒரு இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ஃபோன் மாடல். அந்தத் தொலைபேசியின் ஒயர் கொலைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த நாட்டில் சில பத்து லட்சம் பேராவது அந்தக் கருவியைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். இந்த ஒரு துப்பை மட்டும் வைத்துக்கொண்டு வைக்கோல் போரில் தேட முடியாது. தெளிவு கிடைப்பதற்குள் இன்னொரு அமர எழுத்தாளர் புனர்மரணம் அடையக்கூடும்.

இரு பெண்களைக் கொன்ற ரஸ்லோநிகோவ் (‘குற்றமும் தண்டனையும்’ கதாநாயகன் ரஸ்கோல்நிகவ்) போன்ற குற்ற உணர்வை உணர்ந்தார் மைக். ஆமாம், நான் இன்டர்போலின் ரஸ்லோநிகோவ் என்று சொல்லிக்கொண்டார். உடனே சுரீரென உறைத்தது மைக்கிற்கு. அடுத்த உயிர்ப்பலி தாஸ்தாயெவ்ஸ்கியாக, டால்ஸ்டாயாக, துர்கனேவாக, புஷ்கினாக இருந்தால்…

மைக்கின் கேபின் வாசலில் ஃபைல் அசிஸ்டன்ட் நிழலாடினாள்.

“என்ன?”

“இந்திய பீரோவிலிருந்து ஆள் வந்திருக்கிறார்.”

“அவரை பிரீஃப் செய்தாயா?”

* * *

இந்திய பீரோவிலிருந்து வந்திருந்தது ஒரு இளைஞன். அவன் அப்பா அம்மா அவனுக்குக் குமார் என்று பெயர் வைத்திருந்தார்கள். அதற்குப் பிறகு அவன் ஐந்தரை அடி சுமாருக்கு வளர்ந்துவிட்டிருந்தான். ஜிப்பா-டை-கார்டுராய் ஜீன்ஸ் என்ற இன்டர்போல் கலை இலக்கியக் குற்றங்கள் பிரிவு சீருடையை நிரப்பியிருந்தான். அறிவுக் குற்றங்களில் பி.ஏ.வும் ஜூடோவில் பிரவுன் பெல்ட்டும் அவன் தகுதிகள். அதையெல்லாம்விட கலாச்சார ஆர்வம் இருந்தது சிறப்புத் தகுதி. அவனது அனுபவம் எல்லாம் வாசிப்பனுபவம்.

“இலக்கியம் கண்ட முதல் சீரியல் கில்லிங் இதுதானா சார்?” என்றான் குமார் கான்பரன்ஸ் அறையில்.

“பட் ஆனால் வேர் இஸ் தி மோட்டிவ்?” என்றார் மைக். “கொலையானவர்கள் இருவருமே புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர்கள்… அவர்கள் செத்துப் போய் இருநூறு ஆண்டுகளுக்குப் பின் அவர்களின் பெயரைக் கெடுக்க முடியாது… வேறு என்னவோ நடந்துகொண்டிருக்கிறது… போலீசின் கவனத்தை ஈர்க்க, கிரிமினல்கள் ஆடும் விளையாட்டு மாதிரி தெரிகிறது…” மைக் விஸ்தரித்தார்.

“சாரி சார், எனக்கு அப்படித் தோன்றவில்லை… இரண்டு சம்பவங்களிலுமே கொலையாளி சவாலாகத் தடயம் எதையும் விட்டுச் செல்லவில்லை… அவனை அல்லது அவளை மீறித்தான் துப்பு வெளிப்பட்டிருக்கிறது… துப்புகளை விட்டு வந்தது கொலையாளிக்குத் தெரிந்திருக்கும் என்று வீ கென் நாட் பி ஷ்யூர்… செக்காவ் விஷயத்தில் டெலிபோன் ஒயர் என்றால் கார்க்கி விஷயத்தில் அவரே கைப்பட ஒரு நம்பரை எழுதியிருக்கிறார்” குமார் தன் தரப்பு கண்ணோட்டத்தை ஒளிபரப்பினான்.

“ஓக்கே… ஆதாரங்கள் நம்மிடம் என்ன சொல்கின்றன?” என்றார் மைக் வெறுத்துப் போய். அந்தக் கேள்விக்காகத்தான் காத்திருந்த குமார் சுறுசுறுப்பானான்.

“செக்காவ் துப்பு, கொலையாளி இந்தியாவில் இருப்பதைக் காட்டுகிறது. கார்க்கி கொலைத் துப்பு, கொலையாளி எழுத்தாளனாக இருக்கலாம் எனவும் காட்டுகிறது” என்றான் குமார்.

“அதெப்படி? நமக்குக் கிடைத்ததெல்லாம் 045 என்ற எண் தானே?”

“சார்… சிம்பிள். ஃப்தாலோசயனைன் என்பது பொதுவாக பால்பாயின்ட் பேனா மை தயாரிக்கப் பயன்படும் ஒரு ரசாயனம்… கூகுள் தகவல்… இனி சின்னக் குழந்தைகூட 045க்கும் அதற்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டுவிடும். என் கன்க்ளூஷன்படி ரெய்னால்ட்ஸ் 045 பால் பாயின்ட் பேனாதான் கொலைக் கருவி,” குமாரிடம் ஒரு வெற்றிப் பெருமிதம் பளிச்சிட்டது.

“இன்ட்ரஸ்டிங் ஆங்கிள்,” பீறிட்ட பிரமிப்பை அடக்கிக்கொண்டு சொன்னார் மைக். “பேனாவைக் கொலைக் கருவியாகப் பயன்படுத்துவதால் அப்படிச் சொல்கிறாய். ஆனால் இப்போது எந்த எழுத்தாளர் பேனாவைப் பயன்படுத்துகிறார்? காசோலையில் கூட கணினியால் டிஜிட்டல் சிக்னேச்சர் போடுகிறார்கள்” என்றார் மைக் திடீரென காபியை உறிஞ்சிக்கொண்டு.

குமார் புன்னகைத்தான். “இல்லை சார்… கம்ப்யூட்டர் யுகத்திலும் பேனாதான் எழுத்துத் தொழிலுக்கான குறியீடு… கார்க்கியின் கழுத்தைத் துளைத்த பேனா ஒரு குறியீடு… அது நிஜ பேனா அல்ல… கார்க்கியின் முதிய கண்களால் பொடி எழுத்தில் இருந்த 045 என்ற எண்ணைப் படித்திருக்க முடியாது… கார்க்கியின் காலத்தில் ரெய்னால்ட்ஸ் பேனா இல்லாததால் அதை அவரால் அடையாளம் கண்டிருக்கவும் முடியாது… இட் இஸ் அ மெட்டஃபர்” என்றான் குமார் கான்பரன்ஸ் மேஜையின் மேல் ஒரு புத்தகத்தை வைத்தபடி.

“என்ன அது?” என்றார் மைக் அதைக் கண்ணுற்று.

“சொல்கிறேன்” என்றான் குமார். “தாஸ்தாயெவ்ஸ்கியின் ஃபைல். அனேகமாக அவர்தான் அடுத்த பலி.”

“ஒய் நாட் துர்கனேவ்? ஆர் ஷோலகோவ்?”

“பிகாஸ் தேயார் நாட் தாஸ்தாயெவ்ஸ்கி… செக்காவிற்கு முன்பே தாஸ்தாயெஸ்கிதான் போயிருக்க வேண்டும்… ஆனால் செக்காவை விட தாஸ்தாயெவ்ஸ்கிக்கு ஆயுசு கெட்டி.”

“அப்படியெனில் நேரத்தை வீணாக்க வேண்டாம்… பேக் அப் டு இந்தியா. ஆனால் இந்தியாவில் எங்கே?”

குமார் யோசித்தான். “என்னுடைய ஹோம்வொர்க்படி இந்தியாவில் இந்த எழுத்தாளர்களுக்கு அதிக மவுசு இருக்குமிடம் தமிழ்நாடு… தொடர்ந்து இவர்களைப் பற்றி அங்கே பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது… சென்னைக்குப் போய் சில எழுத்தாளர்களிடம் நூல் விடலாம்… குறிப்பாக மொழிபெயர்ப்பாளர்கள் உட்பட..”

“முழுப் பட்டியல் வைத்திருக்கிறாயா?”

“ஓயெஸ்… எல்லாம் சப்ஜாடாக வைத்திருக்கிறேன் சார்.”

மைக் தனது பைப்பைப் பற்றவைத்தார். புகையை இழுத்து வானுயர் கட்டிடங்கள் தெரிந்த திசையை நோக்கி ஊதினார். “லெட்டஸ் கோ!”

Tags: , ,

14 Responses

 1. andalmaganNo Gravatar says:

  பட்டியல் தயார்தான்.. அப்ப பேயோனும் தாஸ்தாவெஸ்கியைப்போல் ஆயுசு கெட்டி என்று கனவு கானும் உரிமையை தடுக்க யாரும் இலலை என்று மைக் நினைக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.. welcome to tamilnadu

  • பேயோன்No Gravatar says:

   இதற்கு “யூ டோன்ட் கெட் இட், டூ யூ?” என்பார் அவர்.

 2. குறு நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கணும். உங்களை சந்தேக வலையில் சிக்க வைக்க சதி நடக்கிறது என்று தோன்றுகிறது.

  • பேயோன்No Gravatar says:

   குறு என்றழைக்குமளவு நான் தட்டையானவன் அல்ல. என் படைப்புகள்தான் அப்படி.

 3. writerparaNo Gravatar says:

  கொலையாளியைக் கண்டுபிடித்துவிட்டேன். ஏழு எழுத்து எழுத்தாளர் :-)

  • பேயோன்No Gravatar says:

   தவறு. நல்ல வேளை, மர்மத்தை உடைத்துவிடுவீர்களோ என்று நினைத்தேன்.

 4. writerparaNo Gravatar says:

  இப்படி ஒரு பதில்வரும் என்று எதிர்பார்த்தேன்

  • பேயோன்No Gravatar says:

   எதிர்பார்ப்பில் இயங்குகிறது இணையம்.

 5. பெருஞ்சகதியாக இருக்கிறதே இம்மர்மம்! கழுத்து வளைவதால் ஒரு துணைக்கழுத்து தேவைப்படும் போல!

 6. இது நமது பழைய குமார் தானே. அவர் எப்பொழுது இந்திய பீரோவில் வேலைக்கு சேர்ந்தார்??? அதைப் பற்றி நீங்கள் குறிப்பு எதும் தரவில்லையே…

  • பேயோன்No Gravatar says:

   ராஜேஷ் குமார் நாவல்களில் வரும் விவேக்தான் நகைச்சுவை நடிகராகவும் சோபிக்கிறாரா? புதிய தகவலாக இருக்கிறதே!

 7. dagaltiNo Gravatar says:

  ஆஹா நன்றாக த்ரில்லர் கொண்டு திகழத் தொடங்கிவிட்டதே.

  புதிரிக்குள்ளாபவர் புதிராவதன் மூலம் இப்பிரதியில் உள்ள அத்வைத மொழிபு புலப்படாமலில்லை.’வாளினும் வலிய பேனா தூக்கியவன் பேனாவால் சாவான்’ என்பதை நல்ல கருத்து. இக்காலத்தில் யார் கருத்துள்ள படங்களை எழுதுகிறார்கள்.

  மைக்கின் கூறியது டெல்லல், சேல்ஸ் பிரிவு குமாரின் பல வேஷங்கள், கொலையாளி என்றதும் பேச்சில் இயல்பாக வரும் ஜெண்டர் ந்யூட்ராலிட்டி (இதற்கு தமிழ் என்ன? – நான் ஆங்கில ஊடகத்தில் (பேயுலக தொடர்பாளர் அல்ல ஹிஹி) படித்தவன்) போன்றவை இவ்வத்தியாயத்தில் என்னைக் கவர்ந்தவை.

  தாஸ்தாயெவ்ஸ்கியை உருசியாவில் அம்போவென விட்டுவிட்டு தமிழகம் வருகிறதே இன்டர்போல் எனக் கவலை எனக்கு.

  • பேயோன்No Gravatar says:

   நன்றி. இவ்விடத்தில் “வாளை விட வலியதாம்/விசைப்பலகை” என்கிற என் கவிதை ஒன்றினையும் நினைவுகூர விரும்புகிறேன். “கொலையாளி” என்பது ஆண் பாலே. “கொலையாளினி” என்பதே பெண் பால். வாசகருக்கான துப்பே இது.

   ஜெண்டர் நியூட்ரலிட்டியை “பாலின எதையுஞ்சாராமை” என்கிறது சென்னை பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி. இது லிங்க நடுவண்மைக்கு மாற்றுவா?

   தஸ்தாவஸ்கியின் விதி கதையை தொடங்குமுன்னரே தீர்மானமாகிவிட்டது. “அவன் சாகணம்” என்பாரே திலகன் சார் சத்திரியன் சார் படத்தில் அது போல.

 8. //கூர்மையான – ஆனால் கத்தியளவிற்குக் கூர்மையில்லாத – ஒரு ஆயுதம் கழுத்தின் முன்பக்கம் குத்தி கரோட்டிட் தமனிகளூடே பின்பக்கம் வெளியேறியிருக்கிறது. கொடூரம். தொழில்முறைக் கொலையாளியாக இருக்கலாம்.//

  இதைவிட எளிமையாக ஒரு எழுத்தாளரை வர்ணிக்க முடியாது.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar