தாம்பரம், பயணக் கட்டுரை

in கட்டுரை

வீட்டில் சில சட்டச் சிக்கல்கள் உருவாகிக்கொண்டிருந்தது போல் தெரிந்தது. ஏதாவது வெளியூரில் தஞ்சம் புக வேண்டிய கட்டாயம். தாம்பரத்தில் நண்பரின் வீடு இருந்ததால் மூட்டை முடிச்சுகளோடு லேப்டாப்பையும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். எழும்பூரில் நல்ல வேளையாக தத்காலில் கட்டணச் சீட்டு கிடைத்து உடனே வண்டியேற முடிந்தது. விடிய விடிய மேற்கொண்ட ஏழு மணிநேர ஜன்னலோரப் பயணத்தின் சொகுசில் இரவு போனதே தெரியவில்லை.

காலை ஐந்து மணி வாக்கில் ரயிலின் வேகம் மட்டுப்பட்டு தூக்கம் கலைந்தது. தேநீர் பையனின் குரல் மட்டும் ரயில் இழுபறியின் பெருமூச்சைக் கிழித்துக்கொண்டு கேட்டது. கட்டணச் சீட்டுப் பரிசோதகர் அடுத்த ரயில் நிலையம் தாம்பரத்தில் இருக்கவிருப்பதாக ஒலிபெருக்கியில் அறிவித்தபடி எங்கள் பெட்டியைக் கடந்து சென்றார். நானும் சக பெட்டியாளர்களும் ஸ்வெட்டர், மஃப்ளர், கையுறைகள் மற்றும் குளிர் பாதுகாப்புக்கான பிற ஆயத்த ஆடைகளை அணிந்துகொண்டோம்.

கிராண்ட் டெர்மினஸ்

குளிர் ஆடைகளை அணிந்து குளிர்க் களிம்பை முகத்தில் தடவிக்கொண்டு முடிக்கையில் ரயில் தாம்பர ரயில் நிலையத்தை அடைந்தது. பலர் முகத்திலும் தலையிலும் கை கால்களை ஊன்றி முண்டியடித்துக்கொண்டு ரயில் பெட்டியின் கதவைத் திறந்து முதல் ஆளாக நான் இறங்கியதுதான் தாமதம், பனிக் காற்று முகத்தில் அறைந்தது. அதனால்தானோ என்னவோ தென்னக ரயில்வே ரயில் நிலையத்தைக் கதகதப்பாக வைத்திருந்தது. ஜூன் மாதத்தில் வழக்கமாக வரும் வெள்ளைக்கார பனிச் சறுக்கு கும்பல் ஒன்றிலிருந்து ஒரு குழந்தை என்னைப் பார்த்து கையசைத்து சிரித்தது. ஒரு பட்டாம்பூச்சி வந்து தோளில் அமர்ந்தது போல் இருந்தது எனக்கு. நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன்.

கிராண்ட் டெர்மினஸை விட்டு வெளியே வந்ததும் தயாராகக் காத்திருந்த ஒரு சிறப்புப் பேருந்தில் ஏறிக்கொண்டேன். பேருந்து உள்ளே நல்ல அகலமாக இருந்தது. ஒவ்வொரு இருக்கையின் முதுகிலும் தண்ணீர் புட்டி வைக்க எலாஸ்டிக் பட்டை பொருத்திய சல்லடைப் பை வைத்திருந்தார்கள். கீழ்த் தாம்பரத்திற்கும் மேல் தாம்பரத்திற்கும் இடையில் ஏறத்தாழ 250 கிலோமீட்டருக்கு சரிவான நிலம் இருந்தது. அரசாங்கம் அந்த நிலத்தின் மேல் திருகலான சாலை ஒன்றை அமைத்திருந்தது. மக்கள் அந்த இடத்திலான போக்குவரத்து வசதியை மேல் தாம்பரத்திற்குச் செல்லப் பயன்படுத்திக்கொண்டனர். அந்தப் பேருந்துப் பயணத்திற்காகவே மேல் தாம்பரத்திற்குச் செல்வோரும் இருப்பார்களோ என்று தோன்றும் வகையில், தாம்பரத்திற்கு சென்னையின் ஆல்ப்ஸ் என்கிற பெயர் வந்தது எப்படி என மீண்டும் ஒரு முறை புரியவைத்தது அந்தப் பயணம்.

பனிப் பிராந்தியம்

காலைச் சூரியனின் வெளிச்சம் மெல்ல மெல்ல மலர்ந்துகொண்டிருந்ததை ஜன்னலோர இருக்கையிலிருந்து வேடிக்கை பார்த்தபடி ஒன்றரை மணிநேரம் பயணித்தேன். தாம்பரத்தின் வழக்கமான ஊசிமுனை வளைவுகள் மட்டும் இல்லாதிருந்தால் சில நிமிடங்கள் முன்கூட்டியே மேல் தாம்பரத்தை அடைந்திருப்பேன். போகும் வழியெல்லாம் இயற்கைதான். மனித வாழ்க்கையின் அறிகுறியே இல்லை. முதல் முன்னூறு, நானூறு மீட்டர் தூரத்திற்கு, அல்லது உயரத்திற்கு, மான்கள் மற்றும் குரங்குகள் குறுக்கீட்டால் பேருந்து மெதுவாகத்தான் செல்ல வேண்டியிருந்தது. அதற்குப் பின் உயரம் கூடக்கூட குளிர்ச்சியும் உயர்ந்தது.

எட்டு மணி சுமாருக்கு மேல்தாம்பரத்தை நெருங்கியபோது நான் பார்த்த முதல் பனிப் பொழிவு வர்ணிக்க வார்த்தையில்லாத அழகு. வரைந்து காட்டினால்கூட யாருக்கும் லேசில் புரியாது. எப்போது இலக்கு வரும், எப்போது பேருந்தை விட்டு இறங்கி பனி மெத்தையில் நடப்போம் என்று தவித்தேன். பேருந்தும் நின்றது. இறங்கியதும் ஆட்டோக்காரர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அலாஸ்காவைத் தோற்கடிக்கும் ஓரிடத்திற்கு வந்துவிட்டு உடனே ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கத் தொடங்கினால் வந்த நோக்கமே முறியடிக்கப்படும். நெகிழ்ச்சியுடன் மறுத்துவிட்டு சக்கரம் பொருத்திய எனது சிறிய பெட்டியால் பனியில் தனிச் சாலை ஒன்றை உழுதபடி தள்ளிச் சென்றேன். என் பெட்டிக்கு அது இரண்டாவது தாம்பரப் பயணம்.

ஸ்டாண்டு ரோட்டில் இருபுறமும் ஊசியிலை மரங்கள் அலங்காரமாகப் பனியைச் சுமந்தபடி இரு டிக்கெட் கவுண்டர்களுக்கு முன்பு காத்திருந்தது போல் வரிசையாக நின்றிருந்தன. நடைபாதையில் சில ஷெர்பாக்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே மனிதர்கள் வண்ண ஸ்வெட்டர்களை அணிந்து பனிச்சறுக்கு வண்டிகளிலும் ஸ்கேட்டிங் கட்டைகளிலும் வளைய வந்துகொண்டிருந்தார்கள். இதற்கிடையில் துப்புரவுப் பணியாளர்கள் பனியை சாலையோரத்திற்குத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். பனியில் கால்கள் புதையப் புதைய சாலை முனை வரை நடந்தேன். ஸ்டாண்டு ரோடும் டென்சிங் சாலையும் இணையும் நாற்சந்திக்கு முகங்காட்டியபடி மூலையில் அமைந்திருந்தது செல்சி ஹோட்டல். அங்கே ஸ்ட்ராபெரி பக்கோடா, சூடான இட்லி, காபி என்று காலை உணவு முடிந்தது. காபி சாப்பிட்டபோது Kobo Abe-யின் Woman in the Dunes-ஐப் புரட்டிக்கொண்டிருந்தேன். புத்தகக் கதை பாலைவனத்தைப் பற்றியது. ஆனால் தாம்பர சீதோஷ்ணத்தில் புத்தகம் சில்லிட்டிருந்தது.

வான்காவும் வான் கோகும்

ஓட்டலிலிருந்து வெளியேறிய பின் ஒரு பொதுத் தொலைபேசிப் பெட்டியிலிருந்து நண்பரை அழைத்தேன். நண்பரின் வீடு அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தது. அடுத்த ஐந்து நிமிடத்திற்குப் பின் மீண்டும் ஒரு மாந்திரீகமான மலைப் பயணம். பங்களா மாதிரியான அவரது வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தவுடன் சில புட்டிகளைக் கொண்டுவந்து மேஜை மேல் வைத்தார் நண்பர். மலைக்கும் மடுவிற்கும் முடிச்சுப் போடும் சுபாவம் உள்ளவர் அவர். நான் அவரை சந்திக்க வரும்போதெல்லாம் அருமையான வெளிநாட்டு திராட்சை மடுவை என் முன்னிலையில் அருந்தத் தொடங்கிவிடுவார்.

நண்பர் ஓவியப் பிரியரும்கூட. நாங்கள் வெகுநேரம் ஓவியர்கள் வான்காவையும் வான் கோகையும் ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த இருவருமே பல சிரமங்களுக்கிடையில் கலைத் துறையில் முனைப்பாக இருந்தார்கள். ஒரே மாதிரியான ஓவியங்களைத் தீட்டினார்கள். ஆர்லிஸ் என்ற ஊரின் மனநல மருத்துவமனையில் தங்கியிருந்தபோது Starry Night என்கிற பிரசித்தியான ஓவியத்தை வரைந்தார்கள். பிரபலமாக, ஒரு உணர்ச்சிகரமான தருணத்தில் காதை அறுத்துக்கொண்டார்கள். இப்போது மேற்கில் வான் கோக் அழியாப் புகழ் பெற்றிருக்கையில், தமிழ்ச் சூழல் வான்காவை ஆஸ்தான வெளிநாட்டு ஓவியனாகத் தத்தெடுத்துக்கொண்டது. வான்கா என்ற பெயர் “அங்கிள் வான்யா” என்கிற செக்காவின் நாடகத் தலைப்பிலிருந்து வந்திருக்கலாம் என்றார் நண்பர்.

மூன்று புட்டிகள் வரை இப்படிப் போய்க்கொண்டிருந்தது. அவர் நான்காவதைத் தொடங்கிய பின்னர் உரையாடல் சில நடைமுறைச் சிரமங்களுக்கு உள்ளானது. நண்பர் மிக உரக்கப் பேசத் தொடங்கினார். அவர் போடும் சத்தத்தில் நான் பேசுவது அவருக்குக் கேட்காமல் போய்விடப் போகிறதே என்கிற கவலையில் அவரைவிட உரக்கமாக நான் பேச வேண்டியதாயிற்று. இந்தக் கட்டத்தில் நாங்கள் இருவரும் வெவ்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் குடிக்கும்போது கருத்து வேறுபாடு எழுந்தால் அடிக்கக்கூடியவர். ஆகையால் என் தலைப்பிற்கு அவரை இழுக்கவோ அவர் தலைப்புக்கு நான் மாறவோ பிரயத்தனப்படவில்லை.

மூன்றரை புட்டிகளைக் குடித்துவிட்டுப் பேசிக் களைத்த நண்பருக்கும் எனக்கும் பசியெடுக்கத் தொடங்கியது. செல்சியிலேயே மதிய உணவை முடித்துவிடலாமென்ற முடிவுக்கு வந்தோம். கடிகாரத்தைப் பார்த்தால் மூன்று மணியளவு. நண்பர் நிற்க சிரமப்பட்டார். இருவரும் கைகோர்த்தபடி வெளியே போய்ப் பார்த்தால் கும்மிருட்டு, குளிர் ஐந்து பாகை. எல்லா கடைகளும் மூடியிருந்தன. திரும்பி வந்து பசியோடே உறங்கிவிட்டோம்.

சாலைக் காட்சிகள்

மறுநாள் எழுந்தபோது மணி மூன்று. ஆனால் இம்முறை பகலாக இருந்தது. நான் தனியாகக் கிளம்பி செல்சிக்குச் சென்று அளவுச் சாப்பாடு சாப்பிட்டேன். மேல் தாம்பர உணவு பற்றித் தனியாகவே எழுதலாம். அவ்வளவு மகத்தான சுவை. கான்டினெண்டல், ஓரியண்டல், மற்றும் தென்னிந்திய, இந்துஸ்தானி உணவுகளின் விசித்திரமான கலவை அது. சாப்பிட்டதற்குப் பின்னதாக சாலையோர செர்ரிப் பூக்களின் மகரந்தத்தை நுகர்ந்தபடியே காலாற நடந்து ‘புக்மார்க்ஸ்’ புத்தகக் கடைக்குச் சென்றேன். அங்கே புத்தகங்களை எடைக்கு வாங்கும் துரித ஷாப்பிங் என்கிற வசதி உள்ளது. பெர்னாண்டோ சோரன்டினோ, ராபர்ட்டோ ஃபெரைரோ, ஜோசே முரினோ, ஹருகோ முரகமோ என்று சில பெயர்களை அள்ளிப் போட்டுக்கொண்டு வந்தேன்.

பிறகு அங்கிருந்து ஒற்றை மாடு பூட்டிய பனிச்சறுக்கு வண்டி ஒன்றினைப் பிடித்து தாம்பரத்திலேயே மிகப் பழைய கட்டிடமான மாடர்ன் தியேட்டருக்குச் சென்றேன். பதினைந்து நிமிடப் பயணம்தானாக இருந்தாலும் ரசிக்கும்படியாக இருந்தது. ஜூன் முழுக்க மேல் தாம்பரம் வெள்ளை நிறமாக இருக்கும். டிசம்பர் வாக்கில் வந்தால் மேலதிக குளிருடன் நீலம் பாரித்திருக்கும். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் மேல் தாம்பரம் பல மாற்றங்களுக்குள்ளாகி நிறைய கட்டிடங்கள் எழும்பியிருந்தன. அதிநவீன வசதிகள் கொண்ட ஒரு மலை வாசஸ்தலமாக அது வளர்ந்திருந்தது. அதையும் மீறி இயற்கையானது சீதோஷ்ண நிலையால் தனது ஆதிக்கத்தை உணர்த்திக்கொண்டிருந்தது. கீஸ்லோவ்ஸ்கி தாம்பரத்திற்கு வரும்போதெல்லாம் மேல் தாம்பரத்திற்கு வராமல் போவதில்லை.

மாடர்ன் தியேட்டரில் Nosferatu ஓடிக்கொண்டிருந்தது. மௌனப்பட யுகத்தின் மைல்கல்லான இந்தப் படத்தைப் பற்றித் தனியாகவே எழுதலாம். படத்தை ஒரு காட்சி விடாமல் பார்த்துவிட்டு எட்டரை மணிக்கு நண்பரின் வீட்டை அடைந்தேன். அது பூட்டியிருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது அவர் ஏதோ திரைப்படத்திற்குச் சென்றிருந்ததாகச் சொன்னார்கள். நண்பர் Nosferatu சென்றிருக்கக் கூடாதே என்று கவலைப்பட்டேன். அவர் திகில் படங்களைப் பார்க்க பயப்படுவார். பதினோரு மணிக்குத்தான் மெல்லிய, வெளிர்நீல நிற பாலிதீன் பையில் ரஸ்தாளிப் பழங்களோடு வந்தார். அவர் வரும் வரை குளிரில் உடலாடிக்கொண்டிருந்தேன். கைபேசியில் ‘ஸ்நேக்’ விளையாட்டைப் பல முறை இயக்கிப் பார்த்துவிட்டேன். நண்பரைக் கைபேசியில் அழைக்கலாமே என்று தோன்றியபோது பேட்டரி வெகுவாகக் குறைந்து எச்சரிக்கை ஒலி வெளிப்பட ஆரம்பித்தது. அவர் வெளியூர் எங்காவது சென்றிருப்பாரோ என்ற திடீர் சந்தேகம் தோன்றி முடிப்பதற்கும் அவர் மெல்லத் தலைகாட்டுவதற்கும் சரியாக இருந்தது. அவர் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பி உடனே மீண்டும் வெளியே கிளம்பிவிட சாத்தியம் இருந்ததால் நான் சாப்பிடப் போகவில்லை. அவர் கொண்டுவந்த பழங்களில் இரண்டைத் தின்று பசியாறிவிட்டுத் தூங்கப் போனேன். நண்பர் இரவெல்லாம் உலக டிவிடிகள் பார்த்துக்கொண்டிருந்தார்.

பனிச்சறுக்கு

மூன்றாம் நாள் காலை ஆறு மணிக்கே பனிச்சறுக்கு நிலையத்திற்குச் சென்றுவிட்டேன். எங்கு பார்த்தாலும் வெள்ளைக்காரர்கள். இந்தியர்களுக்கு எந்தக் காலத்திலும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்ததாக நினைவில்லை. உயரமான ஒரு இடத்திலிருந்து நிறைய பேர் காலில் பலகை கட்டி குதித்துக்கொண்டிருந்தார்கள். கீழே இருபுறமும் கான்கிரீட் பெஞ்சிகள் போடப்பட்டிருந்தன. நான் இரண்டு ரூபாய்க்குக் கடலை வாங்கிக்கொண்டு கொறித்தபடியே ஸ்கீ தாவல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அரை மணிநேரம் பார்த்துவிட்டு நெடுஞ்சாலை பக்கம் சென்றேன். மலையோரத்தில் இருந்த தடுப்புச் சுவர் மேல் சாய்ந்தபடி பல காதல் ஜோடிகளைப் பார்க்க முடிந்தது. மொத்த மேல் தாம்பரத்திற்கும் பால்கனி மாதிரி இருந்தது அந்த இடம். கீழே இருந்திருக்கக்கூடிய எல்லாவற்றையும் மேகங்கள் மறைத்தன. நேரடியாக விமானவழி மேல் தாம்பரத்திற்கு வருபவர்கள் கீழ்த் தாம்பரம் என ஓரிடம் இருப்பதையே நம்பாமல் போகலாம்.

என் பயண அனுபவங்களை அசை போட்டுக்கொண்டு சிறிது தூரம் நடந்தேன். அவசரத்தில் காமிரா எடுத்துவராததால் வெறுங்கையுடன் தாம்பரத்தை ரசிக்க வேண்டியிருந்தது. பின்பு ஒரு ஆட்டோ பிடித்து செல்சிக்குச் சென்று காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு நண்பரின் வீடு திரும்பினேன். சென்னை செல்லும் பதினோரு மணி சிறப்புப் பேருந்திற்கு ஆயத்தமானேன். நண்பருடன் சிறிது நேரம் தன்மையாகப் பேசிக்கொண்டிருந்தாலும் மனமெல்லாம் வடபழனியில் இருந்தது. ஒருவருக்கு ஒரு தீவிர உணர்ச்சி ஏற்படுகிறது என்றால் அது சட்டச் சிக்கலாக வளர அரை மணிநேரம் போதும். அந்த உணர்ச்சியின் காரணியானது அந்த உணர்ச்சி ஏற்பட்ட சூழலிலிருந்து பல மைல் தூரம் அகற்றப்பட்டால் உணர்ச்சி தணியக்கூடும். அதற்கு மூன்று நாள் அவகாசம் தாராளமாகப் போதும். எனக்கும் சென்னையில் நிறைய வேலை இருந்தது. தவிரவும், வாழ்க்கைக்கு பயந்து எங்கே ஒதுங்க முடியும்? கொஞ்சம் இடைவெளி விட்டாவது அது நம் கூடவே வந்துகொண்டுதான் இருக்கிறது.

Tags: , , , ,

22 Responses

 1. SrinivasanNo Gravatar says:

  பதிவை தவிர்த்து ஒரு சந்தேகம் : எழுதும்போது மட்டும் தான் இவ்வளவு நக்கலா…இல்லை பேசும்போதும் இப்பிடித்தான் பேசுவீர்களா ????? உங்கள் அருகாமையில் இருக்கும் நபர்களை எண்ணி ஆச்சர்யபடாமல் இருக்க முடியவில்லை !!!!!

 2. விஜய் ஆனந்த்No Gravatar says:

  :-)))…

 3. karNo Gravatar says:

  மீ த பர்ஸ்டு :) ஹிஹி

  தாம்பரத்தை இமயமலை அல்லது அண்டார்டிகாவுக்கு மாத்திட்டாங்களா? இவ்ளோ பனியா இருக்கு.

 4. SrikanthNo Gravatar says:

  உலக சினிமா, Kobo Abe, பயணக் கட்டுரை: எஸ்.ரா-வை நக்கலடிப்பதற்காக இந்தப் பதிவா, இல்லை நீங்கள் தான் எஸ்.ரா-வா?

  • பேயோன்No Gravatar says:

   படைப்பின் உள்ளடக்கம் பற்றிப் பேசியே பழக்கம் இல்லையா? உங்கள் இலக்கிய வம்புகளையும் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது சார்.

 5. யதுபாலாNo Gravatar says:

  ஜலதோஷம் பிடிச்சிருச்சி எனக்கு படிக்கும் போதே….!! வாழ்க தமிழ்நாடு…வளர்க உங்கள் எழுத்து..!! மொத்தத்தில் நன்றாகதான் இருக்கிறது….சபாஷ்.

 6. அந்த செல்சிகாரன் நான் சென்ற போது ‘ஸ்ட்ராபெரி பக்கோடா’ இல்லை என்றானே. செர்ரி பஜ்ஜியல்லவா தின்று தொலைய வேண்டியிருந்தது; புளிப்பு தாங்கவில்லை.

 7. S.VenkatramanNo Gravatar says:

  Nalla velai tamil’a yezhuthineenga.. aangilathula yezhuthi iruntha padikara vada-Indhiya nanbarhal,velinattavarhal
  inneram Thambarathai “valai” veesi thedi kondu iruparhal…

 8. karthi_1No Gravatar says:

  அருமை சார், நீங்க எந்த மாதத்தில் தாம்பரம் போயிருந்தீங்க..? நான் மே மாசம் போயிருந்தபோது கடுமையான வெயில்காலமாய் இருந்தது. சீசன் தெரியாமல் போய்விட்டேன் போல.. :-(

 9. Incredible MonkeyNo Gravatar says:

  இடத்தையும்,காலத்தையும் துவம்சம் செய்து ருத்ரதாண்டவம் ஆடுகிறது உங்கள் எழுத்து.

 10. paanjasanyanNo Gravatar says:

  ஏதோ ஒரு சயன்ஸ் ஃபிக்சன் கதை போல உள்ளது, சுஜாதாவின் அண்ணாசாலையில் சென்று எல்.ஐ.சி கட்டிடததை காணும் கதையிம், கடலில் மூழ்கிய சென்னையை காண வரும் கதையும் நினைவிற்கு வருகின்றது. ஆனால் பின்னுட்டங்களை படித்தால், வேறு ஏதோ பரிணாமும் உள்ளது போல உள்ளது. புரிந்து கொள்ள பதிவர் அரசியலும் தெரிந்து கொள்ள வேண்டுமோ என்னவோ.

  • பேயோன்No Gravatar says:

   எழுத்தாளர்கள் வேறு, வலைப்பூ ஆசாமிகள் வேறு. நீங்கள் இலக்கியத்திற்கு புதியவர் போல.

 11. sankarNo Gravatar says:

  ஒன்னுமே புரியல சார் ..,நானும் தாம்பரத்துல எட்டு வருஷம் இருந்தேன் .,எழும்பூர்ல இருந்து தாம்பரம் அவ்ளோ நேரமா ? அதுவுமில்லாம பனிபொழிவு .,வேற .,கொழம்பி கிடக்கிறேன் ..,நானு

  • பேயோன்No Gravatar says:

   பயணம் வேண்டுமானால் புரியாமல் போகலாம். பயணக் கட்டுரையில் புரியாமல் போக என்ன இருக்கிறது?

 12. தாம்பரமே இப்படியிருக்கிறதென்றால் வடபழனியை நினைத்தால் ஜிலீர் என்கிறது.

  //பிறகு அங்கிருந்து ஒற்றை மாடு பூட்டிய பனிச்சறுக்கு வண்டி ஒன்றினைப் பிடித்து தாம்பரத்திலேயே மிகப் பழைய கட்டிடமான மாடர்ன் தியேட்டருக்குச் சென்றேன். //

  நிச்சயம் ப்ளூ-க்ராஸூக்கு சொல்ல வேண்டிய சேதி.

  • பேயோன்No Gravatar says:

   ஆனால் இந்தியாவின் தலைநகரம் தில்லி.

 13. anba0309No Gravatar says:

  Tambaram is a very interesting place. One of the top 10 places one must see before death. It was shown in discovery channel. Have you eaten kunkumappu bonda at Knottburough Road,in mela thambaram. Appadiya antha mayakkam irukku unga katturaila. Adhuvum anth april may masam paniyila muffler, swetter pottukinu ore piece sapputtomna summa sogamma irukkum.
  Sir, ungaland oru kelvi? Samachheer kalvi kku englishla enna word?
  Probably this is one more chance for a tamil word to enter into Oxford dictionary.Can we make it….

 14. அதிஷாNo Gravatar says:

  ஆகா படிக்கும்போதே வரிக்கு வரி வியந்து வியப்பில் மயிர்கூச்செரிந்து அதை சொரிந்து சொரிந்து சோரியாஸிசே வந்துவிடும் போல ஆகிவிட்டது.

 15. DeepuNo Gravatar says:

  என் ஆச்சரியத்தை கூற வார்த்தைகள் இல்லை..அருமை..!! மிகவும் ரசித்தேன்..!! :) :)

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar