வணக்கம், நான்தான்

in சிறுகதை

வணக்கம், நான்தான், எப்படி இருக்கிறீர்கள்தானே? நாங்களும் இம்முறை போனஸ் வந்தால் கோடைக்கு அங்கு செல்லத் திட்டமிட்டிருக்கிறோம். எவ்வளவு செலவாகும் என்று தெரிந்தால் நான் ஏன் இப்படி இருக்கிறேன், இருக்கிறேன், குத்துக்கல்லாட்டம். உங்களைத்தான் முன்பு போல் பார்க்க முடிவதில்லை, வயதாகிவிட்டதில்லையா? பஸ்ஸில் அரை மணிநேரம் பயணித்தாலே உடம்பெல்லாம் வலி அல்ல, பசி. அது ரிலீஸ் ஆனபோது பாரகனில் பார்த்ததாக நினைவு. பிறகு பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களை மட்டும் போட ஆரம்பித்துவிட்டார்கள், இனி இந்த நாட்டில் இருக்க முடியாது என்று சிங்கப்பூரில் வேலை தேடத் தொடங்கி மைத்துனன் மூலமாக பாஸ்போர்ட் வாங்குவது அவ்வளவு சுலபமல்ல. ஒவ்வொன்றுக்கும் கிஸ்தி, கியூ, என்கொயரி என்று பெரிய ராவடியாக இருக்கும். ஒன்று செய்யுங்கள், எனக்குத் தெரிந்த கெஜட்டட் ஆபீசர் ஒருவர் கூட அந்த ஏரியாவில்தான் இருக்கிறார். அருகிலேயே ஒரு கல்யாண மண்டபம்தான் அடையாளம். வெளியில் விஜயலக்‍ஷ்மி வெட்ஸ் சேகர் என்று பூவெல்லாம் வைத்து அலங்கார போர்டு வைத்திருப்பார்கள். ஆனால் நமக்குக் கொடுக்க மனம் வராது. பணம் இருக்கிற மனிதனுக்கு மனம் குறுகலாகத்தான் இருக்குமே தவிர அவர் சொல்கிற மாதிரி ஒரு ஊர்வலம் போகிற அளவுக்கு அகலம் இல்லை. டெம்போ வேண்டாம், நம் லோடுக்கு மினி டெம்போவே தாராளமாகப் போதும். டெம்போ கொண்டுவந்தீர்கள் என்றால் தெருவை அடைத்துக்கொள்ளும். அதனால்தான் இந்த ஏ.வி.எம். ராஜன், விஜயகுமாரி போன்ற அழுகைப் படங்களைத் தவிர்த்துவிடுவேன். சந்திரபாபு, நாகேஷ், அசோகன், பிறகு தேங்காய் சீனிவாசன், சுருளி என்றால் பார்ப்பேன். அதற்குப் பிறகு போலீசுக்குப் போய்விடுவேன். அப்புறம் நீங்கள் வருத்தப்பட்டுப் பிரயோஜனம் இல்லை. கெடு தேதிக்குள் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து விசா வாங்கிவிடுகிறேன். நீ கவலையே படாதே. அதுவும் நம் நாடு மாதிரிதான். ஒரு வாரத்திற்கு அவர்கள் பாணியில் ஆங்கிலம் பேச வேண்டும், அவ்வளவுதான். பிறகு ஆண்டவன் விட்ட வழி.

Tags:

5 Responses

 1. SaravNo Gravatar says:

  இதோட தொடர்ச்சி எப்போ சார் ?? அதையும் இதையும் சேர்த்து படிச்சாலாவது எதாவது புரியுதான்னு பார்போம்?

 2. ஒரு முனை டெலிஃபோன் பேச்சு சார்ந்த கதை சொல்லல் உத்தி என்றுதான் இந்தச் சிறுகதையை அர்த்தப்படுத்திக்கொள்ள முடிகிறது.

  ஆனாலும் அபாரம்.

  //அவ்வளவுதான். பிறகு ஆண்டவன் விட்ட வழி.// வாசகர்களின் நிலைமையை அழகாக எடுத்துச் செல்லும் வரிகள்.

 3. குரு, ஒரு வித மனநிலையின் ஓட்டம் என்று நினைக்கிறேன். சரியா??

  எனக்கு, கோபி கிருஷ்ணனின் ‘உள்ளே இருந்து சில குரல்கள்’ புத்தகத்தை நினைவுப்படுத்தியது. அதனால் கூட இருக்கலாம்..

 4. Incredible MonkeyNo Gravatar says:

  எண்ணிக்கை சற்று அதிகம்தான் என்றாலும் உங்கள் கிராஸ் டாக் யுத்திக்கு ஒரு சபாஷ்.

 5. பேயோன்No Gravatar says:

  நான் எழுதியதற்கு நானே விளக்கம் சொல்வதைத் தவிர்க்கிறேன். நீங்கள் சொல்வது வேறு, நான் எழுதியது வேறு என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar