விதியின் இசை

in கட்டுரை

மனைவி ஊரில் இல்லை. ஏன், இந்த மாவட்டத்திலேயே இல்லை. மகனும் இல்லைதான். ஆனால் ஒரு பெரிய இழப்பிற்காகச் சிறிய இழப்பை சகித்துக்கொள்வதில் குற்றமில்லை. சகித்துக்கொள்ள வேண்டியிருப்பது ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டிற்காக வெளியே போக வேண்டியிருப்பதையும். சாப்பாட்டிற்கு அலையவே நேரம் சரியாக இருந்தால் யசுநாரி கவாபாட்டாவைத் தேடி அலைவது எப்போது?

சாப்பாட்டை முடித்துக்கொண்டு வீட்டு வாசலுக்குத் திரும்பி வந்து பழக்க தோஷத்தில் “காலிங் பெல்”லை அழுத்துகிறேன். பிறகு மனைவி இல்லாததை உணர்ந்து தொடையை ஓங்கித் தட்டியபடி உரக்க சிரித்துக்கொண்டு கதவைத் திறக்கிறேன். இந்த சாவியைப் பையில் வைத்துக்கொள்வதில் என்ன பிரச்சனை என்றால், அது இருக்க இடத்திற்குள்ளே அனுமதித்தாலும் உருவம் மிகச் சிறியது. ஒவ்வொரு முறையும் வீட்டு வாசலுக்கு வந்து பாக்கெட்டில் கையை விடும்போது முதல் துழாவலில் சாவி கிடைக்கவில்லை என்றால் பகீரென்கிறது. தொலைந்துவிட்டால் நெஞ்சு பதைக்க வேண்டியதுதான்.

மகனைப் பிரிய வேண்டியிருப்பது அவ்வப்போதின் அவசிய கட்டாயம். மகன் என்பதாலேயே* (*அதுவும் என் மகன் என்பதால்) அவன் மேல் எனக்கு நிறைய பிரியம். தோளுயரம், இடுப்பகலம் வளர்ந்துவிட்டாலும் அவன் குழந்தையாக இருந்தபோது எனக்கு அவன் மீதிருந்த பாசத்தில் பாதியாவது பாக்கியிருக்கிறது. இப்போதும் அவன் எனக்குக் குழந்தைதான். ஏனென்றால் காலம் எல்லோரையும் அல்லவா கூண்டோடு காய்நகர்த்துகிறது.

வீடே அமைதியாக இருக்கிறது. கேட்கிற ஒரே சத்தமும் மாடி வீட்டிலிருந்து வருகிறது. வீட்டில் ஆள் இருந்தால் ஆளின் குரல்தான் கேட்டுக்கொண்டிருக்கும். படிக்கும் பத்திரிகையில் சுவாரசியமான கட்டுரையோ டி.வி. சினிமாவில் சிலிர்ப்பான சண்டைக் காட்சியோ வரும் சமயம் பார்த்து மனைவி ஊர் வம்பு, வீட்டுப் பொருளாதாரம் பேசத் தொடங்கிவிடுவார். ஆச்சரியக்குறிகள், மேற்கோள் குறிகள் தவிர வேறு நிறுத்தக்குறிகள் அறவே இல்லாத பேச்சு அவருடையது. மிகைப்படுத்தப்பட்ட மிமிக்ரியுடன் கூடியது. இதற்கு “விதியின் இசை” என்று பெயர் வைத்திருக்கிறேன். இந்தக் குறிப்பிட்ட சத்தம்தான் இப்போது வீட்டில் இல்லை. காற்றுக்கூட காலி திருமண மண்டபத்தில் குழந்தைகள் போல சுதந்திரமாய் விளையாடுகிறது.

ஏதோ காலாற நடந்து போனோம், நான்கு விஷயம் பார்த்தோம், மனதில் குறித்துக்கொண்டோம், இல்லை, இந்த வரி வேண்டாம், நன்றாயிருக்காது, அதை இப்படி எழுதினால் வாசக மனதுக்குப் பாந்தமாக இருக்கும், இந்த வார்த்தை புரியாது, அதை இப்படி எளிமைப்படுத்துவோம், இந்த சம்பவத்தை இதனோடு முடிச்சுப் போட்டு நினைவூகூர்த்திக் காட்டலாம் என்கிற ரீதியில் நடந்து போகும்போதே அதைப் படைப்பாக வளர்த்தோம் என்றில்லாமல் வழியில் ஏதாவது கடையில் நின்று கையில் பையைச் சுமந்துகொண்டு திரும்பி வர வேண்டியிருக்கிறது. இந்த பாலிதீன் பையை நான் எந்தளவுக்குப் பிடித்துக்கொண்டிருக்கிறேனோ அதேயளவு அதுவும் என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு வலுவாக எழுவதுண்டு. பாலிதீன் பை போன்ற லௌகீகத்தின் ஏஜெண்டுகளை எளிதாக அடையாளம் கண்டுவிடலாம்:- எல்லாமே மனைவி வாயிலாக வருகின்றன. அதனால்தான் ஒரு மனைவி வெளியூர் போகும்போது மனம் லேசாகிறது.

ஒரு மனைவிக்கு ஒரு காபியைக் கொண்டுவந்து கணவனிடத்தில் வைக்க சராசரியாக எத்தனை நேரம் ஆகிறது? சில நொடிகளே. அந்தச் சில நொடிகளில் ஒரு கணவனுக்கு அந்த மனைவியினிடத்தில் ஏற்படும் அன்பு அளக்க முடியாதது, படுதீவிரமானது. கணவனுக்கு மனைவி மீதான இந்த அன்பு நாளொன்றிற்கு சுமார் 30 நொடிகளுக்குக் குறையாதளவு ஏற்படுகிறது. ஒரு நிமிடத்திற்குக் குறைவாக நீடிக்கும் எந்த தாம்பத்திய அன்பும் கற்பனாவாதிகளுக்குக் கம்மியாகத் தெரியலாம். ஆனால் ஒரு தம்பதியினர் சராசரியாக 40 வருசக்காலம் மண வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்போது இந்த நாளொன்றைய 30 நொடிகள் வருசக் கணக்கீட்டில் பல மணிநேரங்களாய் குவிந்துவிடுகின்றன. ஒரு கணவனுக்குத் தன் மனைவி மேல் இத்தனை மணிநேர தீவிர அன்பு இருந்தால் அவனுக்கு என்ன ஆகும்? பொதுவாக தம்பதிகளில் முதலில் சாவதும் யார்?

ஆயிற்று, இன்னும் இரு நாட்களில் வாழ்க்கை தனது ஒப்பனையைக் கலைத்துக்கொண்டு மனைவியை ஊரிலிருந்து திருப்பி அனுப்பிவிடும். இதில் என்ன ஆறுதல் தெரியுமா? நானும் கூடவே போயிருக்க வேண்டியவன். வர மாட்டேன் என்ற வாதம் பெரும்பாலும் எடுபடாது. இன்ன வேலையை முடிக்க வேண்டிய கட்டாயம் நிறைவேறிய பின் கைக்கு இத்தனை ரூபாய் வரும் என்று சொல்லித்தான் தனிமையை ஈட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றபடி போகுமிடமெல்லாம் அயோத்தியை இழுத்துக்கொண்டு போகிறார்கள் இக்கால சீதைகள்.

Tags: , , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar